சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

பாவண்ணன்


(சிதம்பர நினைவுகள்-மலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தமிழாக்கம்: ஷைலஜா, காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24)

மலையாள மொழியின் முக்கியக் கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிக இளம் வயதிலேயே தம் கவிதைகளால் மலையாள உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டவர். கவிதைகள் அரங்கேறும் அரங்குகளை தம் வசீகரமான குரலால் வசப்படுத்திக் கொண்டவர். அரசியல் சார்பின் காரணமாக பதினெட்டு வயதிலேயே பெற்ற தந்தையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர். அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் தமக்குக் கிடைத்த அனுபவங்களில் சிலவற்றைப் பதிவு செய்த அவரது மலையாள நுால் கே.வி.ஷைலஜாவால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இத்தொகுப்பில் 21 சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் பாலச்சந்திரன். ஒவ்வொரு சம்பவமும் அவரைப் பற்றி மற்றவர்களும் மற்றவர்களைப்பற்றி அவரும் அதுவரை தெரிந்திராத பரிமாண வெளிப்பாடுகளோடு அறியத் துணை செய்துள்ளன. சிற்சில தருணங்கள் அவரைப் பற்றி அவருக்கே புதிய தகவல்களைச் சொல்லும் வண்ணம் அமைந்து கொள்கின்றன.

பசியைத் தணித்துக் கொள்ள யாரோ அறிமுகமில்லாதவர்கள் வீட்டில் இருந்து திருவோணச் சாப்பாடு சாப்பிடும் சம்பவமும் முதல் கருவைக் கலைக்கக் கல்லுாரி ஆசிரியர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு மனைவியை மிரட்டி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் சம்பவமும் விற்பனைப் பிரதிநிதியாக வந்தவளின் கையைப் பிடித்து இழுத்து அடிபடும் சம்பவமும் பரிசிலில் கூடப் பிரயாணம் செய்யும் இளம்பெண்ணிடம் முத்தம் கேட்டு அடாவடித்தனம் செய்யும் சம்பவமும் போலீஸ்காரர்களிடமிருந்து காப்பாற்றியவனுக்குச் சுகமளிக்க எண்ணுபவளை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவிக்கு அறிமுகப்படுத்தும் சம்பவமும் சுயசரிதையில் மிக முக்கியப் பகுதிகள் ஆகும். சிதறிய நிலையில் இயங்கும் மனத்தின் போக்குகள் வெளிப்படும் தருணங்கள் இவை.

வாழ்வில் யாரையும் ஏமாற்றக் கூடாது என்பது மேலான மதிப்பீடு. சல்லிக் காசில்லாத நிலையில் நெருப்பாய் எரியும் வயிற்றுக்கு வழியற்ற நிலையில் உணவு விடுதியில் ஏமாற்றிச் சாப்பிட்டது எதார்த்தம். பிற பெண்கள் பழக்கம் தவறு என்பதும் ஒருவகையான மேலான மதிப்பீடு. யாருமற்ற சூழலில் விற்பனைப் பொருட்களைக் குனிந்து அடுக்கும் போது வெளிப்படும் உடலழகின் கவர்ச்சியால் வசமிழந்து கையைப் பற்றி விட்டது எதார்த்தம். மதிப்பீட்டிலிருந்து எதார்த்தம் சரிந்து போனது ஏன் என்பது முக்கியமான கேள்வி. இந்தச் சரிவுக்கு மனம் ஏன் இடம் தருகிறது என்கிற கேள்வியே வாழ்வின் ஆதாரமான கேள்வி.

இப்படிப்பட்ட சரிவுகளில் எந்த மனிதனுக்கும் சந்தோஷம் இருப்பதில்லை. எந்த சுவாரஸ்யம் கருதியும் இச்சரிவுகள் நம்மோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. நுட்பமாக நோக்கும் போது இச்சரிவுகளைச் சொல்லும் பொழுது வார்த்தைகளின் இடையே ஒருவித வலி கசிந்திருப்பதை உணர முடிகிறது. தம் வாழ்நாளுக்குப் பிறகும் கூட தம்மைப் பழிக்கத் தோதான விஷயங்களை சிறிதும் ஒளிவு மறைவின்றி முன்வைத்தல் என்பது, வரலாற்றின் முன் தம்மை எடையற்றவர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடுமையான வலியுடன் இந்தச் சரிவுகளைத் தம் மனக்கிடங்கிலிருந்து இறக்கி வைத்ததன் வழியாக தமக்குள் பொங்கிப் பெருகும் ஊற்றுக்கண்ணை அடைத்திருந்த தடைக்கற்களை உருட்டித் தள்ளிய நிம்மதியை வேண்டியே அவர் எழுதியிருக்கலாம் என்றொரு எண்ணம் எழுவதையும் தவிரக்க முடியவில்லை. அவர் விரும்பியிருந்தால் இவற்றை மறைத்திருக்கலாம். மனத்துக்குள்ளேயே காலமெல்லாம் சிதம்பர நினைவுகளாகச் சுமந்தபடி திரிந்திருக்கலாம். ஆனாலும் அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதையயொட்டி யோசிக்கும் போது ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்தச் சுயசரிதையிலும் இத்தகு சரிவின் சித்திரங்கள் வலியுடன் முன்வைக்கப்படுவதன் காரணம் இந்த நிம்மதியைத் தேடியதாலேயே இருக்கக் கூடும். காந்தியின் சுயசரிதையும் லியோ தல்ஸ்தோயின் சுயசரிதையும் உடனடியாக நினைவுக்கு வரும் எடுத்துக் காட்டுகள்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய படைப்பியக்கமாகும். வாழ்வில் பொருட்படுத்தத் தக்க கணங்கள் என்பவை சந்தோஷம், உயர்வு, செல்வம், புகழ் ஆகிய சகல பரப்புகளிலும் இருக்கும் நிலையிலிருந்து மேல்நோக்கிய நிலைக்குச் சிறிதளவேனும் தள்ளிவிட்ட தருணங்கள் மட்டுமே என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கிறோம். அது பிழையான எண்ணம். எல்லாப் பரப்புகளிலும் தாழ்வை நோக்கிய நிலைக்குத் தள்ளிவிடும் தருணங்களும் முக்கியமானவை. தாழ்வின் தருணங்களும் உயர்வின் தருணங்களும் வாழ்க்கைப் பரப்பில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் இரண்டு ஒளிப்புள்ளிகள். சாதாரணமான சூழலில் புரிந்துகொள்ள முடியாத மனத்தின் பரிமாணங்களை இந்த வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியும். இந்தப் பரிமாணங்களில் வெளிப்படும் குணங்களையும் நம் வாழ்வையும் இணைத்துப் பார்த்து எடைபோடும் தீவிரமான ஆர்வம் ஒருவருக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. இத்தகைய தொகுப்புகள் வழியாகவும் மதிப்பீடுகள் வழியாகவும் வாழ்வின் புதிரை நாம் உணர முடியும். தாழ்வின் தருணங்களை பாலச்சந்திரன் முன்வைப்பதை வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ளும் ஒருவகை முயற்சியே ஆகும்.

இச்சுயசரிதையின் பல பாத்திரங்களை யாராலும் மறக்க முடியாது. ‘என் சம்பளத்தில் சாப்பிட்டுக் கொண்டு, என் வீட்டில் வசித்துக் கொண்டு எனக்கு அனுசரணையாக இல்லாமல் இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது ‘ என்று பெற்ற மகனிடம் தைக்கிற மாதிரி பொறுமை மாறாமல் பேசி வீட்டை விட்டுப் போகச் சொல்லும் அப்பா, ‘ஓணத்துக்குச் சாப்பிட உட்கார்ந்தால் இலையில் உன் முகம்தானே தெரியும், சோறில்லாமல் நீ அலைவதாக எண்ணிக் கொண்டால் எனக்குச் சோறு இறங்காதுடா ‘ என்று அழும் ஹாஸ்டல் நண்பன், ரத்தம் கொடுத்துச் சம்பாதித்து வாங்கிய 16 ரூபாயை பக்கத்துப் படுக்கையில் ரத்தம் கொடுத்துவிட்டுப் பேச்சுக் கொடுத்த முன்பின் அறிமுகமில்லாதவனீன் தங்கைக்கு மருந்து வாங்கக் கொடுத்துவிட்டுப் போகிறவனிடம் என் தங்கை பிழைத்துக் கொள்வாளா என்று கேட்கிற கிருஷ்ணன் குட்டி, தன்னிடம் இன்பம் அனுபவிக்காதவனிடம் பணம் வாங்க மறுக்கும் விலைமகள் வாசந்தி, சடலத்தைக் காவல் காக்க வந்து சோர்வில் துாக்கம் போடும் போலீஸ்காரன், சங்குமுகக் கடற்கரையில் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்து விட்டு கருக்கலில் கையில் ரூபாய்த்தாளைத் திணத்துவிட்டுப் பேருந்தைப் பிடிக்க ஓடிய விலைமகள் என்று பலருடைய சித்திரங்கள் மனத்தில் எழுந்து எழுந்து மறைந்தபடி இருக்கின்றன.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்