சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சுஜாதா தமிழில் பல பத்திரிகைகளில் எழுதியிருககிறார். ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.ஆனால் அவர் எந்த பத்திரிகையுடனும் குறிப்பாக தொடர்புபடுத்தி பாரக்கபடவில்லை.ஜெயகாந்தன் குமுதம்,விகடன் போன்றவற்றில் எழுதிய போதும் அவரது எழுத்து அவருக்காக படிக்கப்பட்டது,மதிக்கப்பட்டது.சுஜாதாவும் அப்படித்தான்.பல எழுத்தாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெகு ஜன பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறாரகள்.ஆனால் நாம் அவர்களுடய எழுத்தினைத் தான் கணக்கில் கொள்கிறோம். உதாரணமாக பிரபஞ்சன் குமுதத்தில் பணி புரிந்துள்ளார், விகடனில் எழுதியுள்ளார்.கல்கியிலும் எழுதியுள்ளார்.ஆனால் அதற்காக அவரை நாம் அந்த பத்திரிகைகளுடன் அடையாளப்படுத்துவதில்லை.சு.சமுத்திரம், ஜெயந்தன் உட்பட பலரும் அவர்களது எழுத்துக்களால் தான் அடையாளம் காணப்படுகிறார்களே தவிர அவர்கள் எழுதிய பத்திரிகைகளுடனல்ல.மேலாண்மை பொன்னுச்சாமி கல்கியில் எழுதியிருக்கிறார், சுஜாதா அவரது எழுத்தினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பதற்காக யாரும் அவர் வணிகபத்திரிகை சார்புடையவர் என்று கூறுவதாகத் தெரியவில்லை.எஸ்.வி.ராஜதுரையும்,வ.கீதாவும் நக்கீரனில் தொடர் ஒன்று எழுதியதற்காக நாம் அவர்களை நக்கீரன் பாணி இதழியலுடன் தொடர்புபடுத்துவதில்லை.வண்ணநிலவன் துக்ளக்கில் பணி புரிந்தாலும், துர்வாசர் என்ற பெயரில் எழுதியிருந்தாலும் நாம் அவரை துக்ளக் அல்லது சோவின் அரசியல் நிலைபாடுகளுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பதிலை.புதுமைப் பித்தன் திரைப்பட வசனம் எழுதியதற்காக நாம் அவரை தமிழ் சினிமாவின் பிரதிநிதி என்று கருதுவதில்லை.இது விந்தனுக்கும், எஸ்.ராமகிருஷ்ணன்,ஞானக்கூத்தன்,புவியரசுக்கும் பொருந்தும்.K.S.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனாரக இருந்தார் என்பதால் நாம் கோமல் சுவாமினாதனை K.S.G படங்களுடன் தொடர்புபடுத்துவதில்லை, K.S.G பாணி இயக்குநர் என்று கருதுவதில்லை.இது போல் பல உதாரணங்கள் தர முடியும். வண்ணதாசன் வங்கி ஊழியர் என்பதற்காக அவரை வங்கியின் பிரதிநிதி என்று கருதமுடியாது. சுஜாதா குமுதத்தின் ஆசிரியராக சில காலம் இருந்தார். வணிகப் பத்திரிகைகளின் உரிமையாளர் அல்ல, அவற்றின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றத்தில்லை.சுஜாதாவே விரும்பினாலும் அவற்றின் செயல்பாடு, எவற்றை வெளியிடுவது போன்ற கொள்கைகளில் அவரால் மாற்றத்தினை கொண்டுவர முடியாது என்றே கருதுகிறேன்.அவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டலாம், ஆனால் தீர்மானிப்பது அவரல்ல. எனவேதான் அவர் வணிகப்பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளாரக அறியப்பட்டார், வணிகபத்திரிகை உரிமையாளர்/நிர்வாகி அவரல்ல என்று அனைவருக்கும் தெரியும். சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்த போது நடத்திய போட்டிகளின் நடுவர் பட்டியலைப் பார்த்தால் அவர் எப்படி கருதப்பட்டார் என்று தெரியும். ஜெயமோகன் குறிப்பிடும் எளிய அடையாளத்திற்கு அப்பால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.சுஜாதா சுஜாதாதான், குமுதம் நிறுவனர் அல்ல, விகடனின் ஆசிரியருமல்ல என்பது எல்லாருக்கும் தெரியும்.மேலும் சுஜாதா தனக்கென ஒரு சிஷ்ய குழுவையோ (அ) துதிபாடிகளையோ உருவாக்கவில்லை. தன்னை எந்த பத்திரிகையுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

முற்போக்கு இலக்கியம், முற்போக்கு உள்ளட்க்கம் என்பதும் கேள்விகுட்படுத்தப்பட்டு சர்சிக்கிப்பட்டு பலரால் நிராகரிக்கப்பட்டது.தட்டையான சோசலிச யதார்த்தவாதம் மார்சிய ஆய்வாளர்களாலேயே விமர்சிக்கப்ப்ட்டு பல ‘முற்போக்கு ‘ படைப்புகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. ஜே ஜே சில குறிப்புகள் , ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் உட்பட பல படைப்புகள் கவனிப்பு பெற ஒரு முக்கியமான காரணம், இந்த நிராகரிப்புதான்.இலக்கியம் என்பது சமூகத்திற்கு செய்தி சொல்கிற அல்லது நீதி போதிக்கிற ஒன்று என்பதை சிறுபத்திரிகைகள் பல ஏற்கவேயில்லை. சிறுபத்திரிகைகள் பல முன்வைத்த எழுத்தாளர்கள் பலர் இந்தப் பார்வையுடன் ஒத்துப்போகிறவர்களே. படிகள், அதன் பின் வந்த நிறப்பிரிகை போன்றவை இலக்கியம் குறித்த விமர்சன்ப்பார்வையை வேறு தளங்களுக்கு எடுத்துச் சென்றன.எனவே செத்த குதிரையை அடித்து ஒப்பாரி வைப்பது எதற்கும் உதவாது. சுஜாதாவின் எழுத்துக்கள் ஏன் ‘உரிய ‘ கவனம் பெறவில்லை என்பதற்கான காரணங்கள் வேறு.

(என் ஞாபக சக்தியை அடிப்படையாகக் கொண்டே இதனை எழுதுகிறேன். தகவல் பிழையிருப்பின் பொருத்தருள்க).

தொடரும்

Series Navigation

சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சுஜாதாவின் அறிவியல் புனைகதைத் தொகுப்பிற்கு ஜெயமோகன் எழுதிய மதிப்புரை பற்றி சுஜாதா அம்பலத்தில் தன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சுஜாதா தன் கருத்துக்களை திண்ணையில் எழுதியிருக்கலாம் அல்லது அம்பலத்தில் வெளியானதை திண்ணைக்கு அனுப்பி பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கலாம்.அவர் அவ்வாறு செய்திருந்தால் திண்ணை வாசகர்கள் அவர் கருத்தினை அறிந்திருக்க முடியும். பொதுவாக மதிப்புரை வெளியான இதழில் தனக்கு அது பற்றி கூறுவதற்கு ஏதேனும் இருந்தால் அதை பதிவு செய்வது மரபு. மதிப்புரை செய்தவர் தன் எதிர் வினையை பதிவு செய்வதும் சாத்தியமாகும். இது வாசகர்களுக்கு பயன்படும்.இருவரின் புரிதல் குறித்தும் அறிய உதவும்.ஆனால் தமிழ்ச் சூழலில் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பது வீண் போலும்.நாகரத்தினம் கிருஷ்ணா கட்டுரை மீதான தன் கருத்துக்களையும் அவர் அம்பலத்தில் எழுதியுள்ளார்.அம்பலத்தில் அவர் எழுதியுள்ளதை நான் படிக்க வில்லை- அம்பலத்தை கட்டணம் செலுத்தினால்தான் படிக்க முடியும்.

