சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

விஸ்வாமித்ரா


‘திராவிடஸ்தான் ‘ பிரிவினைவாதத்துக்கு முரணாக, இமயம்முதல் குமரிவரை செப்புமொழி பதினெட்டு ஆயினும், அறநெறியால், பண்பாட்டால் தொன்றுதொட்டு பாரத சமுதாயம் ஒன்றாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் காரணத்தாலேயே சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் என்று பழந்தமிழ் நூல்களையெல்லாம் மிகக்கேவலமான முறையில் விமர்சித்து வந்தார் ஈ.வே.ரா.

இன்று இதைப்படிக்கும் இளைய சமுதாயத்தினர், ‘காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்கள் சிலவற்றை இதில் சில நூல்கள் ஆதரிப்பதாலேயே அவற்றை ஈவேரா ஒட்டுமொத்தமாக நிராகரித்தார் ‘ என்று சிலரின் திரிபுவாதத்திற்கு மயங்கி விடலாம்.

உண்மை அதுவன்று. திராவிடஸ்தான் கொள்கைக்கு தமிழ்மரபுவாதம் ஒத்துவரவில்லையென்பதே முதல் காரணம்; மேலும் தான் கன்னடன், தமிழன் அல்லன் என்ற உள்ளுணர்வே அவரை, தன் கொள்கைக்கு உடன்பட்ட தமிழ்ப்புலவர்களையும் புறக்கணிக்க வைத்தது, விமர்சிக்க வைத்தது என்றே கொள்ள வேண்டும்.

இதனை ம.வெங்கடேசன் அவர்கள் திரட்டியிருக்கும் சில ஆதாரங்களைக் கொண்டே முடிவு செய்வோம்.

பாவேந்தர் பாரதிதாசன், ஈவேராவின் திராவிட இயக்கத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். வறுமையில் வாடிய அவர் குடும்பத்துக்கு உதவ எண்ணினார் அண்ணாதுரை. தோழர்கள் முல்லை முத்தையா, டி.என்.இராமன் முதலானோரின் ஒத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ.25,000 திரட்டப்பட்டது.

28.7.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு இந்தப் பணமுடிப்பு வழங்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டுப்பெற்ற பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த விழா என்பதில் பகுத்தறிவுவாதிகளுக்கு எல்லாம் அன்று ஒரே சந்தோஷம்; ஒருவரைத் தவிர.

‘தமிழர் தந்தையார் ‘ ஈவே.ராமசாமி நாயக்கருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை.

‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது ? இரண்டு பாட்டு பாடி விட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாதுரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ ‘ என்று கண்டித்தார்.

(ஆதாரம்: நூல் – பேரரஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈவேராவுக்கு எவ்வளவு வெறுப்பு பாருங்கள். இவருக்குப் பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

அடுத்து ஈவேராவுடன் இணைந்து பலகாலம் சமூகப்பணி ஆற்றிய பாவாணர், ஈவேராவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சொல்வதைப் பார்ப்போம்.

‘ஒருநாட்டு மக்கள் முன்னேறும் ஒரே வழி அவர் தாய்மொழியே. ஆசிரியப்பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும், தங்கள் தொண்டின் பயன் சற்றும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்விநிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன். ‘

.. .. ..

அன்பன்

ஞா.தேவநேயன்

குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங -ஆம் பக்கத்தில் 25-6-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

(ஆதாரம்: நூல் – பாவாணர் வரலாறு – தென்மொழி7:10,11 பக்கம் 22-24)

இதிலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே.ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. தமிழ்ப்பற்று உண்மையில் இருந்தால் அல்லவா பதில் அனுப்பியிருப்பார் ?

மேலும் ஈவேராவின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி ஆய்வு செய்த அவர் சீடர் ஒருவரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம், மொழி, கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு ‘ என்னும் தலைப்பில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டில் அதனுடைய ஆசிரியர் ப.கமலக்கண்ணன், ஈவேராவின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி விவரித்து இருக்கிறார். இந்த ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டமும் கொடுக்கப் பட்டுள்ளது. ஈவேராவின் விசுவாசியான இவர் என்ன சொல்கிறார் தெரியுமா ?

பக்தி இலக்கியங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் என்று கூறும் பெரியார், எப்படி என்பதைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. கடவுளையும், பக்தியையும் அதிகம் பாடிய பாரதியார் ஒருமைப்பாட்டுக் கவிஞராகத் திகழ்கிறார். எனவே பெரியாரின் கருத்து முரண்பாடாகவே தோன்றுகிறது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இந்த மூன்று கருத்துக்கள் மட்டும் இலக்கியங்களில் இடம் பெற்றால் போதும் என்று கூறுகிறார். இந்த மூன்றை மட்டுமே இலக்கியங்கள் எனக் கூறத் தொடங்கினால் அந்த நூல ஓர் அறிவுரைக் களஞ்சியமாக இருக்குமே அல்லாமல் இலக்கியமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, பெரியாரின் அணுகுமுறை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறது ‘ என்று கூறுகிறார்.

மேலும்,

மணிமேகலை – இது சமயச்சார்புடையது, ஆதலின் பயனளிக்காது (நூல்: மொழியும் அறிவும்) என்று ஈவேரா கூறியதை எடுத்துக்காட்டி அவர், ‘இந்தக் காப்பியம் சமயச்சார்புடையதாக விளங்குவதால் எதையும் ஆராயாமல் இது பயனளிக்காது என்று பெரியார் கருதுவது ஒரு சார்புடைய கருத்தாகவே இருக்கிறது ‘ என்று கூறுகிறார்.

அதேபோல தமிழர்களின் மறையாகக் கொள்ளப்பெறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் திருமாலைக் கடவுளாகக் கற்பித்துப் பொய்யான அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்ட கற்பனைக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகிறது. (பெரியார் களஞ்சியம் – தொகுதி I) என்று ஈவேரா சொன்னதை எடுத்துக்காட்டி ‘பெரியாரின் இந்தக்கருத்து முழுமையான ஆராய்ச்சிப் போக்காய் இல்லாமல் மேலோட்டமானஒரு கருத்தாகவே இருக்கிறது ‘ என்று விமர்சனம் செய்கிறார்.

இப்படி ஈவேராவின் சீடரும், அவரை ஆராய்ச்சி செய்தவருமான ப.கமலக்கண்ணன், குருவின் இலக்கிய ஆராய்ச்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார் என்பதிலிருந்து என்ன தெரிகிறது ?

தொடரும்…

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா