சம்பவம்
செல்வராஜ் ஜெகதீசன்
பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.
அக்கம் பக்கம்
குறித்தெந்த
அக்கறையுமில்லை
அவர்களிடம்.
சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.
பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.
உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.
o
சம்பவம்
ரா. கணேஷ்
பாட்டி இறந்துவிட்டாள்
செய்தி வந்தது
ரயில் ஏறினோம்
சண்டை போட்டு இடம் பிடித்தோம்
ஓட்டலில் சாப்பிட்டோம்
அம்மாவும் அப்பாவும் அழுததால்
நானும் அழுதேன்
இரண்டு நாளில்
மீண்டும் சென்னை வந்தோம்
அப்பா செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்
அம்மா சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்
நான் கி¡¢க்கெட் டிவியில்
தம்பி மட்டும்
ஏன் அழுதோம் என்று
என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் !
– ரா. கணேஷ்
ganeshadhruth@yahoo.co.in