சி.என்.ஜி

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

காசிகணேசன் ரங்கநாதன்.


‘எலக்ட்ரிக் க்ரிமடோரியம் ‘

என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. பெயர்ப் பலகைதான் மின்சாரச் சுடுகாடு

என்று சொன்னதே ஒழிய, உள்ளே தென்பட்டதென்னமோ இந்திரப்ரஸ்தா கேஸ்

லிமிட்டடின் எரிவாயு பம்ப்.

அவன் பேரூந்து சராய் காலேக்ஹானில் நின்றுகொண்டிருந்தது. பேரூந்து

நிறுத்தத்திலிருந்து சற்று தள்ளி. சன்னல் வழியாக அவனுக்குத்

தெரிந்ததெல்லாம் இந்த பெயர்ப்பலகை, கேஸ் பம்ப், பின்னால் தென்பட்ட ஒரு

பொட்டல் வெளி அதன் பின்னணியின் மடிப்பில் தெரிந்த ‘அந்த்த

ராஷ்ட்ரீய.. ‘ என்று மக்களால் உச்சரிக்கப்படும் அனைத்து மாநில பேரூந்து

நிலையம். அதற்கும் பின்னே மங்கலான கோடாகத் தெரிந்த ஹஜ்ரத்

நிஜாமுதீன் ரயில் நிலையம். பின்புலத்தில் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்

அரிதாகத் தலைகாட்டிய சில கோதுமைப் பயிர்கள்.

‘சே என்னாச்சு இந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்! கண்ட இடத்தில் நிறுத்தி

உயிரை வாங்கித் தொலைக்கிறார்கள். ‘

நடத்துனர் கீழே யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருந்தான். வண்டை

வண்டையாகக் கெட்ட வார்த்தைகளோடு, ‘சாலா ‘ என்பது மட்டும் தெளிவாகக்

காதில் விழுந்தது.

‘என்னதான் நடக்கிறது இங்கே ? ‘

பொறுமையில்லாமல் நாலு அடி நடந்து முன்பக்கக் கண்ணாடி வழியாக

எட்டிப்பார்க்க, சற்று தொலைவில் ஓட்டுனர், இரண்டு மூன்று

போலீஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

‘சரிதான், ஆரம்பிச்சிட்டாங்களா ? எப்படியும் கால் மணிநேரத்திற்கு

குறைஞ்சு இங்கிருந்து நகர முடியாது. ‘

பேரூந்திலிருந்த மக்களிலும் பாதிப் பேர் குப்பல் குப்பலாக மேலும் கீழுமாக

அலைந்து கொண்டிருந்தார்கள். மெது மெதுவே நடத்துனரைச் சுற்றிக் கூட்டம் கூடத்

தொடங்கியது.

‘ஏன் இப்படிப் பண்றாங்க ?.. நம்ம நேரம் தானே வீணாகுது… ‘

ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாருக்கும் ஓட்டுனர்

இருக்கும் இடத்திற்குச் சென்று பஞ்சாயத்து பண்ணும் தைரியம் இருந்ததாகத்

தெரியவில்லை. இனி ரோடு பர்மிட், ஆர்.ஸி, ட்ரைவிங் லைசன்ஸ் இன்ன

பிற இத்யாதி இத்யாதி என வரிசையாக மண்டகப்படி நடந்தாக வேண்டுமே.

சரி எனக்கும் அப்படியொன்றும் அதிமுக்கியமான வேலை இல்லை. இன்று

விடுமுறைதான். நிதானமாக இவர்கள் கதா காலட்சேபங்களைப் பார்த்துவிட்டுச்

செல்லலாம்தான், ஆனால் அநியாயத்திற்கு கையில் படிப்பதற்கு புத்தகமும் எதுவும்

இல்லை. கையைப் பிசைந்து கொண்டு உட்கார வேண்டியதாகி விட்டது. எனக்குத்

திரும்பத் திரும்ப அந்த பெயர்ப் பலகை மீதே கண்ணோட்டமாக இருந்தது.

‘மின்சாரச் சுடுகாட்டுக்கும் இந்த கேஸ் பம்புக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இந்த

பெயர்ப் பலகையைக் இங்கே கொண்டுவந்து நட்டார்கள் ? யார் கிட்டயாவது

கேட்போமா ? ‘

‘ம்ஹூம்.. கேட்பதாவது, அவனவனுக்கு இருக்கிற மூடில் நாம் இந்த மாதிரி

ஏதாவது எசகு பிசகாகக் கேட்டுவைத்தால் பிறகு நாலு அப்பு அப்பாமல்

விடமாட்டான். எல்லோரும் நம்மைப் போலவே வேலையத்தவனாக

இருக்கமாட்டார்கள். ‘

அது தில்லிக்கு சி.என்.ஜி வந்து சேர்ந்த புதிது. எல்லோரும்

பொறுக்கமாட்டாமல் செய்தித் தாள்களைப் பார்த்து சி.என்.ஜி என்றால்

‘கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ்(இந்தி பாணியில் கைஸ்) ‘ அதாவது

அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு என்று படித்துப் புரிந்து

கொண்டிருந்தார்கள். அனைத்துப் பத்திரிகைகளும் தில்லியின் சி.என்.ஜிக்

கதையை தினந்தோரும் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டிருந்தன. ஒரு

பதினைந்து அல்லது பதினெட்டு வருடங்களுக்கு முன்னே, ஒரு உச்ச நீதிமன்ற

வழக்கறிஞர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வெறுத்துப் போய் உச்ச நீதிமன்றத்தை

அணுகி, விடாக்கண்டனாகப் போராட, உச்சநீதிமன்றம் தன்

கேள்விகளுக்கெல்லாம் தில்லி அரசு சொன்ன சால்ஜாப்புகளால் திருப்தி

அடையாமல் தடாலடியாகப் போட்ட உத்தரவு இன்று இந்த மூன்றெழுத்தை

தில்லியின் கதாநாயகனாக அல்லது நாயகியாக ஆக்கிவிட்டது.

பத்திரிகைகளும் தொல்லைக்காட்சிகளும் இவ்வளவு சுற்றுச்சூழல் மாசு குறைந்தது

என்று கொட்டை எழுத்தில் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

ஆனால் ஓடத் தகுதியில்லாத பேரூந்துகளையே பெரிதும் நம்பிப் பிழைப்பை

நடத்திவந்த அரசுப் பேரூந்து நிறுவனம், தன்னுடைய முக்கால் பங்கான சில

ஆயிரம் பேரூந்துகளை ஓரங்கட்டிவிட, என்னை மாதிரிப் பேரூந்துகளை நம்பிப்

பிழைத்துக் கொண்டிருந்தவர்களைப் பிடித்தது சனி. சில சமயம் பேரூந்துக்காக

கால்கடுக்க இரண்டு மணி நேரம் கூடக் காத்திருக்க நேர்ந்தது. அந்த நேரத்தில்

தனியார்ப் பேரூந்துகள் கைகொடுத்தன. பேரூந்து முதலாளிகள்

புத்திசாலிகளாயிற்றே ? அவசர அவசரமாகத் தங்கள் உருப்படியான பேரூந்துகளை

சி.என்.ஜிக்கு மாற்றி ஓடவிட்டு தாங்கள் ஓடுகின்ற சாலைக்குப் புண்ணியம்

தேடிக் கொண்டார்கள். ஆனால் தனியார் பேரூந்துகளில் சிறப்பாகச்

செய்யப்பட்ட இதுபோன்ற மாமூல் சோதனைகள் அவ்வப்போது தொந்தரவுகளைத்

தந்துகொண்டிருந்தது.

எவ்வளவோ நன்மை இருந்தாலும், சில வயிற்றில் புளியைக் கரைக்கும்

சமாச்சாரங்களும் இல்லாமலில்லை. தனியார்ப் பேரூந்து அதிபர்கள் அவசர

அவசரமாகப் பேரூந்துகளை சி.என்.ஜிக்கு மாற்றியதில் ஆங்காங்கே சில

தொழில் நுட்பக் கோளாறுகள் உருவாகியிருந்தன. சில சமயம் அங்கே இங்கே

பேரூந்துகளில் சிலிண்டர்கள் வெடிக்க அல்லது தீப்பிடிக்க, ஓரிருவர் மரணம்

ஒருசிலர் காயம் என்று பத்திரிகைகள் வெளியிட்டு பரபரப்புத் தேடிக்

கொள்ள, பேரூந்தைப் பார்க்கும் போதெல்லாம் லேசாக கிலியடித்தாலும்..

வெளியே மழுப்பலாக,

‘ம்ம்கூம்.. அதெல்லாமொண்ணுமில்ல்லல… ‘ என்று சவுண்டு கொடுத்து சமாளித்துக்

கொண்டார்கள்.

சுற்றுச் சூழல் அறிவும் மக்களிடம் எசகு பிசகாக வேலை செய்தது. பேரூந்தில்

எந்த மூலையிலாவது யாரேனும் பீடி பற்ற வைக்கத் தீக்குச்சியைக்

கிழித்தாலே போச்சு. ஒரே சமயத்தில் பத்து குரல் கிளம்பும்..

‘பந்து கர் ப்ஹாய் ஃபட் ஜாயகி ‘ , யே பத்த வைக்காத பஸ் வெடிச்சுரும்,

கேஸ் வண்டி தெரியும்லா..

சும்மா உட்கார்ந்திருந்த என்னுடைய மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. ‘ஐடியல்

மைண்ட் இஸ் த ஹவுஸ் ஆப் டெவில் ‘ன்னு சும்மாவா சொன்னார்கள்.

‘ஒரு வேளை இது ஆபத்தான இடம்னு காட்டுறதுக்காக இத சுடுகாடுன்னு போட்டு

வெச்சுருப்பாங்களோ ? ‘

‘சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது. சரி இது எக்கேடோ கெட்டு

ஒழியட்டும். எது எப்படி வெடிச்சுச் சிதறினா நமக்கென்ன ? ‘

ஒருவழியாக வெத்து கட்டப் பஞ்சாயத்துகள் முடிந்து ஓட்டுனன் தன் சீட்டில் வந்து

அமர, பேரூந்து கிளம்பியது. கிளம்பி சுமார் இருபத்தைந்து அடிதான்

நகர்ந்திருக்கும். திடாரென்று டயரிலிருந்து காற்றுப் பிடுங்கி விட்டது போல்

ஒரு சத்தம். சத்தம் நொடிக்கு நொடி வலுத்துக் கொண்டே போக, வண்டியை

நிறுத்தி ஓட்டுனன் சோதிக்க ஆரம்பிக்க, அவ்வளவு நேரமாகக் கண்டதையும்

யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த என் மண்டைக்குள் மணியடித்தது. நெஞ்சுக்

கூட்டுக்குள் பயம் கிளம்பியது. திடாரென உரக்கக் கத்தினேன்,

‘ப்ஹாக்லோ! பஸ் ஃபட்னேவாலி ஹை!!… ‘ ஓடுங்க.. பஸ் வெடிக்கப்

போகுது…

பேரூந்தைவிட்டுக் கீழிறங்கித் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தேன். சற்றுத்

தொலைவிலுள்ள பேரூந்து நிழற்குடையின் அடியில் போய் நின்ற பிறகு தான்

உயிரே வந்தது. மூச்சு வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது என்

பின்னே பேரூந்து ஜனம் முழுவதும் ஓடி வருவது தெரிந்தது. பேரூந்திலிருந்த

அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள் தன் மூட்டை முடிச்சுகளோடு ஓடி

வந்துகொண்டிருந்தார்கள். நிழற் குடையருகே நின்ற பலர் சாவகாசமாக பீடி

வலித்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். யார் கண்ணிலும் நேரம்

வீணாகிற எரிச்சல் தெரியவில்லை. சொல்லப் போனால் எல்லார் கண்ணிலும்

ஒரு லைவ் வெடிவிபத்தைப் பார்க்கின்ற உற்சாகம் தெரிந்தது.

‘பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வெடிக்கக் காணோம்.

என்னாச்சு இந்த பஸ்ஸுக்கு ?! ‘

மக்கள் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க,

அதற்குள் நடத்துனர் கையாட்டிக் கூப்பிட, அனைவரும் ஒருமாதிரியாக,எச்சில்

விழுங்கியபடி கும்பலாகப் பேரூந்தை நெருங்க… கண்டக்டர்,

‘என்னாச்சிப்பா உங்களுக்கு ? வண்டில ஏதோ கோளாறு. சரி செய்யப்

போனோம். அதுக்குள்ள எதுக்கு திமுதிமுன்னு ஓடினீங்க ?!… சரி சரி

ஏறுங்க! நானே ஏதோ சவாரி போயிடுமோன்னு பயந்துட்டேன். ‘

மக்கள் இறங்கின வேகத்திலே முண்டியடித்து ஏறத்துவங்க. நான் மெதுவாய்

நடத்துனரை நெருங்கி,

‘க்யா ஹுவா ப்ஹாய் ? ‘ என்னாச்சிப்பா ?

‘அட நீ வேறப்பா, யாரோ ஒரு பேமானி பஸ்ஸு வெடிக்கப் போவுதுன்னு

புரளி கெளப்பி வுட்டுட்டான். நான் எங்கடா இன்னிக்கு கலெக்ஷன் பார்க்க

முடியாதோன்னு பயந்தே போயிட்டேன். சரி சரி ஏறு. ஏற்கெனவே லேட்டு.. ‘

ஓட்டுனனுக்காய்க் குரல் கொடுத்தான்,

‘அப்பே ச்சலாலே…. ‘ போலாம் ரைட்.

====

ranganath73@yahoo.co.uk

Series Navigation