பித்தன்
திரு. விஸ்வாமித்ராவுக்கு,
தங்கள் கடிதம் கண்டேன். ‘சென்ற இதழில் திரு.பித்தன் ஜெயமோகனுக்கு எழுப்பியுள்ள ஒரு வினாவில் ஜெயமோகனுக்கு ஈவேராவைப் பிடிக்காதக் காரணம் என்ன என வினவுகிறார். ‘ என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே நீங்கள் என் கடிதக் கட்டுரைகளை ஒழுங்காக படிக்கவில்லை என்று தெளிவாகிறது. நான் அப்படி ஒரு வினாவையும் ஜெயமோகனிடம் எழுப்பியதாக நினைவில்லை. அறைகுறையாகப் படித்துவிட்டு என்னுடன் சண்டைக்கு வரும் கும்பலோடு நீங்களும் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. ‘கருத்துக்களை கருத்துக்களோடு மோதவிடுங்கள். இலக்கியத்தின் வேலையை இலக்கியவாதிகள் கையிலெடுத்துக்கொள்ள வேண்டாம் ‘ என்ற கருத்தை வழியுறுத்த சொன்ன உதாரணமே அது. அதை கூட புரிந்து கொள்ளாமல் நான் எதோ ஜெயமோகனுக்கு வினா எழுப்புவதாகக் கூறுகிறீர்கள். பரவாயில்லை. இப்போது பிரச்சனைக்கு வருவோம்.
முதலில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒப்பீடு சரியில்லை. சமூக சீர்திருத்தவாதியை அரசியல் வாதியோடு ஒப்பிடுவது மடத்தனம். அரசியல் ஒரு சாக்கடை. இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மானம், சூடு , சுரணை ஏதுமில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும், சர்க்கஸ் காரர்களே வியக்கும்படி ‘அந்தர் பல்டி ‘ அடிப்பதும் வெகு சாதாரணம்.
எனவே தேநீர் என்ன, முஷாரப் வீட்டிற்கு போய் அத்வானி விருந்தே சாப்பிட்டு விட்டு வந்தாலும் அதில் அச்சரியப்பட ஏதுமில்லை. மேலும் அப்படி சொல்லிவிட்டு தைரியமாகப் போய் முஷாரப் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்துவிட்டால், அவர் சொன்னது வெறும் கருத்து மோதல் என்று தானே கருதப்படவேண்டும்! உங்கள் வாதத்திலேயே அதற்கு பதிலும் இருக்கிறதே. இதை புரிந்து கொள்ள பித்தம் தலைக்கேறவேண்டியதில்லை! (தலைக்கேறினால் தான் புரியாது, இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருப்பது போல!).
இரண்டாவது, பெரியாரின் கருத்துக்களை நான் கண்மூடி ஆதரிப்பதாக நீங்களாகக் கருதிக்கொள்வது. என் கடிதங்களை நீங்கள் ஒழுங்கான கண்ணோட்டத்தில் படிக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது. என்னுடைய திரு. அரவிந்தன் ந்ீலகண்டனுக்கான அந்த அசல் கடிதத்தின் பகுதிகளை அப்படியே அடைப்புக்குறிக்குள் ‘[ ] ‘ கீழே தருகிறேன். மேம்போக்காக நுனிப்புல் மேயாமல் நோக்கத்தைப் புரிந்துகொள்ள படிக்கவும்.
‘[ எல்லோரையும் கோவிலுக்குள் விடு, எல்லோரையும் சமமாக நடத்து என்று சொல்லிய பெரியார் சமூக சீர்திருத்தவாதி இல்லையாம்! இன வாதமாம். ‘இந்த தெருவுக்குள்ளே வரப்படாது, என்னை தொடப்படாது, தொட்டா என் தீட்டு உனக்கு ஒட்டிக்கும்; கீழ் சாதி, மேல் சாதி ‘ என்பது போன்ற அடிமுட்டாள்தனமான கருத்துக்களை சொல்பவர்கள்தான் சீர்திருத்தவாதிகள் போலிருக்கிறது!! பெரியார் சமூக சீர்திருத்தவாதியில்லை எனில் யாருமே சீர்திருத்தவாதியில்லை.
அவர் கூறிய கருத்துக்களை பகுத்தறிவற்றது என்று சொல்லும் தகுதி, சங்கராச்சாரிகளின் கால்களிலேயே அடிமை பட்டுக்கிடக்கும் எவருக்கும் இல்லை.
‘இந்த பகுத்தறிவுக் கருத்துக்களை சமுதாய சீர்திருத்தம் என்று சொல்வதைப் போல வயிற்றைக் குமட்டும் விஷயம் வேறெதுவும் இருக்கமுடியாது ‘ என்று நீங்கள் சொல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இத்தனைக் காலமாய் அதிகம் படிப்பறிவில்லாத, வெகுளியான மக்களை ஏமாற்றி, நீ கீழ் சாதி என்ற கீழ்த்தரமான கருத்தைப் பரப்பி, அவர்கள் உழுது கொடுக்கும் உணவையே வெட்கமில்லாமல் உண்டு, தொந்தி வளர்த்து திரியும் கூட்டத்திற்கு, ‘அனைவரும் சமம், நீயும் வந்து வேலை பார் ‘ என்று சொன்னால் குமட்டத்தான் செய்யும். இதில் ஒன்றும் அதிசயமில்லை. குமட்டட்டும். நல்லது தான் இத்தனைக் காலம் வயிற்றுக்குள் வளர்த்து வந்த விஷங்கள் வெளியே வர உதவும்! அப்படியாவது மேலான மனிதர்கள் ஆக முயற்சிக்கட்டும். என்றாலும் அவர்கள் மண்டைக்குள்ளிருக்கும் விஷங்களும் இரங்கி மக்களை சமமாக ந்டத்தும் நாள்தான் பொன்னான நாள். அப்போதுதான் அவர்களும் முழுமையான மனிதர்களாக உயர்வு பெறமுடியும்.
இனவாதத்திற்காக மக்களைக் கொன்று குவித்த தீவிரவாத ஹிட்லரோடு, இனவாதத்தை அழிக்கக் குரல் கொடுத்து, மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய சமூக சீர்திருத்தவாதி பெரியாரை ஒப்பிடுவதே மடத்தனம். அப்படி செய்யும்போதே
உங்கள் நியாயமற்ற இலக்கு தெரிந்துவிடுகிறது. சுதந்திரம் வாங்கி தந்த காந்தியையே ‘அவர் ஒன்றும் செய்யவில்லை, நாட்டின் தந்தையில்லை ‘ என்பது போன்ற பொய்யான தகவலை வரலாறு ஆக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் கும்பல்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ?
பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமலிருப்பது புரிகிறது. ஆனால் காரணம் விளங்கவில்லை!
இனவாதக் கருத்துக்கள் என்று நீங்கள் ஒதுக்குவதற்கான முகாந்திரம் உள்ளது. ஆனால் அது மேம்போக்காக பார்ப்பதினால் வருவது. பெரியாரின் வழிமுறைகள் அடாவடியாகத் தெரியும். ஆனால் அதன் அடிப்படையில் நியாயம் உள்ளது. ‘பாம்பையும் பார்ப்பனையும் பார்த்தால் பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான். அனால் இவை வெறும் வார்த்தைகள் தான். அவர் ஒன்றும் அவ்வாறு செய்துவிடவில்லை. ராஜாஜியுடன் அவர் நட்போடுதான் இருந்திருக்கிறார். ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருக்கிறார்கள். அப்போது பெரியார் ஒன்றும் தடி கொண்டு இராஜாஜியை அடித்துவிடவில்லை! பெரியாரின் மோதல்கள் ராஜாஜியின் ஜாதிவெறிக் கருத்துக்களோடுதான்.
பெரியாரின் மோதல்கள் இந்துமததிலுள்ள மூட நம்பிக்கைகளோடு தான்; ஜாதியை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களோடுதான். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் நுனிப்புல் மேய்பவர்கள்தான் வெறும் வார்த்தைகளைப் பார்த்துவிட்டு, இனவாதப் பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். கீழ்சாதிக்காரர்கள் எனப்படுவோரையும் சமமாக நடத்தச்
சொல்லும் மனித நேயம் பெரியாரிடம் இருந்திருக்கிறது. அதை அவர் செய்யவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
வெறும் மனித நேயம்தான். அவ்வளவு மனித நேயம் கொண்ட ஒரு மனிதர் ஒரு இனத்தவரை பார்த்ததும் அடிக்க சொல்கிறார் என்றால் ஏன் ? என்று சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். மனித நேயம் கொண்ட மனிதர்களாகவே அவர்கள் நடந்து கொள்ளவில்லை. நிலமை அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது. ஒரு பெரியார் வந்து போன பின்னும் நிலமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் மனு கருத்துக்களை உண்மை என்று, சாதி வெறி ஊட்டும் சங்கராச்சாரிகளும், அவர் காலில் விழும் கூட்டமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. மனிதர்களை மலந்திண்ண வைக்கும் கூட்டத்தைக் கண்டிக்க ஆளில்லை. நிலமை இப்படி இருக்கும் வரை பெரியாரின் கருத்துக்களுக்கு
வலு இருந்துகொண்டுதான் இருக்கும். பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஒழிக்க விரும்பினால் முதலில் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மனிதர்கள் யாவரும் சமம் என்று உணரவேண்டும். உணர்ந்து அதன்படி நடந்தால்
பெரியாரின் கருத்துக்களுக்கு பின் வேலையேயிருக்காது. ] ‘
ஒழுங்காக படித்திருந்தால் முதலில் நீங்கள் கவனித்திருக்க வேண்டியது, ‘ ‘பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான் ‘ என்று மிகத் தெளிவாக நான் எழுதியிருப்பதை. இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இதைப் புரிந்து கொண்டிருந்தாலே என்னைப் பற்றிய உங்கள் சாடலில் அர்த்தமில்லை என்பது தெளிவாகியிருக்கும். தலைவர்களின் வார்த்தைகளால் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று உணர்ந்திருப்பதால் தான் அவர் சொன்னது தவறு என்று தெளிவாக்கியிருக்கிறேன். அதே காரணாங்களுக்காகத் தான் இப்போது அத்வானிகளும் ஜோஷிகளும், கோவில் கட்டுகிறோம், ரத யாத்திரை செல்கிறோம் என்று கூறும்போது அது எந்தவித மதக் கலவரங்களுக்கு வித்திடுமோ என்றும் கவலை கொள்கிறேன். தவறு என்று சொன்னதோடு நான் நின்றுவிடவில்லை.
‘எதையும் எதற்கு ? ஏன் ? எப்படி ? என்று கேள். அப்படிக் கேட்டதினால் தான் இந்த சிலை வடிக்கும் சிற்பி சிந்தனை சிற்பியானான் ‘ என்ற கிரேக்க மேதையின் கூற்றுப் படி, அதற்கான அடிப்படை என்ன என்றும் ஆராய்ந்திருக்கிறேன்.
தன்னைவிட கீழ் சாதிக்காரர்களாக கருதப்படும் பிரிவினருக்காக குரல் கொடுக்கும் ஒரு மனித நேயம் பெரியாரிடம் இருந்திருக்கிறது. (இதையாவது நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.) அப்படிப் பட்டவர் ஒரு இனத்தவரை
பார்த்தவுடன் அடிக்கச் சொல்கிறார் எனில் அதற்கான அடிப்படைக் காரணம், அவரை வன்முறையை தூண்டச் சொல்லும் காரணம், எங்கிருந்து வந்தது என்று யோசிக்க சொல்கிறேன். எந்த வன்முறையிலும் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த இனத்தவரை அடிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. அது பிரச்சனைக்கு தீர்வாகிவிடாது. ஆனால் ஒரு பிரச்சனைக்கு தீர்வு அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டு அதைக் களைவதாகத்தான் இருக்கமுடியும். எனவே தான், பெரியாரின் கருத்துக்களோடு நின்றுவிடாமல் அதன் காரணங்களையும் ஆராயச் சொல்கிறேன். அப்படி சொல்வதினால் பெரியாரின் கருத்துக்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்புமல்ல! காரணங்களைக் கண்டு களைவது தான் என் நோக்கம். என் எழுத்தின் நோக்கம் தெரியாமல் ஒருவர் என்னை ‘இலவச சூலம் வழங்கிகளோடு ‘ சேர்த்தார். இப்போது நீங்கள் என்னை தி.க.வில் சேர்த்து விட்டிருகிறீர்கள். இதிலெல்லாம் எனக்கு ஒரு வருத்தமுமில்லை. நாளை, ரஜனீஷ் அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை நான் கூறுவேன், அதற்கு, ‘நிர்வாணமடைய ‘ ரஜனீஷ் ஆஸ்ரமத்தில் நிர்வாணமாகத் திரிந்தவர் தான் பித்தன் என்று யாராவது என்னை ஆஸ்ரமத்தில் சேர்த்துவிடக் கூடும்! இதற்கெல்லம் கவலைப்படுவது சிறுபிள்ளைத்தனம். என் வாசிப்பு எதையும் ஒதுக்குவதில்லை. எல்லாவற்றையும் ஆவலோடு படிக்கிறேன். அதில் எனக்கு பிடித்த, எனக்கு நியாயம் என தெரிந்ததை, என் வாசிப்பிலிருந்து அறிந்ததையும், நானாக சிந்தித்ததையும் குறிப்பிடுகிறேன். அவ்வளவுதான்.
காரணத்தை ஆராய்வதோடும் கூட நான் நின்றுவிடவில்லை. அதற்கு தீர்வாக நான் கருதுவதையும் கூட சொல்லியிருக்கிறேன். அதாவது, ‘பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஒழிக்க விரும்பினால் முதலில் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் யாவரும் சமம் என்று உணரவேண்டும். உணர்ந்து அதன்படி நடந்தால்
பெரியாரின் கருத்துக்களுக்கு பின் வேலையேயிருக்காது. ‘ என்று. மனிதர்கள் அனைவரும் சமம் என்று உணருங்கள். உணர்ந்து அதன்படி நடந்துகொள்ளுங்கள் என்பது கூட நியாயமான கோரிக்கையாக உங்களுக்குத் தெரியவில்லையா ?
இதில் நான் யாரையோ ஏமாற்றப் பார்ப்பதாகச் சொல்கிறீர்களே. யாரை யார் ஏமாற்றப் பார்ப்பதாகத் தெரிகிறது ? காரண காரியங்களைப் பார்க்காமல் பெரியார் சொன்னது அக்கிரமம், அதற்கு ஆதரவு தருபவர்கள் தீவிரவாதிகள் என்று கண்மூடித்தனமாக புலம்பிக் கொண்டிருந்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி நீங்கள் சொல்வதினாலேயே பெரியாரோ, அல்லது அவர் கருத்துக்களுக்கு, அதன் அடிப்படைகளுக்கு ஆதரவு தருபவர்களோ – சந்தேகமில்லாமல் -இனவாதியாகவோ, தீவிரவாதிகளாகவோ ஆகிவிடப் போவதில்லை!!
தி.க. குண்டர்களின் பூணுல் அறுக்கும் அராஜகத்தை நேரில் கண்டு வெதும்பிதான் எழுவதாக சொல்கிறீகளே, ஏன் உங்களுக்கு, மலந்திண்ண வைப்பதும், தெருவுக்குள் – கோவிலுக்குள் விட மறுப்பதும், ‘தொடாதே தீட்டு ஒட்டிக்கும் ‘ என்று சக மனிதரை தள்ளிவைப்பதுமான மிகக் கேவலத்திற்கும் கேவலமான செய்கைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா ? இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாக மட்டுமல்லாமல், மிக முற்றிய ‘செலக்டிவ் அம்னீஷியா ‘ வாகவும் இருக்கிறதே. ‘என் பார்வை மேற்போக்கான வெற்றுப் பார்வை இல்லை ‘ என்று எழுதியிருக்கிறீகளே, இதைத்தானோ ?! ஏதோ நடு நிலையில் நின்று, தி.கவினரின் அராஜகத்தை (மட்டும்) கண்டு வெதும்பி, வெற்றுப் பார்வையில்லாமல் (!) எழுதுவதுபோல எழுதியிருக்கிறீர்கள். ‘பெரியார் ‘பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொன்னது தவறானது தான். அனால் அதைவிடத் தவறானது, அதன் காரணம், சக மனிதர்களை கீழ்சாதி என்று பிரிப்பது ‘ என்று நீங்கள் (என்னைப் போல)எழுதியிருந்தால், நானும் உங்களருகிலிருந்து பாராட்டியிருப்பேன். அதைவிட்டுவிட்டு, பெரியாரையும், தி.கவினரையும் மட்டும் தவறு செய்தவர்கள் போலக் காட்டி, ஒரு பக்க பார்வை பார்த்து திட்டிவிட்டு நடுநிலையில் இருப்பதுபோல எழுதுவது உங்கள் பாசாங்கை வெளிப்படுத்துவதோடு, உங்களுக்கும் நடு நிலைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பூணுல் அறுப்பதையும், சக மனிதனை மலந்திண்ண வைப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எது அதிக காட்டுமிராண்டித்தனம், எது அதிக அராஜகம் என்று தெளிவாகத் தெரியும். (இரண்டுமே தவறானது என்பதுதான் என் நிலைப்பாடு. என்றாலும், பூணுல் அறுப்பது மட்டும் அராஜகம் போல நீங்கள் சொல்வதனால் இதைக் கூறுகிறேன்.). நிஜமாகவே நடு நிலையில் நிற்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் இதன் நியாயம் விளங்கும். இதைவிட எளிதாக எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
சமீப காலமாக இப்படி ஒரு வாதம் வைக்கிறார்கள். ‘சாதியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கிறார்கள் ? திண்ணியத்தில் எத்தனை அந்தணர்கள் இருக்கிறார்கள் ? மற்ற சாதிக்காரர்களைக் கேட்காமல், அந்தணர்களை மட்டும் கேட்பது ஏன் ? ‘ என்பது. இது எப்படி இருக்கிறது எனில், ‘நீ ஏன் திருடினாய் ? ‘ என்று கேட்டால், ‘அடுத்த ஊர் காரன் திருடுகிறானே, அவனைக் கேட்காமல் என்னை ஏன் கேட்கிறீர்கள் ? ‘ என்று கேட்பது போல இருக்கிறது. ‘நாங்கள் திருந்திவிட்டோம். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென உணர்ந்துவிட்டோம் ‘ என்று கூறிவிட்டு எனவே, ‘இனி எங்களைக் கேட்கத் தேவையில்லை, சாதி வெறியோடு நடந்து கொள்ளும் மற்றவர்களைக் கேளுங்கள் ‘ என்று சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படி எப்போதும், தங்கள் தவறை ஒத்துக்கொண்டு யாரும் பேசிவிட மாட்டார்கள். என்றாலும் மற்றவர்களைத்தான் கேட்கவேண்டும், இவர்களைக் கேட்கக்கூடாது என்றால் எப்படி ?
எல்ல திருடர்களையும் தான் கேட்கவேண்டும். அவனை இன்னும் கேட்கவில்லை என்பதாலேயே உன்னைக் கேட்கக் கூடாதென்று சொல்வது வினோதமான வாதம். மேலும், சாதிக்கருத்துக்களுக்கு உறைவிடமான மனுக் கருத்துக்கள், அந்தணர்களிடமிருந்து வந்தது. அது தான் ஆணிவேர். ஆணிவேரைக் களையாமல், கிளைகளை மட்டும் வெட்டுவதினால் சாதி என்ற விஷமரத்தை அழிக்கமுடியாது. சாதிக் கொண்டு சக மனிதனை மோசமாக நடத்துபவர்கள் எந்த சாதிக் காரர்களாக இருந்தாலும் தவறுதான். (க)தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். அனைத்து மக்களையும் தட்டிக்கேட்க வேண்டும் என்று பொது ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
நம் நாட்டிலிருக்கும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும், மிகப் பெரிய காரணி, சாதி வெறிதான். பெரும்பான்மையான மக்களை கீழ்சாதி என்று ஒதுக்கி வைத்துவிட்டால் எப்படி நாடு முன்னேற முடியும் ? அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டுமென்பதற்காகவே, அவர்களின் ஆற்றலையும் குறைத்தே வைத்திருக்கிறார்கள். அவர்கள் கல்வி கற்பதையும், உலகைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்வதையும் தடுத்தே வந்திருக்கிறார்கள். இப்போது நாட்டுப் பற்று என்ற பெயரில் பூச்சாண்டிக் காட்டி மதத்தைப் பரப்புவதெல்லாம் ஏதோ சாதாரணமாக நடை பெறுவதாக நினைத்து விடாதீர்கள். பெரும்பான்மையான மக்களை நாட்டுப் பற்று என்று எண்ணிக்கொண்டு மத துவேசத்தில் தள்ளியதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. உண்மையான பிரச்சனைக்கு, ஜாதிப் பிரச்சனைக்கு, தீர்வு காண மக்கள் விழைந்து விட்டால் அதில் அதிகம் பாதிக்கப் படுவது, மேல்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாகத்தான் இருக்கும்.
எனவே அதிலிருந்து மக்களை திசை திருப்ப, அரசியல் ஆதாயங்களுக்காக, மதத்தைக் கையிலெடுத்து, மக்களுக்கு ‘மதம் ‘ பிடிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மொகலாய மன்னர்கள் கோவில்களை இடித்து ஆட்சி செய்து பலவருடங்களுக்கு பிறகும் மக்கள், மத வெறுப்பின்றி ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில், சுதந்திர போராட்டக் காலத்தில்தான், பாகிஸ்தான் பிரிவினையினாலும், அதை ஒட்டி ஏற்பட்ட கலவரங்களாலும் தான் மதவெறி முற்றி வந்திருக்கிறது. சுதந்திரத்திற்கும் பிறகும், அதை அப்படியே ஊதி ஊதி பெரிதாக அரசியல்வாதிகள் வைத்திருப்பதற்கு, உள் நோக்கம் இருக்கிறது. இவையெல்லாம் சாதாரண நிகழ்வுகளில்லை. முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்ததால்தான் காந்தியைக் கொன்றுவிட்டார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.அப்படி ஒரு மாயத்தோற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம், அவ்வளவுதான். அதைவிட தீண்டாமை ஒழிப்பு என்பதையே காந்தி தன் முதல் குறிக்கோளாகக் கொண்டதுதான் முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. அனைத்து வன்முறைகளுக்கும் எதிராகவும் குரல் கொடுத்தவர் காந்தி அடிகள். அவர் ஒரு இனத்தவருக்கு சாதகமாகப் போய்விட்டார் என்ற கருத்தைப் போல முட்டாள்தனமான கருத்து வேறெதுவுமிருக்கமுடியாது. ஒரே நாட்டிலிருக்கும் மக்கள் சண்டையிட்டுக்கொள்வதைத் தடுக்க தான் அவர் குரல் எழுப்பினார். அதில் அஹிம்சையைத் தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை.
ஆனால் தங்கள் நோக்கங்களுக்கு தடையாக இருந்துவிடப் போகிறாரோ என்று பயந்து தான் அவரைக் சாதி/மத வெறியர்கள் கொன்றுவிட்டார்கள்.
உங்கள் சிந்தனைக்காக மேலும் சில விஷயங்கள் கூறுகிறேன். இதுவரை இந்தியாவில் பிரதமாராக இருந்து ஆட்சி செய்தவர்கள் அனைவரும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் (இடையில் சில நாட்கள் இருந்த பிரதமர்களை கணக்கிலெடுக்காமல்) மேல் சாதிக்காரர்களாகவே இருப்பதன் ரகசியமென்ன ? எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா ? (ஒரு அதிகாரமுமில்லாத பொம்மை பதவியான ஜனாதிபதி பதவி மட்டும் யாருக்கும் கிடைக்கலாம்). இது ஏதோ எதேச்சையாக நடந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா ? (coincidence will not happen so often, my friend!). தமிழக பி.ஜே.பி-யில் கிருபாநிதிக்கு நேர்ந்த கதி எதோ தவறுதலாக நடந்துவிட்டதாகவா நினைக்கிறீர்கள் ? இதற்கெல்லாம் அடிப்படை இருக்கிறது. பெரியாரின் கருத்துக்களை மேம்போக்காக படித்துவிட்டு, இனவாதம், ஐரோப்பிய வாதம் என்று உளறுபவர்களோடு சேர்வதற்கு முன்னால், ‘வெற்றுப் பார்வை பார்க்கவில்லை ‘ என்று வெட்டிப் பேச்சுப் பேசாமல், நிஜமாகவே பிரச்சனையை பல கோணங்களிலுமிருந்து பார்க்கவேண்டும். நீங்கள் நினைப்பதுபோல இனவாதக் கருத்துக்கள் என்று கரடியாக கத்தி எளிதில் விலக்கிவிடக்கூடிய பிரச்சனையில்லை இது. பிரச்சனையின் ஆழம் மிக அதிகம். இன்னும் கூட விரிவாக பார்க்கவேண்டும். வேறொரு சமயம் இதற்கு வரலாம். இப்பொதைக்கு ஒரு கோடிட்டு மட்டும் காட்டி உங்கள் சிந்தனைக்கு சிறு வேலை வைத்திருக்கிறேன். (அதாவது நீங்கள் நிஜமாகவே சிந்திக்க விரும்பினால்!). ஆழப் புறையோடியிருக்கும், மோசமான, இந்தியாவின் வளர்ச்சியையே பாதிக்கும் பிரச்சனை இது. பிரச்சனையின் அடி ஆழம் வரை சென்று, காரண காரியங்களை அலசி அவற்றைக் களைய வேண்டும். இந்திய வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருக்கும் எல்லோரும் இதற்கு பாடுபடவேண்டியது மிக அவசியம்.
-பித்தன்.
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு