சில நேரங்களில்…சில குழந்தைகள்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பத்ரிநாத்


‘ ‘சித்தப்பா.. அவர் வர்றாப்பல இருக்கு.. ‘ ‘, கண்களில் மின்னும் நாணத்துடன் ரமா கூறியதையடுத்து விருட்டென்று வெளுயே சென்று பார்த்தார் கிருஷ்ணன்.. எங்கே.. அட.. அதோ .. ஆமாம் ..தூரத்தில் எங்கோ வந்து கொண்டிருந்தான் பிள்ளையாண்டன். இருந்தாலும் சரியாக ரமா கண்டுபிடித்துவிட்டாள்.. கிருஷ்ணன் சிரித்தவாறு கூறினார்.., ‘ ‘கழுகுக் கண்ணுடி.. வருங்கால புருஷனாச்சே.. அதான் .. ‘ ‘,

முகமெங்கும் பூரித்த புன்னகை, கன்னத்துத் திரட்சியில் தெரிந்தது..

அனந்த நாராயண பத்மநாபன் என்கிற அனந்துவிற்கும், ரமா என்கிற இந்தப் பெண்ணிற்கும் ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்குமா.. ? யோசித்தார், கிருஷ்ணன்.. பெயரிலேயே இல்லையே.. ரமாவோ புடவை என்பதே புராதன பண்டம் என்று புரிந்து கொண்டிருக்கம் இந்தக் காலத்து யுவதி.. சுரிதார், கமீஸ் என்றும், ஆங்கிலேயர்கள் கேட்டால் நொந்து போகும் பட்லர் ஆங்கிலத்தை நுனி நாக்கில் உச்சரித்துக் கொண்டு – சின்ன கன்சர்ன், பெரிய கன்சர்ன் என்று பெற்றவர்களுக்கு பெரும் ‘கன்சர்ன் ‘னாக மாதம் ஒரு நிறுவனத்தில் வேலை என்று புடவையை மாற்றுவதைப் போல மாறிக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தவள்..

ஆனால் அனந்துவோ- தற்காலத்தில் வாழும் ஒரு கற்காலம்.. ஆனால் படிப்பு எம்.ஏ எம்ஃபில்.. அதுவும் ‘டபுள் ‘ எம். ஏ.. ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் என்று படிப்பிலும் இவளைக் காட்டிலும் உயர்வானவன்.. அரசு உயர்ப் பதவியில் இருக்கிறான் என்பது மட்டுமதான் பிறருக்குப் பளிச்சென்று தெரிகிறது.. யாரிடம் ஒட்டுதல் கிடையாது..இந்தக் காலப் பிள்ளைகளின் எந்த அம்சங்களைஆயும் அவனிடத்தில் காணமுடியவில்லை.. அவர் பையன் கிண்டலடிப்பது போல ‘ ‘பழம்.. பழம்.. ஞானப் பழம் ‘ ‘..

திரிகால சந்தி செய்பவன்.. ஸ்ரீஸுக்தம் , புருஷஸுக்தம் இவைப் போன்றவை கிருஷ்ணனே அறியாதவர்.. அன்று அனந்து சொன்ன போது அசடு வழிந்தார்.. உலகமே அழிந்தாலும், தன் நெற்றியில் உள்ள அந்த மதச் சின்னத்தை அழிக்காதவன்.. லெளகீக வாழ்க்கைக்காக கிராப் வைத்து கொண்டாலும் , பிறர் எளிதில் காணாத வண்ணம் மெலிதான உச்சிக் குடுமி வைத்துக் கொண்டிருப்பவன்..

மழமழவென்று க்ஷவரம் செய்யப்பட்ட முகத்தில் எத்தனை தீட்சண்யமான கண்கள். கூரிய ஆரிய மூக்கு.. அந்த சிவந்த மார்பில் படர்ந்திருந்த பூணுீல் சற்று நிறம் மட்டுதான்.. நான்கு முழ வேட்டி முழங்காலுக்கும் சற்று தூரத்தில் முடிந்துவிடுகிறது.. மார்பில் தவழும் உத்தீரியத்துடன் அவன் நடந்து வருவதைப் பார்த்தாலே ஏதோ ஆச்சார்யாள், மகா பண்டிதர் நடந்து வருவதைப் போலல்லவா இருக்கிறது.. இந்தக் காலத்தில் இப்படியொர் அதிசயம்…!

