சாந்தாராம்- ஒரு எழுத்தாளனின் மாஃபியா அனுபவங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

அருணகிரி


“What characterizes the human race more, cruelty or the capacity to feel shame for it?”
– Shantaram

மாஃபியா என்ற சமூக விரோத அமைப்புக்கு எல்லா சமூகத்திலும் ஒரு மறைமுக வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. பட்டாம்பூச்சி (பாப்பியோன்) தொடங்கி, காட்ஃபாதர்,நாயகன், கம்பெனி என்று அமெரிக்க மற்றும் இந்திய மாஃபியா குழுக்கள் தொடர்பான பல கதைகளும் திரைப்படங்களும் வந்துள்ளன.
கிரிகொரி டேவிட் ராபர்ட்ஸின் “சாந்தாராம்” இவை அனைத்திலிருந்தும் பல விதங்களில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. சொந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறார் என்றாலும் சட்ட சிக்கல்களைத்தவிர்க்கும் வகையில் கற்பனை நாவல் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிரிகொரி டேவிட் ராபர்ட்ஸ் ஆஸ்திரேலியாக்காரர். தீவிர சோஷலிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர். எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிதைந்த குடும்பத்தால் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதில் வாழ்க்கையே திசை மாறிப்போகிறது. சிறை உடைப்பு, பம்பாய் வந்து மாஃபியா தொடர்பு, ஆப்கானிஸ்தான் போர் என்று காலம் இழுக்கும் திசையெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு இறுகிப்போயிருந்த இவரது மனம் ஒரு எளிய இந்திய கிராமத்தில் இளகத் தொடங்குகிறது.

சாந்தாராம் பரந்ததொரு களத்தில் பிரமிப்பை ஊட்டும் சம்பவக்கோர்வைகளால் பின்னப்பட்ட நாவல். 900 பக்கங்களுக்கும் அதிகமான பிரம்மாண்ட நாவலாகக் கட்டமைக்கப்பட்ட, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை இது. தெற்காசிய அரசியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு கால கட்டத்தில் இந்தக்கதை நடக்கிறது. ரஷ்ய ஆதிக்கத்தில் ஆஃப்கானிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிய தாலிபான் போராளிகளுக்கு உதவும் இஸ்லாமிய பாகிஸ்தான், இஸ்லாமியர்களின் கையில் மும்பை மாஃபியா, மும்பை மாஃபியாவின் கையில் பம்பாய்ச் சேரிகள், சேரியில் “டாக்டராய்” தொண்டு செய்யும் – அந்தத்தொண்டின் பின்னுள்ள பயங்கர உண்மையையோ, தன்னைமீறிய சக்திகள் பலவற்றால் தான் உபயோகப்படுத்தப்படுவதையோ உணராமல் வாழும் – சாந்தாராம் என்ற “லின்பாபா” என்ற கதை நாயகன் (கிரிகொரி ராபர்ட்ஸ்) என்று பல நிலைகளில் இந்த நாவல் பயணிக்கிறது.

நியுசிலாந்து சிறையில் இருந்து கிரிகொரி ராபர்ட்ஸ் தப்பி பம்பாய்க்கு இறங்குவதில் கதை தொடங்குகிறது. வாய் நிறைய சிரிப்புடனும் மனம் நிறைய நட்புடனும் வரவேற்கும் பிரபாகர் என்ற அரைகுறை ஆங்கில கைடு, வித்தியாச சிந்தனைகளை வசீகர வாக்கியங்களாகும் கார்லா என்ற போதைப்பொருள் விற்கும் பெண், வாழ்நாள் முழுதும் உட்காராமல் கழிக்கும் தவத்தை மேற்கொண்ட “நின்று கொண்டே இருக்கும் பாபாக்கள்”, அப்துல்லா என்ற பெர்சியன் அடியாள் , கானோ என்ற புத்திசாலிக் கரடி, காலேத் அன்சாரி என்ற கோபக்கார பாலஸ்தீனியன் என்று கலந்து கட்டிய, நிழற்கூட்டமான, பொதுப்புத்தி அதிகம் அறியாத ஒரு பம்பாயை அடையாளம் காட்டித் தொடங்குகிறது கதை. கிரிகொரி ராபர்ட்ஸுக்கு ‘லிங்பாபா’ என்று பெயர் சூட்டி தான் வாழும் சேரிக்கு அழைத்துச்செல்கிறான் பிரபாகர். அங்கு சேரியில் பரவும் பெரும் தீயை அனைவருடனும் சேர்ந்து போராடி அணைத்து காயமுற்றவர்களுக்கு மருந்து போடத்தொடங்க அன்றிலிருந்து லின்பாபா சேரியின் டாக்டர் ஆகிறான். காசிம் அலி ஹுசைன் என்பவரின் தலைமையில் அந்த சேரி இருப்பதும், காசிம் அலி ஹுசைன் மும்பை மஃபியாவின் ஆள் என்பதும் தெரிய வருகிறது. மும்பை மாஃபியா அப்துல் காதர்கான் (காதர்பாய்) என்ற இஸ்லாமிய மதப்பற்றாளரின் தலைமையில் இயங்குகிறது. காதர்பாய் ஆப்கானியர். கிரிகரி ராபர்ட்ஸுக்கு பல புதிய தத்துவ விசாரணைகளைக் கற்றுத்தரும் காதர்பாய், ஒரு தந்தை போல் இருந்து அன்பாகப் பழக, தன் தந்தையாக அவரையும், சகோதரனாக அப்துல்லாவையும் வரித்து, போதைப்பொருள் விற்கும் சேரித்தொண்டனாக பம்பாயில் வாழத்தொடங்குகிறான் லின்பாபா.

காசிம் அலி ஹுசைன் சேரியின் மதப்பூசல்களை முளையிலேயே தீர்க்கும் விதம் குறிப்பிடத்தக்கது. முகமது பெயரையும் ராமனின் பெயரையும் இழுத்து சண்டையிட்ட இந்து-முஸ்லீம் சிறுவர்களுக்கு தண்டனையாக இருவர் கால்களையும் கட்டி ஒற்றுமையாக கக்கூஸ் கழுவச் சொல்கிறார், பிறகு இருவரையும் மாற்று மதத்திலிருந்து ஒரு பிரேயரை மனனம் செய்து கற்கச் செய்கிறார்.

லின்பாபா பிரபாகருடன் சேர்ந்து அவனுடைய கிராமத்திற்குச்செல்ல பிரபாகரின் தாய் அங்கு சாந்தாராம் (“சாந்தாராம் கிஷன் கரே) என்ற மராட்டியப் பெயரைச் சூட்டுகிறார். அமைதியையும் கடவுளையும் குறிக்கும் அந்தப்பெயர் தனக்கு சூட்டப்பட்ட தருணத்தில் நல்லவனாக மாறும் தனது மனமாற்றத்திற்கான விதை போடப்பட்டதாக உணர்கிறான் லின்பாபா.

பம்பாய் திரும்பும் சாந்தாராம் என்ற லின்பாபாவுக்கு மருத்துவமனையில் இருந்து மருந்துகளையும், ஸிரிஞ்சுகளையும் திருடி விற்கும் தொழுநோயாளிகளை காதர்பாய் அறிமுகம் செய்ய, சேரி மருத்துவமனை நன்றாக இயங்கத் தொடங்குகிறது. இடையில் ஒரு தொடர் கொலைகாரன் கொடூர கொலைகள் செய்து சப்னா என்ற பெயரில் கையெழுத்திட்டு பம்பாயைப் பீதிக்குள்ளாக்குகிறான். மேடம் Zhou என்ற உயர்மட்ட பாலியல் விடுதித்தலைவியின் விரோதத்தைச் சம்பாதிக்கும் சாந்தாராம், அவள் கைப்பாவையாய் உள்ள ஊழல் போலீசால் சிறையில் அடைக்கப்படுகிறான். மேடம் Zhou அறுபதுகளில் பம்பாய் வந்து செட்டில் ஆன மேல்தட்டு விபச்சாரி. ஆளும் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட ஆட்களை வளைத்துப்போட்டு உளவு அறிய ரஷ்ய கேஜிபி அவளை உபயோகப்படுத்திக்கொள்கிறது. அந்த சிறையின் கொடுமையான அனுபவத்திலும் சித்திரவதையாளர்களை வெறுக்காமல் இருப்பது சாந்தாராமை விடுதலை அடைந்தவனாய் உணர வைக்கிறது. பல நாட்கள் கழித்து காதர்பாயின் உதவியால் விடுதலை அடைந்து அந்த நன்றியுணர்வில் காதர்பாயின் மாஃபியாவில் சேர்ந்து முக்கிய உறுப்பினன் ஆகிறான். சிவசேனையின் அடிமட்டத்தொண்டர்கள் மாஃபியா தொடர்புகளைக் கொண்டிருப்பதும் நாவலில் குறிப்பிடப்படுகிறது.

(எச்சரிக்கை: இனி வருவது கதையின் முக்கிய முடிச்சு)

ஆப்கான் போர் உச்ச கட்டத்தை எட்ட காதர்பாய் மாஃபியா கூட்டத்தை அழைத்துக்கொண்டு சாந்தாராமையும் கூட்டிக்கொண்டு பாகிஸ்தான் வழியாக ஆப்கன் செல்கிறார். ரஷ்யர்களின் குண்டு வீச்சில் பலர் இறக்கின்றனர். காதர்பாய் அங்கே சாந்தாராமுக்குப் பல உண்மைகளைச் வெளிப்படுத்த ஒரு மதப்போருக்கு திட்டமிட்டுத் தான் உபயோகப்படுத்தப்பட்டது அவனுக்குத் தெரிய வருகிறது. காதர்பாய் ஆப்கானியப்போருக்கு ஆயுதங்களை பம்பாய் மூலம் கடத்திச்செல்ல வேண்டியிருந்தது; பம்பாய் போலீஸின் கவனம் இந்தக் கடத்தலின் பக்கம் திரும்பாமல் இருக்கவும், தெரிந்தாலும் தொல்லை தராமல் இருக்கவும் ஹபீப் என்ற மனப்பிறழ்வாளனை விட்டு சப்னா என்ற பெயரில் கொடூரக்கொலைகளை நிகழ்த்துகிறது மாஃபியா. சப்னாவைப்பிடிக்க மாஃபியாவின் உதவி அவசியம் என்று கருதும் பம்பாய் போலீஸ், இந்தியாவை பாதிக்காத வரையில் ஆயுதங்களை ஆப்கானிஸ்தானத்திற்குக் கடத்துவதனைக் கண்டும் காணாமல் விடுகிறது. அதே சமயம் முஜாஹதீன்களுக்கு மருந்துகள், சிரிஞ்சுகள் ஆகிய பொருட்கள் அதிக அளவில் தேவைப்பட, தொழுநோயாளிகள் கொண்டு தரும் மருந்துகள் கலப்படமற்றவைதானா என அறிய சாந்தாராமின் சேரி ஜனங்களுக்கான மருத்துவப்பணியை உபயோகித்துக்கொள்கிறார் காதர்பாய். அப்பாவி ஏழை மக்களை- அதுவும் காதர்பாயைத் தன் தலைமையாக ஏற்றுக்கொண்ட ஒரு பரிதாப சேரிச் சமூகத்தை- தன் புனிதப்போருக்கான சோதனைச்சாலையாக உபயோகப்படுத்தியதை காதர்பாய், “சரியான காரணங்களுக்காக” செய்ததாக நியாயப்படுத்துகிறார். ஆப்கன் போரின் நடுவில் இவற்றை அறியும் சாந்தாராம் மனமுடைந்து போகிறான். பம்பாய் வந்தது முதல், தந்தை என்றும், தத்துவ வழிகாட்டி என்றும், சகோதரன் என்றும் நண்பர்கள் என்றும் தான் மதித்தவர்களே தன்னை உபயோகப்படுத்திக்கொண்டது அவனுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்துகிறது. ‘உனது கொள்கை நான் உன்னை வெறுப்பதில் தானே கொண்டு வந்து விட்டிருக்கிறது’ என்று காதர்பாயைச் சாடுகிறான்.

ஆப்கன் போரில் காதர்பாய் இறக்கிறார். கூட வந்த பல மாஃபியா ஆட்களும் கொலைகாரன் ஹபீபும் கூட உயிரிழக்கிறார்கள். சாந்தாராம் போரில் காயமடைகிறான். அங்கிருந்து தப்பி பாகிஸ்தான் வழியாக பம்பாய் வந்து மீண்டும் மாஃபியா வாழ்க்கையைத் தொடருகிறான். மாஃபியா குழுச் சண்டைகளின் முடிவில், எந்த கொள்கையுமற்ற புதிய குழுக்கள் பலம் பெறுவதைக் காண்கிறான். காதர்பாயைபோல் அல்லாது இந்தப்புதிய குழுக்கள் விபசாரம், போதை மருந்து, போர்னோகிராபி ஆகிய விஷயங்களில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. இந்தக் கால கட்டத்தில் பம்பாய் சினிமாவிற்கும் மாஃபியாவின் சல்மான் மஸ்தானுக்கும் நெருக்கம் அதிகரிக்கத்தொடங்க அதற்கு சாந்தாராம் பாலமாக செயல்படத் தொடங்குகிறான். விபத்தில் இறந்த பிரபாகரின் மனைவிக்கு பிரபாகரின் அச்சு அசலான ஜாடையில் குழந்தை பிறக்க, பம்பாய் சேரியில் மற்றோர் உயிர் மிகுந்த நம்பிக்கையுடன் புதிதாக ஒரு வாழ்க்கையைத் துவக்குகிறது- சாந்தாராம் போலவே.

கதைக்குள் கதை என்று பல இழைகளாகப் பயணிக்கும் இந்தப் பெரு நாவலில், இங்கு நான் எழுதியிருப்பது ஒரு முக்கிய இழையைத்தான். இதனூடாக பல கிளைக்கதைகளும் இந்நாவலில் வருகின்றன. ஒரு பிழையில் துவங்கும் ஒரு மனிதனின் சட்ட விரோத வாழ்க்கையை, போதைப்பழக்கம், மாஃபியா உறவு, எங்கெங்கோ நிகழும் அரசியல் நிகழ்வுகள், எல்லை தாண்டிய மத அடிப்படைவாதம், என பலவற்றில் சிக்க வைத்து காலச்சுழல் புரட்டிப்போடப்படுவதை படிப்படியாகச்சொல்கிறது சாந்தாராம். வெறுப்பு, ஏமாற்றம், வன்முறை என்ற நெருப்புச் சூழலில் வாழ்ந்தாலும் , தன் தாயாரின் அன்பும், ஒரு இந்திய கிராமத்தின் நம்பிக்கை மிகுந்த அரவணைப்பும், மும்பைச்சேரி மக்களின் நேசமும் மனதின் ஆழத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த மனித நேயத்தைத் தட்டி எழுப்பி துளிர்க்கச்செய்து கிரிகரி ராபர்ட்ஸை அமைதி வழிக்குத்திருப்பி சாந்தாராமாக மாற்றுகின்றன. தத்துவ குரு என்றும் தந்தை என்றும் தான் மதித்த பம்பாய் மாஃபியாவின் வலிய தலைவன் இறுதியில் தன்னை உபயோகப்படுத்தி ஏமாற்றும் மதப்போராளியாக வெளிப்பட, ஏழை சேரி ஜனங்களும் , எளிய கிராம மக்களும் மானுட நேயப் படிப்பினையை சாந்தாராமுக்கு இயல்பாக வழங்கும் குருவாக ஆகின்றனர்.

கிரிகரி ராபர்ட்ஸ், பம்பாய் மாநகரையும் மஹாராஷ்ட்ர மாநிலத்தையும் அணுக்கத்தில் புரிந்து கொள்ள அவரது ஹிந்தி மற்றும் மராட்டிய அறிவும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். இதுவே அவரது அனுபவங்கள் வெறும் சம்பவக்கோர்வைகளாக இல்லாமல், ஆழ்ந்த எண்ணபிரதிபலிப்புகளாக பல இடங்களில் வெளிப்படவும் உதவியிருக்கிறது. கர்லா, டிடியர் மற்றும் காதர்பாய் ஆகியோரின் சுவாரஸ்ய்மான தத்துவ வரிகளையும் வாக்குவாதங்களையும் ஒரு பார்வையாளனாக இருந்து நமக்கு அறிமுகம் செய்கிறார். சம்பவங்களை மட்டும் சொல்லிச்செல்லும் தட்டையான மாஃபியா கதையாக இல்லாமல், வாழ்க்கையின் பின்னல்களை அலசி சிக்கெடுக்க முயலும் ஆன்ம விசாரணையும் தன் சுய இருப்பு தாண்டி சிந்திக்க முயலும் தேடலும் சாந்தாராமில் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆற்றோட்டமாய்ச் செல்லும் கதையில் திடீரென எழும்பிக் குதிக்கும் தங்கமீன்கள் போல பல நேரங்களில் வாக்கியங்கள் குதித்தெழுந்து நம் கவனத்தை ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு சில:

” I don’t know what frightens me more, the power that crushes us or our endless ability to endure it”

“some of the worst wrongs were caused by people who tried to change things”

“If fate does not make you laugh, then you just don’t get the joke”

“some things are just so sad that only your soul can do the crying for you”

“The worst thing about corruption as a system of governance is that it works so well”

பொதுவாக ஆங்கில எழுத்தாளர்கள் எழுதும் இந்தியக்கதைகளில் காணப்படும் அலட்சியமோ, எள்ளல் அணுகுமுறையோ இந்த நாவலில் சிறிதும் இல்லை. மாறாக, மராட்டிய கிராமத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கைமாறி வந்திருக்கும் அக்கிராம மக்களின் அனுபவ அறிவை மனப்பூர்வமாகப் பாராட்டி வியக்கிறார். ரயிலின் மூன்றாம் வகுப்பு நெருக்கத்தில் கூட கால்பட்டு விட்டால் தொட்டுக்கும்பிடும் நாகரீகத்தை வியந்து புகழ்கிறார். பெரியோரைக்கண்டால் காலில் விழுந்து வணங்க கற்றுக் கொள்கிறார். எந்த மதத்தையும் போற்றாமலும் வெறுக்காமலும் அவர்களை அவ்வாறே ஏற்கிறார். தனது நம்பிக்கைகள் ஏமாற்றப்பட்ட போதும் சாந்தாராமால் யாரையும் வெறுக்க இயலாமல் போகிறது.

தன்னை அமைதியின் தெய்வ உருவமாய்க்கண்டு சாந்தாராம் என்ற பெயரிட்ட மராட்டிய கிராம மூதாட்டியின் நம்பிக்கையும், தன் தாயார் தன் மேல் கொண்ட பாசமுமே வன்முறையை வாழ்க்கையாய்க்கொண்ட லின்பாபா என்ற கிரிகரி ராபர்ட்ஸை மாஃபியா பாதையில் இருந்து விலக்கி வெற்றிகரமான எழுத்தாளனாக, தத்துவ தேடல் கொண்டவனாக, அமைதி மிக்கவனாக படிப்படியாக மாற்றுகிறது. இந்த நாவலில் குறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக இறுதி அத்தியாயங்கள் ஒரு திரைப்பட கிளைமாக்ஸை மனதில் கொண்டு எழுதப்பட்டவைபோல் உள்ளன. ரத்த வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்திருந்தாலும் யாரையுமே தன் வாழ்நாளில் கொன்றதில்லையென்று சாந்தாராம் சொல்கையில் அது மிகக்கவனமாக எழுதப்பட்ட வரியாகத்தான் தென்படுகிறது. பல இடங்களில் சாந்தாராம் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அளவுக்கு இவ்வளவு அப்பாவியா என்று கேட்கத்தோன்றுகிறது. பல சம்பவங்கள் (கவனமாக?) எழுதப்படாமல் விடப்பட்டு தாவித் தாவிக் கதை பயணிப்பது போல் தோன்றுகின்றது.

கிரிகரி ராபர்ட்ஸின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் இது. இதன் பிறகு இலங்கை சென்று அங்கு நடக்கும் தமிழீழப்போரிலும் கால் நனைத்திருக்கிறார். அது குறித்துப்படிக்க இவரது அடுத்த புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

சாந்தாராம் ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்படவுள்ளது. பட உரிமைகளை ஜானி டெப் வாங்கியுள்ளார். படத்தை ஜானி டெப்பும் ப்ராட் பிட்டும் இணைந்து தயாரிக்க, மீரா நாயர் இயக்குவார் என்று தெரிகிறது. சாந்தாராம் கேரக்டருக்கு ஜானி டெப் சரியான தேர்வா என்று தெரியவில்லை. ரஸ்ஸல் க்ரோவ் அல்லது எட் நார்ட்டன் இன்னும் நல்ல தேர்வாக இருந்திருக்கலாம். அமிதாப் காதர்பாயாக நடிக்கலாம் என்று செய்திகள் வந்திருக்கின்றன. இந்தக்கதையை பல விதமாக அணுகிப் படமெடுக்கலாம். ஹாலிவுட் பிரம்மாண்டத்தில் எதிர்மறை கதாநாயகன் பாணி அடிதடி படமாக எடுப்பது மிகவும் எளிது, அந்தப்பொறியினுள் ஜானி டெப்போ மீரா நாயரோ சிக்காமல் இருக்க வேண்டும். அதே சமயம் அவலங்களை மட்டுமே இந்திய அடையாளமாக மேற்கிற்குக் கடை விரித்து போலி அறிவுஜீவித்தனமாய்ப் படம் எடுக்க புத்திசாலித்தனம் என்ற ஒன்று அவசியம் இல்லை, வறண்ட தத்துவவாதம் போதும். ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் இந்த நாவலின் ஜீவ நாடிக்கு எதிரானதாகத்தான் இருக்கும். இவையிரண்டும் இன்றி ஒரு தன் வன்முறை வாழ்வின் நடுவிலும் கிரிகொரி ராபர்ட்ஸால் இந்தியாவில் நடத்த முடிந்திருக்கிற ஆன்மீக சுய தேடல் குறித்து திரைப்படத்தில் சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் காட்ட முடிந்ததென்றால், அது ஒரு சிறந்த திரைப்படமாக, திரையில் தோன்றி மனதில் நிலைக்கும் அனுபவமாக அமையும்.


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி