சீதனச் சிறையுடைப்போம்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

சத்தி சக்திதாசன்


கல்யாணச் சந்தையிலே
நடக்கும் ஒரு வியாபாரம்
கன்னியரின் கன்களிலே
வழிந்தோடும் கங்கைநதி.

உள்ளத்தின் நிறமறியார்
நோட்டுக்களின்
பச்சை
கனவினிலும் மறந்திடார்.

பெண்னைப் பெற்றவர்
என்றொரு
தனி வர்க்கம்
தமக்கென பணத்தை
விளைச்சல் செய்தே
வைத்திருப்பர் என
எண்ணும்
முட்டாள்
மூளைகளின் பெயர்
மாப்பிள்ளைகளாம்.

இளம்பெண்கள்
வாழ்வை
பணத்தால் சிதைப்பர்-பின்
தம் பெண்கள்
வாழ்வை
பணமே குலைத்தது
என
பலமாய் குரைத்திடுவார்.

படித்த இளைஞர்
துணிச்சலுடன்
இனி
சமுதாய புரட்சிக்கு
வித்திட்டு தம் தலைமுறை
தம் கையில்
எடுக்காமல்
விடியாது துன்பமெனும்
இரவுகள் எம்நாட்டு இளம்
பெண்களின் வாழிவினில்.

பாரதி கண்ட புதுமைப்
பெண்ணை
திரைகளில்
மட்டும் கண்டால்
போகாது
பெண்ணினத்தின் சாபக்கேடு.
உண்மையால் இதயங்களைக்
கழுவி நேர்மையெனும்
ஆயுதத்துடன்
பெண்விடுதலையெனும் போரை
முன்னெடுத்தலே உண்மை
விடிவாகும்.

கடலின் அடித்தளத்தில்
வாழ்ந்துகொண்டே
முத்தெடுக்க
பயந்தவரைப்போல்
விடையைக் கையில்
பிடித்துக்கொண்டே
வினாவைத்
தவிர்ப்பவர் போல்
ஆற்றல் ஆயிரம் கொண்ட
இளைய சமுதாயமே
இன்னும் ஏன்
உறங்குகின்றாய் ?

வேண்டாம் இனியும் இந்த
கோழைத்தனம்
பெற்றோரின் வற்புறுத்தல்
எனும்
ஓர் விலையாகா
விவாத்தை விரைவாக
தூக்கியெறிந்துவிட்டு
உங்கள்
எதிர்காலவாழ்க்கைக்கு
உழைக்க
நானிருக்கின்றேன்
என உரக்கவே உறுதியாய்
கூறிடுவாய் அன்னைதந்தையர்க்கு.
வாழ்வெல்லாம் வெளிச்சமில்லா
சீதனத்துக்கைதிகளாம்
இளம்
கன்னியரின் விலங்குகளை
உடைத்தெறியும்
உறுதியுடன்
எழுந்துவாரீர்.
——————-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation