சத்தியின் கவிக்கட்டு 4

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

சத்தி சக்திதாசன்


ஒரு மாலை அடித்த காற்றினிலே

அது ஓர்
அழகிய மாலைப் பொழுது
அந்தி வானம் சிவந்த
அதிசய நேரம்

நிமிர்ந்த நானும்
ஆலமரம் என்றே
அழைக்கப்பட்டேன்

கிளகள் பல கொண்டு
குடும்பமாய் நாம்
மகிழ்ந்திருந்தது அந்தப் பொழுது

எனது நிழலில் கூடுகட்டி
எளிமையானாலும் அழகாய்
என்றும் வாழ்ந்ததொரு பச்சைக்கிளி
ஜோடியே

கொஞ்சிப் பேசிக் களித்திருந்தத்தந்த
காதல் கிளிகள்
பச்சையுடம்பில் , சிவப்புச்சொண்டும்
கழுத்தைச் சுற்றியொரு
வண்ண வட்டம் இறைவன் படைப்பின்
அற்புதத்திற்கோர் எடுத்துக்காட்டே.

அழகான மாலையில் இதமாய்த்தான் ஆரம்பித்தது
இனிய தென்றலே
அதன் வரவால் எனது கிளையின்
இலைகளின்
அசைவால் இசைத்ததொரு
ராகத்தோடு காதல் பாட்டு
பாடியதந்த கிளிகளே

அந்த மாலை அதுவரை இனியதே !

எங்கிருந்தோ வந்ததந்த
கன்னங் கருமேகம்
மறைந்ததந்த அந்தி வானச் சிவப்பு

கொதிப்படைந்த தென்றலது
கொந்தளித்தே
கொடுஞ் சூறாவளியாய்
கொண்டதொரு கோலமே !

இளங்காதல் கிளிகளிரண்டும் கூட்டோடு
இழுத்தெறியப் பட்டதே – ஜயகோ
இசைபாடிக் கொண்டிருந்த என்மரத்து
இலைகள் எல்லாம் திசைமாறிப் பறந்தனவே

அடுத்ததொரு விசையுடன்
அடித்ததிந்த புயலினால்
ஆலமரம் நான் அடிவேரோடு
அறுத்தெறியப்பட்டு
அடிபட்டு விழுந்தேன் எனை வளர்த்த
அந்தப் பூமியின் மேல்

என் கிளயின் இடுக்கினிலே
உயிரற்று விழுந்திருந்த பெண்கிளியின்
உடல் மீது அடிபட்டுக் கிடந்ததந்த
உயிரான ஆண்கிளியே

வேதனையின் சிகரத்திலும்
‘வேண்டிய நேரத்திலே எமக்கு
வாழ இடமளித்த ஆலமரமே
உனக்கு என்னால்
உதவ முடியல்லையே ‘
கண்ணீரோடு கதை பேசிற்று
குற்றுயிரான கிளியதுவே!

‘எனது நண்பனே !
எதுவுமறியா எம்மை இந்தச் சூறாவளி
அழித்ததைப் போலவே
தவறிழைக்கா தமிழ்ச் சமுதாயம் ஒன்று
ஈழத்தில் ஒளியிழந்ததுவே,
இதுதான் காலத்தின் கோலம்
நாடும் , வீடும் , சுற்றமும்
இழந்த அந்தத் தமிழர்
இன்னல்களை இன்று நாம் அறிவோமே!
இயற்கை தந்த பாடத்தினால் ‘
அமைதியாய் ஆலமரம் பகன்றதுவே.

0000

தமிழே வரம் தா

தமிழே ! அன்று அன்னையெனக்கு அள்ளித் தெளித்த
தாலாட்டில் நின் அமுதான சுவையறிந்தேன்
குழந்தையாய்(க்) கானம் ஏட்டில் படித்து யான்
கழித்த காலங்கள் நின் பெருமையுணர்ந்தேன்
கன்னியவள் தன் கிள்ளைப் பேச்சில் உனை எடுத்து
காதல் எண்ணங்களினால் எனக்கு அமுதூட்ட
தட்டுத்தடுமாறி நானும் தமிழ் உனைக் கைத்தடியாக்கி
தவறாமல் ஏறிவிட்டேன் குடும்பமெனும் தோணிதனில்
முதுமையெனும் கடலினிலே ஆடி ஓடுமந்தத் தோணி
முப்பாலின் துணை கொண்டு கரைநோக்கிப் போகுமின்று
தவறாமல் நான் வேண்டுமிந்த தவம் ஒன்று இரந்திட்டேன்
தமிழ் நிந்தன் சுவையூறும் இன்பத்தைத் தினம் பருகி
காலமெல்லாம் என் கைகளில் தவழும் பேனா எழுதும்
கவியமுதம் வற்றத ஜீவநதியெனவே பாயும் வரமொன்று

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்