சுஜாதா குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.மறுக்க முடியாது.ஆனால் அவரது பாதிப்பு அவருக்குப் பின் எழுத துவங்கிய அனைத்து எழுத்தாளர்களிடமும் உள்ளது என்பது அதீத கற்பனை(1). ஜெயகாந்தன் என்ற இலக்கிய ஆளுமையைப் பற்றி நான் கூறவேண்டியதில்லை.நாவல்,சிறுகதை,குறு நாவல்,திரைப்படம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மிகக்கணிசமானது.ஆனால் அவரது பாதிப்பு கூட அனைத்து எழுத்தாளர்களிடமும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வட்டார மொழி இலக்கியம்,தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவற்றில் சுஜாதாவின் எழுத்தின் தாக்கம் என்ன ? இரா.முருகன் போன்று ஒரு சிலரிடம் சுஜாதாவின் பாதிப்பு இருக்கலாம். வண்ண நிலவன்,வண்ணதாசன், பூமணி,பா.செயப்பிரகாசம்,பாமா,சிவகாமி,பிரபஞ்சன் போன்றவர்கள் எழுத்திற்கும் சுஜாதாவின் எழுத்திற்கும் என்ன தொடர்பு,யூமா வாசுகி,எம்.யுவன்,பெருமாள் முருகன் என்ற அதற்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் நடையில் சுஜாதாவின் பாதிப்பு இருக்கிறதா. வாசகர்கள் முன் இக்கேள்வியை வைக்கிறேன்.விமர்சகர் ஜெயமோகன் வாசகராக இதனைப் பரிசீலிக்கலாம். எழுத்தாளர் ஜெயமோகன் தன்னையே பாதித்தவர் என்பதால் சுஜாதாவின் எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களிடமும் கட்டாயம் பாதிப்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு வெகுஜனப் பத்திரைகைகள் மட்டும்தானா படிக்க கிடைத்தன.படிப்பதில் ஆர்வமுள்ள ஒரு வாசகன்/கி சுஜாதாவின் எழுத்துகள் தவிர வேறு பலவகை எழுத்துகளை [(உ-ம்) சிறுபத்திரிகைகள், சோவியத் நூல்கள், இந்தியாவின் பிற மொழி எழுத்துக்கள்] அறிந்திருக்கும் சூழல்தான் இருந்தது. தாஸ்தாவஸ்கியை படிக்கும் வாசகரால் பஷீரையும் ரசிக்க முடியும், காப்காவையும் படிக்க முடியும்,பதேர் பாஞ்சாலியையும் அணுக முடியும்.வாசகர்

இப்படி பலவகை எழுத்துக்கள், திரைப்படங்களினை அறியக்கூடிய சூழல் இருந்தது. இது முன்பு.

இன்றைய உலகில் பரவலாக புத்தகங்கள் கிடைக்கின்ற நிலையில்,discovery channel போன்றவை ஒளிபரப்பாகும் நிலையில்,இணையம் தரும் அறிவு கிட்டும் நிலையில் ஒரு வாசகர் எழுத்தாளர்/விமர்சகர் அறிந்திராத பலவற்றை அறிந்திருக்ககூடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தான் சூப்பர் ஸ்டார் அல்லது அல்டிமேட் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டு யாரவது எழுதினால் (அ) யாரையாவது அவ்வாறு சுட்டிக்காட்டினால் வாசகர் சிரித்துக் கொண்டு அதை அலட்சியம் செய்யும் சூழல்தான் இன்று உள்ளது.

சுஜாதாவிற்கு முன்னரே தமிழில் அறிவியலை பரவலாக அனைவரும் அறியும் வண்ணம் பலர் எழுதியுள்ளனர்.உ-ம்.பெ.நா.அப்புசாமி, திருகூட சுந்தரம் பிள்ளை,கல்வி கோபாலகிருஷ்ணன்,A.N.சிவராமன்,வைத்தியண்ணா.இன்றும் சுஜாதா தவிர வேறு பலர் அறிவியலை வெகுஜன வாசகர்களுக்கு புரியும் வண்ணம் எழுதிவரும் நிலையில் சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்கள் ஒரு ஒப்பீட்டு நோக்கிலேயே அணுகப்பட வேண்டும்.

