சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ஜெயமோகன்


என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள பதிப்பகங்கள் இவையே. நான் படிக்காத நூல்களை சேர்க்கவில்லை. பல நூல்கள் முன்பே படித்தவை. அச்சுக்கோவையிலேயே சென்ற வருடம் படித்த நூல்களும் உள்ளன.பட்டியல் முழுமையல்ல. இது வாசகர் தகவலுக்காக மட்டும்தான் .

நாவல்கள்

========

1] குள்ளச்சித்தன் சரித்திரம் . எம் யுவன் [தமிழினி பதிப்பகம்]

[ மனிதர்கள் வாழும் கால இட எல்லைக்கு அப்பாற்பட்ட அதிமானுடர்கள் குறித்த கற்பனை எல்லா சமூகங்களிலும் ஏதோ ஒருவகையில் உள்ளது . கால இட எல்லைக்கு அப்பால் செல்ல உன்னும் மனித மனத்தின் கற்பனை என்றும் அதைக் கொள்ளலாம். எம் யுவன் அதை நாம் வாழும் கால இட வெளி பற்றிய ஒரு புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார். மிகச் சுவாரஸியமான சித்தரிப்புகளும் சகஜமான நடையும் இந்நாவலின் பலம். இத்தகைய ஆர்வமூட்டும் நாவல் தமிழில் வந்து வெகுநாளாகிறது. உத்தி சோதனை ச்ன்றபேரில்போட்டு படுத்தும் நாவல்களை வாசித்து சலித்த தமிழ் வாசகர்களுக்கு இனிய விடுதலையாக அமையும் படைப்பு இது. கதைகளை பின்னி பின்னி முழுமையை உருவாக்குவதில் சிரத்தையுடன் செயல்பட்டிருக்கிறார் .]

2] சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கெளதமன் [தமிழினி பதிப்பகம்]

[விமரிச்கராக அறியப்பட்ட ராஜ்கெளதமன் எழுதிய முதல்நாவல். இது அவரது சுயசரிதையின் நாவல் வடிவம். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் ஒரு தெருவின் உயிர்துடிப்பான வாழ்க்கைச்சித்திரம் இந்த அளவுக்கு துல்லியமான முறையில் தமிழில் எழுதப்பட்டது இல்லை . மிக உற்சாகமான வாசிப்பனுபவமாக அமையும் படைப்பு ]

3]கோரை – கண்மணி குணசேகரன் .[தமிழினி பதிப்பகம்]

[பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச்சித்தரிப்பை அளிக்கும் யாதார்த்தமான் நாவல் .பூமணி முதல் இமையம் வரையிலான ஒரு மரபில் இணைகிறது]

4] தகப்பன் கொடி -அழகிய பெரியவன் [தமிழினி பதிப்பகம்]

[தலித்துக்கள் நிலமிழந்து ஒடுக்கப்பட்டவர்களாக மாறியதன் வர்லாற்றை சொல்லும் நாவல் ]

5] இருபதுவருடங்கள் எம் எஸ் கல்யாண சுந்தரம் [தமிழினி பதிப்பகம்]

[விசேஷமான ஒரு நகைச்சுவை கொண்ட சரளமான நடையில் எழுதப்பட்ட எம் எஸ் கல்யாண சுந்தரத்தின்நாவல்கள் அவை எழுதப்பட்டபோது கவனம் பெற்றது இல்லை . காரணம் அன்றைய பெரிய இதழ் போக்கு சிற்றிதழ்போக்கு இரண்டுக்கும் அப்பால் நிற்பவை அவை . காலத்துக்கு சவால்விடும் மகத்தான் படைப்புகளும் அல்ல. அவர்து நூற்றாண்டில் மறுபதிப்பாகும் இந்நாவல் பரவலாக படிக்கப்பட்டு மறக்கப்பட்ட நாவல். இத்தனை வருடங்களுக்குபிறகும் நடை பழகியதாக மாறாமலிருப்பது ஆச்சரியம்தான்.]

5]பகல் கனவு — எம் எஸ் கல்யாண சுந்தரம்[தமிழினி பதிப்பகம்]

[எம் எஸ் கல்யாணாசுந்தரத்தின் இந்நாவல் கைப்பிரதியாகவே நூல்சேகரிப்பாளர் கி.ஆ.சச்சிதானந்தம் அவர்களிடம் தேங்கி இப்போது நாற்பது வருடம் கழித்து அச்சாகியுள்ளது .உற்சாகமான வாசிப்பு அனுபவம் தரும் நடை. நுட்பமான சித்தரிப்புகள் கொண்டது. கதைசொல்லியின் மனைவி ஒரு அழகிய குணச்சித்திரம் ]

6]கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ்[தமிழினி பதிப்பகம்]

[ஆசிரியரின் முதல்நாவல். அப்பட்டமான நேர்மையான ஒரு சுய பதிவு சாத்தியமாகியுள்ளமையினால் முக்கியமான படைப்பாகிறது]

7] அம்மன் நெசவு — சூத்ரதாரி [தமிழினி பதிப்பகம்]

[சூத்ரதாரியின் இந்த முதல்நாவல் தமிழக நெசவாளர் சமூகத்தின் தொன்மங்களுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் யதார்த்த வீச்சோடு ஊடுருவுகிறது]

8]சொல் என்றொரு சொல் -பிரேம் [புதுப்புனல் வெளியீடு]

[பின்நவீனத்துவ நாவல்.அங்கதம் கொண்ட நடை படிக்கத்தூண்டுகிறது.செவ்விலக்கியம் தொன்மங்கள்

என உலவும் ஆசிரியரின் பார்வை சிக்கலான ஒரு வரலாற்று சித்திரத்தை உருவாக்குகிறது]

9]கூளமாதாரி பெருமாள் முருகன் தமிழினி

[உணர்வுநெகிழ்ச்சிகளுக்கு இடம்தராத கறாரான யதார்த்த சித்தரிப்பு கொண்ட நாவல் இது.ஆடுமேய்க்கும் சிறுவர்களைப்பற்றியது]

10]சிலந்தி எம் ஜி சுரேஷ் புதுப்புனல் வெளியீடு

[பின் நவீன பணியில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல் இது. புனைவின் சாத்தியங்களை வைத்து விளையாடுகிறது]

11] புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசன் மருதா பதிப்பகம் வெளியீடு 102 பாரதிசாலை சென்னை 14 marutha1999@rediffmail.com

[தன் எளிமையான யதார்த்தம் காரணமாக புகழ்பெற்ற தமிழ்நாவலின் மறுபதிப்பு]

12] ‘மிதவை ‘ நாஞ்சில்நாடன் விஜயாபதிப்பகம் 20 ராஜவீதி கோவை 641001[ சுயசரிதைப்பாணியிலான நாஞ்சில்நாடனின் நாவல். விவசாய வாழ்க்கையிலிருந்து பம்பாய்க்கு சண்முகம் குடியேறி வேரூன்றுவதன் சித்திரம். மறுபதிப்பு ‘பெருவயிறை பிள்ளை என்று கணிப்பதைப்போலத்தான் சண்முகம் பெரியப்பா மீது வைத்த்ருந்த நம்பிக்கையும்… ‘ என்று முதல்வரியிலேயே நாஞ்சில்நாடனின் அழகிய நடை நம்மை பிடித்து செல்கிறது.

13] மாமிசப்படைப்பு .நாஞ்சில்நாடன் விஜயாபதிப்பகம் [ நாஞ்சில்நாட்டு வேளாண்மை சமூக சித்திரம். மறுபதிப்பு ]

14] இக்கரையில் காஞ்சனா தாமோதரன் கவிதா பதிப்பகம் [காஞ்சனா தாமோதரனின் முதல்நாவல்.கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. விரிவான களத்துடன் நுட்பமாக எழுத ஆரம்பித்து மெல்ல மெல்ல தேய்ந்து முடிகிறது . எனினும் ஆர்வமூட்டும் படைப்பு]

15]சந்தி ஸ்ரீதர கணேசன் பாலம் பதிப்பகம் 3 திருவள்ளுவர் தெரு காமராசர் புரம் சென்னை 600070

[உப்புவயல் நாவலின் மூலம் கவனத்துக்கு வந்த தலித் எழுத்தளர் ஸ்ரீதர கணேசனின் நாவல். கடைமட்ட குழந்தைகள் கல்வியறிவு பெற அடையும் பிரச்சினைகளை சொல்லும் நாவல்]

16]புலிநகக் கொன்றை. பி ஏ கிருஷ்ணன் காலச்சுவடு பதிப்பகம் [ஆங்கிலத்தில் வெளிவந்த தமிழ்நாவலின் தமிழ் வடிவம். அழகான பதிப்பு. மிக விரிவான காலப்பின்னணியில் அரசியல் சமூக மாற்றங்களை மனிதர்களின் வாழ்வின் அலைகளாக காட்டும் முக்கியமான படைப்பு ]

சிறுகதைகள்

=======

1]ராஜேந்திர சோழன் சிறுகதைகள் [தமிழினி பதிப்பகம்]

[எழுபதுகளில் யதார்த்தவாத முக்கியமான சக்தியாக அறியப்பட்ட ராஜேந்திர சோழனின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு. அங்கதக் கதைகள் சற்று சலிப்பூடும்படி உள்ளன. காமம் கருப்பொருளாகிய கதைகள் ஆழமானவை. விபச்சரிகளைப்பற்றிய நான்கு கதைகள் தமிழுக்கு முக்கியமான ஆக்கங்கள் ]

2]ஆ.மாதவன் கதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காமத்தையும் மனிதனின் அடிப்படையான தீமையையும் ஆக்ரொஷத்துடன் சித்தரித்த ஆ.மாதவன் தமிழின் முக்கியமான் சிறுகதை சாதனையாளர்.அவரது அனைத்துக்கதைகளின் தொகுப்பு]

3]தூயோன்- கோபிகிருஷ்ணன் [தமிழினி பதிப்பகம்]

4]மானுட வாழ்வு தரும் ஆனந்தம்- கோபிகிருஷ்ணன்[தமிழினி பதிப்பகம்]

[ஏகத்தாளமும் சுயவிமரிசனமும் நிரம்பிய கோபிகிருஷ்ணனின் கதைகள் நாமரிந்த நகர்மய வாழ்வை ஒருவித அபத்த நாடகமாக மாற்றிக் காட்டுபவை. ]

5]பாலகாண்டம் -லட்சுமணப்பெருமாள்[தமிழினி பதிப்பகம்]

[கி ராஜநாராயணனின் உலகத்துக்கு சமானமான உலகம் இவருடையது.வாய்மொழியில் மிகுந்த சுவாரஸியத்துடன் சொல்லப்படும் கதைகளில்மதுரைப்பகுதி வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது]

6]உயிரியக்கம் [தமிழினி பதிப்பகம்]

[புத்தக சேகரிப்பாளர், பதிப்பகம் நடத்தியவர் என்று அறியப்பட்ட கி .அ.சச்சிதானந்தம் எழுதி பலகாலமாக வெளியிடாமல் வைத்திருந்த கதைகள் நூலாக வந்துள்ளன. அசோகமித்திரன் அளவுக்கு நுட்பமும் சரளமும் கொண்ட ஆக்கங்கள், ஆனால் அந்த நகைச்சுவை இல்லை . அசோகமித்திரன்காட்டாத ஒரு சென்னை சேரி மக்கள், ஒதுங்கிவாழும் ஆங்கிலோஇந்தியர்கள் போன்றவர்களை கதைகளில்காணமுடிகிறது]

7]களவுபோகும் புரவிகள் .சு வேணுகோபால்[தமிழினி பதிப்பகம்]

8]கூந்தப்பனை .சு வேணுகோபால்[தமிழினி பதிப்பகம்]

[சு வேணுகோபாலின் கதைகள் நேர்த்தியாக சொல்லப்படாதவை . கட்டற்ற சித்தரிப்பு உடையவை. ஆனால் மனித மன இயக்கத்தில் உள்ள வக்கிரங்களைக் காண அவரால் எளிதில் முடிகிறது . கூந்தப்பனை ஒரு முக்கியமானகதை . காமத்தின் இயலாமை என்ற மானுட சிக்கலை இத்தனை தீவிரமாக வெளிப்படுத்திய கதைகள் குறைவே .அதன் முடிவில் உருவாகிவரும் அழகான கவித்துவமும் கவனத்துக்குரியது]

9]பொன்மணல் -எம் எஸ் கல்யாண சுந்தரம்[தமிழினி பதிப்பகம்

[நாவல்களுக்குமாறாக சிறுகதைகளில் கல்யாணசுந்தரம் பழசாக தெரிகிறார். ஆனாலும் கவனத்துக்குரிய கதைகள் .குறிப்பாக பொன்மணல் சமகால பிரச்சினை ஒன்றை , வளர்ச்சி என்றால் என்ன என்பதை கையாள்கிறது. குழியும் பறித்ததாம் நகைச்சுவை அழகு காலத்தால் மங்காத படைப்பு ]

10]மரப்பாச்சி – உமாம்கேஸ்வரி[தமிழினி பதிப்பகம்]

[பெண்சார்ந்த கோணத்தில் உணர்வுகளை நேரடியாக முன்வைக்கும் கதைகள். உணர்வுகளை நேரடியாக சொல்வதனால் சில கதைகளில் ஒருவகை மிகை உள்ளது.ஆனால் தீவிரத்தை வெளிப்படுத்த திராணி கொண்ட நடை .மரப்பாச்சி முக்கியமான கதை.

11]நெஞ்சில் நிற்பவை 60 எழுத்தாளர்களின் சிறுகதைகள் [வானதிபதிப்பகம்.13, தீனதயாளு தெரு, தி நகர்,சென்னை 17]

எழுத்தாளர் சிவசங்கரியின் அறுபதாவது வயது நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட இக்கதைத்தொகுதி சமீபத்திய தொகுதிகளில் முக்கியமானது

12]கறுப்பு நாய்க்குட்டி -ஜி முருகன் [காலச்சுவடுபதிப்பகம்669,கெபி சாலை, நாகர்கோவில் 629001]

[முருகனின் இரண்டாவது சிறுகதைதொகுதி இது.சாயுங்காலம் என்ற முதல் தொகுதியும் பரவலாக கவனிக்கப்பட்டது. சூட்சுமமான சித்தரிப்புகள் மூலம் அதிராமல் கதை சொல்லும் முருகன் வாழ்க்கையின் இயல்பான அபத்தநிலையையும் துக்கத்தையும் இலக்கியமாக்குகிறார்]

13] பிராந்து .நாஞ்சில்நாடன் விஜயாபதிப்பகம் [ நாஞ்சில்நாட்டு வாழ்விலிருந்து வெளியே நாஞ்சில்நாடன் உலவும் இடங்கள் இநாவலின் பல கதைகளில் உள்ளன. சைவப்பிள்ளையும் சாரைப்பாம்பும் வாலிசுக்ரீவன் வதைப்படலம் போன்ற கதைகள் தமிழின் சிறந்த அங்கதக்கதைகளின் வரிசையில் சேர்பவை .

14] ஏறக்குறைய உண்மைக்கதை ரா ஸ்ரீனிவாசன் தமிழினி [ கவிஞராக அறிமுகமும் அங்கீகாரமும் பெற்ற ஸ்ரீனிவாசனின் இக்கதைகள் கூட ஒருவகையான கவிதைமனநிலையை எளிமையான மொழியில் சொல்ல முயல்பவையே.சில கதைகள் மிக எளிமையானவை ]

15] நீல பத்மநாபன் சிறுகதைகள் கலைஞன் பதிப்பகம். நீலபத்மநாபனின் அனைத்து சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு

16]ஏவாளின் இரண்டாவது முடிவு பாவண்னன் தமிழினி பதிப்பகம் [ பாவண்ணனின் சமீபத்திய சிறுகதை தொகுதி.]

கவிதைகள்

=======

1] முகவீதி -ராஜசுந்தரராஜன்[தமிழினி பதிப்பகம்]

[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]

2]கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]

3]விண்ணளவு பூமி –தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]

5]மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது -வி அமலன் ஸ்டேன்லி

[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]

6]இரவுகளின் நிழற்படம் –யூமாவாசுகி[தமிழினி பதிப்பகம்]

7]அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு– யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]

8]முலைகள் -குட்டிரேவதி[தமிழினி பதிப்பகம்]

[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]

9]யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன்[காவ்யாபதிப்பகம்]

[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]

10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்

[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]

பொது

====

1கொதிப்பு உயர்ந்துவரும் – ரவிக்குமார்[காலச்சுவடுபதிப்பகம்669,கெபி சாலை, நாகர்கோவில் 629001]

[தலித்துகளுக்காக குரல்கொடுக்கும் போராட்டக்காரரின் கட்டுரைகள் . தலித்துகளுக்கு நாட்டிலுள்ளபிற அனைவருமே எதிரிகள்தான் என்றவகையிலான மூர்க்கம் பார்வையின் முக்கியகோளாறு என்றாலும் ஆசிரியரின் உரைநடை நவீனத்தமிழின் மிகமுக்கியமான உரைநடைகளில் ஒன்று.]

2]சிதைவுகளின் ஒழுங்கமைவு – ரமேஷ் பிரேம் [காவ்யா பதிப்பகம்]

[பின்நவீனத்துவ சிந்தனைகளின் அடிப்படையில் தமிழிலக்கியத்தையும் தமிழ் வாழ்க்கையையும் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள். ஆழமான ஆய்வுப்பார்வையும் தத்துவார்த்தமான நோக்கும் கொண்டவை.நடை சிக்கலானது என்பது குறையே]

3] கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி . நிர்மால்யா[தமிழினி பதிப்பகம்]

[நராயணகுருவால் ஆதர்சம் கொண்டு கேறல தலித்துக்களை ஒருங்கிணைத்து உரிமைப்போர் தொடுத்த முன்னோடி வீரரின் வரலாறு.மலையாளநூல்களைஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது]

4]கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக – ராஜ் கெளதமன்[தமிழினி பதிப்பகம்]

[பக்தியோ வெறுப்போ இல்லாமல் வடலூர் ராமலிங்க வள்ளளார் பற்றி எழுதப்பட்ட ஆழமான வரலாற்றாய்வு நூல். ஆனால் வள்ளலாரின் பெரும் கருணை நிலையை மதிப்பிடுவதில் ராஜ்கெளதம்னின் தருக்கபுத்தி தடுமாறியுள்ளது தெரிகிறது . ஒருவகையான மனப்பிறழ்வு நிலை என்றே அவர் அதைக் கொள்கிறார் ]

5] அருட்பாமருட்பா- ப சரவணன்[தமிழினி பதிப்பகம்]

வள்ளலாருக்கும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த விவாதம் மற்று ம் வழக்கு பற்றி கட்டுக்கதைகளும் ஒருபக்கச் சார்பான சித்திரங்களுமே நிலவும் சூழலில் தெளிவான சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நூல் இது

6] மழைக்காலமும் குயிலோசையும் மா .கிருஷ்ணன் . தொகுப்பு சு.தியோடர் பாஸ்கரன் . காலசுவடு பதிப்பகம் [நாவலாசிரியர் அ.மாதவையாவின் மகனான மா.கிருஷ்ணன் எழுதிய இயற்கையியல் கட்டுரைகள் ஏறத்தாழ 60 வருடங்களுக்கு பிறகு நூலாகியுள்ளன. நம்மைச்சுற்றியுள்ள உயிர்னங்களைப்பற்றிய பரிவு நிரம்பிய பார்வைகள் . சில கட்டுரைகள் வெறுமே தகவல்கள்.ஆனால் பெரும்பாலான கட்டுரைகளில் கவிதைக்குரிய மனநெகிழ்வு ஏற்படுகிறது.குறிப்பாக நாய்களைப்பற்றிய கட்டுரைகள்]

7]வரலாற்றின் முரண் இயக்கம் ‘சோதிப்பிரகாசம் பொன்மணி பதிப்பகம் எண் 7 முதல்குறுக்குத்தெரு, சிறுத்தொண்டன் தெருஒண்டிக்குப்பம் மணவாளநகர் திருவள்ளூர் மாவட்டம் 602002 [மார்க்ஸிய சிந்தனையாளரான சோதிப்பிரகாசம் எழுதிய மார்க்ஸிய தத்துவ நூல். மூலதனத்தின் மீதான ஓர் விமரிசன ஆய்வு என்று சொல்லலாம்]

8] திராவிடர் வரலாறு .சோதிப்பிரகாசம் பொன்மணி பதிப்பகம் [ திராவிடர்களே மானுடபூர்வ குடிகளாக இருக்க கூடும் என்ற பாவாணரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட விரிவான ஆய்வு நூல். பி டி சீனிவாச அய்யங்கார் சோதிப்பிரகாசத்துக்கு நேர்நிலையாகவும் எதிர்மறையாகவும் முக்கியமான முன்னிலையாக இருக்கிறார் என்பது இந்நூலின் முக்கியமான குறை ]

9] வாழ்க்கையின் கேள்விகள் சோதிப்பிரகாசம் பொன்மணி பதிப்பகம் [ மார்க்ஸிய கருத்துக்களான வேலை மதிப்பு மிச்சம் போன்றவற்றை எளீய வாசகனுக்கு விளக்கும் நூல்]

10] குமரி நில நீட்சி சு .கிறிஸ்டோபர் ஜெயகரன் காலச்சுவடு பதிப்பகம் [ நிலவியலாளராக பணியாற்றும் ஜெயகரம்ன் ஏற்கனவே மூதாதையரைத்தேடி என்ற நூல் மூலம் தமிழில் புகழ் பெற்றவர். இது அவரது இரண்டாவது நூல். குமரிக்கண்டம் அல்லது லெமூரியா என்பது ஒரு கற்பனை மட்டுமே என நிலவியல் இலக்கிய சான்றுகளுடன் சொல்கிறார். குமரி நிலம் என்பது திராவிட அரசியலுடன் கலந்துவிட்ட ஒன்று என்பதனால் அரசியல் முக்கியத்துவம் உடைய நூல் இது

11] அருந்ததியர் வாழும் முறை . மாற்கு . தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை [ அருந்ததியர் என அழைக்கப்படும் தலித் மக்களிப்பற்றிய கள ஆய்வு . கிறித்தவ போதகரான மாற்கு மனிதாபிமான நோக்குடன் அவர்களுடைய வாழ்க்கையை, ஐதீகங்களை ஆய்வு செய்கிறார் .

12] தென்னிந்தியாவில் தோல்பாவை கூத்து . அ கா பெருமாள் .தன்னானே பதிப்பகம். விற்பனை உரிமை காவ்யா பதிப்பகம்[ தென் தமிழ்நாட்டில் மெல்ல அழிந்து வரும் தோல்பாவை கூத்தின் பலவிதமான சாத்தியங்கள், வரலாறு பற்றிய கள ஆய்வு . அழகிய பதிப்பு ]

13]நீல பத்மனாபன் எழுத்துலக விழுதுகள் தொகுப்பு அறிவர் அ சோமசுந்தரம் கலைஞன் பதிப்பகம் [நீலபத்மனாபனைப்பற்றி அறிய உதவக்கூடிய முக்கியமான தொகுப்பு]

14] கவிதையெனும் மொழி. தி சு நடராஜன் . சித்திரை நிலவு டி 28,மாநகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பெரியார் பேரெருந்து நிலையம் மதுரை ] கவிதையியல் பற்றிய மார்க்ஸிய ஆய்வு.

15] சிகரங்கள் வளவ துரையன் முத்து பதிப்பகம் 27,வில்லியம் லேயவ்ட் 2வது தெஉ கெ கெ சாலை விழுப்புரம்

[பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றி எளிய முறையில் ஆர்வமூட்டும் விதமாக அறிமுகம் செய்யும் நூல். மருதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு]

மொழி பெயர்ப்பு

===========

1] சேகுவேரா வாழ்வும் மரணமும் — ஜோர்ஜ் ஜி காஸ்டநாடா [விடியல்பதிப்பகம் 11பெரியார் நகர் மசக்காளிப்பளையம்,வடக்கு, கோயமுத்தூர் 15 www.vitiyal.com vitiyal2000@eth.com]

[தமிழில் சமீபத்தில் விற்பனையில் புயலைக் கிளப்பிய நூல் இதுதான். புரட்சியாளன் என்ற பிம்பத்தின் மிகச்சிறந்த உதாரணமான சே குவேரா பற்றிய மிக காத்திரமான ஆய்வு. அவரது பிம்பத்தை கட்டவிழ்ப்பதும்கூட]

2]ஏழாவது முத்திரை பர்க் மான் [வெங்கட் சாமிநாதன்] [தமிழினி பதிப்பகம்]

[உலகப்புகழ்பெற்ற திரைப்படத்தின் திரைக்கதை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ]

3 ] யாரோ ஒருத்தியின் கடிதம் — ஸ்டாபன் ஸ்வெய்க் தமிழாக்கம் ராஜ்ஜா

[ஸ்டாபன் ஸ்வெய்க்கின் புகழ் பெற்ற நாவலின் தமிழாக்கம் ]

4 ] தூய சேவியர் கடிதங்கள் [நாட்டார் வழ்ழக்காற்றியல் துறை , தூய சேவியர் கல்லூரி ,பாளையங்கோட்டை]

பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த ஜேசுசபை போதகரான தூய சேவியர் தன்னுடைய ச்க போதகர்களுக்கு எழுதியகடிதங்களின் மொழிபெயர்ப்பு. மகத்தான மனிதாபிமானி ஒருவரின் சித்தற்றத்துடன் அன்றைய அரசியல் சூழல் குறித்த தகவல்களையும் அளிக்கும் மிக அரிய நூல்

5] இயற்கையை அறிதல் [ எமர்சன் . தமிழாக்கம் ஜெயமோகன்] தமிழினி பிரசுரம்.எமர்சனின் nature என்ற கட்டுரையின் தமிழாக்கம் .அழகிய சிறு நூல்.

6 ]கடற்புறா . ரிச்சர்ட் பாஷ் . தமிழாக்கம் வி அமலன் ஸ்டேன்லி தமிழினி பிரசுரம்

[உலகப்புகழ்பெற்ற Jonathan Livingston Seagul என்ற கதையின் தமிழாக்கம் .]

7]யூஜினி பால்சாக் தமிழாக்கம் சி சு செல்லப்பா தமிழினி பிரசுரம்[ பால்சாக்கின் செவ்வியல் படைப்பு செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு மீண்டும் செப்பனிடப்பட்டுள்ளது.

8]பிறமொழிக்கதைகள் ஆர் சிவக்குமார் தமிழினி பிரசுரம் [கால்வினோ , மார்க்யூஸ் உள்பட பிரபல உலக சிறுகதையாளர்களின் முக்கியமான சிறுகதைகளின் தமிழ் வடிவம் ]

9]வீழ்த்தப்பட்டவர்கள் மையானோ அசுவெலா தமிழில் அசதா[மெக்சிகப்புரட்சியின் சித்திரத்தை அளிக்கும் நாவல்.[under dogs]தமிழ் வாசகனுக்கு வன்முறையின் மூர்க்கத்தை இப்படிப்பட்ட சில நாவல்கள் அளிக்க முடியும் ]

10வீரம் விளைந்தது .நிக்லாய் ஒஸ்தஒவ்ஸ்கிய் தமிழில் எஸ் ராமகிருஷ்ணன்[ பழைய நூலக அடுக்குகளில் அதிகம்பேரால் வாசிக்கப்படாமல் இருக்கும்நாவல்களில் ஒன்று இது . சக்ரவர்த்தி பீட்டர் போன்ற பெரும் நாவல்களை மொழியாக்கம் செய்த இடதுசாரி சிந்தனையாளரின் மொழிபெயர்ப்பின் மறுபதிப்பு ]

11] யாருக்குத்தெரியும் சகரியா தமிழாக்கம் எம் எஸ் தமிழினி பதிப்பகம் [ தமிழ்ல் சகரியாவின் ஏழாவது நூல் இது. அங்கதம், ஆன்மீகமான அமைதியின்மை ஆகிய இரண்டும் கலந்த கதைகள். கிறிஸ்து கதாபாத்திரமாக வரும் சகரியா கதைகள் சர்வதேச அளவில் எழுதப்பட்ட முக்கியமான படைப்புகளுக்கு நிகரானவை]

12] அமைதியான மாலைப்பொழுதில் உலகசிறுகதைகள் தமிழாக்கம் எம் எஸ் தமிழினி பதிப்பகம். உலகப்புகழ் பெற்ற கதைகள், உலகப்புகழ் பெறாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை என இக்கதைகளை சொல்ல முடியும்.

13] தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பும் மொழி பெயர்ப்பும் ஜெயமோகன் காவ்யா பதிப்பகம் [ 1991ல் வெளியான மலையாளக்கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் மறுபதிப்பு . நீளமான உணர்ச்சிகரமான கவிதைகள் இவை. ]

14] பச்சை இருளனின் சகா பொந்தன் மடா . தொகுப்பு கெ வி ஷைலஜா. அகரம் மனை எண் 1 நிர்மலா நகர் தஞ்சாவூர் 613007 [ தமிழ் கதைகளும் மலையாளக்கதைகளின் மொழிபெயர்ப்புகளும் அடங்கிய தொகுதி]

jeyamohanb@rediffmail.com

***

[நூல்கள் பெற இதில் அணுகக்கூடிய முகவரி

Dilipkumar[Book seller]

26/10 RK Mut Salai [I st floor]

Mylapore

Chennai 4

Ph 044 4952217 , 8216963

Dilipbooks@eth.net

***

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts