சிட்டுக்குருவியின் கூடு தேடல்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஒரு வழிப்போக்கனின் வெயில் காலப் பயணம்

நிழல் குடையற்ற தங்குமிடங்களை

கவலைத்தொனியோடு பார்த்து

தினமும் முணுமுணுத்துச் செல்கிறது.

இழப்பின் துயரங்களினூடே

இருப்பின் நிலைகுலைதல்

இயற்கையின் மர்ம முடிச்சுக்களை

அவிழ்க்கமுயன்று தோல்வியுற்றது.

சிட்டுக் குருவியொன்று கூடுதேடி

செடியற்ற வனத்தில்

ஒவ்வொரு நாளும் அலைதலுற்று மிதக்கிறது.

2)

தோற்றக் காட்சிகளை தரிசித்து

தனிமையில் கலைந்து திரிந்த

துண்டு துண்டான மேகங்கள்

உறைந்து போன துக்கங்கள்

மெளனங்களை உற்பத்தி செய்கிறது.

எதிர் தரப்பின் வன்முறை

எதிர்ப்பின்மைகளின் துயரம்

யாதுமாகி இருத்தலாகிட

உருமாற்றிக் கொள்கிறாய்

உன்னையே நீயும்.
————————————–
mylanchirazool@yahoo.co.in

Series Navigation