சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஸ்ரீதர் சதாசிவன்


shridharsadasivan@gmail.com

புரட்டாசி மாதம். ரம்மியமான அந்த காலை பொழுதில் நகரம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், கோவில் இருக்கும் தெரு நிதானமாக ஒருவித அமைதியோடு மிளிர்ந்து கொண்டிருந்தது. பிரமோற்சவ காலம் என்பதால் விழாக் கோலம் பூண்டிருந்த கோவிலில் வழக்கத்தை விட பக்த்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவிலை சுற்றி இருக்கும் கடைகள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பள்ளி மாணவர்கள், வயது முதிர்ந்த பெரியவர்கள், பாதசாரிகள், காரில் வந்து இறங்கும் பணக்காரர்கள் என்று எல்லோரும் ‘நமோ, நாராயணா’ என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டு கோவிலின் வாசற்ப்படியை தொட்டு கண்களில் ஒற்றி, உள்ளே நுழைந்தார்கள். வெவ்வேறு ‘கியூ’ வழியாக வந்தாலும் எல்லோருக்கும் ஒரே புன்முறுவலுடன் அருள்பாலித்து கொண்டிருந்தார்கள் பெருமாளும், தாயாரும்.

கோவிலின் ஒரு ஓரத்தில் இருந்த அலுவலகத்தில், ரகுராம் ரொம்ப சிரத்தையாக கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.
” ச்சே ச்சே! இதுக தொல்லை தாங்க முடியல. கண்றாவி” என்று முகத்தை சுளித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் கேசவன்.
” என்ன ஆச்சு கேசவா?” கணக்கு புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்தார் ரகுராம்.
” என்னத்த சொல்றது சார்? கோவில் வாசல்ல போய் பாருங்க அந்த கருமத்த”
” அட,என்ன விஷயம் சொல்லு”
” இந்த அரவாணிங்க தான்! பிச்சை கேட்டு தொல்லை தாங்கல. ஒருத்தரையும் விடறது கிடையாது.”
” ஹ்ம்ம் ” என்று பெருமூச்சு விட்டார் ரகுராம். ” என்னத்த சொல்ல? நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் அந்த கொடுமைய ”
” ஒரு கூட்டமே இருக்கு சார்.அதுக குரலும், பேச்சும், நடக்கற நடையும்… பாத்தாலே உமட்டிக்கிட்டு வருது” முகத்தை அஷ்டகோணலாக சுளித்தான் கேசவன்
” கோவிலுக்கு வர்ற குழந்தைங்களும் பொம்பளைங்களும் பயப்படறாங்க. அட, புனிதமான கோவிலாச்சே இங்க வந்து தொந்தரவு செய்யக்கூடாதுனு ஒரு எண்ணம் இருக்கா?”
” சுத்தமா கிடையாது. நேத்திக்கு பாலு போய் சத்தம் போட்டான். உடனே எத்தன பேரு இங்க பிச்சை எடுக்கறாங்க எங்கள மட்டும் ஏன் சொல்றனு அவனோட சண்டை”
” கருமம்.அதுக கூட யாரு வாக்குவாதம் பண்றது? ”
” அத சொல்லுங்க, ஆனா இப்படியே நம்ம பயப்படரதால, இனிக்கு சிட்டி பூரா இதுக தொல்லை தாங்கல”
” ஆமா.நேத்திக்கு கூட நான் வீட்டிலேர்ந்து வர்ரப்போ, கையை தட்டிகிட்டு டிராபிக் சிக்னல்ல ரெண்டு ‘போ, போ’னு விரட்டினா,கால கையை தொடுதுங்க”
” அதனாலே பாதி பேரு பயந்து காசு குடுக்கறாங்க சார் ” எரிச்சலின் மிகுதியில் கேசவன்.
” இன்னிக்கு பீ.பீ.சிலேர்ந்து சாயங்காலம் நம்ம கோவில கவர் பண்ண வராங்க, இதுகதான் முதல்ல தென்படும். நல்ல பேரு கோவிலுக்கு போ! ” அலுத்துக் கொண்டார் ரகுராம்.
” இப்படியே விடக்கூடாது சார். இதுக்கு ஒரு வழி செஞ்சாகனும் ” என்றான் கேசவன்.
” நம்மால என்ன கேசவா பண்ண முடியும்?”
” இன்னிக்கு பீ.பீ.சி வர்ரப்ப மினிஸ்டரும் வரார்ல?”
” ஆமாம் .அதனால?” புரியாமல் கேட்டார் ரகுராம்.
” அட,மினிஸ்டரோட அசிஸ்டன்ட், அதான் சார் குமரேசன்,அவருக்கு ஒரு போன் போடுங்க” முகம் மலர்ந்தது கேசவனுக்கு.

கோவிலின் வாசலில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார்கள் சிம்ரன், ஜோதிகா மற்றும் ஸ்னேஹா. மூவரும் கிட்டத்தட்ட ஆறடி உயரம், கரடு முரடான உடல், பளிச் நிறங்களில் புடவை, சற்று அதிகமாகவே ஒப்பனை, பெரிய வட்ட பொட்டு, தலையில் கனகாம்பரம்.
” யக்கா, இன்னிக்கு யாருமே காசு குடுக்க மாட்டேங்கறாங்களே ” என்றாள் சிம்ரனை பார்த்து ஜோதிகா.
” ஆமாண்டீ! காலைலேர்ந்து போணியே இல்லை ”
” அதோ, காரு வருது” என்று இருவரையும் சுதாரிக்கச் செய்தாள் ஸ்னேஹா.

டாடா சுமோ கார் ஒன்று கோவிலின் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண் கிழே இறங்கினாள். பட்டுப்புடவை, நகை, கையில் செல்போன், நிறை மாத வயிறு.
“டிரைவர் நீங்க பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க” என்றாள் டிரைவரை பார்த்து. கார் மெல்ல நகர்ந்தது.அந்த பெண் கோவிலை நோக்கி நடந்தாள்.

” யம்மா,மவராசி… காசு குடு” என்று அவளை சூழ்ந்து கொண்டார்கள் மூவரும்.
” மவராசி! ஆம்பளை பிள்ளை பிறக்கும்” என்று அவள் முகத்தை தொட்டு திருஷ்டி கழித்தாள் சிம்ரன்.
” காசு குடு ஆத்தா” என்று அவளை பார்த்து கெஞ்சினாள் ஜோதிகா.

இந்த முற்றுகையை சற்றும் எதிர்பாராத அந்த பெண் மிரண்டு போனாள். அதிர்ச்சியில் அவள் முகம் வியர்த்தது.
” ச்சீ ..தள்ளி போ ” என்று அவர்களை விரட்டினாள்.
” அட என்னம்மா? கார்ல வந்து இறங்கற, எங்களுக்கு காசு குடேன்” விடவில்லை ஸ்னேஹா.
” டிரைவர்” என்று கத்தினாள் அந்த பெண் பயந்து. குரல் எழும்பவில்லை. பயத்தில் அவள் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
” எதுக்கு இப்போ டிரைவர்? ஒரு அஞ்சு ரூபா குடேன, குறைஞ்சா போய்டுவ?”
” நிறைஞ்சு போவ! மகராசனா பிள்ளை பிறக்கும்”
அவர்கள் சொல்வது எதுவும் காதில் விழவில்லை அந்த பெண்ணிற்கு. அவர்களை இவ்வளவு பக்கத்தில் பார்த்த அருவெறுப்பு அவள் முகத்தில் தெரிந்தது. பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவசர அவசரமாக பர்ஸை தேடியவள், பர்ஸ் காரில் இருப்பதை உணர்ந்தாள். பதட்டம் தலைக்கேறியது. ” ஐயோ! யாரவது வாங்களேன்” சத்தம் போட்டாள்.

அதற்குள் கூட்டம் சேர்ந்து விட்டது.
” தே! விடுங்க.பாவம் அந்த அம்மா ” என்று அந்த பெண்ணிற்கு ஆதரவாய் , மூவரையும் அதட்டினான் பக்கத்திலிருந்த தேங்காய் கடைக்காரன்.
” என்ன பண்ணினோம் ? பிச்சைதானே கேட்டோம்? ” என்று குரலை உயர்த்தினாள் சிம்ரன்.
” ஓத்தா! வாய் நீளுதோ? அருத்துருவேன். நகரு மரியாதையா ” என்று கையிலிருந்த அருவாளை காண்பித்தான் அவன்.
” அட, விடுங்கண்ணே. இதுக்கு போய் .. ” என்று பதறினாள் ஜோதிகா.
” வேண்டாம்கா. விடு ” என்று ஸ்னேஹாவும் சேர்ந்து சிம்ரனை சமாதனப்படுத்தினாள்.
” பிச்சை எடுக்கறதுல என்ன தப்ப? அதுவும் கூடாதுனா நாங்க என்னதான் பண்ணுவோம்? நீயா எங்களுக்கு வேலை குடுக்க போற?” சிம்ரன் நிறுத்தவில்லை.
” செருப்பு பிஞ்சிடும். மரியாதைய நகரு. இல்ல அரிவாள் பேசும் ” அவளை அடிக்க வந்தான் தேங்காய் கடைக்காரன்.
” விடுக்கா” என்று கட்டாயமாக சிம்ரன் கையை பிடித்து இழுத்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஜோதிகா.

அதற்குள் கார் பெண்மணி நகர்ந்து கோவிலுக்குள் நுழைந்தாள்.பதட்டத்தில் இன்னமும் அவள் கைகள் நடுங்கின. எதிர்பாராத இந்த நிகழ்வால், ரொம்பவே மிரண்டு போய் இருந்தாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அவசர, அவசரமாக செல்போனை எடுத்து நம்பரை அழுத்தினாள். லைன் பிஸி. மீண்டும் அழுத்தினாள்.
” என்னங்க”
” என்னம்மா?என்ன ஆச்சு?ஏன் பதற்ற? வலி வந்திடுச்சா?” எதிர்முனையில் அவளது கணவன், மினிஸ்டரின் அசிஸ்டன்ட் குமரேசன்.
—–
அடுத்தாக பாற்கடலில்லிருந்து தோன்றியது தன்வந்திரி. தன்வந்திரியின் கையில் அமிர்தகலசம். அமிர்தத்தை அருந்தினால் சாகாவரம் என்பது தேவர்களும் அசுரர்களும் அறிந்ததே. அதுவரையில் தேவர்களோடு ஒன்றாக பாற்கடலை கடைந்துகொண்டிருந்த அசுரர்கள், அமிர்தத்தை கண்டதும் பேராசை கொண்டார்கள். ஒப்பந்தத்தை மறந்து தன்வந்திரியிடமிருந்து கலசத்தை கைப்பற்றினார்கள். கலவரமுற்றான் தேவராஜன் இந்திரன். தேவர்களோடு ஸ்ரீ மகா விஷ்ணுவிடம் விரைந்தான்.
” நாராயணா! அசுரர்கள் அமிர்தத்தை அருந்தினால் அது உலகில் நன்மையின் முடிவல்லவா? ஆபத்பாந்தவா , நீதான் இந்த அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் ” என்று வேண்டினான் கவலையுடன்.
சிரித்தார் ஸ்ரீ ஹரி, “கவலை வேண்டாம்.நான் இருக்கிறேன்”

சில நிமிடங்களில், அசுரர்களையும், தேவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று நடந்தது. பேரழகும் , பெரும் பொலிவும் கொண்ட பெண் ஒருத்தி பாற்கடலில் இருந்து தோன்றினாள். அவளை போன்ற ஒரு பேரழகியை இதுவரை அவர்கள் யாரும் கண்டதில்லை. மெதுவாக அன்ன நடைபயின்று அவர்களருகே வந்தாள் அந்த அழகி.

” பேரழகியே, யார் நீ?” என்று ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் வினவினார்கள் அசுரர்கள்.
” என் பெயர் மோகினி” என்று மோகமாய் சிரித்தாள் அவள்.
” மோகினி!மோகினி! ” அசுரர்களுக்கு திறந்த வாய் மூடவில்லை.
” என்ன இங்கு பிரச்சனை? ” என்றாள் மோகினி.
” அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதில் தகராறு ” என்றான் தேவராஜன்
” அட, அவ்வளவுதானா? கொடுங்கள் இப்படி. நான் பகிர்ந்து தருகிறேன் ” என்று அசுரர்களிடமிருந்து கலசத்தை வாங்கினாள் மோகினி. மகுடிக்கு மயங்கிய நாகமாய், மறுபேச்சில்லாமல் கலசத்தை அவளிடம் தந்தார்கள் அசுரர்கள். இருவரையும் ஆளுக்கு ஒருபுறமாய் அமர்த்தினாள் மோகினி. அவர்கள் கண்கள் களிப்புற தன் ஒய்யார நடனத்தை துவக்கினாள். மோகினியின் மாயை அசுரர்களின் புலன்களை ஆட்கொண்டது. கையில் கலசத்துடன் ஆடிய மோகினி, தேவர்களின் முறை வரும் பொழுது அமிர்தத்தையும், அசுரர்களின் முறை வரும் பொழுது அவள் மறைத்து வைத்திருந்த வேறொரு சாதாரண பானத்தையும் மாறி மாறி வழங்கினாள். மோகினியின் இந்த விஷமத்தை அசுரர்களின் இருவரான ராகுவும், கேதுவும் கண்டுகொண்டார்கள்.
—-
காவல் நிலையத்தில், லாக்கப்பில் கிடந்தாள் சிம்ரன். அவள் கைகள் இரண்டும் சுவரில் கட்டப்பட்டு இருந்தது. ஆடைகள் கலைந்து, உருக்குலைந்து காணப்பட்டாள் அவள். முகத்திலும், உடம்பிலும் ஆங்காங்கே காயங்கள், தோல் கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
” தண்ணீ, தண்ணீ” என்ற அவள் முனங்கல் யார் காதிலும் எட்டவில்லை.

” கோவில் வாசல்ல அந்த பிச்சைக்கார முண்டைங்க என் பொண்டாட்டி மேலயே கை வைச்சுருக்குங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல அதுக லாகப்ல இருக்கணும். அதுக தோல உறி, இனிமே அந்த கோவில் பக்கமே அதுக வரக்கூடாது ” குமரேசனின் குரலுக்கு மறுப்பேச்சு இல்லை அந்த காவல் நிலையத்தில். போன் வந்த ஐந்து நிமிடத்தில் கிளம்பியது போலீஸ் ஜீப். போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் ஜோதிகாவும் ஸ்னேஹாவும் ஆபத்து வருகிறது என்று அறிந்து சிதறி ஓடினார்கள். சற்று கவனக்குறைவாக அவர்களின் குரல் கேட்காமல் பக்கத்தில் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிம்ரன் போலீசின் கைகளில் சிக்கினாள். போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவன் அவள் தலைமுடியை பிடித்து இழுத்தான்.

” ஐயோ …. வேண்டாம் சாமி, இனிமே இங்க பிச்சைக்கு வரமாட்டேன் ” கதறினாள் சிம்ரன்.
” கோவில் வாசல்ல கூடவா உங்க கொட்டம்? ஏறு வண்டில” விடவில்லை அவன், அவள் தலையை பிடித்து இழுத்து, காலில் லத்தியை வைத்து விளாறினான்.
” அம்மா! ஐயோ, வேண்டாம்! விட்டுரு சாமி.இனிமே இங்க வரமாட்டேன். பிச்சை தான் கேட்டோம், வேற எதுவும் பண்ணலை” கெஞ்சினாள் சிம்ரன் .
கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது. அவளை பிடித்து உள்ளே இழுத்து அடி நொறுக்கினார்கள் போலீசார். அதற்கு மேல் போராட முடியவில்லை சிம்ரனால். போலீஸ் வண்டி அங்கிருந்து கிளம்பியது.

