சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

செங்கொடி


இந்தியராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாள் ஒரு பொன்னாள் என்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்றும் இன்னும் பலவாறாக குறிப்பிடப்படும் சிறப்புமிக்க சந்திராயன்1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி காலை 6மணி22னிமிடத்திற்கு சந்திராயன்1 விண்கலம் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் பிஎஸ்எல்வி சி11 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவை நோக்கி பயணமாகிவிட்டது. அது குறைந்தது 250கிமி தூரத்திலும் அதிக அளவாக 23ஆயிரம் கிமி தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் பூமியை இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு அடுத்த இரண்டு வாரத்தில் நிலவை நெருங்கி 100கிமி தூரத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நிலவை சுற்றி வேண்டிய தகவல்களை அனுப்பும் வகையில் அந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறிவியல் முன்னேற்றம் என்ற வகையில் இதுவரை பூமியின் வான் எல்லை வரையில் மட்டுமே செலுத்தும் திறன் பெற்றிருந்த நிலையில் அதைத்தாண்டியும் செலுத்த முடியும் என்ற வகையில் நிச்சயம் மகிழ்ச்சிதான்.மகிழலாம். ஆனால் இதன் பயன் என்ன? எழுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் நாளொன்றை 20ரூபாய் வருவாயில் கழித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அறிவியல் ஆய்வுகள் எதை நோக்கியதாக இருக்கவேண்டும்? இது அந்தப்பெருமையைவிட முக்கியத்துவம் வாய்ந்த்தல்லவா?

சந்திராயன்1 விண்கலம் மூன்று நோக்கங்களுக்காக அனுப்பப்படுவதாக விண்கலத்தின் தலைமை இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவிக்கிறார். நிலவில் தண்ணீர் இருக்கிறதா என ஆய்வு செய்வது, தகவல் தொடர்புக்கு நிலவின் பங்களிப்பு எந்தவகையில் அமையும் என ஆய்வு செய்வது, ஹீலியம்3 பூமிக்கு கொண்டுவரமுடியுமா என ஆய்வுசெய்வது இவைகளுக்காக தொடர்ச்சியாக விண்கலங்களை அனுப்பவேண்டியது அவசியமாகிறது. தற்போது சந்திராயன்1க்கு 386 கோடி செலவாகியுள்ளது அடுத்து 2009 அல்லது 2010ல் சந்திராயன்2 விண்கலம் 425 கோடி செலவில் திட்டம் ஆயத்தமாகிவருகிறது. இதனைத்தொடர்ந்து 2015ல் நிலவுக்கு இருவரை அனுப்பிவைக்கும் திட்டமும் 12000 கோடி செலவில் திட்டமிடப்பட்டு ந‌டுவ‌ண‌ர‌சின் ஒப்புத‌லுக்காக‌ காத்திருக்கிற‌து. இதில் ச‌ந்திராய‌1க்கான‌ செல‌வுக‌ளை ப‌ற்றி குறிப்பிடும் போது நாட்டின் வ‌ருவாயில் 386 கோடி என்ப‌து 0.1 விழுக்காடுதான். அறிவிய‌ல் முன்னேற்ற‌த்திற்கு இது சொற்ப‌மான‌ செல‌வுதான் என்கிறார்க‌ள். ஓரிரு நாட்க‌ள் திட‌ர் ம‌ழை பெய்த‌வுட‌ன் சாலைக‌ளிலும் குடியுறுப்புக‌ளிலும் ம‌ழைநீர் வெள்ள‌மாக‌ தேங்கிவிடுகிற‌து, வ‌டிகால் வ‌ழிக‌ளை செப்ப‌னிட‌ அர‌சிட‌ம் போதுமான‌ நிதியில்லை என‌வே த‌னியாரிட‌ம் அளிக்கிறோம் என்று அடித்த‌ட்டு ம‌க்க‌ளுக்கான‌ திட்ட‌ங்க‌ளை த‌னியாரிட‌ம் தாரைவார்க்கும் அர‌சு இதுபோன்ற‌ மேல்த‌ட்டு ம‌க்க‌ளுக்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ளுக்கு த‌ய‌ங்காம‌ல் செல‌வு செய்வ‌து எப்ப‌டி? நில‌வுக்கு விண்க‌ல‌ங்க‌ளையும் ஆட்க‌ளையும் அனுப்புவ‌து த‌ற்கொலை செய்து கொள்ளும் விவ‌சாயியை த‌டுத்து நிருத்துமா? விண்வெளி ஆய்வினாலேயே த‌ன் பொருளாதார‌ வ‌ல்ல‌மையை இழ‌ந்த‌து சோவிய‌த் யூனிய‌ன். இன்றோ 90கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு கோடீஸ்வ‌ர‌ர்க‌ளை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச்செல்கிற‌து ர‌ஷ்யா. ப‌னிப்போரில் சோவிய‌த்தை வீழ்த்துவ‌த‌ற்கு ந‌ட்ச‌த்திர‌ போர்த்திட்ட‌த்திற்காக‌ விண்வெளி ஆய்வையும் நில‌வுப்ப‌ய‌ண‌த்தையும் மேற்கொண்ட‌ அமெரிக்கா ப‌னிப்போர் முடிவ‌டைந்த‌தும் அவைக‌ளை கைவிட்டுவிட்ட‌து. ஆனால் ச‌ந்திராய‌ன் விண்க‌ல‌த்தில் நாசாவின் இர‌ண்டு க‌ருவிக‌ளும், ஐரோப்பிய‌ விண்வெளி மைய‌த்தின் மூன்று க‌ருவிக‌ளும் கூட‌ அனுப்ப‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவைக‌ள் என்ன‌ க‌ருவிக‌ள்? எத‌ற்கான‌வை? அல்ல‌து வ‌ர்த்த‌க‌ நோக்க‌மா? என‌ இஸ்ரோ விள‌க்க‌வில்லையே ஏன்?

