சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

பாவண்ணன்


மகாகவி பர்த்ருஹரியின் சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து உட்பிரிவுகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள். ஒவ்வொரு சதகத்திலும் நூறு பாடல்கள் என்கிற கணக்கின்படி சுபாஷிதத்தில் முன்னூறு பாடல்கள் உள்ளன. படித்து முடிப்பதற்கான பாடல்கள் அல்ல இவை. நினைக்கும்போதெல்லாம் எடுத்து மீண்டும்மீண்டும் படித்துப்படித்து அசைபோடத்தக்க பாடல்கள். திருக்குறளைப் படிப்பதுபோல எங்கிருந்துவேண்டுமானாலும் தொடங்கி நாலைந்து பகுதிகளைமட்டும் படித்துவிட்டு மூடிவைத்துவிடலாம். அந்த வாசிப்பில் மனத்தைத் தொடும் வரிகள்வழியாக ஒட்டியும் வெட்டியும் விரிவடையும் எண்ணங்களின் தொகுப்பே அவை வழங்கும் அனுபவம். அந்த அனுபவம் ஒரு புதையல். சில சமயங்களில் நேரிடையாகவே கண்களில் தென்படும். சில சமயங்களில் ஒவ்வொன்றையும் விலக்கிவிலக்கி நடையாய் நடந்தபிறகுதான் கண்டடையமுடியும். சுபாஷிதம் வாசிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு புதையலைக் கண்டெடுக்கலாம்.

யோகியின் மனஉறுதியைத் தீட்டிக்காட்டும் சித்திரமாக இடம்பெறும் “சிறுமீனின் துள்ளலால் கலங்காது கடல்” என்னும் வரி வழங்கும் கவிதையனுபவம் மகத்தானது. முதல் வாசிப்பில் அழகான உவமை என்கிற அளவில்மட்டுமே மனம் உள்வாங்கிப் பதியவைத்துக்கொள்கிறது. அடுத்தடுத்த வாசிப்பின்போதுதான் இந்த வரிகளின் மேன்மையை உணரமுடிகிறது. வெளியேயிருந்து நீர்ப்பரப்பை வந்தடையும் எந்தப் பொருளும் சின்ன அளவிலாவது சலனத்தை எழுப்பும் என்பது இயற்கை. ஆனால் மீன் வெளியேயிருந்து கடலைநோக்கித் தாவும் உயிரல்ல. கடலக்குள்ளேயே வாழ்கிற உயிர். அதுதான் துள்ளுகிறது. ஆனால் அந்தத் துள்ளலாலும் கடல் கலங்கவில்லை. எப்படி இது சாத்தியமாகும் என்பதுதான் நமக்குள் எழும் வினா. மீனின் துள்ளலால் கடலுக்குள் எழும் சலனம் தவிர்க்கமுடியாத ஒன்று. ஆனால் அச்சலனம் கடலை அசைக்கவில்லை என்பதுதான் விசித்திரம். சலனத்தைப் பொருட்படுத்தாததால் கலக்கத்துக்கும் இடமில்லை. மீனின் துள்ளலால் நிகழும் சலனம் ஒரு சிறிய தொடக்கம்மட்டுமே. இன்னும் இன்னும் ஏராளமான சலனங்கள் நிகழக்கூடும். பொருட்படுத்தாமையை ஒரு பயிற்சியாகத் தொடங்கி, பிறகு இயல்பான ஒன்றாக மாற்றிக்கொள்ளும்போது ஆயிரம் சலனங்களுக்கு நடுவிலும் அமைதியாகவே இருக்கிறது கடல். பொருட்படுத்தாமைகூட அவ்வளவு பொருத்தமான சொல்லல்ல. ஏற்றுக்கொள்தல் அல்லது நிகழ அனுமதித்தல் என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம். அலைகள் இரைச்சலிடுகின்றன. கடல் அமைதியாக என்றென்றும் நிதானமாக இருக்கிறது. அலைகள் மோதிச் சிறதுகின்றன. கடல் பொறுமையாக வேடிக்கை பார்க்கிறது. அனைத்துத் திசைகளிலும் ஆர்ப்பாட்டம். அந்த ஆர்fப்பாட்டம் தன்வழியாகக் கடந்துபோக அனுமதித்தபடி அமைதியாக வீற்றிருக்கிறது கடல். காற்றும் வெயிலும் மழையும் தன்னைத் தீண்டிச் செல்ல அனுமதித்தபடி அமர்ந்திருக்கும் துறவியைப்போல. ஆழ்ந்த பேரமைதி கொண்ட கடலின் சித்திரத்தை நமக்குநாமே தீட்டிப்பார்த்துக்கொள்ள வகைசெய்யும்பொருட்டு மீனின்வழியாக ஒரு தொடக்கநிலைக் கோடுகளை இழுத்துக் காட்டி நிற்கிறது பாடல் வரி. பாடலுக்கு மீண்டும் வரும்போது எது கடல், எது துள்ளல் என்னும் கேள்விகள் எழுகின்றன. மனம் ஒரு கடல். அதில் ஆசைகள் துள்ளுகின்றன. பொறாமை துள்ளுகிறது. வெறுப்பு துள்ளுகிறது. விரக்தி துள்ளுகிறது. ஆனால் எதைக்கண்டும் கலங்காது நிற்கிறது கடல். எண்ணங்களால் கலங்காத யோகியின் மனத்தைக் கடலாக தீட்டிப்பார்க்கிறது பாடல். கடலைப் பொருத்தமட்டில் அலைகளின் ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி, மீனின் துள்ளலாக இருந்தாலும் சரி. இரண்டையும் அவற்றின் போக்கில் நிகழவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அலைகளோ மீன்களோ கடலைக் கட்டுப்படுத்தவில்லை. அதே தருணத்தில் அவற்றின் ஆட்டங்களால் கலக்கமுறவும் இல்லை. வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இதற்குக் காரணம். பற்றற்ற நிலையில் எங்கெங்கோ சென்று மீளும் எண்ணங்களை வேடிக்கை பார்fக்கும் மனநிலையோடுமட்டும் அணுகும்போது மனத்துக்குள் எவ்விதக் கலக்கமும் இல்லை.

செல்வத்தின் இயல்புபற்றிய எண்ணங்களை முன்வைக்கும் பாடலில் “கிணற்றில் நீர் எடுத்தாலும் கடலில் நீர் எடுத்தாலும் குடம் சமஅளவு நீரையே எடுக்கும்” என்னும் வரிகள் இடம்பெறுகின்றன. தொடக்கத்தில் நயமான ஒரு தொடரைப்போலத் தோற்றமளித்தலும் அசைபோடும்போது அவ்வரிகளில் படிந்திருக்கும் கவித்துவத்தைக் காணமுடிகிறது. தொட்டனைத்தூறும் மணற்கேணியை இணைத்துப் பார்க்காமல் இருக்கமுடிவதில்லை. இங்கே அகழ்ந்தெடுக்கும் பள்ளம் இடம்பெற்றிருக்கிறது. அங்கே ஒரு முழுப் பாத்திரமே இடம்பெற்றிருக்கிறது. பாத்திரத்தின் அளவைப் பெரிதாக்காமல் எடுத்துவரும் நீரின் அளவை மாற்ற இயல்வதில்லை. செல்வத்தின் இயல்பு என்னும் வரையறுக்கப்பட்ட பொருளைத் தாண்டி அறிவு, கல்வி, மேன்மை, வெற்றி எனப் பற்பல தளங்களைநோக்கி பாடல் முன்னகர்ந்துவிடுகிறது.

பாடலுக்குள் இடம்பெறும் கிணறு, கடல் இரண்டின் இருப்புகளும் மிக முக்கியமானவை. கிணறு அண்டி நிற்கவேண்டிய ஓரிடம். கடல் சுதந்திரமான ஒரு வெளி. ஒரு குடம் நீருக்கான உத்தரவாதம்மட்டுமே ஒருவரை கிணற்றை அண்டி நிற்கவைக்கிறது. அண்டி நிற்பதால் அனுபவிக்கநேரும் துயரச்சுமைகளும் ஆயாசங்களும் ஏராளம். நீருக்கான தேவை அந்த ஆயாசங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை தகவமைத்துவிடுகிறது. கடல் ஒரு சுதந்திர வெளி. அதைநோக்கி நடையிடுவது இன்னும் கூடுதலான சுதந்திரப் பயணம். சேரும்வரை நேரக்கூடிய துன்பங்களை நினைத்துநினைத்து அஞ்சி நாம் அதை நெருங்கிச்செல்ல நினைப்பதில்லை. அங்கு கிட்டுவதும் ஒரு குடம் நீர்தானே என்கிற எண்ணமும் காரணமாக இருக்கலாம். ஆனால் குடம் நீர் என்பது முக்கியமல்ல, சுதந்திரமான நிலை அல்லது அண்டி நிற்கும் நிலை இரண்டில் எது உயர்வானது என்பதுதான் முக்கியம். விதியின் இயல்பை வற்புறுத்துவதுபோல பாடல் தொடங்கினாலும் சுதந்திரத்தைநோக்கி மானுடனைத் தள்ளுகிற சக்தியாக மாறி முடிவடைகிறது.

“யாக நெருப்பு தன்னை திருப்தி செய்ய விரும்பி நெய் சொரிபவனையும் தொட்டவுடன் சுடும்” என்னும் பாடலனுபவமும் முக்கியமானது. நெய் சொரிந்துதான் யாகம் வளர்க்கப்படுகிறது. ஆனால் நெய்யூற்றுகிறவன்தான் தொடுகிறான் என்பதால் யாக நெருப்பு அவனைப் பொசுக்காமல் விடுவதில்லை. யாக நெருப்புக்கு கண்ணில்லை. அது நெருக்கம் பாராட்டுவதுமில்லை. நேசத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. கோபம் ஒரு நெருப்பு. வெறுப்பு ஒரு நெருப்பு. அகங்காரம் இன்னொரு நெருப்பு. அவமான உணர்வு மற்றொரு நெருப்பு. மானுட வாழ்வில் இத்தகைய எண்ணற்ற நெருப்புகளின் குவியல். தீயவர் இயல்பைப் படம்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஓர் உருவகம், அதன் கவித்துவத் தன்மையால் தளம்தாண்டியும் சுடர்விடுகிறது.

எது சுகம் என்றொரு கேள்வியை நோக்கி முன்னகரும் ஒரு சிறிய பாடல் வைராக்கிய சதகத்தில் உள்ளது. முதலில் அது தாகத்தால் வாய் உலர்கையில் குளிர்ந்த ருசியான நீரை அருந்துவதைச் சுட்டிக் காட்டுகிறது. பிறகு, பசியால் உடல்சோர்ந்து தவிக்கும்போது நல்ல சுவையான உணவை உண்டு இளைப்பாறுவதைக் காட்டுகிறது. அதற்குப் பின்பு காம நெருப்பு எரித்ததும் இளம்பெண்ணை இறுக்கி அணைத்துக்கொள்வதையும் முன்வைக்கிறது. வேட்கையைத் தணித்துக்கொள்வது, பசியைத் தணித்துக்கொள்வது, காமத்தைத் தணித்துக்கொள்வது என தணித்துக்கொள்வதற்கு பழக்கப்பட்ட மானுட மனம் நீர் வேட்கையைவிட, பசியைவிட, காமத்தைவிட மேலான ஒரு வேட்கை இந்த உலகில் இருப்பதை மறந்துவிடுகிறது. அந்த உச்சப்புள்ளியை நோக்கி நகரவேண்டிய மனம் தன் பயணத்தைத் தொடராமல் எளிய பசிகளைத் தணித்துக்கொள்வதில் கிடைக்கும் நிம்மதியையே பெரிதென எண்ணி முடங்கிவிடுகிறது. ஒரு கட்டத்தில் தன் இயலாமையை மறைத்துக்கொள்ள இவற்றையே சுகமென எண்ணி மயங்கி நம்பத் தொடங்கிவிடுகிறது. விடுதல் இல்லா விருப்பம் உண்மையைநோக்கிய பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறது அல்லது பயணத்தையே தடுத்துவிடுகிறது. அப்படியானால் எது சுகம்? அதை வரையறுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை பாடல் நமக்கு வழங்கி முடிவடைந்துவிடுகிறது.

காலமகிமையை முன்வைக்கும் ஒரு பாடலில் ஓர் அற்புதமான பகடையாட்டக் காட்சி இடம்பெறுகிறது. காலனும் காளியும் சேர்ந்து அந்தப் பகடையாட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இரவும் பகலும் பகடைக்காய்களாகின்றன. உலகப்பலகையே பகடையாட்டக்களம். பகடைகள் உருட்டப்படுகின்றன. உயிர்களென்னும் காய்கள் முன்னும் பின்னுமாக நகர்த்தப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத இந்தப் பகடையாட்டத்தையும் கண்ணுக்குத் தெரிகிற இன்னொரு காட்சியையும் நுட்பமாக இணைத்துவிட்டுப் போகிறது பாடல். அந்தக் காட்சி இதுதான். ஏராளமான மனிதர்கள் நிறைந்திருந்த வீட்டில் ஏதோ ஒரு தருணத்தில் ஒரேஒருவன்மட்டுமே தங்கியிருக்கிறான். ஒரேஒரு மனிதன்மட்டுமே நின்றிருந்த வீட்டில் ஏதோ ஒரு தருணத்தில் ஏராளமான பேர்கள் வாழத் தொடங்கி பிறகு ஒருவரும் இல்லாமல் போகின்றனர். பிறப்பு, இறப்பென்னும் பெரும்புதிர் நம்மை ஆட்டிப்படைக்கும்போது, கண்ணுக்குப் புலப்படாத அந்fதப் பகடையாட்டக்காட்சியை நினைக்கத் தோன்றுகிறது.

கவித்துவம் நிறைந்த இத்தகு வரிகள் மட்டுமில்லாமல் நினைத்துநினைத்து மகிழும்படி பல பாடல்களில் எண்ணற்ற காட்சிகள் அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. பல நிறங்களால் ஆன இழைகளைச் சேர்த்து செறிவாக நெய்யப்பட்ட ஆடைபோல. அக்காட்சிகளின் வசீகரத்தால் படித்ததுமே பாடல்கள் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன. மழைநீர்த்துளியொன்றின் வழியாக நல்லோர் இயல்பை உணர்த்த எழுதப்பட்ட பாடலின் அடுக்குமுறை ஓர் இனிய அனுபவம். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் பட்டவுடன் ஆவியாகி மறைந்துவிடுகிறது மழைத்துளி. அதே மழைத்துளி தாமரை இலைமீது விழுந்தால் முத்துப்போல அழகாக தேங்கி நிற்கிறது. கடலில் சிப்பிக்குள் விழும் வாய்ப்பிருந்தால் உண்மையாக முத்தாகவே மாறிவிடுகிறது. எதனுடன் சேருகிறதோ அதுவாகவே உருமாறுகிறது மழைநீர். கட்டாந்தரையில் தூவப்படும் விதைகள் சாவியாகப் போகின்றன. விளைநிலத்தில் தூவப்படும் விதைகள் முளைத்துப் பயிராகின்றன என்னும் பைபிள் வாசகம் நினைவுக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. சேரிடம் அறிந்து சேர் என்னும் நீதியை வலியுறுத்தப் புனையப்பட்ட வரிகள் என்றாலும் அதன் அடுக்குமுறை அழகு மீண்டும்மீண்டும் பாடலைப் படிக்கத் தூண்டுகிறது.

விதிவலிமையை உணர்த்துகிற சித்திரத்திலும் இப்படி ஓர் அழகான அடுக்குமுறை உள்ளது. முதலில் பாம்பு ஒன்று பசியுடன் மூங்கில் கூடைக்குள் தப்பிக்க இயலாமல் அடைபட்டுச் சுருண்டிருக்கும் காட்சி. அடுத்ததாக, பசி தாளாத எலியொன்று தின்பதற்கு ஏதாவது கிடைக்காதா என வேகவேகமாகக் கூடையைக் கடித்து துளைத்துக்கொண்டு உள்ளே சென்று தேடும் காட்சி. அதற்கடுத்ததாக பாம்பின் இரையாக அது மாறி மடியும் கொடுமை. எலியை விழுங்கிவிட்டு, எலி உருவாக்கிய துளை வழியாக பாம்பு வேகமாக வெளியேறிச் செல்லும் காட்சி. எலியாக இருந்தாலும் சரி, பாம்பாக இருந்தாலும் சரி, பசி ஒன்றுதான் அல்லவா? இதே பாம்பு, நாளை இன்னொரு உயிருக்கு உணவாக மாறிப்போகும் அவலம் நேரலாம். ஆற்றாமையோடு அடுக்கப்பட்டிருக்கும் பாடல் வரிகள் வாசகர்களை இந்தப் புதிரைநோக்கி உந்தித் தள்ளுகிறது.

விடஇயலா விருப்பத்தை முன்வைக்கும் சதகத்தில் இடம்பெறும் காட்சியின் அடுக்குமுறையும் வசீகரமானது. முதலில் சுடும் என்று அறியாமல் விளக்கின் சுடரில் விழுந்து இறக்கும் விட்டில்பூச்சியின் சித்திரம். அடுத்து அறியாமையால் புழுவை விழுங்கச் சென்று தூண்டிலில் அகப்பட்டு மடியும் மீனின் சித்திரம். இரண்டுக்கும் காரணம் மோகம். இரண்டுமே அறியாமையால் நிகழ்கின்றன. அத்தகு துன்பங்களில் மானுடனும் அறிந்தே விழுகிறான். இதற்குக் காரணமும் மோகம். மோகம் விளங்கிக்கொள்ளமுடியாத புதிராக மண்மீது உலாவரும் அதிசயம்.


(சுபாஷிதம் . சமஸ்கிருத மூலம் : மகாகவி பர்த்ருஹரி. தமிழாக்கம் : மதுமிதா, சந்தியா பதிப்பகம், ·ப்ளாட் ஏ, நியுடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை. ரூ150)


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்