சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

நா.முத்து நிலவன்


அன்பினிய திண்ணை ஆசிரியர்க்கு, வணக்கம்.

அண்மையில் – கடந்த 20,21,22 ஜனவரி -2004தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில், நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on ‘LITERARY CRITICISM ‘ at MSU, Thirunelveli ) நடந்தது.

ம.சு.பல்கலையின் ங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழுத் தலைவரும் ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.

பல்கலையின் துணைவேந்தர் திரு சொக்கலிங்கம் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவரும், அறியப்பட்ட தமிழறிஞருமான- ‘அறியப்படாத தமிழகம் ‘ முதலான நூல்களின் ஆசிரியர்- முனைவர் தொ.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார்.

அந்த மூன்று நாள்களிலும் தமிழறிஞர்கள்/ங்கில இலக்கிய விமர்சகர்கள்/ தமிழ் இலக்கிய முன்னோடிகள், பெரும் பேராசிரியர்கள் – (Senior Doctorates), நெல்லை, மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுவை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் ஆகிய 7 பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த சுமார் 36 மூத்த பேராசிரியர்கள் ஆய்வுரைகளை (Research Papers) முன்வைத்தனர். (இதில் நான் மட்டும்தான் பள்ளிக்கூட வாத்தியாருங்கோ!)

அந்த மூன்று நாள்களிலும் நெல்லை ப.க.வைச்சேர்ந்த -பல்வேறு கல்லூரிகளின் ஆங்கில மற்றும் தமிழ்த்துறை சார்ந்த- 60 பேராசிரியர்களுடன் அங்கேயே முதுகலை படிக்கும் சுமார் 60 மாணவர்களும் பார்வையாளர்களாக – விவாதங்களிலும் – கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள்,

ஒவ்வொரு வேளையும் இரண்டு அமர்வுகள்,

ஒவ்வொரு அமர்விலும் ஒரு தலைவர், ஒரு பொருண்மை உரை(Key Note),

+ இரண்டு அல்லது மூன்று ஆய்வுரை, ஒரு கருத்துரை என, 5 அல்லது 6 பேர்.

எனும்படியாக,

1.கட்டமைப்பியம் , கட்டுடைப்பியம்,

2.புதுமையியம் , பின்னைப் புதுமையியம்,

3.மார்க்ஸியம் , பெண்ணியம் ,

4.காலனியம் , பின்னைக் காலனியம்,

5.நாடகம் – நாட்டார் இலக்கியம்,

6.தலித்தியம் , மறுகட்டமைப்பியம்

ஆகிய 6 அமர்வுகள் நடந்தன.

ஆக, மூன்று நாள்களிலும் தொடக்கவிழா, நிறைவு நிகழ்வு உட்பட சுமார் 40 ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

இவற்றில்,சாகித்ய அகாதெமியின் தென்மண்டலச்செயலர் திரு கிருஷ்ணமூர்த்தி (பெங்களூர்), அலுவலகப் பொறுப்பாளர் திரு ஜிதேந்திர நாத் (சென்னை), திட்ட அலுவலர் திரு அ.சு.இளங்கோவன்(சென்னை), ய்வாளரும் பத்திரிகையாளருமான கோவை ஞானி, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ‘காலச்சுவடு ‘ கண்ணன், நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான், நாவலாசிரியரும் ‘வானம்பாடி ‘ மூலவர்களில் ஒருவருமான சி.ர்.ரவீந்திரன் ஆகியோருடன்,

முனைவர்கள் –

சிற்பி (பொள்ளாச்சி), பாலா(நெல்லை), வீ.அரசு(சென்னை), அ.மங்கை(சென்னை), பத்மாவதி(சென்னை), கரு.அழ.குணசேகரன்(புதுவை), முத்துமோகன்(மதுரை) இரா.மோகன்(மதுரை), நிர்மலா(மதுரை), அ.இராமசாமி(மதுரை), இரா.முத்தையா(மதுரை), பூர்ணச்சந்திரன்(திருச்சி), நடராசன்(புதுவை), சம்பத்(புதுவை), ராஜா(புதுவை), ஆனந்தராஜன்(காந்திகிராமம்), .தனஞ்செயன்(பாளை), முதலான பேராசிரியர்களுடன், நா.முத்து நிலவன் (புதுக்கோட்டை) போன்றோர் பங்கேற்ற கருத்தரங்குகள்!

முனைவர் கா.செல்லப்பன் – நிறைவுரை.

தி.க.சி. நெல்லையே ஆயினும் தற்போது சென்னையிலிருப்பதால் வரஇயலவில்லை. தி.சு.நடராசன், திருமலை (இருவருமே மதுரை) வரவில்லை.

நான் இரண்டாவது நாள் காலை, ‘மார்க்சியம்-பெண்ணியம் ‘ எனும் முதல் அமர்வில் ‘முற்போக்குக் கவிதைகள் ‘ (progressive school of poems) எனும் தலைப்பில் பேசினேன். Many of the papers were submitted in English! கா.செல்லப்பன், பாலா, தோப்பில், ஞானி, காலச்சுவடு கண்ணன்,கே.ஏ.குணசேகரன், னந்தராஜ், மற்றும் நான் போன்ற வெகுசிலரே தமிழில் பேசினோம். அதிலும் பாலா ஆங்கிலத்தில் கட்டுரையை வைத்து, தமிழில் பேசியது நன்றாக இருந்தது. ( ‘பின்னைக் காலனியம் ‘ – ‘Post Colonialism ‘ – எனும் அமர்வுக்குத் தலைமையேற்றிருந்த இவரது கவித்துவம் மிகுந்த பேச்சுக்கு, ‘சாம்சங் விளம்பரமும் சமஸ்கிருதச் செய்தி ஒளிபரப்பும் ‘ என்று நான் குறிப்பெடுத்துக்கொண்டேன்)

நான் முழுமையாக கட்டுரையைத் தயாரித்துக்கொண்டு போகாததற்கு ஒரு காரணம், குறிப்புகளை வைத்துக்கொண்டு பேச விரும்பியது. ‘அந்த ‘அளவுக்கு ஆங்கிலம் தெரியாதது மற்றொரு காரணம். இனிமேல்தான் முழுமைப்படுத்தி, ஆங்கில வல்லாரிடம் தந்து மொழிபெயர்த்து, அடுத்த மாதத்திற்குள் அகாதெமி வெளியீட்டுக்கு அனுப்பவேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளை தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களாக அகாதெமியே விரைவில் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்தார்கள். இந்த நூல் வந்தால், தமிழில் ‘இஸங்கள் ‘பற்றிய நல்லதொரு கையேடாக அது நிற்கும் என்பது உறுதி.

இது நிற்க.

நெல்லை – பத்தமடைக் காரரும் நல்ல தமிழ்ச்சிறுகதையாளரும் எனது நெருங்கிய நண்பரும், கோணங்கியின் அண்ணனுமான ‘வெயிலோடு போய் ‘ தமிழ்ச்செல்வனை அன்று மாலை நிலவோடுபோய்ச் சந்தித்தோம்! (தற்போது ‘தீம்தரிகிட ‘ இதழில் தனது ‘அறிவொளி ‘ அனுபவங்களை அழகாக எழுதிவரும் அவர், முதுகுத்தண்டில் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்தார். அவரைப் பார்க்கப் போகிறேன் என்றதும் பாலாவும், சிற்பியும், சி.ர்.ரவீந்திரனும் தாமும் வருவதாக என்னுடன் கிளம்பிவிட்டார்கள்! அவர் வீட்டில் ஓர் அழகான நூலகம், அதில் சில ஆயிரம் அரிதான புத்தகங்கள்!

இப்போதுதான் அஞ்சல் துறையில் இருந்து VRS கொடுத்து வந்திருக்கும் அவர், அந்தக் காசில் PC, Printer, Scanner எல்லாம் வாங்கி, ‘எதற்கோ ‘ தயாராகிவிட்டது போல் தோன்றியது!

அவருடனே -அவர் மனைவி வெள்ளத்தாய் அவர்களின் அன்பான விருந்தோம்பலில், இரவுச்சிற்றுண்டியை முடித்து நாங்கள் கிளம்பும்போது, அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இருட்டு எனக்குப் பிடிக்கும் ‘ எனும் குழந்தைகள் நூல் ஒன்றைத் தந்தார்.

நமது ‘தமிழ் மடற்குழுக்களை ‘ப் பற்றிச்சொல்லி, விரைவில் இணைய இணைப்புப் பெற்று, ‘முரசு அஞ்சல் ‘ கற்றுக்கொண்டு உறுப்பினராகக் கேட்டுக்கொண்டேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாலாவும், சிற்பியும் தாமும் உறுப்பினராவது குறித்து ஆர்வமுடன் கேட்டனர்.

நமது இணைய மடற்குழுக்களின் மட்டுறுத்துநர் – நண்பர்கள் அவர்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் எழுதி, உறுப்பினராக அழைத்து, பிறகு தமிழில் முரசு அஞ்சலில் எழுதுவது குறித்தும் விளக்கிட வேண்டுகிறேன். வானம்பாடிக் கவிஞர்களும், புதுக்கவிதை முன்னோடிகளுமான இவ்விருவரும் நமது இணைய நண்பர்களாவது, நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதருவதுதானே ?

அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் இதோ:

bala_chandran_r@yahoo.com,

sirpibala@rediffmail.com

அதோடு, கவிஞர் சிற்பி அவர்கள், நமது இணைய நண்பரான திரு நா.கணேசன் அவர்களின் நெருங்கிய உறவினர் என்று தெரிவித்ததோடு, அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் வழியாக பாரீஸ் சென்ற நினைவுகளை எல்லாம் பகிர்ந்துகொண்டதும் சுவையாக இருந்தது.

இன்னும் கருத்தரங்கில் கிடைத்த பல நல்ல குறிப்புகளை, சில நல்ல நண்பர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை! உண்மையில் அதுதான் என் மகிழ்ச்சிக்குரியதே!

இயன்றால் அதுபற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

அன்புடன்,

நா.முத்து நிலவன்.

muthunilavan@yahoo.com

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்