மின்சார‌ தேவைக‌ள் பெருகிவிட்ட‌து அத‌னால் அணு ஆற்ற‌ல் உட‌ன்பாடு நாட்டின் முன்னேற்ற‌த்துக்கு அவ‌சிய‌ம் தேவை என்ற‌வ‌ர்க‌ள், த‌ற்போது நில‌வில் ஹீலிய‌ம்3 கிடைக்குமா என‌ தேடிப்பார்க்க‌ விண்க‌ல‌ம் அனுப்புகிறோம் என்கிறார்க‌ள். அதாவ‌து அணுப்பிள‌வு தொழில்னுட்ப‌ம் ந‌ம‌க்கு போதாது அத‌னால் மின்சார‌ தேவைக‌ளுக்காக‌ அமெரிக்காவிட‌மிருந்து அந்த‌ தொழில்நுட்ப‌த்தை வாங்குகிறோம்‌ என்று கூறிய‌வ‌ர்க‌ள், அணுப்பிணைவு மூல‌ம் மின்சார‌ம் த‌யாரிக்க‌லாம் என்று அந்த‌ ஆய்வுக்கு ப‌ய‌ன்ப‌ட‌க்கூடிய‌ ஹீலிய‌ம்3யை தேடுகிறார்க‌ள் என்றால் அத‌ன் பொருள் அணுப்பிள‌வு தொழில்நுட்ப‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அணுப்பிணைவு தொழில் நுட்ப‌மும் ந‌ம்மால் இய‌ல‌க்கூடிய‌து என்ப‌து தானே. அணுப்பிள‌வைவிட‌ முன்னேறிய‌ தொழில்நுட்ப‌மான‌ அணுப்பிணைவு ந‌ம்மால் செய்துகாட்ட‌ முடியும் எனும்போது, ப‌ழைய‌ தொழில்நுட்ப‌மான‌, மேற்க‌த்திய‌ நாடுக‌ளால் கைவிட‌ப்ப‌ட்ட‌ தொழில்நுட்ப‌மான‌ அணுப்பிள‌வு மூல‌ம் மின்சார‌ம் பெறும் தொழில்நுட்ப‌ம் ந‌ம்மிட‌ம் இல்லை என்று அமெரிக்க‌ அடிமையாக‌த்துடித்தார்க‌ளே இந்த‌ முர‌ண்பாட்டுக்கு யார் பொறுப்பு?

உல‌கிலுள்ள‌ மொத்த‌ த‌ண்ணீர் வ‌ள‌த்தில் ஒரு விழுக்காடைத்தான் உல‌க‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திவ‌ருகின்ற‌ன‌ர். ஏனைய‌வை க‌ட‌ல் நீராக‌வும் துருவ‌ப்ப‌னியாக‌ உறைந்தும் கிட‌க்கிற‌து. அந்த‌ ஒரு விழுக்காடு நீரில் கால் ப‌ங்கிற்கும் அதிக‌மான‌ நீர் பெப்சி கோக் ஆகிய‌ இர‌ண்டு நிறுவ‌ன‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருக்கிற‌து. ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் நீரைப்போல் 99 ம‌ட‌ங்கு பூமியிலேயே இருக்க ம‌க்க‌ளின் தாக‌த்தை தீர்க்கும் நோக்கில் ஆய்வுக‌ள் மேற்கொள்வ‌தை விட்டுவிட்டு, ம‌க்க‌ளின் தாக‌த்திற்கு த‌ண்ணீர் த‌ர‌ ம‌றுக்கும் கொள்கைக‌ளை விர‌ட்டிய‌டிப்ப‌தை விட்டுவிட்டு நில‌வுக்கு த‌ண்ணீர் தேடி விண்க‌ல‌ம் அனுப்புகிறோம், ஆய்வு செய்கிறோம் என்ப‌து மோச‌டிய‌ல்ல‌வா?

பூமியின் வான்வெளியில் செய‌ற்கைக்கோள் குப்பைக‌ள் நிறைந்து சுற்றுகின்ற‌ன‌. உல‌கின் அனேக‌ நாடுக‌ள் த‌ங்க‌ளுக்காக‌ செய்ற்கை கோள்க‌ளை செலுத்தியிருக்கின்ற‌ன‌(சொந்த‌மாக‌வும், வாட‌கைக்கும், பிற‌நாட்டு உத‌வியுட‌னும்)த‌ட்ப‌வெப்ப‌ம் க‌ல்வி என‌ ப‌ய‌னுள்ள‌ செய‌ற்கைக்கோள்க‌ள் இருந்தாலும் உள‌வு பார்க்க‌வும், ராணுவ‌ நோக்கிலும், வ‌ர்த்த‌க‌ ந‌ல‌னுக்காக‌வும் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ கோள்க‌ளே ஏராள‌ம். இவைக‌ள் நிலையாக‌ த‌க‌வ‌ல் த‌ருப‌வை அல்ல‌. ஒருசில‌ ஆண்டுக‌ளில் அவ‌ற்றின் ப‌ய‌ன்பாடு முடிந்துவிடும். பின்ன‌ர் அவை குப்பையாகி வீணே சுற்றிக்கொண்டிருக்கும். இப்ப‌டியான‌ குப்பைக‌ள் விண்ணில் ஏராள‌ம் ஏராள‌ம். அப்ப‌டிய‌ல்லாம‌ல் நில‌வை நிர‌ந்த‌ர‌மான‌ செய‌ற்கைக்கோளாக‌ மாற்ற‌ முடியுமா? என்ற‌ ஆய்வும் ச‌ந்திராய‌னில் உண்டு.

இந்த‌ நோக்க‌ங்க‌ளில் எவை ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌க்கூடிய‌து? கால‌நிலை, சூழ‌ல் மாற்ற‌ங்க‌ளை அறிந்து கொள்வ‌து ம‌க்க‌ளுக்கு ப‌ய‌னுள்ள‌து இல்லையா என‌ சில‌ர் கேட்க‌க்கூடும். இன்தோனேசியாவின் க‌ட‌லுக்குள் நில‌ந‌டுக்க‌ம் ஏற்ப‌ட்ட‌தை நான்கு ம‌ணி நேர‌த்திற்கு முன்பே அறிந்திருந்தும் ஓங்க‌லை(சுனாமி) ஏற்ப‌டும் என‌ க‌ண்ட‌றிந்து ம‌க்க‌ளை காக்க‌ ப‌ய‌ன்ப‌ட‌வில்லையே இந்த‌ செய‌ற்கை கோள்க‌ள். 45 ஆண்டுக‌ளுக்கு முன்பே நில‌வுக்கு ஆள‌னுப்பும் வ‌ல்ல‌மை பெற்றிருந்த‌ அமெரிக்காவிற்கு, காத்ரினா சூறாவ‌ளி நியூஆர்லிய‌ன்ஸை சூறையாடிய‌ போது ம‌க்க‌ளை காக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடிய‌வில்லையே. அனால் நாடுக‌ளை உள‌வு பார்க்க‌ செய‌ற்கைக்கோள்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. அப்பையானால் விஞ்ஞான‌ முன்னேற்ற‌மே தேவையில்லையா? அப்ப‌டிய‌ல்ல‌, அறிவு வ‌ள‌ர்ச்சியும் அறிவிய‌ல் முன்னேற்ற‌மும் ம‌க்க‌ளுக்காக‌ ப‌ய‌ன்ப‌டுவ‌தாக‌ இருக்க‌வேண்டும். அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சி த‌னிம‌னித‌ ஆதாய‌ங்க‌ளுக்காக‌ ப‌ய‌ன்ப‌டுவ‌து த‌டுக்க‌ப்ப‌ட‌வேண்டும். அந்த‌ நோக்கில் இந்தியா நில‌வுக்கு விண்க‌ல‌ம் அனுப்பிய‌து ம‌க்க‌ளுக்கான‌ ப‌ய‌ன் பாட்டிற்காக‌ அல்ல‌. பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சு எனும் க‌ன‌வுக்கு துணை செய்வ‌த‌ற்கே. வ‌ர‌ட்டு கௌர‌வ‌த்திற்கே. இதில் பெருமைப்ப‌ட‌ ஒன்றுமில்லை. மெய்யாக‌வே அறிவிய‌ல் ஆய்வுக‌ள் ம‌க்க‌ளுக்காக‌ ப‌ய‌ன்ப‌டும் நோக்கில் ந‌க‌ரும் போது நிச்ச‌ய‌ம் பெருமைப்ப‌டுவோம். அத‌ற்காக‌ உழைப்போம்.

Series Navigation

செங்கொடி

செங்கொடி