சுந்தர ராமசாமிக்கு இயல் விருது – 1

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

கோபால் ராஜாராம்


சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கிடைத்த செய்தியை திண்ணையில் படித்தேன். சுந்தர ராமசாமி இத்தகைய விருதுக்கு மிகவும் தகுதியானவர். அவருடைய படைப்புலகம் ஆழம் கொண்டது. விரிவும் ஆழமும் வேண்டி கொண்ட இலக்கியப் பயணம் அவருடையது. கம்யூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி , பிறகு விலகி தன் வாழ்க்கையையும் சார்புகளையும் சீர்தூக்கிப் பார்த்து , பரிசீலிக்கப் பட்ட வாழ்க்கையை மேற்கொண்டவர் அவர். ஒரு புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியிலிருந்து நகராமல் செக்குப் பிராணிகளாய் இருப்பவர்களையும் அவர்கள் இயக்கத்திற்கு பரந்துபட்ட வணிக – கல்வியியல் உலகில் கிடைக்கிற மரியாதையையும் எதிர்க்கிற நியாயமான போராட்ட உணர்வினால் சிறு பத்திரிகை இயக்கத்துடன் தன்னை முழுமையாய் இணைத்துக் கொண்டவர் அவர். அவருடைய படைப்புகள் மீதான விமர்சனங்களைத் தாண்டியும் , தனிப் பட்ட முறையில் தாக்கப் பட்டவர் அவர். இருந்தும் அவர் மேற்கொண்ட சிந்தனைப் போக்கை மாற்றிக் கொண்டதில்லை .

ஒரு விதத்தில் முற்போக்கு முகாமில் தி க சி செய்ததை , வேறு விதமாய்த் தன் வழியில் செய்தவர் என்று அவரைச் சொல்ல வேண்டும். இதன் அர்த்தம் அவர் முற்போக்கு முகாமிற்கு எதிராகக் கட்சி கட்டினவர் என்ற பொருளில் அல்ல. அவரை நாடிச் சென்ற வாசகர்களையும், எழுத்தாளர்களையும் அவர்களுடன் நட்புப் பூண்டு அவர்கள் ரசனையையும், எழுத்து பற்றிய அணுகல்களையும் கூர்மைப் படுத்தியவர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவர் எழுத்து உணர்வுலகில் தோயும் கலையழகு கொண்டது என்பதைக் காட்டிலும் , அறிவு பூர்வமான எழுச்சி கொண்ட கலையழகு (Cerebral aesthetics) கொண்டது என்று சொல்லலாம். அது அவர் வாழ்க்கைப் பார்வையும் என்னலாம். அதனால் தான் தி ஜானகிராமன் போன்றோரின் நளின உரைநடைகள், மனிதர்கள் பற்றிய நுட்பமான , குறைகளுடன் கூடவே அவர்களின் மேன்மையயும் சுவீகரிக்கிற , அன்பும் புரிதலும் மேலிட்ட அணுகுமுறை சுந்தர ராமசாமியைப் பெரிதும் கவரவில்லையோ என்று தோன்றுகிறது. வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையிலும் இவருடைய இந்தச் சார்பினைக் காணலாம். இந்தப் பார்வையினால் தான் அவருடைய விமர்சனங்கள் பல விதங்களில் குறைபாடு உடையதாய்க் காண்கிறது. க நா சு வின் புனைகதை எழுத்து இந்த விதத்தில் சுந்தர ராமசாமியின் புனைகதை எழுத்துடன் இணை சொல்லத் தக்கது.

ஆனால் அறிவு பூர்வமான அணுகல் முறையின் மிகத் தூக்கலான வெளிப்பாடு அவருடைய மனிதாபிமானப் பார்வையைச் சற்று மழுங்கப் பண்ணியிருக்கிறதோ என்பது என் ஐயம். அவர் படைப்புகளில் வெளிப்படும் கிண்டல் தொனி சற்று எள்ளலும் , மக்கள் பற்றிய சற்றுத் தாழ்வான அபிப்பிராயத்தை வெளியிடும் முகமாய் அமைந்திருப்பது கொஞ்சம் வருத்தம் தருகிற விஷயம். இது இப்படி இருக்க வேண்டியதில்லை, அறிவு பூர்வமான பார்வையுடன் கூடவே மனித உணர்வுகள் பற்றிய மென்மையையும், மேன்மையையும் இழைக்க முடியும் என்பதற்கு ஜெய காந்தன் ஒரு உதாரணம்.

அவருடைய கவிதைகள் கூட அறிவு பூர்வப் பார்வையில் எழுந்த நிகழ்ச்சிச் சித்தரிப்புக் கவிதைகளே.. சொல்தேர்வில் தெறிக்கும் அழகுணர்ச்சியைக் காட்டிலும் கவிதையின் ஒட்டு மொத்தமான சுட்டுதலுக்காளாகும் சிந்தனைப் போக்கு தான் அவர் கவிதைப் பொருளாகிறது. அவருடைய சிறுகதைத் திறன் கவிதைகளில் வெளியாகிறது. ஒரு நிகழ்ச்சிச் சித்தரிப்பாய்த் தொடங்கி. நிகழ்ச்சியின் வழியாய் வேறு வேறு தத்துவப் பார்வைகளைச் சுட்டிச் செல்கிற கவிதைகள் இவை. இது போன்ற – நிகழ்ச்சிச் சித்தரிப்பினை அடிப்படையாய்க் கொண்ட கவிதைகள் கலாப்ரியாவிடமும் காணலாம். ஆனால் யதார்த்த நிகழ்ச்சிச் சித்தரிப்பில் தொடங்கி மனித மனதை அவாவும் பார்வை கலாப்ரியாவினுடையது. ஆனால் சுந்தர ராமசாமியின் கவிதைகள் மனித மனத் திறப்பினைக் காட்டிலும், தத்துவ ரீதியான கவனமாய் உருக் கொள்கின்றன. ‘சூரியனை மறைக்கும் ஆட்டுக் குட்டி ‘ பற்றிய கவிதையும், ‘பிரிவுபசார விழாவில் தவறாயிற்று எல்லாம் என்று பின்பார்க்கும் நபர் ‘ பற்றிய கவிதையும் உடனடியாய் நினைவிற்கு வருபவை.

அவருடைய நாவல்களும் கூட அவருடைய சிறப்பான சிறுகதையாற்றலைக் கொண்டவை. ‘ஒரு புளியமரத்தின் கதை ‘யின் , ‘ஜே ஜே சில குறிப்புகள் ‘ -இன் பலமும் பலவீனமும் இதுவே. அவருடைய சிறுகதையாற்றல் சிறு நிகழ்ச்சிகளின் சித்தரிப்புகளின் பின்னால் எழும் அலைகளைத் துல்லியமாய் எழுப்புகின்றன. நாவலின் ஒருமையுணர்வு சற்றுப் பின் தங்கிப் போகிறது.

(தொடரும்)

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்