‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

சுமதி ரூபன், கனடா


லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன் இப்போது உண்மையிலேயே திருந்தி வி;ட்டான்.. லீலா கூட இப்போது கணவனைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறாள். லீலா வெட்கப்படும் போது மதிக்கும் மிதமிஞ்சிய வெட்கம் வந்து விடும்.. அவள் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.. சில வேளைகளில் ராஜம்மாவின் போக்கு மதிக்கு மிகவும் ஆத்திரத்தைக் கொடுக்கும்.. இப்படியா ஒரு பெண் மருமகளை வைத்துக் கொடுமைப் படுத்துவாள்.. ம்.. அவள் மாமிக்காறி அப்பிடித்தான் செய்வாள் ஆனால் இந்த முட்டைக்கண்ணனுக்கு அறிவு வேண்டாம்.. எப்பபாத்தாலும் சரோவோட வெடுக்கு வெடுக்கு எண்டு.. எதுக்குத் தான் இதுக்கெல்லாம் கலியாணம்.. புரண்டு படுத்தாள் மதி.. கலியாணம் கட்டி முழுசா ஒரு வருஷம் ஆக முதலே தனது கணவனை ஆமிக்காறரின் துப்பாக்கிக்கு தாரை வார்த்துக் குடுத்த தன் தங்கை அண்ணாதான் கதியெண்டு கனடா வந்து சேர்ந்து விட்டால்.. அவளுக்கு செல்வம் போலொரு தங்கமான மாப்பிள்ளை அமைஞ்சால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.. இந்தக் கடவுள் ஏன் தான் இப்பிடி நல்லதுகளுக்கே கஷ்டங்களைக் குடுத்துகொண்டிருக்கிறார் ? ஏக்கத்துடனேயே சின்னதாக குறட்டை அவளிடமிருந்து வெளிப்பட்டது..

பக்ரறி வேலை முடித்து காய்ந்து வடிந்து போய் சந்திரன் வேலையால் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தான்.. இனிச்சாப்பிட்டு சின்னதாக ஒரு நித்திரை கொண்டு விட்டுத் திரும்பவும் வேலைக்கு ஓட வேண்டும்.. என்ன இந்த வாழ்க்கை எண்டு அவனுக்கு அலுப்பு வந்தது.. வயிறு பசியால் ஓலம் போட்டது. வழமையாக வேலை முடிந்ததும் கோப்பிக்கடைக்குப் போய் கூடாக ஒரு கோப்பி குடித்து விட்டுத்தான் வீட்டிற்கு பஸ் பிடிப்பான்.. ஆனால் இன்று நேற்று வாங்கிய பங்கு இறைச்சியை சமைக்கச் சொல்லி மதியிடம் சொல்லியுள்ளான்.. சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்.. அவன் வாயில் நீர் ஊறியது.. இச்.. இறைச்சிக்கறியெண்டு சொல்லி சும்மா விறைத்ததுகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அவனின் வாயும் விறைத்து விட்டது.. ‘அண்ணை உயிர் ஆடடிக்கப் போறம் உங்களுக்கொரு பங்கு வேணுமோ ? விலை கொஞ்சம் கூடவரும் ஆனால் ஊரில சாப்பிட்டது மாதிரி இருக்கும் ‘ எண்டு நண்பன் கேட்ட போது ‘விலை என்ன விலை.. ஓடியோடி உழைக்கிறம் ஒரு நாளைக்கெண்டாலும் வாய் ருசிக்கச் சாப்பிட வேணும் ‘ அன்றிலிருந்தே சந்திரனின் வாயில் நீர் ஊறத்தொடங்கி விட்டது. ஆட்டு இறைச்சியை நினைக்க, நினைக்க அவனுக்கு ஊர் நினைவு அலைமோதி நெஞ்சை நெகிழ வைத்தது.. அம்மா பிரட்டலாக அள்ளி வைக்க எண்ணெயில் மூழ்கிய உடலுடன் சாராயமும் கையுமாக கண்கள் சிவக்க அப்பா பக்குவமாய் தொட்டுச் சுவைத்துச் சிரித்து…குடுத்த வைச்ச மனுசன்.. சாராயம் ம் நானும் முடிந்தால் ஒரு பியர் அடிப்பம்.. வேலைக்குப் போகமுதல் அது இறங்கீடும்.. பிறகு மதியையும் கணக்குப் பண்ணி…. வர வர அவள் முரண்டு பிடிக்கிறாள்.. கற்பனைகள் பெருகப் பெருக அவன் நடை துரிதமானது..

கதவைத் திறந்து சந்திரன் வீட்டுக்குள் புகுந்தான்.. மதி சோபாவில் விக்கி, விக்கி அழுதுகொண்டிருந்தாள்.. ஆட்டு இறைச்சி மணம் நாசியைத் தாக்கியது.. கறி மணத்துடன் சேர்ந்து கொஞ்சம் கருகிய மணமும் சேர்ந்து கொள்ள சந்திரன் ஓடிப்போய் கறிச்சட்டியின் மூடியைத் தூக்கினான்.. ஆட்டு இறைச்சி கறுத்துப்போய் புகை மூட்டமாய் அவனைப் பார்த்துச் சிரித்தது..

‘நாயே.. ஏண்டி இப்பிடி என்ர கழுத்தை அறுக்கிறாய்.. ‘ ஓடிச்சென்று மதியின் தலைமயிரைக் கொய்து முகத்தில் ஒரு குத்து விட்டான்.. கையில் அகப்பட்ட டிமோட் கொன்றோலை எடுத்து ரிவியை நோக்கி எறிந்தான். சின்னதான ஒரு சிணுங்கலுடன் அது கறுப்பானது.. மதி முழித்தாள்.. ‘என்னடி முழிக்கிறாய் நாயே. உந்தச் சனியனைப் பாத்துச் சிரிக்கிறது, அழுகிறது. உனக்கெண்டொரு குடும்பம் இருக்கெண்ட நினைவிருக்கே உனக்கு.. வேலைக்குப் போகக் கள்ளம்.. நான் மாடு மாதிரி உழைச்சுப் போட எந்த நேரம் பார் உதுக்கு முன்னாலேயே கிட. ‘

‘இப்ப ஏன் கத்துறீங்கள்.. நான் வேலை தேடிக்கொண்டு தானே இருக்கிறன்..கிடைச்சா எல்லோ ‘ அவளும் பதிலுக்குக் கத்தினாள்.. ‘செய்யிறதையும் செய்து போட்டுக் கதை வேறை ஆ ‘ மீண்டும் அவளின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.. அவள் சொண்டு வெடித்து ரத்தம் பிசுபிசுத்தது. ‘ஏண்டா நாயே என்னைப் போட்டு இந்த அடிஅடிக்கிறாய்.. வேலை இல்லாட்டியும் உனக்கு எல்லாம் செய்துதானே தாறன்.. மாடு மாதிரி இப்பிடிக் குத்துறியே ‘ மதி ஆவேசத்துடன் கத்தினாள்..

‘என்னடி நாயோ.. புருசனை இப்பிடிச் சொல்லுற அவவுக்கு வந்திட்டாய் ஆ ‘ சந்திரன் எட்டி மதியில் தலைமயிரைப் பிடிக்கப் போக.

‘தொட்டாயெண்டாப் பொலிசுக்கு அடிப்பன்.. விட வி;டத் தலைக்கு மேல ஏறுறாய். ஆ பொம்பிளை எண்டா உங்களுக்கெல்லாம் இளக்கமாப் போச்சு. ‘

‘அடியெடி பாப்பம் பொலிசு வரமுதல் உன்னத் துண்டு துண்டா வெட்டிப்போட்டு நான் உள்ளுக்கப் போயிடுவன்.. ‘ சொன்ன படியே அவளின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து இழுத்து குசினிக்குள் வந்து கருகிச் சுருங்கிப் போயிருந்த கறிச்சட்டிக்குள் அவளின் முகத்தைப் புகுத்தி ‘பாரடி பாரடி நான் நூறு டொலர் குடுத்து வாங்கின பங்கு இறைச்சிக் கறியைப் பாரடி..இதுதாண்டி இண்டைக்கு உனக்குச் சாப்பாடு.. இண்டைக்கு முழுக்கறியையும் சாப்பிட்ட பிறகுதான் நீ குசினியை விட்டு வெளியில வரலாம்.. ‘

குற்ற உணர்வு தலைக்கேற செய்வதறியாது ‘ஐயோ ஐயோ இந்த மனுசன் என்னைப் போட்டுக் கொல்லுது ஏன்னெண்டு கேக்க ஆக்களில்லாத அனாதையா நான் போயிட்டனே ‘ பெருங்குரல் எடுத்து மதி கத்தினாள்..

‘ஏன்டி உனக்கு ஆளில்ல உன்ர கொம்மா கொப்பர் எல்லாம் இஞ்சதானே இருக்கீனம் அவையோட போய் இரன்.. ‘ தலைமயிரில் பிடித்திருந்த பிடியை விடாமல் அவளை இழுத்து வந்து தொலைபேசியை எடுத்து அவள் கையில் கொடுத்து ‘இந்தா கொம்மாக்கு அடி.. பிள்ளை வளத்த விதத்தை அவையளும் அறியட்டும்.. மனுசன் பக்றியால முறிச்சு போட்டு வர இந்த நாய் மனுசனுக்குச் சமைச்சுப் போடாமல் நாடகத்தில வாற மனுசங்களோட சல்லாபிச்சுக் கொண்டிருக்குது எண்ட கூத்தை அவையளும் அறியட்டும் ‘ அவள் கைக்குள் தொலைபேசியைச் செருகினான் சந்திரன்.

‘உனக்கென்ன விசர் பிடிச்சிட்டுதே.. கறி எரிஞ்சு போச்சு அது சரி.. அதுக்காகத் தேவையில்லாத கதையெல்லம் கதைச்சுக்கொண்டு ‘ அவள் தொலைபேசியைத் தூக்கிப் போட்டு விட்டுக் கத்தினாள்..

‘போடி என்ர கண்ணுக்கு முன்னால நிக்காதை எனக்கு விசர் பிடிக்குது.. ‘ கத்தியபடியே அவளைப் பிடித்துத் தள்ள மதி அறையை நோக்கி ஓடினாள்..

வேலைக் களை.. பசி இழந்து விட்ட இறைச்சி எல்லாம் சேரந்து சந்திரனின் கோபத்தைத் தலைக்குமேல் ஏற்ற பக்கத்தில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து நிலத்தில் ஓங்கி எறிந்தான்.. வீட்டில் நின்றால் பிரச்சனை கூடும் அவள் பொலிசுக்க அடிச்சாலும் அடிப்பாள் என்ற எண்ணம் எழு இரண்டு முட்டையை அடித்துப் பொரித்து சோற்றுடன் குழைத்துச் சாப்பிட்டு விட்டுச் சந்திரன் புறுபுறுத்த படியே அடுத்த வேலைக்குக் கிழம்பி விட்டான்.

கதவு மூடிச் சத்தம் கேட்தும். சந்திரன் போய் விட்டான் என்று உறுதி செய்து கொண்டு மெல்ல மெல்ல கீழே வந்தாள் மதி. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டுக் குசினிக்குள் போனவள் இறைச்சிக்கறியை அள்ளிக் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு.. ப்ரிஜைத் திறந்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து ரத்தம் கசியும் வாயோரம் ஒத்திய படியே ஒரு கிண்ணத்திற்குள் கொஞ்சம் மிக்சரை போட்டுக்கொண்டு வந்து ரிமோட் கொன்றோலை எடுத்து இரு முறை தட்டி விட்டு கால்களை சோபாவில் அலாக்காகத் தூக்கி வைத்துக்கொண்டு ரீவியைப் போட்டாள்.. அது இரண்டு முறை மங்கி விட்டு வேலை செய்யத் தொடங்கியது.. நாடகம் தொடங்கியதும் மிக்சரை அள்ளி மென்றபடியே சோகமானாள்.. லீலாவின் மாமியார் நெஞ்சு நோவால் துடிதுடிக்க மதி மீண்டும் விக்கி விக்கி அழத்தொடங்கினாள்.. பாவம் லீலா இப்பதான் புருஷன் திருந்தி ஒரு மாதிரி நிம்மதியாகக் குடும்பம் நடத்துகிறாள் இதுக்குள் மாமியாருக்கு இப்பிடியாகி விட்டதே என்ற கவலை அவளிற்கு..

எழுதியவர் .

Series Navigation