சரி
Published December 14, 2006 • By
ரஜித்
ரஜித்

தேவகி வீட்டுத் தேவைக்கு
மோதிரம்தான் கௌரவம்
சரி போடுவோம்
மல்லிப்பூவாய் தோடுகள்
மரைகள் கரைந்து
மல்லிப்பூக் காம்பாய் திருகுகள்
மாற்றவேண்டும் உடனே
சரி மாற்றுவோம்
சுருட்டி வலிக்கிறது வயிறு
சாரா டாக்டர் பார்த்தால்தான்
சரியாகும் ஆ அம்மா
சரி கிளம்பு
வழுக்கி வழுக்கிப் போகிறது
கிழமாகிப்போன செருப்பு
வேறொன்று
சரி நாளை
வெள்ளை ரோஜா சரி
வேம்பும் துளசியும் வேண்டும் எனக்கு
சரி வாங்குவோம்
எல்லா இடமும்
எண்ணெய்ப் பிசுக்காய் அழுக்கு
நான் மட்டும் கழுவினால் ரணம்
நாலு கை சேர்ந்தால் சுகம்
சரி சேர்கிறேன்
தொட்டுப் பேசுகிறாள் அவள்
சொட்டு அமிலம் ஈரலை எரிக்கிறது
விட்டுவிடுங்கள்
வேண்டாம் அந்த நட்பு
சரி இப்பொழுதே
இரண்டே எழுத்து ‘சரி’
இதைச் சொல்லாததால்
இரண்டாகின்றன
எத்தனையோ குடும்பங்கள்