சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

நா.இரா.குழலினி.


சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள் முதல் கட்டுரைக்குப் பின்னர் சுமார் 15 மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன. அவற்றில் 8 கடிதங்கள் கட்டுரையைப் பாராட்டியும் 2 கடிதங்கள் மேலதிக விளக்கம் கேட்டும் மீதமுள்ளவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் மிக அதிகமான வசவுச்சொற்களை என் மீது பொழிந்தும் விமர்சித்திருந்தன. பொதுவாக இவற்றுக்கு எதிர்வினை எதுவும் செய்ய தேவையிருக்காத வகையில் தனிப்பட்ட கடிதங்களாகவே இருந்த நிலையில் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் கட்டுரை என்னை மீண்டும் இவை குறித்து எழுத வைத்தது. மேலதிக விளக்கம் கேட்டிருந்தவைகளில் திரு கமல் அவர்களின் பெயரையும் பாரதீய ஜனதா கட்சியையும் தொடர்பு படுத்துவது தவறாகும.¢ எனவே தாங்கள் குறிப்பிட்டிருந்தது தவறாகும் என்று விளக்கமளித்தன.

தாமரை சுட்டும் அடையாளம் என்பது ஒரு குறியீடாகத்தான் முதல் கட்டுரையில் பயன்படுத்தப் பட்டிருந்தது. அந்தப் பெயர் ஒரு இந்து அடையாளத்துடன் உள்ள பெயர்தான் மாறாக இஸ்லாமிய அடையாளத்துடன் உள்ள பெயர் அல்ல என்பதைச் சுட்டவே பயன்படுத்தப்பட்டது. அதே போலத்தான் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலும் குறியீட்டு முறையாகவே பயன்படுத்தப் பட்டது.

இரண்டாவதாக பிராமணீயம் என்கிற சொல்லாடலை, சாதிய அடையாளத்துடன் தொடர்புபடுத்திக் கேள்விகள் எழுந்தன. பிராமணீயம் என்கிற சொல்லாடல் சாதிய அதிகார அமைப்பு முறையைச் சுட்டும் சொல்லாகத்தான் இதுவரை பயன்படுத்திவரப்படுகிறது. தனிநபர்களின் பிறப்பு அடையாளமாக அல்ல. தனிநபரின் பிறப்பு அடையாளங்களையும் அவர்களின் வாழ்நிலையையும் இணைத்துப் பேசுவது மீண்டும் மனுவின் குரலின் மறு ஒலிபரப்பாகவே இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இதே சிக்கல் ஐம்பதுகளில் எழுந்தபோது திரு,சீனிவாசன் போன்றோர் ‘சமஸ்கிருதமயமாதல் ‘ போன்ற மாற்றுச் சொல்லாடலைப் பயன்படுத்தினர். சாதிப்படிநிலையில் தனக்கு மேல் படியிலிருக்கும் சாதிய கலாச்சார முறைமைகளை அடுத்த படியிலிருக்கும் சாதிய அமைப்பு முறை ‘போலச் செய்ய ‘ முயல்கிறது என்பதாக சமஸ்கிருதமயமாதல் படிநிலைக்கு விளக்கமளித்தார் அவர் (ஒப்பு நோக்க 2003 ஆண்டு நவம்பர் மாத இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த சமஸ்கிருதமயமாக்கப் படும் கன்னியாகுமரி நாடார்கள் கட்டுரை).

ஆனால் இன்றைய சாதியப் படிநிலை என்பது மேல் நோக்கிய நகர்வை ஒத்துக் கொண்டு தமக்குக் கீழுள்ளவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முறையாகவே திகழ்ந்து வருகிறது. இதற்கு நான் எண்ணற்ற உதாரணங்கள் கொடுக்க முடியும்

1. மள்ளர்¢ மலர் இதழ் ஆசிரியர் தலித் முரசு இதழுக்கு எழுதிய கடிதத்தில் தேவேந்திரர் அல்லது பள்ளர் என்பதான தமது சாதியை தாழ்த்தப்பட்ட சாதியாக இனங்காணப்படுவதை எதிர்த்தும் ‘உங்களுடன் எங்களைச் சேர்க்காதீர்கள் ‘ என்பதாகவும் எழுதியிருந்தார்.

2விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியிக்கு அருகே உள்ள கரடிச்சித்தூரில் பறையர் என்கிற ஒடுக்கப்பட்ட சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறுபான்மையினராக வசிக்கும் அருந்ததியப் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டது குறித்து தலித் முரசு இதழில் செய்தி வெளியிடப்பட்டது. அந்த இதழாளர்கள் பல்வேறு சமூகப் பணியாளர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் துயர்துடைக்க சென்றதும் உண்மை கண்டறியும் குழுவினை ஏற்படுத்தி அவர்களுக்காக போராடியதும் அதன் பின் நிகழ்தவை.

3.பார்வைத்தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட நாடார்கள் தங்களின் தோள்சீலைப் போராட்டத்தின் நினைவுகளை மறந்து தலித்துகளுக்கு எதிராகச் செயல்படும் குமரி மாவட்ட செய்திகள்.