சுஜாதாவின் அறிவியல் எழுத்தின் பலம் சுவாரசியமான நடை, உள்ளடக்கமல்ல. அறிவியலை சுவாரசியமாக எழுதுவது என்பது மட்டுமே அறிவியல் நூல்களை மதிப்பிட பயன்படுத்த வேண்டிய ஒரே அளவுகோல் அல்ல.கார்ல் சாகனுடன் சுஜாதாவை ஒப்பிடுவது அபத்தம்.சுஜாதவை பாரட்ட வேண்டுமென்றால் பாராட்டுங்கள், அதற்காக சாகன் பெயரை அதில் இழுக்காதீர்கள்.சாகனின் அறிவியல் நூல்கள் வாசகரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவை.

சுஜாதாவின் அத்தனை எழுத்துக்களும் , திரைப்பட பங்களிப்பபுகள் உட்பட பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளன. அதே சமயம் அவரது தொடர்கதைகள் பலவும் நீட்டிக்கப்பட்ட சிறுகதைகள்/குறு நாவல்கள்.

வார பத்திரிகைகளின் தேவையே அவற்றின் இலக்கு என்று கருதுமளவிற்கு அவரது பல படைப்புகள் உள்ளன. நகுலன் தொகுத்த குருஷேத்திரத்திலும் அவர் எழுதியிருக்கிறார். எனவே அவரது படைப்புகளை ஒரு சேர கணக்கில் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்.அதில் எத்தனை சதவீதம் இலக்கிய ரீதியாகத் தேறும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும்.

சுஜாதா வசனம் எழுதிய இந்தியன்,முதல்வன் எத்தகைய திரைப்படங்கள். கணையாழியின் கடைசிப் பக்கத்தில் தமிழ்த் திரைப்பட பாடலை கிண்டல் செய்த சுஜாதா வசனம் எழுதிய படங்களில் வரும் ஷ்ககலக்க பேபி போன்ற பாடல்கள் அவரது ‘எழுத்தின் ‘ இன்னொரு வடிவம் அவர் அவற்றை எழுதாவிட்டால் கூட. கணேஷ் – வசந்த் உரையாடல்கள், பெண்களைப் பற்றிய வர்ணணைகள் இவற்றை நாம் மறந்துவிட வேண்டும் என ஜெயமோகன்,நா.கிருஷ்ணா நினைக்கலாம். ஆனால் என்ன செய்வது- சுஜாதாவின் எழுத்துக்கள் அவை என்பதை மறக்கவோ/மறைக்கவோ முடியாது. இன்றும் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் பற்றி வாசகர்கள் கேள்வி கேட்கிறார்களே ? ஒரு காலகட்டத்தில் சுஜாதா-ஒவியர் ஜெயராஜ் கூட்டணி வணிகப் பத்திரிகைகளில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது.அதன் காரணம் என்ன என்பது வாசகர்களுக்குத் தெரியும். முதல்வன் முன்னிறுத்தும் அரசியல் என்ன ? இந்தியன் சொல்லும் செய்தி என்ன ?

இவை எத்தகைய எழுத்துக்கள் ? ஜெயமோகன்,நா. கிருஷ்ணா கட்டுரை இப்படி பலவற்றை கவனமாக தவிர்த்து விட்டு எழுதப்பட்டுள்ளது. அப்படி தவிர்ப்பதுதான் ஒரு கோணத்தினை,அளவுகோலை வாசகர் முன்வைக்க உதவியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

சிறுபத்திரிகைகள் பெரிய வணிகப் பத்திரிகைள் மீது வைத்த விமர்சனத்தில் பல குறைகள் இருந்தாலும் அதில் ஒரு தார்மீக கோபம்,அக்கறை இருந்தது. அது தங்கள் வழிகாட்டிகளாக பாரதியையும், புதுமைப்பித்தனையும் இனம் கண்டோர் குரல்.ஜெயமோகன், நா.கிருஷ்ணாவிடம் சுஜாதா மீது ஒரு நடுநிலையான பார்வை இல்லை. வெறும் ரசிக மன்ற மனோபாவம்தான் உள்ளது.

சுஜாதாவின் எழுத்துக்கள் முற்றிலுமாக மோசமானவை, நிராகரிக்கப்பட வேண்டியவை அல்ல. பில் கேட்சின் இந்திய வருகைப் பற்றிய கட்டுரையில் அவர் கூறியிருந்த கருத்துகள் ,open source software பற்றியது வரவேற்கதக்கவை, வெகுஜன பத்திரிகைகள் கேட்சை ஆதர்சமாக எழுதிவந்துள்ள நிலையில் அவரது பார்வை வித்தியாசமானது, பாரட்டுதற்குரியது. குமுதம் ஆசிரியராக இருந்த போது நடத்திய போட்டி அவர் செய்த நல்ல பணி.பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம் குறித்த அவரது அக்கரை,கலைச்சொல்லாக்கம் குறித்த அவரது கருத்துக்கள்,செயல்பாடுகள் போன்றவை வரவேற்க்கதக்கவை.

எனவே சுஜாதாவைப் பற்றிய ஒரு விமர்சனம் தேவை, ஆனால் அது வெறுப்பினையோ அல்லது ரசிகமன்ற வழிபாட்டு மனோபாவத்தையோ அடிப்படையாக கொண்டிருக்க முடியாது. அவரது ஒட்டுமொத்த பங்களிப்பு என்ன என்ற கேள்வியும் எழும். அவர் அளவு அதிகம் எழுதாத சிலரது பங்களிப்பு அவரது பங்களிப்பை விட குறிப்பிடத்தக்கது என சிலர் கருதக்கூடும். ஒப்பற்ற சிறப்பான எழுத்தாளர், என்பதற்கும் குறிப்பிடத்தக்க திறமையான எழுத்தாளர் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.இது வாசகருக்கும் தெரியும், விமர்சகருக்கும் தெரியும்.இலக்கியத்தில் மெகா,சூப்பர் ஸ்டார்களை தேடுவோர் இதனை அறியாமலிருக்கலாம்.ஒருவேளை இன்று யாரையாவது அவ்வாறு சுட்டிகாட்டிவிட்டால் தங்களையும் அது போல் பிறர் சுட்டிக்காட்ட வசதியாக இருக்கும் அல்லது தங்களைத்தாங்களே அப்படி முன்னிறுத்த அது உதவும் என அவர்கள் நினைக்கலாம்.

சிறுபத்திரிகையான யாத்ராவில் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை வந்ததாக நினைவு. அது இப்போது மறுபிரசுரம் செய்யப்பட்டால் சிறுபத்திரிகைகள் அவரது எழுத்துக்கள் மீது எத்தகைய விமர்சனங்களை ஏன் முன் வைத்தன என்பது தெரிய வரும்.

நா.கிருஷ்ணா ஒரு விமர்சனப்பார்வையை முன்வைக்கவில்லை.அவர் ஜெயமோகன் கட்டுரைக்கு எதிர்வினையாகவே தன் கட்டுரையை எழுதியுள்ளார். ஜெயமோகன் சுஜாதாவின் அறிவியல் சிறுகதை தொகுதிக்கு மதிப்புரை மட்டும் எழுதவில்லை.சுஜாதாவின் எழுத்துக்கள்,தமிழ் இலக்கியம்,விமர்சனம் குறித்தும் அதில் எழுதியுள்ளார்.அறிவியல்,அறிவியல் புனைகதைகள் குறித்த அவரது கருத்துக்களின் மீது ஒரு நீண்ட விமர்சனம் தேவை. நான் அதைச் செய்யப்ப் போவதில்லை. மாறாக அவரது இலக்கிய விமர்சனக் கருத்துகளை கேள்விக்குள்ளாக்க விரும்புகிறேன்.

(என் ஞாபக சக்தியை அடிப்படையாகக் கொண்டே இதனை எழுதுகிறேன். தகவல் பிழையிருப்பின் பொருத்தருள்க).

(1) ஏற்கனவே நான் ஒரு கட்டுரையில் சொன்னதுபோல சுஜாதாவின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் அவரது பாதிப்பு இல்லாதவர் கோணங்கி மட்டுமே, ஆகவே அவரது உலகில் புற உலகமே இல்லை. கோணங்கியின் எழுத்து குறித்து ஜெயமோகன் எழுதும் போது ‘அவரது உலகில் புற உலகமே இல்லை ‘ என்றால் என்ன என்பதை விரிவாக விளக்குவார் என நம்புகிறேன்.

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation