சிலநேரங்களில்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

சத்தி சக்திதாசன்


சிலநேரங்களில்
சித்திரங்கள் கூட வெறுமையாகின்றன
சிந்தனைகள் செயலற்றுப் போகின்றன
சிற்பங்கள் கதைகூறத் தவறிவிடுகின்றன – அந்தச்
சிலநேரங்களில்
மனது நிலை கொள்ளத் தவறுகின்றன
மயக்கம் நினைவலைகளை சிறையெடுக்கின்றன
மஞ்சம் முற்களாக உடலைத் துளைக்கின்றன – அந்தச்
சிலநேரங்களில்
தவறுகள் தலைவிரித்து ஆடுகின்றன
தர்மம் தயங்கிப் பின்வாங்குகின்றது
தப்புக்கள் தாண்டவமாடுகின்றன – அந்தச்
சிலநேரங்களில்
மனிதாபிமானம் புதைகுழிக்குள் தள்ளப்படுகின்றது
மரியாதை மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை
மாலைமதியின் வண்ணவெளிச்சம் மங்கி விடுகின்றது – அந்தச்
சிலநேரங்களில்
உண்மை ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தி விடுகின்றது
உள்ளம் கலங்கிய குட்டையாகி குழம்பி விடுகின்றது
உத்தமரின் வாழ்வு கூட அடிசறுக்கி தள்ளாடுகின்றது – அந்தச்
சிலநேரங்களில்
நெஞ்சத்தில் உறுதி கொண்டு உன்னை திடமாக்கிக்கொள் தோழா
நேர்மையை துணையாய்க் கொண்டு அநீதியைய் எதிர்கொள்
நேற்றைய துன்பங்கள் நேற்றோடு தொலைந்தன எனும் எண்ணம் கொள்.

சத்தி சக்திதாசன்

Series Navigation