‘ ‘அப்பா.. ரமாவுக்கு அனந்து எப்படிப் பொருத்தம்.. ? ‘ ‘, பையன் கேட்டான்.. ‘ ‘சரியாச் சொல்லுடா.. அனந்துவுக்கு இவ பொருத்தமான்னு.. ‘ ‘, என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன்..

‘ ‘வாங்கோ.. வாங்கோ.. ‘ ‘, அனந்துவின் கையைப் பவ்யமாகப் பிடித்து அழைத்தார் கிருஷ்ணன்..

‘ ‘நமஸ்காரம் மாமா.. என்ன ஒருமையில அழச்சா போறாதா.. ‘ ‘, அனந்துவின் குரலில் தெரிந்த பணிவு அவரைக் கிறங்கடித்தது..

‘ ‘வயசுல என்ன இருக்கு.. வித்தையில் நீங்கதான் பெரியவர்.. ‘ ‘, என்றார் கிருஷ்ணன் கண்களை அகலமாக்கி..

‘ ‘மறுபடியும் நீங்கங்கறேளே.. ‘ ‘,

‘ ‘அதெப்படி.. நாளைக்கே எங்காத்து மாப்பிள்ளையாயிட்டா ஒருமையில கூப்பிட முடியுமா..அதான்.. ‘ ‘, என்று கூறிச் சிரித்தார் கிருஷ்ணன்.. அறையிலிருந்து ரமா ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தாள்..

அனந்துவின் முகம் சுணங்கியது.. பேசாமல் அமர்ந்திருந்தான்.. இந்த மனிதர் தன் திருமண விஷயமாகப் பேசத்தான் அழைத்திருக்கிறார்.. முன்பே அப்படிச் சொல்லாமல் அழைத்துக் கொண்டேயிருந்தார்.. தாயாரும் ஒரு வாரமாக கிருஷ்ணன் மாமா ஆத்துக்கு போயிட்டு வா என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.. அது இதற்குத்தான் .. ‘ ‘ஈஸ்வரா.. ‘ ‘ என்று முணகினான்..

இப்போது இந்த மனிதர் பக்கத்து அறைக்கு வேறு அடிக்கடிச் சென்றுவிட்டு வந்தார்.. அது சற்று வினோதமாகயிருந்தது.. அனந்துவின் முகமாற்றத்தைக் கண்ட கிருஷ்ணன், ‘ ‘எங்கண்ணா பொண்ணு.. பேரு ரமா.. வந்துருக்கா.. கூப்பிடட்டுமா.. ‘ ‘, என்றார்.

டிசரிதான்.. பெண்ணையே அழைத்து வந்துவிட்டார்களா.. தன் தாயும் இதற்கு உடந்தையா.. ? ஒரு வார்த்தை என்னிடத்தில் சொல்லவில்லையே..

‘ ‘மாமா.. சித்த தனியா வரேளா.. முதல்ல உங்ககிட்டப் பேசணும்.. ‘ ‘, அழைத்தான். அவரை அழைத்துக் கொண்டு பக்கத்துக் கோவிலுக்குச் சென்றான்..

பிரகாரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.. சற்று நேரம் கழித்து மெதுவாக ஆரம்பித்தான், அனந்து..

‘ ‘மாமா.. தப்பா எடுத்துக்காதிங்கோ.. நான் என் தாயார் கிட்ட த் தெளுவாச் சொல்லிட்டேன்.. நேக்கு விவாஹம் வேண்டாம்னு.. அந்த அபிப்பிராயமே இல்லைன்னு.. அதுவும் அப்பா தவறி ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ள.. ‘ ‘, என்று தொடர்ந்தவனை இடைமறித்தார் கிருஷ்ணன்..

‘ ‘அடடா..இல்ல அனந்து.. வருஷாப்திகம் ஆகட்டும்.. அதுவும் இல்லாம உங்கப்பா சாவு கல்யாணச் சாவு மாதிரி .. வயசு எண்பது.. ஒங்களுக்கு விவாகம் ஆனாலே அவா ஆத்மாவுக்கு சாந்தி கெடைக்கும்னு திருநெல்வேலி சாஸ்திரிகள் என்னண்டையும் ஒங்கம்மாண்டயும் சொன்னார்.. அதான் இப்படியொரு ப்ரோபோசலச் சொன்னேன்.. ‘ ‘,

‘ ‘இல்ல மாமா.. எப்படிப் புரிய வைக்கறதுன்னு தெரியல.. என்னோட சங்கல்பத்த மாத்தற உத்தேசம் நேக்கு இல்ல.. பெரியவா உங்ககிட்ட இப்படிப் பேசறத்துக்கே சங்கடமா இருக்கு.. ‘ ‘,

‘ ‘எதுக்கும் ரமாவ பாத்துடுங்கோளேன்.. ‘ ‘,

தர்ம சங்கடமாக இருந்தது, அனந்துவிற்கு.. சற்று கண்களை மூடிக் கொண்டிருந்தவன், தொடர்நதான், ‘ ‘ தப்பா எடுத்துகாதேள்.. நா ஒரு தேவி உபாசகன்.. எல்லா பொண்களையும் தெய்வமா பாக்கறவன்.. கல்யாணங்கறதே நேக்கு இந்த ஜென்மத்தில கிடையாது.. நா ஒரு அபிராமி பட்டரைப் போன்றவன்.. அந்த பக்த மீராவோட ஆண் பிரதி நான்.. எங்கம்மாவ பாத்துக்கறத்துகாகவே ஏதோ உத்யோகம்-அது இதுன்னு லெளகீக வாழ்க்கை வாழ்ந்துண்டு இருக்கேன்.. அம்மாவுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு, சன்யாசம் வாங்கிக்கலாம்னு இருந்தேன்ி..

அவளாள தாங்க முடியறதோ இல்லையோங்கற பயத்தில அந்த முடிவ இப்பத் தள்ளிப் போட்ருக்கேன்.. அவ்வளவுதான்.. ‘ ‘,

ஒரு நிமிடம் அசந்து போனார் கிருஷ்ணன்.. சற்று வாயடைத்திருந்தவர் பின்பு தொடர்ந்தார்.. ‘ ‘ஒங்கள பொறந்ததிலிருந்து பாத்துண்டு வர்றேன்.. ஒங்க மனசில இப்படியொரு எண்ணம் இருக்கும்னு நெனச்சிக்கூடப் பாக்கத் தோணல.. ஆச்சர்யமா இருக்கு.. இப்படியொரு முடிவுக்கு நீங்க வரக் காரணம் என்ன.. ? ‘ ‘,

‘ ‘சரியாத் தெரியல.. ஒருவேளை எங்கப்பா போனதிலிருந்து இப்படி யோசிக்கிறேனோ என்னவோ.. ? ஆனா ஒண்ணு.. நேக்கு எங்கம்மா அப்பாவத் தவிர வேற யாரோடையும் நெருக்கம் இல்ல.. என் பந்துக்களும் அவாதான்.. மித்ராளும் அவாதான்.. வேற யாரோடையும் என்னால ஒத்துப் போக முடியாது.. ஆபீசுலகூட நான் அப்படித்தான்.. என் முகத்துக்கு நேராவே கிண்டல் பண்ணுவா.. என்ன பண்றது.. என் சுபாவம் அப்படி.. ‘ ‘,

‘ ‘என்னடா இப்படிப் பேசறானேன்னு தப்பா எடுத்துக்காதேள்.. ஒருத்தர் சுபாவத்துக்காக சன்யாசம் வாங்கிக்க முடியுமா.. ? லோகத்தப் புரிஞ்சுண்டு அதுக்கப்பறம் அத துறக்கறதுதானே சரியா இருக்கும்.. ! தனிப்பட்ட முறையில என்னால யாரோடையும் ஒத்துப் போக முடியலன்னும், யாரையும் பிடிக்கலைன்னும் ஒரு காரணத்தைக் காட்றது சரியா இருக்குமா.. ? .. என்னோட வயசுதான் என்னை இப்படிப் பேச வைக்கறது.. நேக்கு ரெண்டு பசங்க .. ரெண்டாவது பாருங்கோ எப்படியோ பொழச்சிப்பான்.. ஆனா பெரியவன்.. படிப்பைக் காச்சி மண்டையில ஏத்தியும் ஏறல.. தத்தாரியா தெருப் பொறுக்கிண்டு இருக்கான்.. அதுக்காகக் கண்டிச்சிண்டுதான் இருக்கோம்.. அத விட்டுட்டு அவன என்ன விஷத்தை வச்சா கொன்ற முடியும்.. ? ஏன் இதச் சொல்றேன்னா, மனுஷாளக் கொறயோட ஏத்துண்டுதான் ஆகணும்.. அதுதான் சரி.. சாரி.. ஒங்களுக்குத் தெரியாததா.. ‘ ‘, என்று முடித்தார்..

‘ ‘நீங்க சொல்றத முழுசா என்னால ஏத்துக்க முடியல.. இருந்தாலும் நா நெனக்கறத மாத்தற அளவுக்கு இதுவரை யாரும் சொல்லலை.. அதனால இப்படியே விட்டுடுங்கோ..ரெண்டு நாளா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.. அதனால எதயும் சிந்திக்கிற மனோநிலை நேக்கு இல்ல.. தேவையில்லாம ஒங்களுக்குச் சிரமத்தைக் கொடுத்துட்டேன்.. நேக்கு ஏதாவது மனமாற்றம் வந்தா, ஒங்ககிட்ட மொதல்ல சொல்லியனுப்பறேன்.. வித்தியாசமா எடுத்துக்காதேள்.. ‘ ‘, கரம் கூப்பி வணங்கினான்..

செய்வதறியாது திகைத்தார், கிருஷ்ணன்.. அவர் முகத்தில் தெரிந்த ஏமாற்று ரேகை அனத்துவைத் துளைத்தெடுத்தது.. அவருக்கு விடைக் கொடுத்து அனுப்பினான்..

மன உறுத்தல் தொடங்கியது, அனந்துவிற்கு..

சே.. நான் மனிதனா..இல்லை.. கொடூரமான ஜன்மம்.. ஒரு வயதில் மூத்தவரை – நமக்குத் தெரிந்த பெரியவரை இப்படியா பேசி அனுப்பி வைப்பது.. அவர் மனதைக் கொன்று கூறு போட்டுவிட்டேன்.. இந்த மன அவஸ்தை என்னை பந்தாடப் போகிறது.. ஈட்டியாய் நெஞ்சைத் துளைக்கப் போகிறது.. இதைப் போன்ற மன உறுத்தல்களை வாழ்க்கையில் எத்தனை முறைகள்தான் பட்டுக் கொண்டிருக்கப் போகிறேனோ.. இறைவா.. என் மேல் கருணையே இல்லையா.. ? இந்த உலகத்தின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளவே இயலவில்லையே.. ‘குறைகளுடன் உலகை ஏற்பதா.. ? ‘ அப்படிச் செய்தால் .. ம்ம்.. வீடு முழுவதும் குப்பைகளோடுதான் வாழ வேண்டியிருக்கும்.. முடைநாற்றம் எடுக்கும் குப்பைகள்..

வரும் வழியில் கற்பக வினாயகரின் தெருவோரச் சன்னதி.. அதன் முன் சற்று கண்கள் மூடி தியானித்தான்.. ‘ ‘மூஷிக வாகன மோதக அஸ்த..சியாமள கருண விளம்பித சூக்த .. வாமன ரூப மகேஸ்வர புத்ர.. விக்ன விநாயக பாத நமஸ்தே.. ‘ ‘, கண்கள் தன்னையறியாமல் பனித்தது.. விரக்தி மனப் பான்மை தற்போது அதிகமாகிக் கொண்டு வருகிறதே.. அதுவும் தந்தையின் பிரிவுக்குப் பின்னர் – அதிகமாகிவிட்டது.. கோடைக் கால வெப்பத்தைப் போல..

சரேலென ஒருவன் வண்டியில் சன்னதியைக் கடந்து சென்றான்.. அப்படிக் கடக்கும் போது, சிலுவைக் குறியீடு போல விநாயகரைப் பார்த்து முத்தமிட்டுச் சென்றான்.. இதென்ன புதிவிதப் பிரார்த்தனை.. இப்போது பிரார்த்திப்பதே ஒரு ஃபாஸ்ட் ஃபுட்டைப் போல ஆகிவிட்டது.. எல்லாம் ஒரு ஷோதான்.. சன்னதியைச் சுற்றிலும் ஆன்மீகப் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.. வண்ண வண்ணப் படங்களில் .. யாரோ உபன்யாசகர்.. அவர் படங்கள்..

தந்தையின் நினைவு வந்தது..

கனவில் இப்போதெல்லாம் தந்தை வருகிறார்.. அந்தக் கணீரென்ற குரலில் அழைக்கிறார்.. கனவில் எங்காவது குரல் கேட்குமா.. ? ஆனால் எனக்குக் கேட்கிறதே..!

தந்தையே.. தந்தையே.. உனக்குக் கூட மரணம் சம்பவிக்குமா.. நீ ஆஞ்சநேயன் போல சிரஞ்சீவியாயிற்றே.. உனக்கா.. உனக்கா.. ஓஓ.. அன்று நான் பார்த்த உன் நிலை குத்திய கண்கள்.. நான் நம்பவேயில்லையே..

‘ ‘க்ஷீராப்தியில பகவான் படுத்துண்டு இருக்கார்.. ‘ ‘, என்று ஓங்கி ஒலித்து சொற்பொழிவாற்றம் அந்த வாய் இன்று ஓய்வு பெற்றுக் கொண்டுவிட்டது.. பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, துளசி மாலையுடன், சப்ளாகட்டை எடுத்துக் கொண்டு உபன்யாசம் செய்வதை கேட்டுக் கொண்டேயிருக்கலாமே..!

‘ ‘வலப் பக்கத்தில சக்ரம்.. இடப்பக்கத்திலே சங்கம், மார்ல முத்து ரத்ன மாலை, தோளிலே பட்டுப் பீதாம்பரம், சிரஸ்ஸில க்ரீடம், அதில வைர வைடூர்யம் , உதட்டோரத்தில மந்தகாசம்.. ‘ ‘, என்று நீங்கள் பகவானை வர்ணிப்பதும்ி , அதில் நான் ஒன்றிப் போய் விடுவதும் இனி எந்த ஜன்மத்தில்.. ? உங்களையே நிழல் போலத் தொடர்ந்திருந்தேன்.. மற்றவர்களைப் போல படோடோபம் செய்யத் தெரியவில்லை உங்களுக்கு.. இந்த உலகம் பகட்டுக்கு மயங்கும்.. அதனாலேயே உங்கள் சொற்பொழிவைக் கேட்கக் குறைவாககே அன்பர்கள் வருவார்கள்.. பெரும்பாலும் அனந்துவையும் சேர்த்து கூட்டத்தில் பத்து நபர்கள்தான் தேறுவார்கள்..

இருந்தாலும் என்ன.. ? குருடர்கள் முன் வைரத்தை இறைப்பதைப் போல, இந்த உலகத்தில் பலர் கண் இருந்தும் குருடர்கள் போல வாழ்கிறார்கள்.. அன்று தந்தை ‘ சாந்தி பர்வம் ‘ சொன்னாரே.. அட டா.. இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.. கூட்டம் கூடுவதை வைத்து இவற்றையெல்லாம் அளக்க முடியாது. ஜிகினா சட்டைப் போட்டுக் கொண்டவன் எல்லாம் இன்று ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள்.. ம்ம்..

துபக்கத்து வீட்டு ரங்குடு தன்னைப் பார்த்து வேகமாக வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான் அனந்து.. என்ன.. ?

‘ ‘அனந்து சார்.. உங்களத்தான் தேடிண்டு எல்லா எடத்துக்கும் போனேன்.. அம்மா மயக்கமாயிட்டா.. ராஜாராம் ஆத்தில கார்கூடச் சொல்லியாச்சு.. ஆசுபத்திரிக்குப் போகணும்.. ‘ ‘,

ஓடினான்..

தாயார் காலமாகிவிட்டார்.. ஒரு வார காலமாக காலனுடன் போராட்டம் நடத்தினார்.. இயலவில்லை.. கிட்னி முழுவதுமாக பழுதாகிவிட்டது.. டயாலிசிஸை உடல் ஏற்க மறுத்துவிட்டது.. வருஷாப்திகம் முடிவதற்குள் தந்தை, தாயையும் அழைத்துக் கொண்டவிட்டார்..

ஐயிரண்டு திங்கள் தவமிருந்து பெற்றவளை, தன்னிரண்டு கரங்களால் என்னை எந்தியவளை , இனி எப்பிறப்பில் காணப் போகிறேனோ…!

சுற்றிலும் கொடிய மிருகங்களால் சூழப்பட்ட தனித் தீவில் என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டார்கள் இருவரும்..

அடுத்து, நான் ஒரு ரமாவையோ இல்லை ஒரு உஷாவையோ பாணிக்ரஹணம் செய்து கொள்ள வேண்டும்.. அவள் மடத்தனங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.. முட்டாள்தனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.. அவளைப் பார்த்து பல் இளிக்க வேண்டும்..

பெற்றோர்களின் பெருமையைப் பற்றி வருபவன் உணர்வாளா.. ?

ஒரு மூலையில் தாயின் புடவை கிடந்தது கேட்பாரற்று.. அதை அள்ளியெடுத்து அணைத்துக் கொண்டான்.. முகர்ந்தான்.. தாயின் வாசம் – அந்த அன்பின் நேசம் , நாசியை நிரப்பியது..

வெகு நேரமாக யோசித்தவாற அமர்ந்திருந்தான்.. பின்பு மெதுவாகக் கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

அந்த அறையில் தூக்கில் தொங்கினான்..

====

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்