சர்க்கரை

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

அபுல் கலாம் ஆசாத்


இனிப்பிற்கும் நாவிற்கும் உள்ள உறவு
முறிந்தது
சுவையில்
அதன் சுவடுகூடத் தெரிவதில்லை

கணையம் கண்ணுறங்க
வாய் விழித்திருக்கிறது

பழைய வீட்டுடன்
பரம்பரைச் சொத்தாக வந்தது
இதுவும்தான்

வெறும் வயிற்றில் வெங்காயமும்
பகல் உணவில் பாகற்காயும் பழக்கப்பட்டு
இனிப்பை நினைத்தால்
கசக்கிறது

“கரும்பு தின்னக் கூலி” எனக்கு மட்டுமே

இனியவனுக்கு
என் அகராதியில் வேறுபொருள்

திருமண விருந்தில்
தெரிந்தவர் தேடி அமர்ந்து
பக்கத்து இலைக்கு பாயசத்தைத் தள்ளுவதில்
வெட்கப்படவில்லை

தேனீர் கேட்டால்
அனிச்சையாய்ச் சொல்வேன்
“ஒண்ணு சக்கரயில்லாம”

இறுதிவரை என்னுடனிருக்க வந்த
உறவை ‘நீரிழிவு’ என்றழைக்க
நெருடுகிறது
‘சக்கரை’ என்றே சொல்வேமே

கல்லைத் தின்றாலும்
செறிக்கும் வயதென்றார்கள்
சிரித்துக்கொண்டது மனது

அளந்து உண்டு
இளைக்க நடந்து
இன்சுலின் ஏற்றி
இன்னும் என்னென்னவோ செய்தும் குறையாத
‘இதை’ப்போல்
என்
சேமிப்பும் இருக்க
யாரேனும் வழி சொல்லுங்களேன்

***

அபுல் கலாம் ஆசாத்

azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்