சார்ஸ் பிசாசே!

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

புகாரி, கனடா


அழிக்க வரும் சக்தியை நான்
அழித்தொழிப்பேன் – என்னை
அழிக்க எவன் வருவானென
ஆடி நிற்பேன்…. என்று
எந்தக் கிருமியும்
முழக்கமிட்டதாய்
நான்
இதுவரை கேட்டதில்லை

இன்னும் இன்னும்
வெற்றிவாகை சூடிக்கொண்டு
தன் முதலிடத்திலிருந்து
சற்றும் சறுக்கிவிழாத
சக்கரவர்த்தி எயிட்ஸ்கூட
வைத்தியம் பார்க்கும்
மருத்துவருக்கு
வணக்கம்தான் சொல்கிறது

ஆனால் நீயோ
பிசாசுகளையே தின்று செரிக்கும்
ராட்சசப் பிசாசு…

என்னையா கொல்ல வந்தாய்
அடேய்…. மருத்துவ மூடா
நான் உன்னையே கொல்வேனடா
என்று
சாவு ஓலம் கிளம்பச்
சிலிர்த்தெழுகிறாயே

O

சதியே சதியே
சார்ஸ் பிசாசே
விதியாய் விதியாய்
வந்து தொலைத்தாயே !

O

சைனா பெருஞ்சுவரை
நீளத்தாண்டு தாண்டி
நஞ்சு நிமிர்த்தி நடக்கும்
கொலைப் பட்டாளமே

வெட்ட வரும் அரிவாளுக்கே
வேட்டு வைக்கும்
பொல்லாங்கே

காக்க வரும் மருந்துக்கே
சாவூட்டும்
கிருத்திரிமமே

நெருப்புக்கே
நெருப்பு வைக்கும்
சண்டாள நெருப்பென்ற
நினைப்பா உனக்கு ?

O

முகமூடியோடு உலாவும்
பொய்முக வாழ்க்கை
இங்கே நிரந்தரம்தான்

அட…
எவன் தன்
நிஜ முகத்தோடு
சத்தியம் பேசினான்
அதுவும் இந்தப்
பட்டணத்து வீதிகளில் ?

ஆனாலும் இன்று
கண்ணறியாத உனக்காக
கண்ணுக்குத் தெரியும்
முகமூடி இடுவது
வேதனைகளுக்கு இடையிலும்
வேடிக்கையாய்த்தான் இருக்கிறது

O

கிருமிகள் தொல்லைக்கு
சாக்கடையை மூடினால்
எனக்குப் புரியும்
மருத்துவமனையையே மூடினால்
எனக்குப் புரியவில்லையே
சார்ஸ் பிசாசே

O

உள்ளுக்குள்ளே
நெஞ்சமிருக்கோ இல்லை
வஞ்சமிருக்கோ
நிறைவாய்க் கைகுலுக்கி
நொடிக்கொரு புன்னகை பூத்த
மனித முகங்கள் இன்று
விலகி விலகி ஓடுகின்றன

தூ……..ரமாய் நின்று
ஒரு கும்பிடு போட்டால்
உயிர் நிலைக்குமே என்று
கிழக்குப்பாடம் கற்கிறார்கள்

கழுவிக் கழுவியே
இவர்களின்
கை ரேகைகளெல்லாம்
நீரில் மிதக்கின்றன

O

மக்களுக்கு நீ
சுத்தம் சொல்லித்தர
வந்தாயா ?

அதற்காக
உயிர்களை
ஊசிவெடிகளாய் வெடிக்க
உனக்கொன்றும்
உரிமையில்லையே
சார்ஸ் பிசாசே !

O

கப்பல் கப்பலாய் ஏறுகிறாய்
விமானம் விமானமாய்த்
தாவுகிறாய்

கண்டம் விடாமல்
கண்டம் தாண்டும்
கிருமிக்கணையே
நீ
ஒழிவதுதான் எப்போது ?

O

விருந்தும் மருந்தும்
மூன்றுநாள்தானே ?

உயிர்களை
விருந்துண்ண வந்து
இன்றோடு
எத்தனை நாட்களாகிவிட்டன ?

இப்படி நீ
போய்த்தொலையும்
எண்ணமில்லாமல் இருந்தால்
உன்னைப் பொசுக்கித்தள்ள
எங்களிடம் இருக்கும்
ஆயுதம்தான் எது ?

சுத்தம்
சுத்தம்
சுத்தம்தானா ?

*
buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி