சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

எஸ்.ஷங்கரநாராயணன்


ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரக மந்திரம் அவருக்கு. சுவாரஸ்யமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்கு ரெண்டாம்பட்சம் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர் அவரை ‘எழுத்துலகின் சிலுக்கு,’ என்று குறிப்பிட்டார்.
புனைகதைகளில் அவர் எழுதிக்காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரை சொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதராக நட்புபேணுகிறவராக எளிமையானவராக அவர் இருந்தார். விளம்பரங்களில் சினிமாவில் கொஞ்சூண்டு ஆபாசம் நல்லது என்பார்கள். திட்டுவான் என்றாலும் மனசில் நிக்குமே, என்கிற வியாபாரத் தந்திரம். அதைத்தான் ‘சுஜாதாகாலம்’ என்கிற பத்திரிக்கைப் பேராளுமை நிருவி அடங்கியிருக்கிறது. பூகம்பம் பற்றி அவர் எழுதும்போது கூட அவரால் ‘கட்டில் கெட்ட காரியம் பண்ணினாப் போல ஆடியது’ என்றுதான் எழுத முடிந்தது. ஒரு கதையில் – ஆம்பளைங்க செய்யிற அத்தனை காரியத்தையும் பெண்ணால செய்ய முடியுமா? ஆணைப்போல பெண்ணால் உயரத்துக்கு ஸ்வைங்கென்று ஒண்ணுக்கடிக்க முடியுமா? – என அவர் கேட்டார். அதன்பேர் நகைச்சுவை. பிற்பாடு ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய வசனமாகவும் அது இடம் பிடித்தது. சுய அங்கீகாரம்!
வணிகப் பத்திரிகையுலகில் அவரும் ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள். பெண்களை பனியனுடன் வரைந்து அதில் ‘மில்கி வே’ என்று வாராவாரம் புதிய வார்த்தைகளை எழுதி மகிழ்ந்தார் ஜெ. கதையில் இல்லாத வரிகளெல்லாம் ஜெ. கற்பனையில் முளைத்தன. கதையில் வரும் பெண் பனியன் போடாவிட்டாலும் ஜெ. அணிவித்தார்.
மொழியில் சுறுசுறுப்பு விறுவிறுப்பு வேகம் என்று கூட்டிக் காட்டிய நடை கூட அதேசமயத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் என எழுதிவந்த, பிற்பாடு சிவப்பு விளக்குக் கதைகள் தொடர்ந்து தந்த புஷ்பா தங்கதுரை எழுதிக் காட்டிக் கொண்டிருந்த நடைதான். பரவலாய் சுஜாதாவுக்குக் கிடைத்த அங்கீகாரம், சாவி போன்றவர்கள் சுஜாதாவை உயர்த்திய உற்சாகம் – சுஜாதாவின் சலவைக் குறிப்பைக் கூட வெளியிடுவீர்களா? – என்று கேள்வி கேட்டபோது, சாவி சலவைக் குறிப்பை வாங்கி வெளியிட்டார். எழுத்துக்கு சன்மானம் என்று பரபரக்காத, விரட்டி விரட்டிக் கேட்காத எழுத்தாளர்களைத் தமிழ்ப் பத்திரிகைக்கு ரொம்பப் பிடித்தது. அவை அவர்களை உயர்த்திப் பிடித்தது.
மர்மக்கதை என்ற பெயரில் அவர் கொண்டுவந்த கணேஷ் வசந்த், அதில் வசந்த்தின் குறும்பு என்ற பெயரிலான ஆபாச வசனங்கள், ”பொண்ணு சூப்பர் பாஸ், நின்னு விளையாடும் போலுக்கே…” எல்லாம் இளைஞர்கள் இளைஞிகள் ரகசியமாய்ப் படித்துச் சிரித்து மகிழ்ந்து பொதுச் சந்திப்பில் பரிமாறி உற்சாகப் படுத்திக் கொண்டார்கள்.
