This entry is in the series 20080117_Issue

மதியழகன் சுப்பையா



[1]

சாத்துக்குடி சாறுக்கு
மறுத்தாய்

பால் தேனீர்
வேண்டாமென்றாய்

பலகாரங்கள்
பிடிக்காதென்றாய்

சிற்றுண்டிக்கு
பார்வை கொளுத்தினாய்

முழுச்சாப்பாட்டிற்கு
இது நேரமில்லைதான்

பழங்களாவது…
‘ப்ப்ச்ச்’ என்றாய்

என்னத்தான் வேண்டுமென
கேட்டிருந்தால்
என்னைத்தான் வேண்டுமென
சொல்லியிருப்பாயோ

[2]

முடிவா என்ன சொல்கிறாய்
துவங்கும் பேச்சு

உறுதியாச் சொல்லு
விரல் நொடிப்பாய்

கடைசியா கேட்கிறேன்
பொறுமையிழப்பாய்

அப்படின்னா விட்டிரலாம்
எழுந்து கொள்வாய்

வந்த வேகத்தில்
திரும்பிப் போவாய்

கைப்பையில் கசங்கி
கிடக்கும் பூங்கொத்து

கால்ச்சட்டையில் கரைந்து
வழியும் சாக்லேட்

தொண்டையில் சிக்கித்
தவிக்கும் சொற்கள்


madhiyalagan@rediffmail.com

Series Navigation