சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

தேனம்மை லஷ்மணன்


**************

தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்… இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையு்ம் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.

புதுக்கவிதை ., நவீன கவிதை எழுதி வரும் நாணற்காடனின் ஹைக்கூக்களும் அருமையாய் இருக்கின்றன. இந்தி அசிரியரான இவர் இந்தியிலிருந்து தமிழுக்கு கணிசமான மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக விளங்கும் இவர் எட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.. ”கூப்பிடு தொலைவில்.” , “ பிரியும் நேரம்.,” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டு உள்ளார்.. சாக்பீஸ் சாம்பல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி..

பள்ளிக் கூடம் என்றால் நமக்கு கரும்பலகையும் கலர் கரலராய் சாக்பீஸ்களும் ஞாபகம் வரும்.. டஸ்டரால் அழிக்கும் போது வி்ழும் துகள்கள்.. வெறும் துகள்களாக நமக்கு தென்படும் போது இவர் கண்ணில் மட்டும் சாம்பலாய் .. ஒரு பொருள் எரிந்தால்தான் சாம்பல்.. சாக்பீஸ் கரும்பலகையில் மக்களுக்கு கல்வி புகட்ட தன்னைக் கரைத்து சாம்பலாய் விழுவது அழகுதான்..

ஆனந்த விகடன்., கல்கி., புதிய ,”ழ”., கருக்கல்., அகம்புறம்., கவிதைச்சிறகு., மதுமலர்., என இவர் கவிதைகள் வெளிவந்த புத்தகங்கள் அனேகம்.

தலைப்புகளற்ற கவிதைகள்.. இன்றைய இரவு கூட தனக்கான கடைசி இலையாய் இருக்கலாம் என ஆரம்பிக்கிறது கவிதைத் தொகுதி..

அலைபேசியின் குறுஞ்செய்தி ., காற்றில் நீந்திச் செல்வதும்., மழை வேலிக்குள் மலரெனப் பூத்திருக்கும் காதலியும் பூச்சியொன்றினை குறி வைக்கும் பல்லி பார்த்து., பசிக்கும் மரணத்துக்கும் நடுவில் நான் எனவும்., இரவெனும் மயானற் காட்டில் பிணமாய் நிலவு எரிவதும்.. பாம்புகள் அண்டுவது கருதி பிடுங்கிப் போடப்பட்ட செடிகளில் வாழும் பூக்கள் தேடி பட்டாம் பூச்சிகள் ஏமாறக் கூடும் எ்னவும் ஒன்றையொன்று சுழற்சியிட்டு அழகாயும் அவலமாயும் இருக்கிறது..

கழுகுகள்., பாம்பு., தவளை., பூச்சிகள்., . என எக்கோ சிஸ்டமாய் ஒரு கவிதை அருமையாய் இருக்கு..

தலைப்பின் கவிதைதான் மிக அருமை..

வகுப்பறை தோறும்
கரும்பலகையின் கீழே
சாக்பீஸ் சாம்பலாய்
உதிர்ந்து கிடக்கிறது..
பாடங்களால் எரிக்கப்பட்ட
குழந்தைகளின் வாழ்க்கை..

ஆம் நாம் வைத்துள்ள கல்வித் திட்டங்களை எல்லாம் தோலுரிக்கிறது இக்கவிதை.. மனனம் செய்து கக்குவதுதான் இன்றைய முறையாய் இருக்கிறது.. கல்வி என்பது எளிதாய்., ஆசையோடு கற்பதாய் இருக்க வேண்டும்.. மதிப்பெண்கள்தான் கணக்கிடும் அளவுகோல்களாய் இல்லாமல்..

மழை ., வெய்யில்., காற்று., மரம்., குடிசை., கோயில்., தனிமை., காதல்., இரவு., மரணம்., சிகரெட்., சொற்கள்., குருதி., ஆணாதிக்கம்., மீன்., தூண்டில்., என பலவும் கலந்து கிடக்கிறது கவிதைகளில்.. அதிகம் சொல்லமுடியாமல் ஊவா முள்ளாய் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல் பற்றியதான கவிதைகள் அநேகம்., பிரசவ வலி போல்..வெளியேறத் தவித்து..

வேலையற்றவனின் துயரம்., குழந்தையற்றவள்., முதிர்கன்னி., முள்வேலி மக்களின் வாழ்வு., வேண்டுதல்கள்., பேச்சில் ஆங்கிலக் கலப்பின் அங்கதம்., குழந்தையின் விளையாட்டு., இலவச தொலைக்காட்சி பார்த்து மகிழும் விவசாயி., குழந்தை வளரும் வீடு., கொத்தாய் பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் விற்பவன்., பார்வையற்றவர்கள்.,, இறந்தபின்னும் செத்துப் போகாத நிழல்., காலிக் குடங்களோடு லாரிக்காக காத்திருப்பு, சொல்லப்படாத உண்மையின் நீர்த்தல்., என பல்வேறு தளங்களில் இயங்குகிறது கவிதை.

இந்த ஹைக்கூ அருமை..

கிளைகள்தோறும் அமர்ந்தெழும் பறவை
இலைகளில் தங்கிய மழைத்துளிகளை
பொழியச் செய்கிறது..

நீராய் நிரம்பியிருக்கும்
காற்றில்..

தத்தளித்துக் கொண்டிருக்கும்
கற்பிதங்களோடு
நீந்திக் கொண்டிருக்கும் நாம் .. என்ற கவிதையிலும் நாம் எவ்வாறு கற்பிதங்களால் ஆளப்படுகிறோம் என கூறுவது சிறப்பு. பொறி போடவோ ., தூண்டில் போடவோ யாராவது வரும்போது ஒன்று அதிலேயே கிடக்கலாம் அல்லது மீளலாம் ,.. என முடித்திருக்கிறார்..

எண்ணங்களைத் தூண்டிவிட்டு சிந்திக்கச் செய்யுமளவு சிறப்பாய் இருக்கிறது கவிதைத் தொகுதி..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்