அவர் எழுதிய மர்மக்கதைகள் ஆங்கிலத்தில் பரவலாய் அறியப்பட்ட கதைகளின் தாக்கங்களே. சில சமயம் அதே மொழிப்பாடுகளைக் கூட சுஜாதா கையாள முயன்றார். ‘எனார்மஸ் பிரஸ்ட்’ என்பதைத் தமிழில் ஏராளமான மார்பு என்று இளைஞர்களைப் புல்லரிக்க வைத்தார். சோப்பு டப்பாவில் சாவியைப் பதித்து மாற்றுச் சாவி செய்கிற அவரது கதை உத்தியை ஆங்கிலத்திலேயே நான் வாசித்திருக்கிறேன்.
நச்சென்ற சிறுகதைகளைத் தந்ததாக சுஜாதா கவனம் பெற்றார். அவை பெரும்பாலும் மையப்புள்ளி விலகிய கதைகளே. ஒரு விபத்தைச் சொல்லி, மற்றொருபுறம் ஒரு பெண் கணவனுக்குக் காத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே வருவார். விபத்தானவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வருவான் ஒருவன். கடைசித் திருப்பமாய் அந்தக் காப்பாற்றப் போனவனின் மனைவிதான் காத்திருக்கிறாள், என்று முத்தாய்ப்பு வைப்பார் சுஜாதா. திருப்பம், அது முக்கியம் அவருக்கு. விபத்து ஒரு மனபாதிப்பான நிகழ்வை அவருள் நிகழ்த்தவில்லை. மும்பை இட நெருக்கடி பற்றி ஒரு கதை. தெருவில் ஒருவன் விபத்தாகிக் கிடப்பான். அவன் வீட்டை வாடகைக்குக் கேட்டு ஒருவன் ஓடோடிப் போனால், அவனுக்கு முன்பே வாடகைக்கு வேறாள் முந்திக் கொண்டிருப்பான். பெரும்பாலான கதைகளில் இப்படி உணர்வுவீர்யமான கட்டங்களை கதைப்போக்கின் சுவாரஸ்யத்துக்காக விட்டுக் கொடுத்தார் சுஜாதா. வாழ்க்கைக்கு சிறிதும் நியாயம் செய்யாத கதைகள்…
முதல் மனைவி சாகக் கிடக்கும் கணவன் அருகில் பணிவிடை செய்கிறாள். ரெண்டாம் மனைவி கிட்டேயே வரவில்லை. கண் திறந்த கணவன் முதல் கேள்வியாய், ‘ரெண்டாம் மனைவி எங்கே?’ என்று திடுக்கிடும் திருப்பமாய்க் கேள்வி கேட்பான் ஒரு கதையில்.
பெரும்பாலான எழுத்தில் சுஜாதா யார் என்று வரையறுத்தாக வேண்டும்.
சுஜாதாவின் எழுத்து இளைஞர்களைக் குறிவைத்து வெற்றிகரமாக இயங்கியது. விவரப் பதிவுகளுடனான நடையே அப்போது புதுசு. அதில் சிலவேளை கருத்துப் பிழை வரும், 27வது மாடியில் இருந்து 180 கி.மீ. வேகத்தில் விழுந்து செத்துப் போனான், என அவர் எழுதினால், ஒரு வாசகன் புவியீர்ப்பு விசைப்படி கீழே வரவர வேகம் அதிகரிக்குமே, சீரான வேகம் என்று எப்படிச் சொல்வீர்கள், என்று கேட்க நேர்ந்தது. சில சமயம் அதையும் அவர் கிண்டல் போல, மாமா சித்தப்பா எல்லாருக்கும் போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்து எழுதிப் போட்டுவிடுகிறார்கள், என எகிறியது உண்டு.
இதுரீதியாக வேறொரு நகைச்சுவை ஞாபகம் வருகிறது.
”உங்க கதைக்குப் பத்து பாராட்டுக் கடிதம் வந்திருக்கு சார்” என்றார் ஆசிரியர்.
”பன்னெண்டு வந்திருக்குமே” என்றார் எழுத்தாளர்.
