சாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

சுரேஷ் கண்ணன்


(காலச்சுவடு பதிப்பகம் – 232 பக்கங்கள் – ரூ.125/-)

Set Top Box தொல்லைகள் இல்லாத காலங்களில் டிஸ்கவரி சானல் மற்றும் அனிமல் பிளானட் சானல்களில் விலங்குகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றின ஆவணப்படங்களை விரும்பிப்பார்ப்பேன். குறிப்பாக சிங்கம், புலி, யானை, பாம்பு போன்றைவகள் எப்போதும் என்னை வசீகரிக்கக்கூடியது. பிபிசி தயாரித்த ஆவணப்படம் என்று ஞாபகம். ஒரு பெண் புலியின் சில வருட வாழ்க்கையை ஆண் புலியை விட அதிக பிரேமையுடன் தொடர்ந்து நேர்த்தியாக படமாக்கியிருந்தார் அந்த இயக்குநர். ராணி என்கிற அந்த பெண்புலி தன் இணையுடன் கூடி ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறது. தனது உணவிற்காகவும் ஆண் புலியின் அராஜகத்திலும் பாடாய்ப்படுகிறது. அது படுகிற பாட்டைப் பார்க்கும் போது இந்த சதிகார மான் ஓடித் தொலையாமல் அருகே வந்து மாட்டிக் கொள்ளக்கூடாதா என்று நம் மனம் ஏங்குகிறது. எதிராளியின் பார்வையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகினால் எவ்வளவு மாறுபாடான பார்வை கிடைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் ‘சிம்பாலிக் டச்’ என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சிகளை சென்சாரின் கெடுபிடிக்கு பயந்து மான் ஒன்றை வேங்கை ஆவேசத்துடன் துரத்திச் சொல்வதை காண்பித்து காண்பித்து புலி என்பதை ஒரு வில்லனாகவே நமக்கு சித்தரித்திருப்பார்கள்.

அவ்வாறின்றி இயற்கையின் நியதிப்படி புலிக்கு மான் போன்ற சாகபட்சிணிகள்தான் உணவு என்பதையும் அந்த உணவை அடைவது அத்தனை எளிதல்ல என்பதையும் மேற்சொன்ன ஆவணப்படம் காட்டியது. ஹேராம் என்கிற திரைப்படத்தில் வேட்டையைப் பற்றின விவாதத்தில் “உங்க குழந்தைய ஒரு ஓநாய் தூக்கிட்டுப் போனா, அது உணவிற்காகத்தானே எடுத்துக் கொண்டு போகிறது என்று உங்களால் சும்மாயிருக்க முடியுமா?” என்கிற கேள்விக்கு “அது அந்த ஓநாயோட பார்வையிலிருந்து பார்த்தால்தான் தெரியும்” என்று விடைவரும்.

()

புலி போன்ற விலங்கினங்கள் தமது உணவிற்காக வேட்டையாடுவது இயற்கையின் நியதிப்படி சரியானதுதான். ஆனால் மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவது? “கொன்னா பாவம் தின்னா போச்சு” என்கிற பழமொழியின் அடிப்படையிலா? எதற்காக மனிதன் வேட்டையாடுகிறான்? உணவிற்காக என்பது எளிதான விடை என்றாலும், வேட்டையாடுவதில் அவனுக்கு கிடைக்கும் சாகச உணர்வுதான் பிரதானமாக (புலி போன்ற உணவல்லாத விலங்குகளை வேட்டையாடுவது) இருக்கக்கூடும். இவ்வாறு சில இனங்களை மட்டும் வேட்டையாடி அழிப்பதினால் ஒரு வனத்தின் இயற்கையான சுழற்சியை குலைத்து அதன் சமத்தன்மையை பாதிப்படையச் செய்கிறான்.

நான் ஒரு அசைவ உணவுக்காரன் என்றாலும், எந்த விதத்திலும் நியாயப்படுத்துபவனாக இருக்க மாட்டேன். என்றாலும் இது போன்ற வேட்டைகளைப் பற்றின நூலைப் படிப்பதிலும், ஒளிக்காட்சிகளையும் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படுவதற்கு அதன் பின்னணயில் உள்ள சாகச உணர்வுதான் காரணம் என்று தோன்றுகிறது.

ஜிம் கார்பெட் என்பவரை ஒரு வேட்டைக்காரராகவும் அவர் எழுதிய சில நூல்களான The Man-eating Leopard, Temple Tiger and More Man-eaters ஆகிய ஆங்கில நூல்களையும் அறிந்து வைத்திருந்தேனேயன்றி எந்தவொரு நூலையும் படித்ததில்லை. “எனது இந்தியா” என்கிற அவர் எழுதின ஆங்கில நூலின் தமிழப்பதிப்பை நூல்நிலையத்தில் கண்டவுடன் விருப்பத்துடன் வாசிக்க எடுத்து வந்தேன். ஓரு வேட்டைக்காரரின் சாகச அனுபவங்களை படிக்க வேண்டும் என்கிற ஆவலே அது. ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறாக, இந்த நூல் ‘ஜிம் கார்பெட்’ என்கிறவரின் மனித நேயத்தையும், இந்தியா மற்றும் இந்தியர்கள் (குறிப்பாக அடித்தட்டு மக்கள்) மேல் அவர் வைத்திருக்கும் அன்பு குறித்தும் விவரிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. எனவேதான் இந்த நூலை அவர், “இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” என்றெழுதும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

()

எட்வர்டு ஜேம்ஸ் (ஜிம்) கார்பெட் (1875 – 1955) இன்றைய உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நைனிடாலில் பிறந்தவர். இடையில் தமது 42-ம் வயதில் இங்கிலாந்து சென்று திரும்பியது தவிர தன் வாழ்க்கை முழுவதையும் இங்கேயே கழித்தவர். இந்தியா விடுதலை பெற்ற பிறகு கின்யாவிற்கு குடிபெயர்ந்து அங்கேயே இறந்தார். தம்முடைய வேட்டைத் திறமையால் ஆட்கொல்லி வேங்கைகளை கொன்று ஏழை மக்களின் அன்பைப் பெறுகிறார். அவற்றை தன்னுடைய அனுபவங்களாக பல நூல்களாக பதிவு செய்து வைத்திருக்கிறார். Man-eaters of Kumaon (1944) என்கிற நூல் தி.ஜ.ர.வின் மொழிபெயர்ப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்துள்ளது.

()

ஜிம் கார்பெட் தன் வாழ்க்கையை பெரும்பாலும் கழித்த நைனிடாலையும் அதைச் சுற்றியுள்ள மலைகளையும் ஆறுகளையும் பள்ளத்தாக்குகளையும் விஸ்தாரமாக விவரிப்பதில் இந்த நூல் துவங்குகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இந்த நூல் அவரின் வேட்டை அனுபவங்களை விட அவர் சந்தித்த அவரை பாதித்த இந்திய மனிதர்களைப் பற்றின நெகிழ்ச்சியான அனுபவங்களால் நிரம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு “லாலாஜீ” என்கிற கட்டுரையைப் பற்றி மாத்திரம் விஸ்தாரமாக எழுத முயற்சிக்கிறேன்.

அதி உச்சமான உஷ்ண காலமொன்றில் நீராவிப்படகிலிருந்து இறங்கி அகலப்பாதை ரயில்வண்டியில் ஏறுபவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக நிதானமாக இறங்கும் முதியவர் ஒருவருக்காக கிளம்பவிருக்க ரயில்வண்டியை காத்திருக்கச் செய்கிறார். ஆனால் அந்த மனிதரோ சாவதானமாக கங்கைக் கரையில் விரிப்பை விரித்து படுத்துவிடுகிறார். “எனக்கு ரயிலெல்லாம் வேணாம் சாஹேப். நான் சாகக் கிடக்கிறவன்”. அவர் காலராவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஜிம் யூகிக்கிறார். அவரை தன்னுடைய பணியாட்கள் தங்கியிருக்கும் அறையொன்றில் படுக்க வைத்து தனக்குத் தெரிந்த சிகிச்சை முறைகளை அவருக்கு அளிக்கிறார். என்றாலும் அந்த மனிதர் பிழைப்பார் என்று அவருக்கு நம்பிக்கையில்லை. ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் பிழைத்துக் கொள்கிறார். பிறகு நிதானமாக அவரைப் பற்றி விசாரிக்கும் போது அவரின் பின்னணி விவரங்கள் தெரிய வருகின்றன.

ஒரு காலத்தில் செழிப்பான வணிகராயிருந்த அவர் ஏமாற்றுக்கார கூட்டாளி ஒருவனால் அனைத்தையும் இழக்கிறார். தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று கடன்களை அடைத்து, தான் வணிகம் செய்த ஒருவரிடமே பணிக்கு அமர்கிறார். இடையில் மனைவியும் இறந்து போகிறார். வணிக சம்பந்தமாக முஸா·பர்பூரிலிருந்து கயாவுக்குச் செல்லும் வழியில் தீவிரமான காலரா நோய்க்கு ஆளாகிறார்.

நடக்கும் அளவிற்கு தெம்பு பெற்றவுடன் “இனி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஜிம் விசாரிக்கிறார். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அவரின் முதலாளி வேறு ஆளை பணிக்கு வைத்திருப்பார் என்று அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. “திரும்பவும் வியாபாரி ஆகிடணும். என் மகனெப் படிக்க வைக்கணும் என்கிற நினைப்பெல்லாம் ராப் பகலா இருந்துகிட்டுதான் இருக்கு ஸாஹேப். புதுசாத் தொழிலை ஆரம்பிக்கணும்னா ஐநூறு ரூபா வேணும். நானோ மாசம் ஏழு ரூபா சம்பளம் வாங்கற வேலைக்காரன். அடமானக் கொடுக்கறதுக்கு எதுவுமே இல்லாதவன். இந்த உலகத்துல யாரு என்னை நம்பிக் கடன் குடுப்பாங்க?”

முன்பின் தெரியாத அந்த மனிதருக்கு உதவ ஜிம் முடிவு செய்கிறார். அவர் எழுதுகிறார் : …… ஆக என் சேமிப்பின் பெரும்பகுதியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு லாலாஜீ கிளம்பிப் போனார். அவரை நான் மீண்டும் சந்திப்பேன் எனபதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனெனில் இந்தியாவின் ஏழை ஜனங்கள் தமக்குக் காட்டப்பட்ட பரிவை மறப்பதே இல்லை. ஆனால் லாலாஜீ என்னிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் என்று நான் நிச்சயமாக நம்பினேன்….

ஓரு மாலை வேளையில் ஜிம் வேலை முடிந்து திரும்பும் போது அந்த எளிய மனிதர் லாலாஜீ கடனாக வாங்கிய பணத்தை வட்டியுடன் வைத்துக் கொண்டு திருப்பியளிக்க காத்திருக்கிறார். ஐநூறு ரூபாயைக் கொண்டு தனக்குத் தெரிந்த வணிகத்தை எளிய முறையில் ஆரம்பித்து நன்றாக முன்னேறியிருப்பதாக தெரிவிக்கிறார். ‘நண்பர்களிடம் வட்டி வாங்குவது எங்களுக்கு வழக்கமில்லை’ என்று மறுக்கிறார் ஜிம்.

லாலாஜீ புறப்படும் போது ஜிம்மிடம் சொல்கிறார்:

“ஒங்களோட தங்கியிருந்த ஒரு மாச காலத்தில, ஒங்க தொழிலாளிகள்ட்டேயும் ஒங்க வேலைக்காரங்ககிட்டேயும் பேசினப்போ, ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு ஒரே ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் பருப்பும் மட்டும் சாப்பிட வேண்டிய கஷ்ட நிலைமை ஒரு சமயம் ஒங்களுக்கு வந்துச்சாமே. அப்படி ஒரு நிலைமை இனிமே வராமே அந்தப் பரமேஸ்வரன் பாத்துக்கிருவான். ஒருவேளை அப்பிடி ஒரு நிலை வந்துச்சுன்னா, அடியேன் என்கிட்டே இருக்கிற சகலத்தையும் ஒங்க காலடியிலே வந்து கொட்டுவேன்.”

()

எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. யுத்தம் காரணமாக ஹைதராபாத்திலிருந்து ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்துவதற்காக சென்னை வந்து சேரும் அந்த குடும்பம், தலையில் மூட்டையாக சுமந்து வரும் துணிக்கடைக்காரரிடம் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறது. நிலைமையை அறிந்து கொண்ட அந்த துணிக்கடைக்காரர், முன்பின் அறிந்திராத ஊருக்குப் புதியவர்களான அவர்களுக்கு பெரும் தொகை மதிக்கத்தக்க துணிவகைகளை கடனாகத் தருகிறார். அவர் தற்போது சென்னையில் பட்டுப்புடவை வியாபாரத்தில் புகழ் பெற்றும் “நல்லி” நிறுவனத்தின் ஸ்தாபகர். ஆக…. நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் அந்தக் காலத்தில் நிறைய இருந்திருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்திலும் தேடிப்பார்த்தால் அவ்வாறானவர்கள் அகப்படக்கூடும்.

இவ்வாறான பல எளிய மனிதர்களைப் பற்றின கட்டுரைகள் ஜிம் கார்பெட்டின் வேட்டை அனுபவங்களூடே இந்த நூலில் நிரம்பியுள்ளன. ரயில்வே ஒப்பந்தக்காரனான பொறுப்பேற்று ஜிம் படும் கடினமான வறுமை சார்ந்த அனுபவங்களும் எளிய ஜனங்களைக் கொண்டு அதை அவர் வென்றெடுப்பது குறித்தான சுயஅனுபவங்களும் இதில் அடக்கம். “எங்கள் இந்தியா” என்றும் “எங்கள் ஜனங்கள்” என்று கட்டுரை முழுதும் அவர் குறிப்பிட்டுச் செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது இந்தியாவைப் பற்றி அதிகம் அறிந்திராத மேற்கத்தியர்கள் படிப்பதற்காக எழுதப்பட்ட ஆங்கில நூல்.

கவிஞராக அறியப்பட்டு பின்னர் சிறுகதை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் பரிணாமம் பெற்ற யுவன் சந்திரசேகரின் நேர்த்தியான எளிமையான மொழியுடனான பணி, இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை மறக்கடிக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் தம்முடைய முன்னுரையில் காட்டுயிர்களைப் பற்றின பொதுவான கவனமின்மையை குறிப்பிடும் போது ….. நகரச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை எழுத ஆரம்பித்த பின் நம் இலக்கியமும் இயற்கை உலகினுன்று அந்நியப்பட்டு விட்டது என்று எண்ணுகிறேன். புறவுலகைப் பற்றிய சொல்லாடல் உருவாகவில்லை. ‘ஒரு மரத்தடியில்..’ என்றும் ‘ஒரு சிறு பறவை’ என்றும் பலர் எழுதுவதைக் காணலாம். என்ன மரம்? என்ன பறவை? இந்த விவரங்க¨ள் குறிப்பிட்டால் அந்தச் சொல்லோவியம் உயிர் பெற்று விளங்கும்”……….. என்று எழுதும் போது குற்ற உணர்ச்சியுடன் பலமாக ஆமோதிக்கவே தோன்றுகிறது.

——————————-
sureshkannan@airtelbroadband.in

Series Navigation