சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மிகுந்த சர்ச்சைக்கான அனைத்து விதைகளையும் உள்ளடக்கிய ஒரு கேள்வி சாதிய சமுதாய அமைப்பின் உதயம் குறித்தது. பல தலித் விடுதலை கருத்தியல்களில் ஆரிய படையெடுப்பில் இந்திய பூர்விகக்குடிகள் அடிமைப்படுத்தப்பட்டு சமுதாயத்தில் கீழ் தள்ளப்பட்டதன் விளைவாக எழுந்த இனரீதியிலான தோற்றமே சாதிய சமுதாயத்தின் உதயத்திற்கு கூறப்படும் காரணமாகும்.கல்வித்தரம் வாய்ந்தவையாக கருதப்படும் பல பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச அளவில் இந்திய சாதிய அமைப்பின் அறிமுகம் இவ்வண்ணமே உள்ளது. உலகின் மிக நீண்ட கால அளவில் இனரீதியில் அடிப்படை மானுட உரிமைகளை மறுக்கும் அமைப்பாக சாதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் உலக நாடுகள் குறித்த பிரபலமான அதிகார பூர்வ கையேடு இந்தியா குறித்து கூறுவதிலிருந்து,

‘ ஆரியா என்னும் பதம் ‘தூய்மையான ‘ எனும் பொருள் கொண்டது. படையெடுத்தோர் எந்த அளவு இனப்பிரக்ஞை மற்றும் இனத்தூய்மையை முக்கியமாக கருதினர் என்பதையும் பூர்வீகக் குடிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட தீவிரத் தன்மையையும் இது காட்டுகின்றது. …ஆரியர்கள் அவர்களுடன் ஒரு புதிய சமுதாய அமைப்பினைக் கொண்டு வந்தனர். சமயம் மற்றும் தத்துவம் சார்ந்து நியாயபடுத்தப்படும் ஓர் புதிய சமுதாய அமைப்பான வர்ணாஸ்ரம தர்மமே அது….பாண்டித்யம் பெற்ற, வழிபாடு செய்யும் உரிமையினை சொத்தாக

பெற்ற பிராமணர்கள் எனும் இந்தோ ஆரியர்கள் தங்கள் இனத் தூய்மையைக் காக்க கடுமையானச் சட்டங்களை இயற்றினர். ‘

[India: A country study, U.S.Library Congress 5th edition, 1996 பக்கங்கள் 5,7]

சாதியத்தின் தன்னியல்பிலான மானுட உரிமை மறுப்பு அதனை நீக்கப்பட வேண்டிய ஒன்றாக, ஜனநாயக தன்மையற்ற ஒரு அமைப்பாக மாற்றுகிறது என்பது உண்மை.ஆனால் சாதியத்தின் தோற்ற இயற்கை குறித்த கருத்தாக்கம் அதனை களைவதற்கான விடுதலையியலையும், களச் செயல்பாடுகளையும் வெகுவாக நிர்ணயிக்கிறதென்பதால் அச்சமுதாய அமைப்பின் இனரீதியிலான உருவாக்கம் எந்த அளவு வரலாற்றறிவியலின் உரைகல்லில் தேர்கிறது என காண்பது அவசியம்.

அறிவியல் புனைகதையாளரும், பல அறிவியல் புலங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவருமான காலம் சென்ற ஐசாக் அஸாமாவ் சாதி அமைப்பு உருவாகுமோர் சமூகத்தின் இயல்புகளில் முக்கியமாக இரண்டினை குறிப்பிடுகிறார். 1. அருகி வரும் வளங்கள் 2. போக்குவரத்தின் பரப்பளவு மிகக் குறைதல். (Sociology through Science Fiction, எனும் சிறுகதை தொகுப்பில் Strike breaker எனும் அவரது சிறுகதைக்கான முன்னுரையில்.) ஆரிய இன/படையெடுப்பு கோட்பாட்டின்படி இது சாத்தியமானதல்ல ஏனெனில் படையெடுப்புக் கோட்பாடு சித்திரிக்கும் ஆரியர்களை போன்றதோர் நாடோடி சமுதாயத்தில் இத்தகைய கட்டமைப்பு உருவாக இயலாது. மாறாக இயற்கைச் சீற்றங்களை சந்திக்கும், சிந்து சம

வெளி நாகரிகத்தை போல வளர்ந்த ஒரு நாகரிகத்தில் இது ஒரு சாத்திய நிகழ்வே.

சாதி தன் அடிப்படையாக தொழில் அடிப்படையாக கொண்ட குழுவாக இயங்கியது. மிகவும் பிற்காலத்தில் பாரதத்தில் பயணம் மேற்கொண்ட மெகஸ்தனிஸ் சாதிகளின் முக்கிய தன்மையாக தொழில்களை கண்டார். ஆனால் பண்டைய சமுதாயங்களில் பிறப்படிப்படையிலான தொழில் தேர்வு இயல்பான ஒன்று. சமுதாய நெருக்கடிகளில் இக்கட்டமைப்பு மிகவும் இறுகிய தன்மையை அடைந்துவிடுகிறது. உதாரணமாக கடுமையான சாதி கட்டமைப்புகளை உருவாக்கும் மனு ஸ்மிருதியில் சமுதாயம் கடும்கால கட்டங்களை சந்தித்தது குறித்த நினைவுகள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதை

காணலாம். சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் இத்தகைய தொழில் அடிப்படையிலான பிற்கால சமுதாய கட்டமைப்புடன் தொடர்புடைய சமூக பிரிவுகளுக்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளனவா ?

ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் திராவிட மொழியியல் தன்மையில் உறுதிப்பாடு உடையவர். அதே சமயம் அதன் பண்பாடு வேத இலக்கியத்தில் பிரதிபலிக்கிறது என்பது அவர் கருத்து. ரிக் வேதம் தன் ‘ஆத்ம யக்ஞமாக ‘ அறிவிக்கும் சோமபான சடங்கினை ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையுடன் தொடர்பு படுத்தி பேசும் அவர் சிந்து சமவெளி நாகரிகத்தின் பல முத்திரைகளில் இறுதியில் காணப்படும் ‘U ‘ வடிவங்களை (இது தவிர மேலும் நான்கு வெவ்வேறு வடிவங்களை) தொழில் மற்றும் அதிகாரம் சார்ந்த சமூகக் குழுக்களை குறிப்பதாக கருதுகிறார். அதே சமயம் இந்த தன் முன்யூக சமூக அமைப்பு பிறப்படிப்படையிலானதா என்பதை நாம் உறுதி செய்ய முடியாதென்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ாUா வடிவம் கும்பத்துடன் தொடர்புடையதெனவும் எனவே வழிபாட்டுக் கடமைகள் கொண்டோரை குறிப்பிடுவதாக அவர் கூறுகிறார். பல வேத புராண ரிஷிகளின் பிறப்பு கும்பத்துடன் இணைந்தது. அகஸ்தியர், ‘கும்ப முனி ‘ எனவே வழங்கப்படுகிறார். (பார்க்க கீழ் காணும் படம்)

இது முன்யூகம் மட்டுமே. ஆனால் தெளிவாக தெரியும் உண்மையென்னவென்றால் சாதியத்தின் பரிணாமம் இம்மண்ணின் சமுதாய மாற்றங்களின் விளைவாக எழுந்த பல காரணிகளால் ஏற்பட்ட ஒரு நிகழ்வு. ஆனால் ‘ஆரியர் ‘ என தன்னை அழைத்துக் கொண்ட ஒரு நாடோடிக் கூட்டத்தால் பூர்வீக இந்தியக் குடிகள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல அது. சாதிய அமைப்பில் இன காரணிகளை நுழைக்கும் போக்கினை டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் முழுமையாக மறுக்கிறார். சமஸ்கிருத அறிஞரான அவர், வேதத்தினை தானே படித்த பின்னர், வந்த முடிவுகள் முக்கியமானவை,

‘1. வேதங்கள் ‘ஆரிய ‘ எனும் எந்த இனத்தையும் அறிந்திருக்கவில்லை.

2. பாரதத்தின் பூர்வீகக் குடியினர் என நம்பப்படும் தாஸ அல்லது தஸ்யு எனும் இனத்தை ‘ஆரியர் ‘ எனும் படையெடுப்பாளர்கள் வெற்றி கொண்டார்கள் என்பதற்கு வேத இலக்கியத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வேறுபாடுகள் இனரீதியிலானவை என கருத எவ்வித வேத ஆதாரமும் இல்லை.

