சீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

மோகன் மாலிக்


மேல் மட்டத்தில், பாகிஸ்தானிய இந்திய தலைவர்களின் கைகளை அமெரிக்கா முறுக்கியதால், போர் மேகங்கள் சற்று விலகியிருக்கின்றன. எனினும், தெற்காசியாவில் போர் வரலாம் என்ற கவலை முழுவதுமாகப் போய்விடவில்லை. அதுவும் முக்கியமாக பாகிஸ்தானிய ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அவர்களது இயலாமையாலோ, அல்லது விருப்பமின்மையாலோ, முழுவதுமாக பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு வராமல் தடுத்து நிறுத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதால்.

இன்றைய இந்தியா பாகிஸ்தான் பிரச்னை மீண்டும், ஆஸியாவின் வல்லரசான சீனா, எந்த அளவுக்கு தன் நீண்ட நிழலை தெற்காசியாவின் மீது பரப்புகிறது என்பதை அடிக்கோடு இட்டிருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், இந்தியா-பாகிஸ்தான்-சீனா என்ற மும்முனைகளில் மிகவும் முக்கியமான ஆள் சீனாதான் என்பது வெகுகாலம் அறிந்தது.

1962இல் சீனா-இந்தியா எல்லைப்போர் நடந்தபின்னர், சீனா பாகிஸ்தானுடன் கூட்டணை அமைத்து, மிகவும் அதிகமாக பாகிஸ்தானில் ராணுவ தளவாடங்களையும், நிறுவன முதலீடுகளையும் வைத்து, இருவருக்கும் பொது எதிரியான இந்தியாவை நிலையற்றதாக வைத்திருக்க முயன்றுவந்திருக்கிறது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம், 1990இல் சீனா இந்தியாவுடன் நல்லுறவு கொள்ள முனைந்தபோதும், அதற்கு சமமாக பாகிஸ்தானின் அணுகுண்டு தொழில்நுட்பத்தையும், மற்ற ராணுவ பலத்தையும் இந்தியாவுக்கு எதிராக வலிமைப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது. 1980களிலும், 1990களிலும் சீனா கொடுத்த ஏவுகணை, அணுசக்தி குடையைக் கொண்டு, இந்தியாவிலிருந்து வரக்கூடிய பதிலடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டு, பாகிஸ்தான் தொடர்ந்து தன்னுடைய ‘கீழ்நிலைப் போரை ‘ காஷ்மீரில் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்திருக்கிறது.

காஷ்மீரில் ஓரளவு பதட்டம் நிலவுவதும், இந்தியாவின் ராணுவத்தை மேற்கு எல்லையில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதும், சீனாவின் பாதுகாப்பு உணர்வை அதிகப்படுத்தும் என்றாலும், முழு இந்தியா பாகிஸ்தான் போர் என்பதும், பாகிஸ்தான் உடைவதும், சீனாவின் நீண்டகால குறிக்கோளுக்கு ஏற்றதல்ல. சீனாவின் தெற்கு எல்லையில் இந்தியா பாகிஸ்தான் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் செப்டம்பர் 11க்குப் பிறகு வந்ததும், தொடர்ந்து மாறிவரும் நிலைமையை கூர்மையாக கவனித்து, தன்னுடைய நீண்டகால போர்த்தந்திர விருப்பங்களை பாதுகாத்துக்கொள்ளத் தேவையான ராஜதந்திர உத்திகளை சீனா கைக்கொண்டுள்ளது.

சென்ற சூன் மாதத்தில், ஆஸிய நாடுகளிடையே நம்பிக்கையையும் தொடர்பையும் ஏற்படுத்த கஜகஸ்தானில் நடந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியை, முஷாரஃப்புடன் காஷ்மீர் பிரச்னை முழு அளவு போராக வெடிப்பதை தடுக்க நேரடி பேச்சுவார்த்தையில் இறங்குமாறு வற்புறுத்தினார். இருப்பினும், வாஜ்பாயி அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு கொடுத்த பேட்டியில், சீனாவின் கொள்கையில் ஏதும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை என்றும், சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளித்து வருகிறது என்று குறை கூறினார். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடக்கக்கூடிய போர் விளையாட்டுகளின் முடிவு, அணுகுண்டு தாக்குதலிலோ, சீனா தனது தோழமை நாடான பாகிஸ்தான் உடையாமல் இருக்க, தன் ராணுவத்தைகொண்டு இந்தப் போரில் புகுவதிலோதான் முடிவதால், இந்த கட்டுரை, சமீபத்திய இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில், சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என ஆராய்கிறது.

1990களில், இந்தியா பொருளாதார ரீதியிலும், இந்தியா-அமெரிக்க உறவிலும் வலுப்பட்டு வருவதாலும், வாஷிங்டனின் கொள்கை குழுக்களில், ‘சீனாவை சமாளிக்க இந்தியா ‘ என்ற பேச்சு வருவதாலும், பாகிஸ்தான் மெல்ல மெல்ல தோற்ற நாடாக ஆகிவருவதாலும் தெற்காசியாவில் மெல்ல மெல்ல நடந்து வரும் பிராந்திய நிலை மாற்றம் குறித்து சீனா கவலை கொண்டது.

(அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான) பனிப்போர் முடிவுக்கு வந்ததும், அரசாங்க ஆதரவுடன் தலை தூக்கிக் கொண்டு வந்த இஸ்லாமிய தீவிரவாதமும், பயங்கரவாதமும்,னதன் அணுகுண்டு ஏவுகணை திட்டங்களும், பாகிஸ்தானை விட்டு அமெரிக்கா விலகக் காரணமானது. இருப்பினும், செப்டம்பர் 11 தாக்குதல்கள் அதனை எல்லாம் மாற்றின. பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவுக்கு அருகே நெருங்கிவர வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, உலக அரங்கிலிருந்து தான் ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து மீளவும், தன்னுடைய பொருளாதாரத்தையும் ராணுவ பலத்தையும் இந்தியாவை விட அதிகமாக மேம்படுத்திக்கொண்டு, உலக தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டணியில் முக்கிய இடத்தைப் பிடிக்கவும் முயன்றது. பதிலாக, வாஷிங்டன் பாகிஸ்தான் மீது இருந்த பொருளாதார தடைகளை நீக்கிக்கொண்டு, அதற்கு நிறைய கடனும் உதவியும் அளிக்க முன்வந்தது. வாஷிங்டனின் பார்வையிலிருந்து, முஷாரஃபை கூட்டணியில் இணைத்துக்கொள்வது ராணுவ உபாயத்தில் முக்கியமான அங்கம். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவத்துக்குத்தான் ஒஸாமா பின் லாடன், தாலிபான், அல் குவேதா பறிய அனைத்து விஷயங்களும் தெரியும் என்பதும், எந்தவிதமான ஆஃப்கானிஸ்தான் மீதான தாக்குதல்களுக்கும், பாகிஸ்தானிய உதவியும், அதன் ராணுவ தளங்களும், அதன் ராணுவ வீரர்களும் இன்றியமையாதவைகள் என்பதும் காரணம். பீஜிங்கில் இந்தியா அமெரிக்கா உறவின் கீழ் நோக்கிய பிரயாணம், விருப்பத்துடன் பார்க்கப்பட்டது. அதன் காரணம், தெற்காசியாவில் எப்போதுமே கூட்டிக்கழித்தால் சைபர் என்ற கணக்குத்தான். பாகிஸ்தானின் புதிய அமெரிக்க உறவு, இந்தியாவை எதிர்மறையாக பாதித்தது என்பதில்தான் சீனாவின் மகிழ்ச்சி.

ஆயினும், அக்டோபர் 2001இல் காஷ்மீர் சட்டமன்றத்தில் நடந்த பயங்கரவாதிகள் செய்த தாக்குதலாலும், பிறகு டிஸம்பர் 13, 2001இல் இந்திய பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலாலும், தெற்காசியாவின் இரண்டு அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளுக்கிடையேயான பதட்டம் அதிகரித்தது. நியூ தில்லி பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தைக் குவித்து, பதிலடி கிடைக்கும் என எச்சரித்தது. பாகிஸ்தான் வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களில் அதிரடித் தாக்குதல்கள் நடக்கும் என எச்சரித்தது. பயங்கரவாதத்தை கண்டனம் செய்தாலும், சீன வெளியுறவு அமைச்சக செய்தி வெளியீட்டாளர், ‘காஷ்மீர் பிரச்னை வரலாறு விட்டுச்சென்ற ஒரு பிரச்னை. அது அமைதியான முறையிலேயே தீர்க்கப்பட வேண்டும் ‘ என்று கூறினார்.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தெற்காசியா நிபுணராக இருக்கும் வாங் பாவோஃபு (Wang Baofu), புதிய சூழ்நிலையில் ‘அமெரிக்கா தன்னுடைய பாதுகாப்பு பற்றிய அக்கறையினால், தன்னுடைய தெற்காசிய நாடுகள் பற்றிய உறவுகளை மறு மதிப்பீடு செய்து கொண்டு, பாகிஸ்தானின் முக்கிய பங்கை கவனித்து வருவதால், இது இந்தியாவின் பொறாமையை தூண்டி விட்டிருக்கிறது ‘ என்று திருப்தியுடன் சொன்னார். காஷ்மீர் தீவிரவாதிகள் செய்யும் விஷயங்களை பயங்கரவாதம் என்று சொல்வதை வாங் விமர்சித்தார். ‘அமெரிக்கா தன்னுடைய பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஆஃப்கானிஸ்தானத்தில் இருக்கும்போது, அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானை கட்டாயப்படுத்துகிற வேலையைச் செய்வதாக ‘வும், காஷ்மீரில் இருக்கும் இந்திய எதிர்ப்பு விடுதலைப் போரை பயங்கரவாதம் என்று வரையறுப்பதாகவும் குறைக்கூறினார். ‘உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்து தீவிரமான கொள்கைக் கொண்டிருக்கும் முஷாரஃபை ‘ பாராட்டினார்.

முஷாரஃப் பீஜிங்க்கு டிஸம்பர் 2001-ஜனவரி 2002க்குள் இரண்டு முறை சென்று, அங்கு ஜியாங் அவர்களுடனும், பிரதமர் சூ ரோங்ஜி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே வேளையில் ஜெனரல் சாங் வான்னியன் என்ற சீனாவின் மத்திய ராணுவ கமிஷனின் துணைத்தலைவர் ஜெனரல் முகம்மது அசீஸ் கான் என்ற பாகிஸ்தான் முப்படைத்தளபதி அமைப்புக்குழு தலைவருடன் சந்தித்தார். இவர் கான் அவர்களிடம், ‘பல வருடங்களாக நம் இரண்டு தேசங்களின் ராணுவமும் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் எல்லாத் துறைகளிலும் மிகவும் உயர்ந்த மட்டத்தில் கொண்டிருக்கின்றன. எல்லா தட்பவெப்பச் சூழ்நிலையிலும் இருக்கும் நம் நிரந்தர நட்பை வெளிக்காட்டுகிறது ‘ என்று கூறினார்.

சாங் அவர்களது குறிப்பான எல்லாத்துறைகளிலும் இருக்கும் ஒத்துழைப்பு (அதாவது அணுகுண்டு, ஏவுகணை தொழில்நுட்பம் ஆகியவற்றில்) என்பது தெளிவாக இந்தியாவுக்கான எச்சரிக்கை. பிறகு, பீஜிங் தன்னுடைய வார்த்தைகளுக்குச் சமமாக, இரண்டு டஜன் எஃப் 7 ஜெட் போர் விமானங்களையும், அணுகுண்டு, ஏவுகணை தளவாடங்களையும், இன்னும் பல ஆயுதங்களையும், இந்திய எல்லைக்கோடு பதட்டத்தில் , பாகிஸ்தானின் ராணுவத்தை பலப்படுத்த அனுப்பி வைத்தது.

முஷாரஃபின் ஜனவரி 12ஆம் தேதி பேச்சில், பாகிஸ்தானிய நிலத்திலிருந்து கொண்டு ஜிஹாத் செய்யும் தீவிரவாத அமைப்புக்களை தடைசெய்யப்போவதாக அறிவித்ததும், பதட்டம் சற்று குறைந்தது. சீன பத்திரிக்கைகளும் தொலைக்காட்சியும், இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த இடையீடு பேச்சுவார்த்தைதான் பதட்டம்குறைய உதவியது என்று எழுதியது. ‘அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளால் உந்தப்பட்டு, இந்தியா பாகிஸ்தான் தலைவர்கள் இந்த பதட்டமான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார்கள் ‘ என்று எழுதியது. ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங் அவர்கள் சூ இந்தியாவுக்கு வந்தபோது சொன்னதற்கு நேர்மாறானது ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த விதமான தூதுவர் வேலை செய்ய சீனாவுக்கு விருப்பமும் இல்லை, எதிர்காலத்திலும் செய்யாது ‘ என்று ஜஸ்வந்த் சிங் கூறினார்.

இருப்பினும், மே 14ஆம் தேதி பயங்கரவாதிகள் ஜம்மு ராணுவ முகாமில் புகுந்து தாக்கியதில் 34 மக்கள் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டதில், மீண்டும், எல்லைப்புறப்பகுதியில் நின்றிருக்கும் பத்து லட்சத்துக்கும் மேலான துருப்புகள், தங்கள் கனரக ஆயுதங்களுடனும், ஏவுகணைகளுடனும், போர்விமானங்களுடனும் நின்றிருக்கும்போது, வரக்கூடிய அபாயம் அடிக்கோடிடப்பட்டது. மீண்டும், போர் பேச்சு தோன்றியது. இரண்டு புறங்களிலும் அணுகுண்டு வீச்சு பற்றிய பேச்சும் அடிபட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் இரண்டு புறமும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனவும் பீஜிங் கோரியது.

(இறுதிப்பகுதி அடுத்த வாரம்)

Dr Mohan Malik is professor of security studies at the Asia-Pacific Center for Security Studies, Honolulu, USA. The views expressed in this article are those of the author and do not reflect the official policy or position of the Asia-Pacific Center for Security Studies, the US Department of Defense or the US government.

http://www.apcss.org/BIOS/malikm.htm

Series Navigation

மோகன் மாலிக்

மோகன் மாலிக்