சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)
Published September 16, 2004 • By
தாஜ்
தாஜ்

***
அவர்கள் பேசுகின்றார்கள்
தொப்புள் கொடி வழி வந்த
பல் வரிசைகளும் நீள
வாடை வீச்சம் தரும்.
கோரைப் பற்களிடையே
கேள்விகளற்ற அம்மொழி
இறந்த காலத்தினது பெரும் சப்தம்.
*
பின்னல் அழகாய்
நேற்றை
நாளைக்குள் நுழைப்பார்கள்
கர்ணக் கட்டுக்குள்ளே
வாழ்வின் விஸ்தீரணத்தைத்
திணிப்பார்கள்
மனிதர்களுக்கெல்லாம்
வர்ணம் பூசி நிற
நிறமாய்க் காண்பார்கள்.
*
ஒளிபுகா மண்டபங்களில்
இசைநயம் தவிர்த்து
ராக ஆலாபனையையும் விடுத்து
திக்கிற்கொருவராய்
குதிகுதித்து
பல்லவியை மட்டுமே பாடுவார்கள்.
எதிர்படுபவர்களை எல்லாம்
பூர்வ சந்தோஷம் துளிர
முரண்பாடுகளேயென
விளிப்பார்கள்
பாவம் அவர்கள்
சக மனிதர்கள் என்ற
நம் ஸ்நேகிதர்கள்.
***
தாஜ்
tahwhite@rediffmail.com