சினிமா — முக்கிய அறிவிப்புகள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சூரியா


சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகநடிகையர் ஊர்வலம் எதிர்பார்த்த பலனை அளித்தது. அது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட ஓர் உறுதிமொழியின் விளைவு. அவருக்கு திரைத்துறை ஆதரவு அளிக்கும் அல்லது குறைந்தபட்சம் கருணநிதிக்கு ஆதரவு அளிக்காது. விளைவாக திருட்டு விசிடி வெளியிடுபவர்கள் வினியோகிப்பவர்கள் அனைவரும் குண்டர்சட்டத்தில் உள்ளே தள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன . திரைப்படம் எடுப்பதற்கு கட்டணம் பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது. கேளிக்கைவரி குறைக்கபப்ட்டுள்ளது.

இவற்றில் கேளிக்கைவரி குறைப்பு உண்மையிலேயே ஒரு நல்ல விசயம். அதன் மூலம் மக்களும் திரைத்துறையும் பயன் பெறும். அரசுக்கு சிறிய அளவில் நஷ்டம் ஏற்படுமென்றாலும் உண்மையில் நீண்டகால அடிப்படையில் அது நிவர்த்தி செய்யப்படும். இதைப் புரிந்துகொள்ள ஏற்கனவே கேளிக்கைவரி விதிக்கப்பட்ட முறையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதற்குமுன்பிருந்த முறைப்படி டிக்கெட் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணமாக வசூலிக்கப் பட்டது. கருணாநிதி ஆட்சியில் இது நீக்கப்பட்டு தொகுப்பு வரி விதிக்கப்பட்டது. அதன்படி திரைச்சாலைகள் ஒரு வருடத்துக்கு சீட் கணக்குக்கு அடிப்படையில் மொத்தமாக ஒரு பெருந்தொகையை வரியாக அளிக்கவேண்டும். வசூல்குறைந்தாலும் சரி கூடினாலும் சரி. இதன் விளைவாக அரசின் வரி திட்டவட்டமான தொகையாக ஆனது. அதை வசூலிப்பதில் முறைகேடுகளும் களையப்பட்டன.

அதேசமயம் திரைச்சாலை உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் வைக்க அனுமதி அளிக்கபப்ட்டது. அவர்கள் தங்கள் அரங்குகளில் நிறைய சீட்டுகளை நீக்கிவிட்டு கூட்டம் வந்தால் இரும்புமடிப்பு சேர்களைப் போட்டு பணம் பார்த்தார்கள் . நல்ல படம் என்றால் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். பக்கத்தில் ஆந்திராவில் ஹைதராபாத் நகரிலேயே உச்சகட்ட கட்டணம் 20 ரூ. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மேலூர் போல தொலைதூர நகரங்கலில்கூட சிலசமயம் தியேட்டர்காரர்கள் 100 ரூபாய் வரை கட்டணம் வைத்தார்கள். கவுண்டருக்குள் கைவிட்டால்மட்டுமே டிக்கெட் விபரம் தெரியுமென்ற நிலை. ஒருகுடும்பம் நான்குபேருடன் ஒரு படம் பார்த்து திரும்ப 200 ரூபாயாவது ஆகும். அதைப்போல வரிவசூலுக்கு அதிகாரிகள் போகாத நிலை ஏற்படவே சினிமா கொட்டகை பராமரிப்பும் சீரழிந்தது. பல தியேட்டர்கள் குப்பைக்கூடை போல உள்ளன.

இந்தசமயத்தில்தான் டிவியில் 30 சானல்கள் வந்தன. 20 சீரியல்கள். வாரம் சராசரியாக 40 படங்கள். அதைத் தொடர்ந்து விசிடி அலை. இப்போது ஒரு திருட்டு விசிடி சொந்தமாக வாங்க 30 ரூபாய்தான் செலவு. வீட்டில் சவுகரியமாக அமர்ந்து குடும்பத்துடன் பார்க்கலாம். சினிமாவே நமக்கு சொந்தமாக இருக்கும். பணக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தர ஒண்டுக்குடித்தனக் காரர்கள் கூட கூட்டாகச்சேர்ந்து பணம்போட்டு விசிடி வாங்கி படம் பார்க்க ஆரம்பித்தார்கள். கிராமத்தில்கூட பஞ்சாயத்து விசிடி தான். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு90 சானல் காரணமாக விசிடி விலையில் சரிவு ஏற்படவே பயந்துபோன கம்பெனிகள் விசிடி ப்ளேயர் விலையை கணிசமாக குறைத்தனர். எல்லாம் சேர்ந்துகொண்டு சினிமாத்தொழிலை சீரழித்தன.

சினிமாக்காரர்கள் சீரழியக் காத்திருப்பவர்கள். இப்போது மார்க்கெட் உள்ள நடிகர்கள் 8 பேர். விஜய் படம் 12 கோடிக்கு விற்கும். அவருக்கு 3 1/2 கோடி. அஜித் படம் 6 கோடிக்கு போகும் ஆனால் அவர் விஜயின் அதே தொகை கேட்டு அடம் பிடிக்கிறார், ஆகவே ஆட்கள் தயங்கி நிற்கிறார்கள். கடைசியாக பாலா அஜித்தை கைகழுவி சூரியா பக்கம் போனார். அட்டகாசம் ஜி எல்லாம் அப்படியே நிற்கிறது. விக்ரம் 3 கோடி கேட்கிரார் படம் 12 கோடிக்கும் மேலேயும் போகும். ஆகவே இப்போது மிக விரும்பப்படுகிற ஸ்டார் அவர். ஆனால் படம் ஒப்புக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார். கமல் 3 கோடி. விற்பனை 6 கோடி. சூரியா 1 1/2 கோடி கேட்கிறார் படம் 5 கோடிக்குப் போகும். விஜய்காந்த் 2 கோடி. விற்பனை 6 கோடி. சரத்குமார் 2கோடி விற்பனை 5 கோடி. சத்யராஜ் 75 லட்சம் விற்பனை 3 கோடி. மற்ற நடிகர்களுக்கு திட்டவட்டமான மார்க்கெட் இல்லை.

இப்படி நடிகர்களுக்குக் கொடுத்தால் மட்டும் போதாது . அவர்கள் அதற்கேற்ப டெக்னீஷியன்களை போடச்சொல்வார்கள். நல்ல ஃபோட்டோகிராஃபருக்கு 50 லட்சம் சம்பளம் இருக்கிறது. கெ. வி ஆனந்த் ,ஜீவா முதலிடம். இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் 50 லட்சம் . ஹாரீஸ் ஜெயராஜ் 30 லட்சம். இளையராஜா 20 லட்சம். இதன் பிறகு பிரகாஷ்ராஜ் போன்ற ஸ்டார் வில்லன்கள். அவருக்கு 30 முதல் 50 லட்சம் வரை. டைரக்டர் எப்படியும் 30 முதல் 50 வரை . ஆக சம்பளமே முதலீட்டில் 80 முதல் 90 சதவீதம் ஆகிவிடும். மிச்சப்பணத்தில்தான் ‘பிரம்மாண்டமாக ‘ எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் பாதி குப்புறச்சரிவதில் ஆச்சரியமே இல்லை. சம்பளத்தை குறைத்து விளம்பரச்செலவினை ஓரளவாவது அதிகரிப்பதே இன்றுள்ள முக்கியமான வழி. படத்துக்கு காட்சிக்கு நன்றாக செலவிடுவதும் பார்க்கும்படியாக எடுப்பதும் அவசியம்.ஆனால் இப்போது சினிமா ஸ்டார்களின் காலடியில் கிடக்கிறது. அவர்களுக்கு பணம்தவிர வேறு குறியே இல்லை. சின்னப்படங்கள் பல தெரியப்படாமலேயே போகும். அவற்றுக்கு ‘இனிஷியல் புல் ‘ கிடையாது. கூட்டம்சேர்வதற்குள் விசிடியில் படம் பரவி விடும். இதுதான் நிலைமை.

இப்படி தடைவிதிக்கப்பட்டிருப்பதனால் என்ன லாபம் ? தியேட்டர் கட்டணம் குறையும். குறையவேண்டும். குறைந்தால் ஆட்கள் கொஞ்சம் அரங்குக்கு வருவார்கள். விசிடி ஒழியுமா ? கள்ளச்சாராயம் ஒழிந்துவிட்டதா என்ன ? சமீபத்தில் ஒரு டிஸ்கஷனில் இது பற்றிய பேச்சுவந்தபோது முக்கிய வினியோகஸ்தர் சொன்னார் . விசிடி திருட்டு ஆரம்பத்தில் பெரிய கைகளுடைய ஆட்டமாக இருந்தது. [கீழக்கரையை தலைமையிடமாகவும் மலேசியாவை கிளையாகவும் கோண்ட ஒரு கள்ளகடத்தல் கேங்] அவர்களை அடுத்தகட்ட ஆசாமிகள் கவிழ்த்தார்கள். சிடி காப்பியர் சகாய விலைக்குக் கிடைத்தபோது இவர்களே காப்பி பண்ணி விற்க ஆரம்பித்தார்கள். திருட்டு விசிடி தப்போசரியோ 30000 படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு சோறுபோட்ட தொழிலாக இருந்தது. மாசம் குறைந்தது 5000 ரூ சம்பாதிக்க முடிந்தது அவர்களால். இந்தச்சட்டம் அவர்களைத்தான் பாதிக்கும். அவர்கள் பிழைப்பு போகும். இனிமேல் கீழக்கரை கை ஓங்கும். அவர்களே கிரிமினல்களை – ஜெயிலுக்குப் போனால் பரவாயில்லை என்று நினைப்பவர்களை– வைத்து இதை செய்வார்கள். நல்ல காசு நேரடியாகப் புரளும். விசிடி விலை கூடாது. காரணம் அதை வீட்டிலேயே பிரதி எடுக்க முடியும். பாதிப்பு இந்த இளைஞர்களுக்கு மட்டும்தான். லாபம் பெரிய கைகளுக்கு. சினிமாக்காரர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை.

சிலநாட்களுக்கு முன் ஒரு டிஸ்கஷனில் ஒரு இயக்குநர் அவரது அப்படம் திருட்டு விசிடியால்தான் தோற்றது என்றார். நான் அவரிடம் அதை 30 ரூ விசிடியில் பார்த்தவரில் எத்தனைபேர் 300 செலவு பண்ணி சினிமாவுக்கு வந்துபார்ப்பார்கள் என்றேன். அவர் கோபம் கொண்டார். அவரது படம் சரியில்லை என்று நான் சொல்வதாக நினைத்தார். உண்மையில் இப்போது எல்லாரும் எல்லா படத்தையும் பார்த்துவிடுகிறார்கள். 30 வருடம் முன்பு ஓடாதபடம் எவராலும் பார்க்கப்படுவது இல்லை. இன்று அதை விசிடியில் டிவியில் எல்லாரும் பார்க்கிரார்கள். இதுதான் நிலைமை. ஏன் இந்த முக்கியத்துவத்தை லாபகரமாக பயன்படுத்திக் கொள்ளமுயலக்கூடது ? நல்ல படத்தை ஆட்கள் தியேட்டருக்குவந்து பார்ப்பார்கள். பார்க்க வைக்கவேண்டும். அதற்கு ஸ்டார்கள் ஊதியத்தை குறைக்கவேண்டும். செலவு செய்து நல்ல படங்களை எடுக்கவேண்டும். விசிடி ரைட்ஸை உடனே விற்கவேண்டும். அப்போது கீழக்கரைக்குப் போகும் பணமும் கொஞ்சம் கிடைக்கும் அதுதான் ஒரே வழி. மற்றபடி இந்த உத்தரவுகளால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. சினிமா ஸ்டார்கள் படப்பிடிப்புக் கட்டணம் குறைவதனால் ஏற்படும் மார்ஜினை– அதிகம்போனால் ஒரு படத்துக்கு 10 லட்சம் – கூட்டிகேட்பார்கள். கீழக்கரைஆசாமிகள் போலீஸுக்கு மாமூலை கூட்டிக் கொடுப்பார்கள். அவ்வளவுதான்

மருந்து சினிமாக்காரர்கள் கையில் இருக்கிறது.அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

—-

suurayaa@rediffmail.com

Series Navigation

சூரியா

சூரியா