சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

கோவிந்த்


அழகான அற்புத கதை. மிகப் பெருவாரியான ஆண்களைப் போல் பொறுப்பற்ற குடும்பத் தலைவன்.

கிடைத்த வாத்தியார் வேலையைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் தனது சினிமா ஆசைக் கனவிற்கு வீட்டின் காசை வேட்டு விடும் உதவாக்கரை.

மனமுற்றவன் மற்றும் இரு குழந்தைகள் தகப்பன் என்பது தாண்டி தன் நண்பர்களுடன் குடித்து குஷாலாக இருப்பவன்.

இவனுக்கு ஒரு புத்திமதியாய் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடச் சொல்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி. அது தான் பிடிபட்ட குற்றத்திலிருந்து அவன் ஜெயிலுக்கு போகாமலிருக்க ஒரே வழி.

ஒத்துக் கொண்டு பின் மறுத்து பின் சவாலாக ஏற்று ஐயப்பன் மலைக்குப் போகிறான்.

அது தொடர்ந்து ஞானத்தைத் தேட வீட்டின் கதவில் எழுதி ஒட்டி விட்டு ஓடுகிறான்.

பொறுப்பற்ற தன் நண்பன் மகன் திருந்துவான் என்று பெண்ணைக் கொடுத்த தந்தையும் , பொறுப்பற்ற ஆண்மகனின் தந்தையும் அப்பெண்ணுக்காக வருந்துகின்றனர்.

ஆனால், அப் பெண்ணோ தன் சுயசம்பாத்தியத்தில் வாழும் முயற்சியாக ஆடைகள் தைக்கிறாள். பிழைப்பு ஓடுகிறது.

ஞானத்தைத் தேடிவனுக்கு தன் மனைவி குழந்தைகளுக்கு இறைவன் படியளப்பானா எனும் கேள்வி வருகிறது. ஆசிரமத்து ஒரு சாமி ஆம் என்க, பிறிதொருவனோ… அவள் அழகாயிருப்பதாக இவன் கூறுவதால் பிரச்சனை இல்லை அவள் பிழைப்பது சுலபம் என்கிறான்.

சோம்பேறிக்கு இதயத்தில் முள் தைக்கிறது.

திருந்தி வீடு வருகிறான்.

இவனை நம்ப அவர்கள் தயாராய் இல்லை.

இவன், தான் மீண்டும் வராத இடத்திற்கு போவதாய் வீதியில் இறங்குகிறான்.

வாசல் கதவைத் திறந்து வெளிவந்த மனைவி, ‘இந்த பொறுப்பை விட்டு ஓடி விலகும் புத்தி பற்றி… நார் நாராய் கிழிக்கிறாள். தான் அது மாதிரி ஓடுவது சுலபம் என்றும் ஆனால் தனது வாரிசுகளுக்கு வாழ்வு தருவது அதைவிடப் பொறுபானது என்று சொல்கிறாள்.

மனம் திருந்தும் அவனை ஏற்று வீட்டினுள் அழைத்துச் செல்கிறாள். அவன் ஒழுங்காய் அவனது உத்தியோகத்திற்கு போகிறான்.

படம் முடியும் போது, நாம் பொறுப்பாய் இருந்தோமா எனும் கேள்வி நம்முள் வருகிறது.

தமிழில் ஒரு மலையாள சினிமா.. ஆம்… மலையாள வெற்றிப்படத்தினை தங்கர்பச்சான் தமிழில் தந்துள்ளார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் படக் கதாநாயகனைப் போல் பொறுப்பற்ற முறையில் இருக்கிறது.

அதுவும் காரணத்துடன் வந்தாலும் அந்த ஜட்டி நடனம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு கவலைப்படும் தங்கர்பச்சானிற்கு தேவையா என்று கேள்வி கேட்க வைக்கிறது.

அல்லது அந்தக் கவலை திரைக்கு வெளியேயான தங்கர்பச்சானின் அரிதாரமா… ? என்று கேட்க வைக்கிறது…

கேட்டால், விநியோகஸ்தர்கள் என்று சொல்வார்கள். ஆனால், ஆட்டோகிராப், காதல், கில்லி படங்கள் அம்மாதிரி ஜட்டிகள் இல்லாமலே மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன…

மற்றபடி, பாராட்ட வேண்டிய முயற்சி.

தஙகர்பச்சானின் நடிப்பும் முகமும் எதார்த்தம்.

அழகான நடிகர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்மில் பல பேரின் மூஞ்சியை ஞாபகப்படுத்தும் முகம் அவரது முகம்.

பல காட்சிகளில் எதார்த்தம் அழகுற உள்ளது.

காட்சிகளின் உணர்வு பூர்வ நிலை பாராட்டப்பட வேண்டியது.

தங்கர்பச்சான் கொஞ்சம் பொறுப்புடன் திரைப்படம் எடுத்தால் தமிழுக்குத் தங்கத்தாமரை பெற்றுத் தரமுடியும்.

இப்படத்தில் நடிகர். சூர்யா நடித்திருக்கலாம்….

: கோவிந்த் ::::

Series Navigation