4. முக்குலத்தோர் என்று அறியப்பட்டாலும் கூட அகமுடையோர் எனப்படும் உட்சாதி பிறமலைக் கள்ளர்கள் எனப்படும் பிரான் மலைக் கள்ளர்களையோ ஆப்ப நாட்டு மறவர்களையோ ஏனைய முக்குலத்து உட்சாதிகளில் உள்ள விரல் ரேகைச் சட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களை எப்போதும் இணையாக நடத்துவதில்லை.

எனவே இந்தப் போக்கினை வகைப்படுத்தத்தான் பிராமணீயம் என்கிற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விதமான சாதி அடையாளச் சிக்கல் வரும் நிலையில் இதற்கு மாற்றாக இனி நான் ஆதிக்கச் சாதியம் என்ற சொல்லாடலின் மூலம் அழைக்கிறேன்.

ஞானக்கூத்தன் அவர்களின் பங்காபுல்லர் கவிதை ஆதிக்கச் சாதியக் கருத்துக்களை கொண்டிருந்ததால், அதற்கு கமல் என்ன செய்வார என்பது அடுத்த கேள்வி .ஞானக்கூத்தன் இளையபாரதியின் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞரின் கரத்திலும் வாஜ்பாயின் கரத்திலும் ஒரே விதமான ஸ்பரிசத்தையே உணருகிறேன் என்று சொன்னதுதான் சிக்கலின் மையப் புள்ளி (அந்தக் கருத்தில் உண்மை இருந்தது என்பது வேறு விசயம்). இந்தக் கருத்துக்கான எதிர்வினையாகத்தான் அன்றைக்கு கவிஞர் அப்துல்ரகுமான் பேசினார். இவை குறித்து திரு.ஜெயமோகன் தமது எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் ஏற்புரையாகப் பேசியது பின்வருமாறு

அந்தமேடையில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியபேச்சுதான் என்னை எதிர்வினை செய்ய வைத்தது. அந்தமேடையிலேயே பண்பாட்டுடனும் நிதானத்துடனும் பேசிய இருவர் மு.கருணாநிதியும் அப்துல் ரகுமானும்தான். அப்துல் ரகுமான் மிகுந்த நாசூக்குடன் அதைச் சொன்னாலும் அந்த குற்றச்சாட்டு முக்கியமானது . அவர் உள்பட திராவிட இயக்கம் உருவாக்கும் எழுத்து 97 சதவீதம் என்றும் சிற்றிதழ் எழுத்தாளர்களும் முற்போக்கு எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதும் எழுத்து 3 சதவீதம் என்றும் அவர் சொன்னார். அந்த 3 சதவீதம் மற்றவர்கள் இலக்கியவாதிகளே அல்ல என்று தங்களுக்குள் முணு முணுத்துவந்தார்கள். மு கருணாநிதியின் இலக்கிய சாதனைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இப்போது இளையபாரதி ஒரு பெரிய படைப்பாளி என்று சொல்கிறார்கள். கருணாநிதியை இலக்கியவழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் சொல்கிறார்கள். அந்த 3 சதவீதம் இறங்கி வந்திருக்கிறது . இப்போதாவது அவர்களுக்கு இது புரிந்தது நல்லதுதான் என்றார் ரகுமான்… அதற்கு மேலும் நாசூக்காக மு கருணாநிதி பதில் சொன்னார். அவர்கள் நம் ஆதரவை அங்கீகாரத்தைக் கேட்டு வந்திருக்கிறார்கள் அவர்களை புண்படுத்தாமல் இருப்பதே முறை என்றார் அவர்.

இதற்குப் பின்தான் தனது ‘வரலாற்று முக்கியத்துவம ‘¢ வாய்ந்த கருத்தைச் சொன்னார் அவர். ‘திரு.மு.கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்து தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவையல்ல ‘ என்று.

இப்படி ஞானக்கூத்தன் அவர்களின் கருத்தியல் தளம் இருக்கும் போது கவிதைக்குக் கீழே அது தனது சொந்தக் கருத்து என்று அவர் கூறியிருந்தாலும் அதை மறுப்பது ஒரு கலைஞனின் உன்னத மாண்பாகவே இருக்க வேண்டும். உதாரணமாகச் சொல்கிறேன். ஜெர்மனியில் ஹிட்லர் அன்றைய புகழ்மிக்க திரைப்பட இயக்குனரின் திரைப்படத்தினைப் பார்த்துவிட்டு எனது கொள்கைகளை உங்கள் படம் தனக்குள் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன் என்றதற்கு உடனடியாக அவர் ஜெர்மனியை விட்டு வெளியேறி இப்படி ஒரு கருத்து அதைப் பார்த்து உருவாயிருக்குமானல் தயைசெய்து அந்தத் திரைப்படத்தை அழித்து விடுங்கள் என்று மனம் நொந்து கூறினார் ஆனால் அதற்கு மாறாக திரு.கமல் 16/1/2004 அன்று ஜெயா தொலைக்காட்சியில் ‘உன்னை விட ‘ எனத்துவங்கும் தான் எழுதிய பாடல் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ஆலோசனைக்குப் பின்னே முழுமை பெற்றது என்கிறார்.

அடுத்த கேள்வி திரு.இளையராஜா மற்றும் திரு.கமல் இருவருக்குமான நட்பு தொடர்பானது. எப்படி ஒரு பிராமணப் பெண்ணுக்குப் பிறந்ததினால் மட்டும் அந்தச் சாதி அடையாளம் ஆதிக்கச் சாதியம் தொடர்பானது அல்ல என நாம் கருதுகிறோமோ அப்படியே பிறப்பினால் ஒரு ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்துடன் பிறந்தவரா இல்லையா என்பதாக இல்லாமல் அவர் ஒடுக்கப்படுவதற்கு எதிரான கருத்துத் தளத்தில் இயங்குகிறாரா என்பதுதான் கேள்வியே. மிகச் சிறந்த இசையறிஞராக படைப்பாளியாக அவர் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இளையராஜாவின் கருத்தியல் தளம் முழுவதுமாக ஆதிக்கச் சாதியத்தளத்தின் கலாச்சார மதிப்பீடுகளை மேற்கொள்ளும் தளமாகவே இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஆதிக்கச் சாதியமும் இந்துத்துவாவும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தக் கூடியவை, உதாரணமாக இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவில் ஆரிய சமாஜம் மேற்கொண்ட தாய்மதம் திரும்பும் மதமாற்றச் சடங்கு முழுவதுமாகத் தோல்வியடைந்து ஏனெனில் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்த சாதி அடுக்கில் சேர்ப்பது என்கிற சிக்கல் எழுந்ததால் அன்றைக்கான வைதிக வெறியர்களாலேயே அது தீவிரமாக எதிர்க்கப் பட்டது. சாதித் தூய்மையை முன்வைத்து இரத்தக் கலப்பை விரும்பாதது இந்து மதம் அதனால்தான் நெடுநாட்களாக மத போதனையையும் மத மாற்றத்தையும் இந்து மதம் முன்வைக்க வில்லை என்கிறார் திரு. அம்பேத்கார். சமீபகாலமாக இயங்கிவரும் ஹரேராமா ஹரேகிருஷ்ணா இயக்கத்தின் இயங்குதளமே சாதி அடையாளங்கள் இல்லாத வெளிநாடுகள் என்பதும் இங்கே ஒப்புநோக்கத் தக்கது. இந்த ஆதிக்கச் சாதியம்தான் இந்தத் தூய்மைவாதம்தான் இந்து மத அடிப்படைவாதத்திற்கு அடிப்படையாக விளங்கி இந்தியாவில் சிறுபான்மையினருக்கும் எதிராக இயங்குகிறது

அதனால்தான் இந்து மதத்திலிருந்து பெளத்த மதத்திற்கு மாறுவதன் வாயிலாக சாதிய மறுப்பை முன்வைத்தார் திரு.அம்பேத்கார். அதே நிலையில் சாதிய மறுப்பை சாதி மறுப்புத் திருமணங்கள் மூலமாகவும் மத மறுப்பை நாத்திக வாதத்தாலும் ஒரே சமயத்தில் எதிர்த்தார் திரு. பெரியார். ஆனால் இரண்டு முறைகளும் எதிர்பார்த்த வெற்றியைப் பெரிதும் தரவில்லை என்பதே வரலாறு சுட்டும் உண்மை. எனவே சமூக கலாச்சார மற்றும் உற்பத்தி முறைகளில் நிகழும் மாற்றம் மட்டுமே இவற்றை எதிர்த்து நின்று முறியடிக்கக் கூடியது என்பது திண்ணம். இது குறித்த மேலதிக விவாதங்கள்Caste, Land and Class போன்ற புத்தகங்களில் உள்ளன.

அவர் செய்யும் எத்தனையோ நற்செயல்களைப் பாராட்டத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் திரு.கமல் அவர்களை நான் விமர்சிப்பதாக கண்டனங்களை சில கடிதங்கள் சுமந்து வந்தன. நான் எப்போதும் தனிப்பட்ட அவரின் வாழ்க்கை மீதோ அன்றி அவரின் வாழ்முறை மீதோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பாளியாக அவரின் படைப்பையும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் கருத்தியல் தளத்திலான மதிப்பீடுகளையுமே விமர்சித்தேன். சினிமா போன்ற வெகுசன ஊடகத்தின் பெரு வலிமையின் பின்புலத்தில் இயங்கும் ஒரு படைப்பாளி வேற்று ஊடகங்களில் தமது கருத்தினை வெளிப்படுத்தும் போது மிகக் கவனமான உணர்வுடன் செயல்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. அந்தக் கருத்துக்கள் அவரது தனி மனித உணர்வு நிலையாக இருக்கலாம் ஆனால் சமூகத்தின் கருத்தியல் தளங்களில் அவை மேற்கொள்ளும் வினை மிக அதிகமாக இருக்கும் என்பதால்தான் அவரது பேட்டிகளையும் சேர்த்து விமர்சிக்க வேண்டியதாக இருக்கிறது.

இப்போது தோழர் யமுனா ராஜேந்திரன் கட்டுரைக்கு வருவோம். அவருடைய முழுக் கட்டுரையையும் படித்தபின் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது இயக்க மறுப்பியல் சிந்தனை பற்றி திரு.ஏங்கெல்ஸ் (Anti-During, F.Engels) அவர்களின் கட்டுரை. ‘முதற் பார்வைக்கு இந்தச் சிந்தனை முறை மிகவும் அறிவார்த்தமாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில் இது மிகச் சாதாரணமான பொது அறிவாகும். ஆனால் தனது நான்கு சுவர்களுக்குள் செளகரியமாக இருந்து கொண்டிருக்கும் இந்த நம்பகமான பொது அறிவு, ஆராய்ச்சி எனும் விரிந்த உலகினுள் காலடி எடுத்து வைத்த உடனேயே வியக்க வைக்கும் விநோதமான அனுபவங்களைŠ பெற நேர்கிறது. இந்த முறை விரைவில் ஒரு வரம்பை எட்டி விடுகிறது. இந்த வரம்புக்கு அப்பால் ஒரு தலைச் சார்பபானதாய் குறுகிய வரையரைக்குள் உட்பட்டதாய் அருவமானதாய் தீர்க்க முடியாத முரண்பாடுகளுக்குள் சிக்குவதாக மாறுகிறது. தனிப்பட்ட பொருட்களில்(விஷயங்களில்) சிந்தனை செலுத்துகையில் அவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மறந்து விடுகிறது. அவற்றின் இருத்தலில் சிந்தனை செலுத்தும் போது அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்து விடுகிறது. அவற்றின் அசைவின்மையில் சிந்தனை செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்து விடுகிறது. தனித்தனி விவரங்கள் மீது சிந்தனை செலுத்தி முழுமையைப் பார்க்கத் தவறி விடுகிறது. ‘.

எத்தனையோ ஆணாதிக்கச் சிந்தனைகளையும் சிறுபான்மையினர் விரோதப் போக்கையும் சாதிய ஆதிக்கச் சிந்தனைகளையும் வளர்த்து வரும் படைப்புகளை வழங்கும் நபர்களை விமர்சிப்பதை விடுத்து திரு.கமல் அவர்களை விமர்சிப்பது எந்த விதத்தில் சரி என்று கேட்கிறார் அவர். கூடுதலாக திரு.கமல் அவர்களை எவ்விதத்திலும் விமர்சிப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரானதாகவே இருக்கும் என்றும் முடித்திருந்தார். சிக்கலே இங்குதான் துவங்குகிறது. குப்பைப் படைப்புகளை வழங்கும் நபர்களை அவர்கள் படைப்பாளிகள் என்று கூடச் சொல்ல முடியாது நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவர்கள் முழுமையாக எதிரியின் கூடாரத்திலிருப்பவர்கள் என்று முடிவெடுத்து நம்மால் செயல்பட முடியும்.

ஆனால் திரு.கமல் அவர்கள் அப்படியா ? லேசர் கற்றையைப் போன்ற கூர்த்த தொழில் நுட்பத் திறமையும் இன்றைய படைப்பாளிகளில் (படைப்பாளிகளைப் பற்றிப் பேசுகிறேன் குப்பைகளை அல்ல) மிக விரிந்த தீவிர வாசிப்புப் பயிற்சியும் சர்வதேச அளவில் நிகழும் திரைப்படங்களின் போக்கு பற்றிய நுட்பமான விமர்சனப் பார்வையும் உலகளாவிய தொழில்நுட்பக் கூட்டுறவும் கொண்ட திரு.கமல் போன்ற படைப்பாளிகள் வணிக சமரசங்களுடன் சிக்கலை எதிர்கொள்ளாது நழுவிவிடும் போக்குதான் கேள்விக்குள்ளாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சோதனைகளைச் செய்யத் துணிவிருக்கும் அவருக்கு கருத்தியல் தளத்தில் சோதனைகளை செய்திட முயற்சி செயயத் துவங்கி ஆனால் அதை நேர்கொள்ளத் துணிவில்லாமல் முழுச் சமரசத்துடன் பின்வாங்கிச் செல்வது ஏன் என்பதுதான் கேள்வி. முதற் கட்டுரையின் ஆதார நோக்கமும் அதுதான்.

அர்த் சத்யா படத்தில் கோவிந்த் நிகால்னியின் முழு நேர்மையான வெளிப்பாட்டை அந்தப் படத்தை குருதிப்புனல் என மறுஉருவாக்கும்போது திரு.கமல் அவர்களால் வெளிப்படுத்த முடிந்ததா ?¢ இந்தக் கேள்விக்கான பதிலை தேர்ந்த திரைப்பட விமர்சகரான உங்களிடமே விட்டு விடுகிறேன். இறுதிக் காட்சிகள் நிகழ்த்தும் மதிப்பீட்டு முறை திரைப்படம் இயங்கும் முழு நேரமும் ஏற்படுத்தும் சமூக உளவியல் மதிப்பீடுகளை மீள்கொண்டு விடுமா ? இதென்ன குழந்தைகளுக்கான நீதி சொல்லும் கதைகளா ? கடைசியில் கதையை முடித்தவுடன் இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்று வினவ. அப்படித்தான் என்று வைத்துக்கொண்டால் அன்பே சிவம் திரைப்படத்தின் ஆரம்பத்தில் துவங்கி போராடி உச்சபட்சமாக பெற்றுத்தருவதாக அமைகிறதே கூலி உயர்வு அதுதான் தொழிற்சங்கங்களின் நோக்கமா ? எனக்குத் தெரிந்தவரை நான் கற்றுக் கொண்ட வரை தொழிற்சங்கங்களின் நோக்கம் தொழிலாளர்களை வர்க்க அரசியல் ரீதியாக அரசியல் படுத்துவதற்காகத்தான் இயங்கிட வேண்டும.¢ கூலி உயர்வு உரிமைக்கான போராட்டம் என்பவை அனைத்தும் இடை இயங்கும் சிறு சிறு கூறுகள்.

இன்றைக்கு உலகமயமாதல் விளைவாக ஏற்பட்டிருக்கும் பல்வேறு வாழ்வியல் சிக்கல்களை, பன்னாட்டு நிறுவனங்களின் வெகு கொடூர ஆதிக்க வெறியின் விளைவாக நிகழும் பட்டினிச் சாவுகளை எதிர்த்து முழு வீச்சுடன் கேள்வி கேட்க வேண்டிய படம் அன்பே சிவம் என்று முடிகிறது. பிரளயனின் வீதி நாடகப் பாடல் சொல்லும் செய்தியைக் கூட ஏனைய காட்சிகள் சொல்லவில்லை. ஆனால் அதே நேரத்தில் விருமாண்டி திரைப்படம் வெளியாவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் வெளிவந்த ஆனந்தவிகடன் இதழில் திரு.கமல் அவர்களின் பேட்டியில் இராக்கின் முன்னாள் அதிபர் திரு.சதாம் உசேன் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப் போவதாக இருப்பதைப் பற்றி பேச்சு எழுந்தவுடன் மரண தண்டனை கொடுக்கக் கூடாது அதற்குப் பதிலாக மிக நீண்ட சிறைத்தண்டனை கொடுக்கலாம் ஒரு கூண்டில் அடைத்து வேண்டுமானால் பாக்தாத் நகர வீதிகளில் நிறுத்தி வைக்கலாம் என்று கூறுகிறார். தம்மை பேரரசாக பிரகடனம் செய்து கொள்வதற்கு வசதியாக உலக நாடுகளின் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறிய அமெரிக்காவின் வல்லாதிக்கத்தைப் பற்றி ஏன் அமொரிக்கா என்கிற ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை அவர் ஆனால் கொச்சியில் நடந்த அமெரிக்க எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டு வீர உரையாற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.. இப்போது எதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வது ?. தொழிற்சங்கங்கள் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதாகவா அன்றி அமெரிக்காவின் வல்லாதிக்கம் குறித்து ஒன்றும் தெரியாது என்பதாகவா ? விருமாண்டியில் மரணதண்டனை கூடாது என்கிற செய்தி இருக்கிறது என்கிற காரணத்திற்காக ஏனைய எதைப்பற்றியும் அக்கறையற்றுப் பேசுவதை நாம் விருமாண்டி படத்தின் வணிக வெற்றியுடன் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

அவருடைய எழுத்தில் உருவான நளதமயந்தி படத்தில் வெள்ளையினத்தவருக்கும் இந்தியர் போன்ற பழுப்பினத்தவருக்கும் ஆப்பிரிக்க கறுப்பினத்தவருக்கும் நிகழும் மிக நுட்பமான அடையாள அரசியலைக்கூட பதிவு செய்யத் தெரிந்த திரு.கமல் அவர்களுக்கு அடையாள அரசியல் தெரியாதா ? தெரியாது அல்லது அடையாள அரசியல் குறித்த அறியாமைதான் உண்டு என்று என்னால் நம்ப முடியவில்லை. பாய்ஸ் படம் வெளிவந்த போது வெளியான இந்தியா டுடே இதழில் பாய்ஸ் படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவை போன்றவற்றை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும.¢ இந்தியன் படத்தில் நான் நடிக்கும் போது கூட நிறைய வசனங்களை நான் தவிர்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார். ஏனையோர் படங்களிலேயே தவிர்க்க முடிந்த அவரால் தம் சொந்த எழுத்தில் உருவான தேவர்மகன் திரைப்படத்தில் வரும் போற்றிப் பாடடி பெண்ணே பாடலைத் தவிர்த்திருக்க முடியாதா ? உண்மையில் ஆதிக்கச் சாதியத்தின் கூறுகளைத் தாங்கி வரும் படங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களை மட்டும் மையப்படுத்தி வந்தாலும் அவற்றின் வாயிலாக வெளிப்படும் கருத்துத்தளம் ஆதிக்கச் சாதிய வகுப்பின் சமூக உளப்போக்கினை தட்டிக் கொடுத்துத் தீனி போடுவதாக அமைகிறது. கதையின் நாயக நாயகி எனும் மாந்தர்களுடன் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் பார்வையாளர்கள் நாயக நாயகிகளின் சமூக உளப்போக்கினையும் தனக்குப் பொருத்திப் பார்த்து நிறைவுறுகிறார்கள். அதனால்தான் தேவர் மகன் திரைப்படம் தேவர் சாதியமைப்பின் அடர்த்தி நிரம்பிய தென்தமிழகம் தாண்டிய பகுதிகளிலும் வெற்றி பெற்றது. கவுண்டர் சாதியின் பெருமை பேசும் படங்கள் கொங்குப் பகுதியைத் தாண்டியும் வெற்றி பெற்றன. அற்புதமான மசாலாக் கலவையில் வறுத்துத் தரப்பபடும் ஆதிக்கச் சாதியத்திற்கு மிகப் பிடித்த சுவை மிகுந்த மனிதக் கறி.

ஹேராம் திரைப்படத்தில் காந்தியாரின் பெரிய படம் பின்னணிக் காட்சியில் இருப்பதாக நிறைவுறுகிறது. அந்தக் குறியீடு சொல்லும் செய்தி என்ன ? மித இந்துத்துவம். காந்தியாரின் தத்துவப் பின்புலம் தர்மகர்த்தா முறையில் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வது என்பதில் இருந்து துவங்குகிறது. 1940களுக்கு முன்பான காந்தியாரின் பார்வையும் நாற்பதுகளுக்குப் பின் அவர் இறப்பு வரையிலான பார்வையும் மிகத் தீவிரமாக வேறுபட்டவை. மதமாற்றங்களுக்கு எதிராக மிகத் தீவிரமாகக் கருத்துச்சொன்னதோடு அம்பேத்காருக்கு எதிராக எரவாடா சிறையிலே உண்ணாவிரதம் இருந்தார்.அவர் அரிசனம் என்கிற மாற்றுக் கருதுகோளை முன்வைத்தார் ஆனால் இறுதியில் நவகாளியின் போது அவர் ஆற்றிய பணி அளப்பரியது. அந்தப் பணியின் காரணமாக ஏற்படத் துவங்கிய சமூக நல்லிணக்கத் தன்மையைத் தாங்கமுடியாமல்தான் அவர் இந்து வெறியமைப்புகளால் கொல்லப்பட்டார். அதாவது இந்து மதத்தில் இருந்து கொண்டு அதன் மகோன்னதங்களைக் குறித்த புளகாங்கிதங்களுடன் வாழ்வதும் சாதி அடுக்குமுறைக்கு எதிராக எதிர்க் கலாச்சாரப் பதிவுகளுக்குப் பதிலாக வேற்று அடையாளங்களை முன்வைப்பதுமான சமரசம். எனவேதான் அது மித இந்துத்துவம். ஜெண்டில்மேன், பாய்ஸ் ரோஜா மற்றும் பம்பாய் போன்ற படங்களினால் மணிரத்னம் சங்கர் போன்றோரை இந்துத்துவ வாதிகள் என்று நம்மால் வகைப்படுத்த முடிகிற போது திரு.கமல் போன்றோரைக் குறித்து அந்த வகைப்பட்ட கருதுகோளுக்கு நம்மால் வரமுடியாமல் போவதற்குக் காரணம் இவை போன்ற மிக நுட்பமான சமரசங்கள்தான். நீ எந்தப் பகுதியையும் சாராதவன், பொதுவில் இருப்பவன் என்று சொன்னால் நீ எதிரிதான் என்பார் லெனின்.

திரு.கமல் அவர்களின் படங்களில் வரும் காதல் காட்சிகளின் காதல் வாழ்வியல் இன்பத்தின் அதியற்புதப் பதிவுகள் பற்றிப் பேசுகிற கட்டுரையாளர் பாய்ஸ் படத்திற்கு அதை ஒப்பிடுகிறார். அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தாது என்பது பொதுவான அடிப்படை அறிவியக்க விதி என்பதை அவர் மறந்துவிட்டாரா ?( திரு.கமல் அவர்களின் பெண்ணியம் தொடர்பான பார்வை குறித்தும் முத்தக்காட்¢சிகளைக் குறித்தும் பேசுவதானால் 9/1/2004 தேதியிட்ட குங்குமம் பேட்டியில் படித்துக் கொள்ளவும்.)

பால் ஈர்ப்பு என்பதென்ன ? அது மனிதர்களின் அடிப்படையான உணர்வு மற்றும் தேவைகளில் ஒன்று. இருபாலாருக்கும் பொதுவான ஒன்று. பொதுவானது மட்டுமல்ல சமமான ஒன்று. அந்த ஈர்ப்பும் அதன் விளைவான மகிழ்வும் தனிப்பட்ட அந்த இரு நபர்களுக்கு இடையிலானது. அதில் எதெல்லாம் அடங்கும் ? உடல் தேவைகள் மிகவும் முக்கியமானது, அடிப்படையானது. ஆனால், அங்கேயே அது முழுமையடைந்துவிடுவதில்லை. அது அந்த இரண்டு பேரின் மனம் தொடர்பானது. இந்த இரண்டு விஷயங்களும் அந்தரங்கமானவை. அந்த இரண்டு நபர்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள். மூன்றாவதாக, காதல் சமூகம் தொடர்பானது. ஏனெனில் மனிதர்கள் சமூகத்தில் வாழ்கிறார்கள். ஆனால், மனிதர்களின் பாலுறவு நடவடிக்கைகள் அதாவது உடல் தொடர்பான தேவைகளின் நிறைவேற்றம் மற்ற இரண்டு அம்சங்களின் ஒத்திசைவின் போது மட்டுமே நிறைவு பெறுகின்றன. பெருமளவு தீர்மானிக்கவும்படுகின்றன. விலங்குகள் உடலால் ஆனவை, மனித இனம், அடிப்படையில் மனதால் ஆனது. மனிதனின் பாலுறவு உடல் மற்றும் உடல் தேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. பாலுறவை வெறும் உடல் உறவாகச் சித்தரிப்பது நிலவும் சமூக அமைப்பின் கேடுகளில் ஒன்று. மனிதரைச் சிறுமைப்படுத்தும் காரியத்தை அது செய்கிறது. எனவே, பால் ஈர்ப்பை உடல் ஈர்ப்பு கவர்ச்சி என்று ஆக்குவதையும் அதனைக் கலையாக்குவதையும் கொச்சையானது, இழிவானது. மனமொருமித்த காதல் உள்ளங்களின் பாலுறவு விழைவு என்பது வாழ்வியல் எதார்த்தம்தானே அதனால் அத்தகைய விசயங்களையும் பதிவுக்குட்படுத்தினால் என்ன என சிலர் கேட்கக் கூடுமல்லவா ? இதில் சமரசம் என்றால் நீலப்படங்கள் பொதுச்சந்தைக்கு வந்துவிடாதா ? அகிரோ குரோசேவாவின் இகுரு திரைப்படமும் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய ரஷ்யாவின் ஆஃபிஸ் அஃபேர் திரைப்படமும் இவை போன்ற காதல் உணர்வுகளைப் படமாக்கியிருந்தன. அதற்குப் பெயர்தான் அற்புதம்.

இவை போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் சிக்கல் குறித்த தரவுகள் தரமுடியுமா என்று வினவியுள்ளார் கட்டுரையாளர். மதுரையில் ஒரு குறிப்பிட்ட சிகையலங்காரக்கடையில் விருமாண்டி அமைப்பில் மீசை வைத்துக்கொள்பவர்கள் ஒரு நாளுக்கு பத்து பேருக்கும் அதிகம் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது மதுரைப் பதிப்பு மாலைமுரசு. இந்தச் செய்தி சொல்லும் கலாச்சாரச் சிக்கலும் சமூக உளவியல் மதிப்பீடுகளும் எவை குறித்தவை ? குஜராத்தில் வாழும் சிறுபான்மையர் உளவியல் மிகக்கொடுமையான முறையில் முற்றுகையிடப்பட்டவர்களின் கையறு மனநிலையில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. இதைப் போன்ற மதிப்பீடுகளுடன் திரியும் நபர்களின் எண்ணிக்கை கூடும் நிலையில் அதைக் காணுறும் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனோநிலைக்கு என்ன விதமான மாற்றம் நேரும் ? மேலவளவும் திண்ணியமும் புளியங்குடியும் குடிதாங்கியும் மனித மலக்கரைசலை வாய்க்குள் ஊற்றிய மேலூரும் பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும் எப்படி நிகழ்ந்தன. இவை போன்ற சிக்கல் மிகுந்த சூழலில் ஒரு சமூகக் கடமையுணர்வு கொண்ட படைப்பாளியின் படைப்பு எப்படி இருக்க வேண்டும் ?

தலித் சிந்தனை குறித்த விழிப்புணர்வு தேவர் மகன் படம் வெளிவரும்போது இல்லை எனக் கட்டுரையாளர் கூறுகிறார். இம்மானுவேலின் கழுத்து அறுபட்டுக் கிடந்த அளவுக்குச் சிக்கல் மிகுந்த நிலை நிலவிய காலத்தில் தலித் சிந்தனை இங்கே இல்லாமல் போனதா ? பெரியார,¢ அயோத்திதாசர,¢ ரெட்டைமலை சீனிவாசன,¢ தஞ்சைப் பூமியில் நிகழ்ந்த கீழ்வெண்மணியில் உடனடியாகச் சமரில் இறங்கி களங்கண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இவர்களெல்லாம் தலித் நிலைப்பாட்டுடன் தமிழகச் சூழலில் களப்பணியாற்றவில்லையா ?

