This entry is in the series 20010812_Issue

விக்கிரமாதித்தன்


நினைத்துக் கொண்டால்
வருகிறது
நினைத்துக் கொண்டால்
நின்று விடுகிறது
காற்றும் சிறு தூறலும்
கலந்த சாரல்

சாரலே சாரலே
மலைக்கு அந்தப் பக்கமிருந்து
வருகிறாய் தெரிகிறது
சுற்றிச் சூழ நனைத்து
சீதளமாக்குகிறாய் புரிகிறது

நீ
மழை போல மண் குளிர்வித்து
அருவிகள் நிறைத்து
ஆறுகள் பெருக்கி
பச்சைவிடச் செய்து
என்னவெல்லாம் நிகழ்த்துகிறாய்

தேடி
வருகிறார்கள் உன்னை
சாரல் கட்டி விட்டதென்று
சந்தோஷப் படுகிறார்கள்
நனையும் பொழுது
சிலிர்த்துக் கொள்கிறார்கள்

சாரலுக்கும் தமிழுக்கும்
சத்தியமாய் சம்பந்தமுண்டு
கவிதைக்கும் சாரலுக்கும்
கனகாலமாய் சொந்தமுண்டு

சாரலென்றால் குளிர்
குளிர்
மனசுக்குப் பக்கத்தில்

ஒரு சாரலில் நனைந்தால்
ஒரு வருஷம்
ஆயுசு கூடும் போல

நிறையச் சாரல்களில்
நனைந்தவன் நான்
சாரல் காலத்தில் தான்
என் முடிவும் இருக்க வேண்டும்

****

Series Navigation