சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

பாவண்ணன்


கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் எதார்த்தப் பின்னணிகள் நிறைந்த கதையும் இத்தொகுப்பில் உள்ளது. எதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. எதார்த்தத்தளத்துக்கும் கற்பனைத்தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப்பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.

முரகாமியை ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரக்குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்தரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின் கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உறைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.

ஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக “குடும்ப விவகாரம்” கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம்பெறும் அண்ணன் தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும் விலகலையும் ஆதங்கத்தையும் அன்பையும் நுட்பமாக விவரித்தபடி செல்கிறது கதை.
கல்விச்சுதந்திரம், வேலைச்சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லாவகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுசுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியைநோக்கி மானுடகுலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனிதமனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.

இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனத்தில் பட்டதை சுதந்திரமாக முன்வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்யவேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதினெட்டு வயதாகிறது, அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனத்துக்குப் பிடித்த இளைஞனொருவனை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் விருப்பத்தை முன்மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப்பற்றி ஏதேதோ மாற்று அபிப்பராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.

திடீரென இச்சலிப்பும் வெறுப்பும் அவன் ஏன் மனத்தில் எழவேண்டும்? “அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை” என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத்தேர்வு ஏன் மனக்குலைவை நிகழ்த்தவேண்டும்? தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது? உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும் எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது? அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதறமுடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்கமுடிவதில்லை. துறக்கமுடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மனஆழத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக்காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கிவைத்து எடையற்றவர்களாக மாறியபிறகு அண்ணனும் தங்கையும் தத்தம் அறையைநோக்கித் திரும்பிவிடுவதைப்போல உலகமும் பழையபடி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.

“ஷினாகவா குரங்கு” என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக்கதை. நடப்பியல் சொல்முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறிமாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்கமுடியாமல் அடிக்கடி மறந்துபோகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப்பெரிய பிரச்சனையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். “ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்கவேண்டும்” என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொருபக்கம். ஒருபக்கம் எதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்துகோண்டு போகிறார் முரகாமி. வீட்டுக்குள் நேசிக்கப்படாமல் வளர்ந்த புறப்பின்னணியும் நேசிக்கத் தெரியாமல் வாழ்கிற அகப்பின்னணியும் சேர்ந்து உருவாக்குகிற மனநெருக்கடிளே அவள் தன் பெயரை மறப்பதற்கான பின்னணி. நேசம் என்பதை ஒரு பெயருக்க இணையானதாக முன்வைக்கப்படுகிறது. உலகியல் வாழ்வில் பெயர் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அகவாழ்வில் நேசம் முக்கியம். நேசத்தை மறந்ததால் அவள் பெயரற்றவளாக மாறிவிடுகிறாள். இந்த உலகியல் இருப்புக்கு அடையாளம் நேசம்தான். அன்புடையார்க்கே உலகம். எதார்த்தத்தில் பெண்பாத்திரம் வழியாக நாம் அடையும் அனுபவம் இது. மனம் கவர்வதை அடைவது என்பது கட்டற்ற சுதந்திரத்தின் அடையாளம். எப்படியாவது அடைவது என்பது எல்லையற்ற சதந்திரம். குரங்கு வழியாக இந்த அம்சம் கட்டியெழுப்பப்படுகிறது. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக்கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்கின் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன்வைத்தே அது புரிந்துகொள்கிறது. பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றலையும் பெறுகிறது. அடைவதே சுதந்திரம் என்று தொடக்கத்தில் அறைகூவல் விடும் குரங்கு மனத்துக்குப் பிடித்த பெயருடன் காட்டுக்குள் தலைமறைவாகச் சென்றுவிடும் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. பெயர் என்பதை நேசம் என்று அதுவும் புரிந்துகொண்டதற்கான அடையாளமாக அத்தருணம் திகழ்கிறது. சுதந்திரங்களுக்கு இடையே நேசம் என்று மெல்லிய உணர்வின் அவசியம் எந்த அளவுக்கு மகத்துவம் நிறைந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சுதந்திரத்தைப்பற்றியும் சுதந்திரம் துறத்தலைப்பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச்சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி “நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது” என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன்வைக்க இயலாத ஆணைப்பற்றியும் பெண்ணைப்பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். கட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும் பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம்பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூ சதவிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயனமாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும் இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமலும் ஒரே ஒரு பார்வையைக்கூட பகிர்ந்துகொள்ளாமலும் கடந்து சென்றுவிடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போதும் அதே தீவிரப் பொருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் என்று தெரியாமலேயே மறுபடியும் இருவரும் ஒருவரையருவர் பார்த்துக்கொள்ளாமலும் காதலைப் பகிர்ந்துகொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரேஒரு சதவீதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன்கூட சேர்ந்து செல்லக்கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது? விடுவிக்கப்படமுடியாத இப்புதிருக்கு என்ன காரணம்? எல்லையற்ற சுதந்திரங்களாலும்கூட அப்புதிரின் விளிம்பைத் தொடமுடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுடகுலம் இதுபோன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும் திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.

(நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது- ஜப்பானியச் சிறுகதைகள். மூலம்-ஹாருகி முரகாமி. மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன். வம்சி வெளியீடு, 19, டி.எம்.சா§¡ன்,திருவண்ணாமலை. விலை ரூ80)


Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்