சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

காஞ்சனா தாமோதரன்


‘…ஒனக்கும் எனக்கும் எப்பிடிடா ஆகாமப் போச்சு ?…இதுக்கு மின்னாடி ஒன்னிய நாம் பார்த்ததே இல்லியே. பெறகெதுக்குடா என்னிய சாதிப் பேர் கேட்டு இன்ஸல்ட் பண்ணனும் ? நீ வெறும் எஸ்.எஸ்.எல்.சி. இல்லாட்டி பி.ஏ. படிச்சிருப்ப. ஆனா ஒன்னால ஒரு எம்.ஏ. கிராஜுவேட்ட ரொம்ப ஈஸியா இன்ஸல்ட் பண்ண முடியுது ? ஒனக்கு இந்த அதிகாரத்தையும் ஆணவத்தையும் கொடுத்தது எவண்டா ?…. ‘ ராஜ் கெளதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ நாவலிலிருந்து சில வரிகள்.

சிக்கலான சமுதாயம். சிக்கலான வாழ்வு. சிக்கலான கதை. மிகையான தன்னிரக்கமும் காழ்ப்பும் உணர்ச்சியும் நியாயமாகவே இடம்பெறும் சாத்தியங்கள் உள்ள, ஆனால் அப்படியல்லாத கதை. சரித்திர எச்சங்களான வேதனையையும் அவமானத்தையும் காழ்ப்பையும் மட்டுப்படுத்தும் சுயமரியாதை, தன்னம்பிக்கை; கல்வி தரும் ஒழுங்குள்ள அணுகுமுறை; இயல்பான கூரிய அங்கதம்; எல்லாமுமாய்ச் சேர்ந்து ஓர் அறிவுபூர்வமான கதையாடலை உருவாக்குகின்றன.

‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்புத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி.தெரு என்றழைக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெருவில் அவனுடைய ராக்கம்மா பாட்டியின் குடிசையில் பிறந்த ‘ சிலுவைராஜின் சுயசரிதையாய் நாவல் சொல்லப்படுகிறது.

அறிவியல் அடிப்படையற்ற அதிகார அடுக்குமுறையான ஜாதீயம், கதையின் வேர்ப்பிரச்சினை. சிலுவைராஜின் ஜாதிப்பெயரே தமிழிலும் ஆங்கிலத்திலும் இழிசொல்லாய்ப் பதிந்து போன கலாச்சாரச் சூழல். பள்ளி வாத்தியாரின் திட்டுகள் மூலம் குழந்தை சிலுவைராஜ் தன் ஜாதி பற்றி அறிந்து கொள்ளுகிறான். சமூகம் அவனுக்கு விதித்திருக்கும் இடத்தின் பெயரால், ஒவ்வொரு படிநிலையிலும் பூடகமாய் இழைக்கப்படும் அநியாயங்களை உணர்ந்து உள்ளுக்குள் வெந்து போகிறான். கிறிஸ்தவத்தில் ஜாதிக்கு இடமில்லையென்று பெரியவர்கள் பேசினாலும், ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்பு முழுதும் ஜாதீயம் ‘சர்வேஸ்வரனைப் போல் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதை ‘யும் புரிந்து கொள்கிறான். அதே நேரத்தில், அவனது ஜாதியில் கிறிஸ்தவத்துக்கு மாறியவர்கள் சமுதாய அந்தஸ்து பெற்றவர்களாய்க் கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு உரிமைகளை இழந்து நிற்பதும் புரிகிறது. தன்னுடைய படிப்பு, திறமை, உழைப்பு, ஆகியவற்றை விடத் தான் பிறந்த ஜாதியை வைத்துத் தான் குறுகலாய் எடை போடப்படுகிறோமே என்ற வேதனையும் இயலாமையும் ஒரு புறமும், கல்வி மூலம் தடைகளை மீறிச் சமவுரிமை பெற முடியுமென்ற நம்பிக்கை மறுபுறமுமாய் வளருகிறது சிலுவைராஜின் சரித்திரம்.

கடவுள் பற்றியும் ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதம் பற்றியுமான சிலுவைராஜின் கேள்விகளும் சிந்தனைகளும் நாவலின் முக்கிய பகுதிகளாகின்றன. ‘விடிஞ்சதிலயிருந்து ஒறங்கப் போறவரைக்கும் ஒவ்வொரு ஆர்.சி.கிறிஸ்தவனும் ஏதாவது ஒரு பாவத்தைச் செய்து விடக் கூடிய சாத்தியமிருக்கிறது ‘ என்று தொடங்கி பாவங்களின் தன்மையையும், அது தொடர்பான சில முரண்களையும் அலசுகிறான் சிலுவைராஜ். அவன் ரசித்து வாசிக்கும் மில்ட்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட் ‘டில், சர்ப்ப வடிவத்துச் சாத்தான் ஏவாளிடம் முன்வைக்கும் தர்க்கம் சரிதான் என்கிறது அவன் அறிவு. அதே நேரத்தில், கோவில் பூஜைக்கான லத்தீன் பாடல்களின் அர்த்தம் புரியாவிட்டாலும், தன்னையறியாமல் அவற்றின் அழகில் லயித்து அனுபவிக்கிறது மனம். (இயேசுநாதர் ‘நம்மளை மாதிரி இல்லாம வெள்ளைக்காரர் போலிருப்பவர், நீலக்கண்களுடைய அழகானவர் ‘ என்பது நுட்பமான அவதானிப்பு–நியூயார்க் அருங்கலைக்காட்சியகத்தில் மாட்டப்பட்டிருக்கும் பல்வேறு இயேசுநாதர் ஓவியங்களைப் பார்க்கையில், அவரது மேற்காசிய யூதத் தோற்றம் காலத்துடன் மெல்ல மாறி மேற்கத்திய வெள்ளைக்காரத் தோற்றமும் கொள்ளுவதைக் காணலாம்.) டான் பாஸ்கோவுக்குப் போல், கடவுள் தனக்கும் காட்சி தருவாரென்று தீவிர தியானத்தில் சிலுவைராஜ் மூழ்கியிருப்பது ஒரு கட்டம். கடவுள், மதம் எல்லாவற்றையும் உதறி விட்டுத் தீவிர நாத்திகனாகிப் போவது அடுத்த கட்டம். இரண்டு கட்டங்களிலும் தொனிப்பது ஆழமான மானசீகத் தேடலே.

நாத்திகனான பின்னும் இயேசுவைத் தன் இலட்சியமனிதராய்க் கொள்ளுகிறான் சிலுவைராஜ். சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் இயேசுவை மதித்து வணங்கத் தயாராயிருந்த ஒரு காரணமே போதுமானது என்கிறான். பழங்கால மேற்காசியச் சரித்திரத்தைச் சற்றுப் பார்ப்போம்: இயேசு வாழ்ந்த காலத்தில், அவரது தாயகம் ரோமாபுரிப் பேரரசுக்கு உட்பட்டது. இயேசு பிறந்த யூத மதத்துக் கோவில்களின் வழியே பேரரசின் வரிப்பணங்கள் வசூலிக்கப்பட்டன; அதாவது, அந்நிய ஆதிக்கச் சக்தியின் உள்நாட்டு அதிகார மையங்களாக இக்கோவில்கள் செயல்பட்டன. இக்கோவில்களை எதிர்த்து, சாமானிய மக்களுக்காக இயேசு எழுப்பிய குரல், அந்நிய ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்த்த அரசியல்ரீதியான குரலாகும் என்கின்றனர் அறிஞர்கள். சுயலாபமில்லாமல் ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்த இயேசு, நாத்திக சிலுவைராஜின் இலட்சியமனிதராய் அமைவதில் ஆச்சரியமில்லை.

தானாய் ஊறிய நாத்திகத்துடன் புற அடிப்படைகளைப் பொருத்தி, தன் நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ளுகிறான் சிலுவைராஜ். விஞ்ஞானப் பாடத்தின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை, விவிலியப் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தைக் கதையாகக் காட்டி விடுகிறது. எல்லா மதங்களிலும் கதைகளும் புராணங்களும் உண்டென்று புரிந்து போகிறது. அதே காலகட்டத்தில், அரசியல் தளத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறது; நாத்திகவாதத்தில் தான் தனியில்லை என்பது உளவியல்ரீதியாக சிலுவைராஜின் நாத்திக நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. பல வருடங்கள் கழித்து நண்பருடன் பொருள்முதல்வாதம் பற்றி விவாதிக்கையில், எல்லாமுமே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குபவை என்று பொறிதட்டுகிறது. ஆனால், இந்தப் புள்ளிக்கு வந்து சேர இடையில் வேறு பல புள்ளிகள் தேவைப்படுகின்றன; தனிமனித மாற்றமும் வளர்ச்சியும் நலுங்காத நேர்கோடாக இல்லாமல், இப்படித் துள்ளித் தாவிச் செல்லுவதுதான் போலும்.

திரைப்படமும் அரசியலும் பின்னிப் பிணையும் தமிழ்நாட்டு வெகுஜனக் கலாச்சாரத்தைப் பகடி செய்யும் விமரிசனங்கள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியது. ஆனால், வெகுஜனக் கலாச்சாரம் பகடிக்கான பொருளே அல்ல; அதன் உருவாக்கமும் வளர்ச்சியும் மாற்றமும் பல்துறை நிபுணர்களால் அறிவார்ந்த முறைகளில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. நம்மில் பலர் போல், சிலுவைராஜ் வெகுஜனக் கலாச்சாரத்தின் பாதிப்புடன் வளர்ந்தவொரு தமிழ்ச் சிறுவன். அது பற்றித் தயக்கமோ பாசாங்கோ பகடியோ இல்லாமல், நேரடியாய் அவன் முன்வைக்கும் ‘உள்வட்டப் ‘ பார்வை மிக முக்கியமானது; வெகுமக்களின் எளிமையான அப்பாவி மனங்களை நினைத்து நெகிழ வைப்பது; ஊடகப் பிம்பங்களின் வலு பற்றிச் சிந்திக்கச் செய்வது. நம் ஆழ்மனதின் எந்த வெறுமையைச் சமூகத் திருவுருக்கள்/icons இட்டு நிரப்புகின்றன ? 1960-களின் திரைப்படங்கள் பற்றிய சிலுவைராஜின் சிறுவயது மனப்பதிவுகள், சில-பல தமிழ்நாட்டுத் தலைமுறைகளின் கூட்டுமனங்களைப் பிரதிபலிப்பவை; பிற்காலத் தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய மாற்றங்களுக்கு அடிப்படையாகும் சமூக-உளவியல் காரணிகளை மெல்லத் தொட்டுச் செல்லுபவை. சிலுவைராஜ் பெரியவனான பின், சில பிம்பங்கள் உடைந்து நொறுங்குகின்றன. கூடவே, அவன் மனமும்.

அங்கதமும் நகைச்சுவையும் கதையாடலுக்குச் சுவை சேர்க்கின்றன. 1970-களின் தமிழ்த்துறை முதுகலை மாணவனாய், கல்விமுறை பற்றியும் பேராசிரியர்கள் பற்றியும் சிலுவைராஜ் சொல்லிச் செல்லும் கதைகள் அங்கதச்சுவை பொதிந்தவை; முறையான தமிழிலக்கியக் கல்வியில் அறிவியல் அணுகுமுறையின் தேவை அங்கங்கே அடிக்கோடிடப்படுகிறது. நகைச்சுவை உணர்வு இன்னும் பல இடங்களில் தலைகாட்டுகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ‘ நாவலை, விடுமுறையில் தன் சகாக்களுடன் அரங்கேற்றுகிறான் சிலுவைராஜ். இந்த ‘அரங்கேறு காதை ‘யின் பல்வேறு சவால்களையும் சுவாரசியமாக விவரிக்கும் சிலுவைராஜ் குரலிலிருக்கும் சிரிப்பு, வாசகரையும் தொற்றிக் கொள்ளுகிறது. ஆனால், அந்தச் சிரிப்பு மறைத்திருப்பது ஒரு சோகத்தையே–நாடகத்தை அதன் தளத்தில் யாரும் புரிந்து கொள்ளாதது, தன் சூழலை விட்டுச் சிலுவைராஜை மேலும் அந்நியப்படுத்துகிறது.

அந்நியப்படுதல், வேரின்மை, தனிப்படுதல் ஆகியன சிலுவைராஜ் பாத்திரத்துக்குப் பழகியவை. வார்த்தைகளில் விரித்துச் சொல்லா விட்டாலும், கதை முழுதும் இவ்வுணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. கல்வியைப் பற்றிக் கொண்டு மேலே நகர்கையில், பிறப்புச்சூழல் இயல்பாகவே அந்நியமாகிப் போகிறது; சரித்திர எச்சங்களாய் ஒட்டியிருக்கும் பேதங்களினால், வாழும் சூழலுடனும் முழுதாய் ஒன்றிக் கரைந்து விட முடிவதில்லை. திரிசங்கு நிலை. ஆனால், இத்தகைய திரிசங்கு அந்நியத்தில்தான், அவன் தன்னைத் தானே வரையறுக்கும் சுதந்திரம் ஓரளவேனும் சாத்தியப்படும். சிலுவைராஜின் கனவு: ‘….தானுண்டு தன் வேலை, படிப்புண்டு. அடங்கி விடலாம். ஒரு தீவுல வாழ்ற மாதிரி, அந்த ராபின்ஸன் க்ரூஸோ மாதிரி வாழ்ந்திட்டுப் போகலாம்… ‘

சிலுவைராஜுக்கு அடுத்ததாய்க் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய உயிர்த்துடிப்புள்ள பாத்திரம், அவனது பட்டாளத்துக்கார அப்பா. ஒரு சில கோடுகள் தீட்டுவதன் மூலமே அப்பாவின் சித்திரத்தை முழுமையடையச் செய்து விடுகிறார் எழுத்தாளர். சிலுவைராஜின் உலகம் உருவான குழந்தைப்பருவத்தில் அவனுடன் இல்லாத அப்பாவுக்கு, அவனது இப்போதைய உலகத்தில் இடமில்லை. பட்டாளத்து விடுமுறையில் வீட்டுக்கு அப்பா வருகையில், அதுவரை தனக்கு உரிமையான வெங்கலக் கும்பா தொடங்கி, அம்மா வரை, குடும்பத்து ஆட்சி வரை எல்லாமுமே அப்பாவுக்குத் திடாரென உரிமையாகிப் போவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. வாழ்நாளில் அப்பாவை அப்பாவென்று கூப்பிட்டதே இல்லை. அப்பா அவனுக்கு எதிரி. எம்.ஏ. வயது வரையும் கூட, அவனை மிருகம் போல் அடித்து விளாசுபவர். மில்ட்டனை ரசித்து வாசிக்கும் கல்லூரி மாணவனான மகனின் ஆங்கில அறிவைத் தனது ஆறாம் வகுப்புப் படிப்பால் சோதிப்பவர். சிலுவைராஜ் பார்வையில் அப்பா: என்றுமே இணைய முடியாத இணைகோடு. சிலுவைராஜின் அந்நியப்படுதல் ஆரம்பமாவது இங்குதானோ ?

அப்பாவின் பார்வை வேறு. மற்றுமொரு சேரிப்பையனாய்த் தன் மகன் சீரழியக் கூடாதென்கிற வேகம். பின்னாளில் மகனுள் உயிர்த்து உந்தும் மேல்நிலையாக்கத்துக்கான, சமவுரிமைக்கான அதே வேகம். நண்டு தின்னுவது ‘அசிங்கம், தரித்திரம், அநாகரிகம் ‘ என்று முகத்தைச் சுளிக்கிறார் அப்பா. மகனின் ஆங்கில அறிவை — மேல்நிலையாக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகத் தெரியும் ஆங்கில அறிவை — அவ்வப்போது சோதனை செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி.யில் மகன் வெற்றியடைந்த செய்தியைக் கேட்டதும் அவனைக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார். கடையில் வாங்கிய இனிப்புச்சேவு கீழே விழ, அதைச் சிறுவன் சிலுவைராஜ் பொறுக்குவதைப் பார்த்து, தெருவிலேயே அவனை அடிக்கிறார். வீட்டுக்கு வந்ததும் அவன் கைநிறைய இனிப்புச்சேவை அள்ளிக் கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார். பிறகு, அவன் அம்மாவிடம் ‘அவளுக்குப் புரியாத நாகரீகம் ‘ பற்றி உணர்வு பொங்க விளக்குகிறார்: ‘…பாக்குறவுங்க என்ன நெனப்பாங்க. சுத்தக் காட்டுமிராண்டி ஜனங்கன்னு சொல்வாங்கத்தா… ‘

வாய்மொழிக் கதை போல், இந்த நாவலின் கதையாடல் முன்னுக்கும் பின்னுக்கும் பக்கவாட்டிலுமாய் வளைந்தவாறே முன்னகருகிறது. இயல்பான பேச்சுமொழியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கலந்திருக்கிறது. வசை வார்த்தைகளும் கதையோட்டத்துடன் சேர்ந்து கொள்ளுகின்றன; இவை அதிர்ச்சிக்காகக் கையாளப்படவில்லை என்பது தெளிவு. கதையிலும் கதையாடலிலும் செயற்கையில்லை. தயக்கமில்லை. நேர்மையான தொனி இருக்கிறது. உண்மையான வாழ்க்கை இருக்கிறது.

சுயசரிதைப் பாணியில், வாய்மொழி இலக்கிய நடையில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதை, நாவல் என்னும் இலக்கியவடிவத்தின் முழுமையை அடைகிறதா என்பது என்னையே நான் பல முறை கேட்டுக் கொண்ட கேள்வி. ஜாதி என்னும் அதிகார அடுக்குமுறையின் அடித்தட்டில் இருக்கும் ஒருவனின் மேல்நிலையாக்கம்-சமவுரிமைத் தேடல் பற்றிய கதை. ஆனால், கதையின் நாயகன் எவ்வாறு ஜாதீய அடையாளத்துக்குள் தன்னைக் குறுக்கி அடைக்க விரும்பவில்லையோ, அது போலவே, கதையும் ஜாதீயப் புள்ளியில் மட்டுமே தேங்காமல் பரந்து ஓடுகிறது. தனிப்பட்ட முறையில் தன்னைப் பாதித்து உருவாக்கும் அரசியல், திரைப்படம், கல்வி, கடவுள்-மதம், இலக்கியம், உறவுகள் முதலியன பற்றிப் பன்முகக் கேள்விகளையும் தன்னுடன் தொடர்ந்து விவாதித்தபடி, ஓர் அசலான தமிழ்(நாட்டு) வாழ்க்கையை விரித்தெடுத்தபடி, பாசாங்கற்ற தேடலுடன் கதை நகருகிறது. தனிமனித/கருத்து இன்னபிற வேறுபாட்டுச் சாத்தியங்கள் அனைத்தையும் தாண்டி, வாசிப்பின் ஏதோவொரு கட்டத்தில் வாசகரின் கதையுமாகிப் போகிறது. வாசித்து முடித்து வெகுநேரமான பின்னும் உள்ளிருந்து மெலிதாய்ச் சங்கடப்படுத்துகிறது.

(தமிழினி பதிப்பக வெளியீடு, டிசம்பர் 2002, 573 பக்கங்கள், ரூ.260.)

‘உயிர்மை ‘, பிப்ரவரி 2004

uyirmmai@yahoo.co.in

திண்ணையில் காஞ்சனா தாமோதரன்

  • மனமொழி
  • பயணக் குறிப்புகள்

    “சிலுவைராஜ் சரித்திரம்” பற்றி

  • பாவண்ணன்

    Series Navigation