விருமாண்டி படத்தில் ஆவணத் தொகுப்பாளராக ஆய்வாளராக வரும் ஏஞ்சலா காத்தமுத்துவிடம் துணை ஜெயிலர் பேய்க்காமன் ஏஞ்சலாவின் சொந்த ஊர் குறித்துக் கேட்கும் கேள்விக்கு தஞ்சையின் கீழ்வெண்மணி என அவர் தெரிவிப்பதாகக் காட்சி எப்படி அமைக்க முடிந்தது. ஆனால் அவர் அந்தப் போராட்டத்துடன் தொடர்புடையவர் அல்ல என்பது கவனமுடன் வசனத்தின் மூலம் பின்னர் நிறுவப்படுகிறது. எப்படி இது நிகழ்கிறது என்பதைக் கட்டுரையாளரின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

கலையும் இலக்கியமும் நாடகமும் திரைப்படமும் ஏனைய அனைத்து கலைவடிவங்களும் உலகில் உள்ள அனைத்து பெண்ணுக்கும் ஆணுக்கும் தேவை ஆனால் எதற்காகவென்றால் சற்றே அவற்றின் தோளின் மீது சாய்ந்து இளைப்பாறிக் கொள்ள, மேலும் நாளைய நாளுக்கான சக்தியைச் சேமித்துக்கொள்ள, வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ள அதைத் தாண்டிய எந்தப் புண்ணாக்கிற்கும் அல்ல என்பதே என் கருத்து. உலகின் மிகச் சிறந்த இயக்குனர் என அறியப்பட்ட அகிராகுரோசேவா தன்னுடை தொழில்நுட்ப திறனை அனுபவத்தை எழுத்தில் பதிவு செய்யவில்லை என்பதற்காக அவர் எந்த அளவுக்கு உலகளவில் விமர்சிக்கப்படுகிறார் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. எனவே திரு.கமல் அவர்களை எவ்விதத்திலும் எதிர்த்து விமர்சிப்பது தமிழ்த் திரையுலகின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிராகத்தான் இருக்கும் என்று தாங்கள் கூறுவது எப்படிச் சரியாகும். ஹாலிவுட்டின் எத்தனையோ அரைத்தரைத்துப் புளிப்பேறிய மாவுகள் படமாக்கப்பட்டாலும் இன்றைய இரானியப் படங்களும் லத்தீன் அமெரிக்கப் படங்களும் மாற்றிலக்கியப் பதிவுகளை ஏற்படுத்தித்தான் வருகின்றன.

1984 -ல் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மதுரையில் தமுஎச என்று அறியப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்˜ சங்கத்தின் வாராந்திரக் கூடுதலின் போது அவர் அறிமுகமானர். நாராயணகவி என்பதாய்த் தன்னை அறிமுகம் செய்து கொண்டவரை பலமுறை தன் வெற்றிலை பாக்கினால் சிவந்த வாயுடனான கவிதை படிக்கும் ஒருவராய்த் தெரிந்து கொண்டேன். பல்வேறு முற்போக்குக் கவிதைகளை எழுதி வாசித்தார் அவர். ஒரு நாலு முழ வேட்டி, முழங்கை வரை மடிக்கப்பட்ட முழுக்கைச் சட்டை, முழுவதுமான வெற்றிலை பாக்குடனான நாக்கதம்பச் சுழற்றலினால் காவியேறிப் போன ஈறு உதடு என இருந்தாலும் தம் ‘கவிதாஸ்மரணையால் ‘ அன்று திண்டுக்கல்லில் அனைவருக்கும் அறிந்தவரானார். அவரின் முழு உண்மை முகவரி தெரிந்து கொள்ளும் பேறு பெற்றவர்களுள் நானும் ஒருத்தியானேன்¢.

1986-ல் தனித் தேர்வராய் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய போது எனக்கான தமிழ் இலக்கணம் குறித்த சந்தேகங்கள் என் மதிப்பெண் குறித்து கேள்வியெழுப்பின. மூடிய மூளை மடிப்பின் நினைவடுக்குகளிலுள் நாராயணகவி நினைவுக்கு வர விரைந்தேன் அவர் வீட்டுக்கு. வீட்டினுள் நுழைந்த பின் வரவேற்கப்பட்டு அடுத்த உள் அறையினுள் அனுமதிக்கப்பட்டேன். யார் எவர் என்ற அறிமுகப் படலங்கள் முடிந்த பின் நாராயணகவி வீட்டில் இல்லை என்ற தகவலுடன் வெளிப் போந்தேன். காத்திருந்த வார நாட்களுக்குப் பின்னாக அவருடன் எனது நேர்முகம் நேர்ந்தது. அன்று. தனது வாடிக்கையாளர்களுக்கு முன்அமர்ந்து குறி பார்த்து சோதிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நாராயணகவி.

தெரிந்த நாராயணகவியின் தெரியாத முகத்திற்காய் என் மதிப்பெண்களையும் மறந்து வெளியில் கலந்தேன் நான். பின்னொரு சந்திப்பின் போழ்து இது குறித்த தனி வினாவிற்கு பதிலளித்தார் நாராயணகவி. ‘சகோதரி, வணிகம் வேறு கவிதை வேறு வாழ்க்கை வேறு. அவர்களுக்கு மத்தியில் கவிதை எது குறித்தது என்று எனக்குத் தெரியும், எதைப் பேசினால் கைதட்டுக் கிடைக்குமென்றும் எதைப் பேசினால் காசு வரும் என்றும் எனக்குத் தெரியும், எனவேதான் தேவையானதைத் தேவைப்படும் போது பேசுகிறேன் ‘ என்றார். நாராயணகவியின் மூலமாக எனக்குத் தெரிந்தது பாவம் எனது தோழருக்குத் தெரியவில்லை இதுநாள்வரை.

அன்புடன்

நா.இரா.குழலினி.

kuzhalini@rediffmail.com

Series Navigation