” நல்லதா போச்சு போ.ஒழிஞ்சதுங்க!” ஒருவன்
” கோவிலாவா இருக்கு? இதுக தொல்லைக்கு அளவே இல்லை ” ஒருத்தி
” யாராவது இதுகள விரட்ட மாட்டாங்களான்னு நானும் சாமிகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன்” இன்னொருத்தி.
” இன்னும் கொஞ்ச நாளைக்காவது இந்த பக்கம் வராதுக! ” இன்னொருவன்.

லாக்கப்பை திறந்து உள்ளே நுழைந்தான் எஸ்.ஐ. அரை மயக்கத்திலிருந்த சிம்ரனின் முகத்தை லத்தியால் நிமிர்த்தினான்.
” என் ஏரியாலையே ஆட்டம் போடறியா? ஒழிச்சிருவேன்!”
” தப்பு எதுவும் பண்ணலை சாமி….சத்தியாமா சொல்றேன்” நடுங்கினாள் சிம்ரன்.
” கோவிலுக்கு வர்றவங்கள மிரட்டி காசு வாங்கல? நாயே!”
” பிச்சை தான் சாமி கேட்டேன். மிரட்டல”
“………….”
” பாழும் வயிறு சாமி, பசிக்குது” குரல் உடைந்தது அவளுக்கு “அப்பா அம்மா அடிச்சு துரத்திட்டாங்க, யாரும் வேலை தரமாடேங்கறாங்க. பிச்சைய
விட்டா எங்களுக்கு வேற பொழைப்பு இல்லை சாமி. அதுதான் ஒரு அஞ்சு ரூபா குடுன்னு அந்த அம்மாகிட்ட கேட்டேன்” கண்ணீர் பொங்க சொன்னாள் சிம்ரன்.
” நல்லா டயலாக் பேசற. பேரு என்ன?”
” சிம்ரன்” சத்தம் வரவில்லை.
” சிம்ரனாம்ல ! நேரம் தான்! ஹா ஹா ஹா ” என்று நக்கலாய் சிரித்த அவன், லத்தியை ஓங்கி சுழற்றி சிம்ரனின் கை முட்டியில் அடித்தான்
” அம்மாஆ ” அலறினாள் சிம்ரன்.
” அப்பா, அம்மா வெச்ச பேரு என்ன? ”
” ஸ்ரீனிவாசன் ” நடுங்கிக்கொண்டே சொன்னாள் சிம்ரன்.
” அட கொடுமையே! நீ ஆம்பளையா? பொம்பளையா? ” எகத்தாளமாய் கேட்டான் அவன்.
” பொம்பளை ” மெதுவாக சொன்னாள் சிம்ரன். அவள் தொண்டை வறண்டு போய் இருந்தது. குரல் எழும்பவில்லை.
மீண்டும் லத்தியை சுழற்றினான் எஸ். ஐ. இம்முறை கால் முட்டி.
” அம்மா! வேண்டாம் சாமி, அடிக்காத. என்னை விட்டுரு, தாங்க முடியல” வலி பொறுக்க முடியாமல் துடித்தாள் சிம்ரன்.
” பாத்தா பொம்பளை மாதிரி தெரியலையே.பிறக்கும்போது, ஆம்பளையா? பொம்பளையா?”
” ஆம்…பளை…. ஆனா மனசுல நான் பொம்பளை ” தயங்கித் தயங்கி சொன்னாள் சிம்ரன்.
” என்னடி குழப்பம் இது? ஏன் இப்படி அறையும் குறையுமா அலையுறீங்க? ஆம்பளையா பொறந்தா,ஆம்பளையா இருக்கவேண்டியது தானே? புடவை,பொட்டு, பூ.. என்னடி வேஷம் இது?”
லாக்கப்பில் இருந்த மற்ற காவலாளிகளும் சேர்ந்து சிர்த்தார்கள் இப்பொழுது.
” எசக்கி” என்றான் அந்த எஸ்.ஐ.
” சார் ” வந்து சல்யுட் அடித்தான் எசக்கி.
” இது ஆம்பளையா பொம்பளையானு சந்தேகமா இருக்கு”
” ……….”
” எனக்கு தெரிஞ்சே ஆகணும் ! எப்படிடா கண்டுபிடிக்கறது?”
“……..”
“கொஞ்சம் புடவைய அவுரு,பாத்துருவோம்”
பதறினாள் சிம்ரன். செய்வதறியாமல் திகைத்தாள். அவமானத்தால் உடல் கூசியது அவளுக்கு. “ஐயோ! வேண்டாம் சாமி, என்ன விட்டுரு! உனக்கு புண்ணியமா போகும். உன்னை கெஞ்சி கேக்கறேன். அம்மாஆ …..யாரவது சொல்லுங்களேன், ஐயோ!” கூப்பாடு போட்டுக் கதறினாள்.
—-
எப்படியாவது அமிர்தத்தை அருந்திவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு , மெதுவாக தேவர்கள் இருக்கும் பக்கத்திற்கு மாறி உட்கார்ந்தார்கள், ராகுவும் கேதுவும். ராகு, கேதுவின் இந்த சூழ்ச்சியை தேவர்களாகிய சூரியனும் சந்திரனும் கவனித்து விட்டார்கள். உடனே மோகினியிடம் அவர்களை காண்பித்தும் கொடுத்தார்கள். சுதாரித்தாள் மோகினி. கையிலிருந்த அகப்பையால் ராகுவின் கால்களையும், கேதுவின் தலையையும் துண்டித்தாள். மற்ற அசுரர்கள் எல்லோரும் அன்று அமிர்தம் கிடைக்காமல் ஏமாந்து போனார்கள்.

” இப்படியாக ஸ்ரீ மகா விஷ்ணு மோகினி என்று பெண்ரூபமெடுத்து, தனது மாயையால் அசுரர்களை சாகாவரம் பெறாமல் தடுத்து நிறுத்தினார். உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றினார் ” என்று கதையை முடித்தார் , கோவிலில் கதை சொல்லும் அந்த பெரியவர்.

குமரேசனின் மனைவி கதையில் ஆழ்ந்து கிடந்தாள். கேசவன் குமரேசனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
” ரொம்ப தாங்க்ஸ் சார். இன்னியோட இந்த அரவாணிங்க தொல்லை ஒழிஞ்சது. அறையும் குறையுமா அதுகள பாத்தாலே அருவெறுப்பா இருக்கு. ஒண்ணு ஆம்பளையா இருக்கணும், இல்ல பொம்பளையா இருக்கணும். ஆம்பளைங்க பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு… கருமம். இதுகெல்லாம் ஒரு பிறவி! அஜக்குங்க! புனிதமான பெருமாள் கோவில், இதுகளால கோவிலுக்கே அசிங்கம். நல்லவேளை நீங்க தலையிட்டு இதுக்கு ஒரு தீர்வு கொண்டுவந்தீங்க. உங்களுக்கு கோடி புண்ணியம். ”

ரகுராம் பீ.பீ.சி யிலிருந்து வந்தவர்களை உபசரித்து, உர்ச்சவமூர்த்தியின் அன்றைய அலங்காரத்தை அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

அந்த செவ்வாய்க்கிழமை பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள். அலங்காரப்பிரியரான ஸ்ரீ மகாவிஷ்ணு அன்று பேரழகுடன் மிளிரிந்து கொண்டிருந்தார். ஆணாகிய அவர், அன்று தன் ஆண்மையை துறந்து, பெண் வேடம் பூண்டிருந்தார். வெண்பட்டணியும் ஸ்ரீ கிருஷ்ணர் அன்று, நீலநிற பட்டுப்புடவை உடுத்தி, வளையல்கள், ஒட்டியாணம், கால்களில் கொலுசு, தலையில் கிரீடம் என்று சர்வ அலங்காரத்துடன் மோகினியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
—-

Series Navigation

ஸ்ரீதர் சதாசிவன்

ஸ்ரீதர் சதாசிவன்