4. ஆரிய/தஸ்யு வேறுபாடுகள் நிறரீதியிலானவை என கருத எவ்வித வேத ஆதாரமும் இல்லை. ‘

(அம்பேத்கர், ‘Writings and Speeches ‘, பாகம்:7 பக்: 302,303 மும்பை, கல்வித்துறை, மகாராஷ்டிர அரசு வெளியீடு)

துரதிர்ஷ்ட வசமாக பாபா சாகேப் அம்பேத்கரால் ‘குப்பைத்தொட்டிக்கே ஏற்றது ‘ என கருதபட்ட ஆரிய இனவாதம் இன்று அவரது பெயரை சொல்லிக்கொள்ளும் சில தலித் விடுதலையியலாளர்களாலும், மிஷனரிகளாலும் தங்கள் கருத்தியல்களில் நடுநாயகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவுகள் தெள்ள தெளிவாக அறிவியல் பார்வையற்ற நாஸா இனக் கோட்பாட்டு வகையறாக்களை சார்ந்தவை. பெல்ஜிய இந்தியவியலாளரான டாக்டர் எல்ஸ்ட் இக்கருத்தியல்களில் அப்பட்டமான இன வெறுப்புத் தன்மையை வெளிக் கொண்டுவந்துள்ளார். (Aryan invasion theory in Indian Politics, ‘Voice of India)

உதாரணமாக பெங்களூரைச் சார்ந்த ‘தலித் வாய்ஸ் ‘ பத்திரிகை (திரு.ராஜ் சேகரால் நடத்தப்படுவது, சர்வ தேச அளவில் செயல்பாடு உடையது.) யூத வெறுப்பினை அந்தண வெறுப்புடன் இணைக்கிறது. அதன் மூலம் இஸ்லாமிய அகிலத்துடன் த்ன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நாஸாகளின் மிக மோசமான இனவெறி கோட்பாட்டினை தலித் விடுதலையியலாக முன்வைக்கிறது. இதற்கு மிஷனரிகள் துணை போகிறார்கள். ‘Protocols of the Elders of Zion ஈரானிய தூதரகத்திடமிருந்து வாங்கப்பட்டு வெளியிடப் பட வேண்டும். ‘ (தலித் வாய்ஸ், 1-12-1991) சித்பவன் அந்தணர்கள் உண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்த ஆரியர்கள். உண்மையில் யூத தொடர்புடையவர்கள் என்ற கருத்துடன் அவர்களின் ‘மத தீவிர வாதத்தின் ‘ இனரீதியிலான காரணங்கள் தலித் வாய்ஸ்,, 1-2-1995 மற்றும் 1-3-1995 வெளியாயின. மேலும் திரு.ராஜ் சேகரின் Brahminism (தலித் சாகித்ய அகாடமி) நூலில் இத்தகைய கருத்துகளை காணலாம். கிளிண்டனின் மீது எழுந்த அவரது ஒழுக்கம் குறித்த குற்றச்சாட்டுகளை தலித் வாய்ஸ் ‘சியோனிஸ்ட் சதி ‘ என கூறுகிறது. (1-9-1998) சியோனிஸ்ட்களுக்கும் அந்தணர்களுக்குமான வரலாற்று மற்றும் கருதியல் தொடர்புகளையும் அது விளக்குகிறது. (16-1-1993) இதன் விளைவுகள் கொடுமையானவை. இத்தகைய கருத்தியல் அடிப்படையில் இயங்கும் தலித்கள் அண்மையில் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாட்டில் பாலஸ்தீனிய விடுதலை எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பயன்படுத்தப் பட்டார்கள். ஆனால் மிக அருகாமையில் உள்ள பங்களாதேஷில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தங்கள் சொந்த தலித் மற்றும் வனவாசி சமுதாய சகோதர சகோதரிகள் அனைத்து வித அவமானங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டு இன அழிப்பு செய்யப்படுவதை குறித்து அவர்களிடம் சிறிய முணுமுணுப்பு கூட ஏற்படவில்லை. ‘சாதியத்தை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அவர்களுக்கே உரிய இனரீதியிலான முன்முடிவுகளின் அடிப்படையில் உடனடியாக இனரீதியிலான காரணிகளை சாதியத்தின் மையமாக்கி கற்பனை செய்து விட்டனர். உண்மைக்கு முற்றிலும் புறம்பானது வேறெதுவும் இருக்க முடியாது. ‘ என்ற டாக்டர் அம்பேத்கரின்

பெயரைக் கூறிக் கொண்டேதான் தலித் வாய்ஸின் வெறுப்பியல் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆரிய இனவாதம் பொய்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் எழுப்பபடும் ஒரு தலித் விடுதலையியலே சமுதாய மறுமலர்ச்சியினை உருவாக்க முடியும். சாதியத்தின் மோசமான விளைவுகளின் அடிப்படையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களால், அல்லது சமுதாய அவலங்களின் அடிப்படையில் இனரீதியிலான வெறுப்பியல்களை

பரப்புவர்களால் அது இயலாது. இந்திய சமுதாய பண்பட்டு வேரிழக்காமல் அதன் தன்னியல்பான வலிமைகளையும் அவலங்களையும் உணர்ந்த ஒரு சிந்தனையாலேயே அது இயலும்.

***

infidel_hindu@rediffmail.com

***

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்