நடையில் புதுமை, இறங்கினான், என ஒவ்வொரு எழுத்தாக தனி வரியாக எழுதிக் காட்டியதும் அப்போது ஜான் அப்டைக் ஆங்கிலக் கவிதைகளில் செய்ததுதான். இலை உதிர்கிறது, என்பதில் உ தி ர் கி ற து – எனக் கீழே கீழே ஜான் அப்டைக் எழுதிக் காட்டும்போது, காற்றில் தள்ளாட்டம் கண்ணில் உணர முடிகிறது.
எப்போதுமே மூலத்தின் வீர்யம் அதிகம்தான்.
தில்லியில் கஸ்தூரிரங்கனுடன் பரிச்சயம் நெருங்கி, கணையாழியில் பத்திகள் எழுத வந்தது தற்செயல் என்றாலும் அதில் புதுசு புதுசாய் எதும் எழுத சுஜாதா உற்சாகம் காட்டினார். பத்தி எழுத்து என்கிற வகைமையே அப்போது அரிதான காரியம். பத்தி எழுத சுவாரஸ்யமான நடையும், அதைவிட சுவாரஸ்யமான விஷயமும் அவசியம். அவரால் முடிந்தது. பிற்பாடு பெருஞ்சுற்றிதழ்களும் அவரை பத்தியெழுத வைத்தன. ஒரு கட்டத்தில் புனைகதை எழுத்து தளர்வுறும்போது பத்தி எழுத்து அபாரமாய்க் கைகொடுக்கும்.
சுஜாதா பத்திகளில் நவீன இலக்கியம், மரபிலக்கியம், சங்க இலக்கியம், சமகால விஷயம், விஞ்ஞான விஷயம் என்று அடுக்குகளை மாற்றி ஒரே பக்கத்தில் கொடுத்து அந்தப் பகுதியைச் செறிவூட்டினார். சிறந்த கவிஞர்கள் என அவர் வணிக இதழ்களில் அடையாளங் காட்டியவர்களின் கவிதைகளை சுஜாதா இல்லையென்றால் அந்த இதழ்கள் கண்டுகொண்டிருக்காது. வணிக இதழ்களில் நல்லிலக்கிய அறிமுகம் என்று அவர் மனசாறச் செய்தார் என்றுதான் தோன்றுகிறது. இந்தியா டுடே கூட ஒரு சிறப்பு மலருக்கு அவரிடம் தமிழின் தற்காலக் கவிதை, என்ற தலைப்பில் அவரைத்தான் கட்டுரை எழுதக் கேட்டது.
ஆனால், அந்த ரசனையில் பாசாங்கு கிடையாது. வெண்பாப் போட்டி, ஹைகூ கவிதைப் போட்டி என்று அவர் ஊக்குவித்தார். பரிசளித்தார். அவர் ஊக்குவித்த இலக்கிய அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகள், அவர்களும் எழுத்து சுவாரஸ்யக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகப் பத்திரிகைகள் இன்று ஓரளவு தரமான இலக்கிய முயற்சிகளுக்குப் பழகிக் கொண்டிருக்கின்றன. மூஞ்சி சப்பையாய் கைகால் நெளிசலாய் இருந்தாலும் அந்த ஓவியங்களை அவர்கள் வெளியிட, மக்களும் சரி என்று பழகிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கதை என்று இலக்கிய முகம் காட்ட இப்படி அடையாளங்கள். இதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. போற்றுதலுக்குரியது. அது அவரால் முடிந்தது. அதை அவர் வாய்ப்பை நழுவ விடாமல் செய்தார்.
நாடகங்களில் பிழியப் பிழிய அழுகை, குலுங்கக் குலுங்கச் சிரிப்பு என்றில்லாமல், மாமி கதைகளாகவும் இல்லாமல், சுவாரஸ்யம் விலகாத குடும்பக் கதைகளை, சராசரி மனித வியாகூலங்களை நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார். பூரணம் விஸ்வநாதன் சுஜாதாவுக்குக் கிடைத்தது சுஜாதாவின் அதிர்ஷ்டம்தான். தனி முத்திரை பதித்தன அந் நாடகங்கள். சினிமாவில் அவரை சினிமாவின் போக்கோடு இயக்கினார்கள். தன் அடையாளம் இன்றி, அவருக்கிருந்த சுவாரஸ்யப் போக்கு, அலட்சிய பாவனை கொண்டாடும் நகைச்சுவை (ஜோசியன் ‘எலேய் ஆயுள் ரேகையே காணம்டா,’ என்பான். ஆஸ்பத்திரி வார்டுபாய், ”பாத்துப்போ, இப்டிதான் போனதபா ஸ்ட்டெச்சரைக் கீழ போட்டுட்டே,” என்பான்) – என்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள். சினிமாவில் அவர் தேவைப்பட்டார். சினிமா இளைஞர்களுக்கான ஊடகம். அங்கே அவர் இல்லாமல் எப்படி?
பிற்காலங்களில் அவர் விஞ்ஞானக் கதைகள் எழுத ஆரம்பித்தார். அது சுஜாதா என்பதால் அதற்கும் இங்கே அங்கீகாரம் கிடைத்தது. வேறு எழுத்தாளருக்கு இது நிகழ்ந்தேயிராது. யாரும் முயற்சி செய்து தோற்றிருக்கலாம்.
தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வர அவரது பங்களிப்பு சிறப்பானது என இரங்கல் செய்தியில் தமிழக முதல்வர் நினைவுகூர்ந்தார். தவிரவும் விஞ்ஞானக் கலைச்சொல் அகராதி அவர் முனைந்து கொண்டுவந்ததைச் சொல்லியாக வேண்டும்.
தமிழில் தட்டச்சு செய்து, கணினியில் நேரடியாகக் கதைகள் எழுத ஆரம்பித்த எழுத்தாளர் சுஜாதாதான். முதல் இணைய தளப் பத்திரிகை ‘மின்னம்பலம்’ அவர் துவங்கியதும் வரலாறு குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி.
சதா வாசிப்பு ருசி கொண்ட மனிதராக இருந்தார் சுஜாதா. இலக்கியப் போக்கு என்று பொத்தம்பொது கருத்துகளை நகைச்சுவை சாயம்பூசி அவர் எழுதினாலும், எந்த எழுத்தாளரையும் விரல் சுட்டினாப் போல அவர் சாடியது இல்லை. பத்திரிகைக்காரர்கள் கேட்கும்போதெல்லாம் சிறுகதை, தொடர்களை என்று வாரி வழங்கிக் கொண்டே யிருந்தார் சுஜாதா. அவர் எழுதினால் பத்திரிகை விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. கல்கி, சாண்டில்யனுக்குப் பிறகு அந்தப் பெருமை சுஜாதாவுக்குதான் கிடைத்தது.
நமது மண்ணின் மரபுப்படியே அவர் வயது முதிர பழைய இலக்கியங்களிலும் ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்டினார். புறநானூறு பொழிப்புரை தந்தார். வைணவ இலக்கியத்தில் ஆர்வங் காட்டினார்.
தமிழ் எழுத்து நடையில் சுஜாதா வேகத்தையும் குறியையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார். அவரது ஆளுமை அழியாது என்றுதான் படுகிறது. காலகாலத்துக்கும் இளைய தலைமுறையாளர்கள், தங்களை இளமையாக உணர்கிறவர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டே யிருப்பார்கள்.
சுஜாதா சொன்ன ஒரு நகைச்சுவை –
பையன் கேட்டான் அப்பாவிடம். ”அப்பா, நீயும் அம்மாவும் ஹனிமூன் போனப்ப நான் உன்கூட வந்தேனா, அம்மாகூட வந்தேனா?”
அப்பா சொன்னார். ”போகும்போது என் கூட வந்தே, வரும்போது அம்மாகூட வந்தே.”
·
(நன்றி – யுகமாயினி மாத இதழ்)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்