சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்!

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

மலர்மன்னன்



மன்மோகன் சிங்கின் முந்தைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக ஒரு புத்திசாலி இருந்தார். மிக மிக முக்கியமான துறை அது. அங்கிருந்து ஒரு தும்மல் வெளிப்பட்டாலும் அது தேசத்தின் தும்மலாகவே கொள்ளத் தக்க அளவுக்கு முக்கியமான பதவி மத்திய உள்துறை அமைச்சர் பதவி! ஆகவே அதை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் மிகவும் ரகசியமாகத் தம் வீட்டிற்குள்ளேயேதான் தும்ம வேண்டியிருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் மன்மோகன் சிங்கால் நியமிக்கப் பட்டவர் சிவராஜ் பாட்டீல் என்பவர்.
2004 மக்களவைத் தேர்தலில் மஹாராஷ்டிர மாநிலம் லத்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற போதிலும் பொறுப்புள்ள உள்துறை அமைச்சர் பதவி அளிக்கப் பட்டு, அதன் பின் அதனை அவர் தக்க வைத்துக் கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

உச்ச நீதி மன்றத்தால் அஃப்ஸல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வது ஏன் என்று இடைவிடாமல் எழுந்த கேள்விக்கு சிவராஜ் பாட்டீல் மிகவும் சாமர்த்தியமாகப் பதில் அளிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கருத்தை வெளியிட்டார்.

அஃப்ஸல் குருவின் தண்டனையை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக அது குறைக்கப் பட வேண்டும் என்று கோரப்பட்டு, ஆயுள் தண்டனைக் காலச் சிறை வாசமும் முடிந்து, விடுதலைக்காகக் காத்திருக்கும் நிலையில் உள்ள சரப்ஜித் சிங்கின் வாய்ப்பை அது பாதித்துவிடும் என்று சிவராஜ் பாட்டீல் சொன்னதைக் கேட்டதும் செய்தியாளர்கள் வாய
டைத்துப் போனார்கள். இப்படியும் ஒரு பிரகஸ்பதி நமக்கு உள்துறை அமைச்சராக வாய்க்க வேண்டுமா என்று நொந்து போனர்கள்.

சரப்ஜித் சிங் ஹிந்துஸ்தானத்தின் குடி மகன். தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்துக் காவலரிடம் சிக்கிக் கொண்ட அப்பாவி. அவர் மீது உளவு பார்க்க வந்தவர் என்று குற்றம் சுமத்தப் பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாபில் உள்ள அவருடைய உறவினர்கள் மன்றாடி வருவதால் அவரது தூக்கு தண்டனையை பாகிஸ்
தான் நிறுத்தி வைத்துள்ளது. இன்றளவும் அவர் பாகிஸ்தான் சிறையில் செய்யாத குற்றத்
திற்கு வாடி வதங்கிக் கொண்டுதானிருக்கிறார். அஃப்ஸல் குருவோ, ஹிந்துஸ்தானத்துச் சிறையில் சொஸ்தமாகக் கோழி பிரியாணி சுவைத்துக் கொண்டிருக்கிறார். இது விதண்டா வாதம் அல்ல. பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்துக் கைதிகள் அனுபவித்து வரும் கொடுமைகளை அங்குள்ள மனித உரிமை அமைப்பு ஒப்புக்கொண்
டுள்ளது. நமது நாட்டில் சிறை வைக்கப் பட்டிருக்கும் பயங்கரவாதிகளுக்கோ, மனிதாபிமான அடிப்படையில் சகல வசதிகளும் அளிக்கப் படுகின்றன. அவர்கள் மூன்றாம் தர விசாரணையான வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப் படுவதில்லை. பாகிஸ்தானிலோ, மூன்றாம் தர விசாரணை தவிர வேறு விதமான விசாரணை ஹிந்துஸ்தானத்துக் கைதிகள் விஷயத்தில் மேற்கொள்ளப்படுவதேயில்லை. அதன் மூலம் வெகு எளிதில் அவர்களிடம் குற்றம் இழைத்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டு விடும்.

பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை இயக்கத் தலைவர் அன்ஸல் புரூனியே பாகிஸ்தானில் பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டுச் சிறையில் வாடும் ஹிந்துஸ்தானத்துப் பிரஜைகள் அப்பாவிகள், பொய் வழக்குத் தொடரப்பட்டு, பொய் சாட்சிகள் மூலம் குற்றம் நிரூபணமான
வர்கள் என்று கூறி அவர்களையெல்லாம் விடுதலை செய்து ஹிந்துஸ்தானத்திற்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஹிந்துஸ்தானத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸல் குரு ஹிந்துஸ்தானத்தின் பிரஜை. அவர் குற்றமிழைத்தது ஹிந்துஸ்தானத்து மண்ணில். அதிலும், ஹிந்துஸ்தானத்தின் இறையாண்மைக்கே அறைகூவல் விடுப்பதுபோல, அதன் நாடாளுமன்றக் கட்டிடத்தில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்திற்கு மூளையெனச் செயல்பட்டவர் எனக் குற்றம் நிரூபணமானவர். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற பாகிஸ்தானிய பயங்கர வாதக் குழுவான லஷ்கரே தொய்பாவுடன் தொடர்பு கொண்டு அங்கிருந்து பயங்கரவாதிகள் அத்துமீறி ஹிந்துஸ்தானத்திற்குள் நுழையத் துணை செய்தவர். நாடாளுமன்ற வளாகத்துள் புகுந்த பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் போரட்டத்தில் ஐந்து காவலரும் பொது மக்களில் ஒருவரும் உயிர் இழக்கக் காரணமாக இருந்தவர்.

விஷயம் இவ்வளவு தெளிவாக இருக்கையில், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தேவையின்றியே அப்பாவி சரப்ஜித் சிங்கிற்கும் அஃப்ஸல் குருவுக்கும் ஏன் முடிச்சுப் போட வேண்டும்? பாகிஸ்தான் அதையே சாக்காக வைத்து சரப்ஜித் சிங் விடுதலைக்கு நிபந்தனை விதிக்க அவர் எதற்காக அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்?

இப்படியொரு அபத்தமான கருத்தை வெளியிட்ட பிறகும் சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக நீடிக்கப் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகுதான் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி, சிவராஜ் பாட்டீல் பதவி விலக வேண்டியதாயிற்று.

சென்றமுறை சிவராஜ் பாட்டீலை உள்துறை அமைச்சராக நியமித்து ஏளனப்பட்டது போதாது என்றுதானோ என்னவோ இம்முறை வீரப்ப மொய்லி என்கிற மேதாவிக்கு சட்ட அமைச்ச
ராகத் தமது அமைச்சரவையில் இடம் அளித்திருக்கிறார்.

இப்போது சிவராஜ் பாட்டீலின் அடியொற்றி அதே பாதையில் தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.

வீரப்ப மொய்லி கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர். கன்னடத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதுவார். எழுத்து வெறும் பொழுது போக்கு அல்லது வருமானத்திற்கு ஒரு வழி மட்டுமே என்பதுபோல, பல முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர். சட்டமும் பயின்றவர் என்கிறார்கள்! படித்தவன் சூது செய்தால் ஐயோ, ஐயோ என்று போவான் என அறம் பாடினான் பாரதி.

மொய்லியிடம் சமீபத்தில் ஒரு தொலைக் காட்சி செய்தி நிறுவனம் நேர் காணல் நடத்தியது. அப்போது அஃப்ஸல் குருவின் மீதான தூக்கு தண்டனை நிறைவேறுவதில் கால தாமதம் செய்து வருவதன் காரணம் என்ன வென்று அவரிடமும் கேட்கப்பட்டது.

நீங்களாகத் தூக்கு தண்டனைக் கைதிகளில் ஒருவரைப் பொறுக்கி எடுத்துத் தூக்கில் போட்டு விட முடியாது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்திருப்பவர்கள் அஃப்ஸல் குருவையும் சேர்த்து 28 பேர் இருக்கிறர்கள். அவர்களில் 27 பேரின் கருணை மனு மீதான முடிவைக் குடியரசுத் தலைவர் எடுத்தான பிறகுதான் அஃப்ஸலின் மனு மீது முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தானில் கூடத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கருணை மனுப் போட்டுவிட்டுக் காத்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியர்களும் உண்டு. அவர்களையும் தூக்கிலிட்டு விடலாமா? என்று பதில் கேள்வி கேட்டுத் திடுக்கிட வைத்தார், சட்ட அமைச்சர் மொய்லி!

அஃப்ஸல் குரு குற்றம் நிரூபணமாகி, உச்ச நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்
பட்ட ஹிந்துஸ்தானத்துப் பிரஜை. மேலும் அவர் மீதான குற்றம் தேசத் துரோகம் என்ற வகையைச் சேர்ந்தது. அவருக்கு முன் கருணை மனுப் போட்டுவிட்டுக் காத்திருப்போரில் இருவர் நீங்கலாக மற்றவர்கள் குடும்பத் தகராறு, முன் விரோதம் போன்ற சொந்தக் காரணங்
களுக்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு இணையாக அஃப்ஸல் குருவைக் கருதுவது அறியாமையே அல்லவா? அல்லது வாக்கு வங்கி அரசியலா? அப்படியானால் ஹிந்துஸ்தானத்து முகமதியர்கள் ஒரு தேசத் துரோகக் குற்றவாளி முகமதியனாக இருப்பதாலேயே அவன் மீது அனுதாபம் கொள்ளும் அளவுக்கு தேசப் பற்று இல்லாதவர்கள் என்பதுதான் மத்திய சட்ட அமைச்சர் மொய்லியின் எண்ணமா? இதைக் கேட்ட பிறகும் இங்குள்ள முகமதியர்கள் கொதித்து எழ வேண்டாமா? எங்கள் தேசப் பற்றின் மீது உனக்கு அத்தனை அவ நம்பிக்கையா என்று கண்டனக் குரல் எழுப்ப வேண்டாமா?

கருணை மனு மீது முடிவு செய்வதில் முன்னுரிமை ஏதும் இல்லை. வரிசைப்படித்தான் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்கிற நியதியும் இல்லை. கருணை மனு மீது முடிவு எடுக்கக் குடியரசுத் தலைவருக்குக் காலகெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான் நடைமுறை. இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் மொய்லி, 27 பேர்களின் கருணை மனு மீது முடிவு எடுத்தான பிறகுதான் அஃப்ஸலின் கருணை மனு மீது முடிவு செய்யப்பட்டு, அதற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சொல்லித் தமது சட்ட ஞானத்தை மொய்லி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

அஃப்ஸல் குரு என்கிற ஒரு தனி நபரான குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற குரூர எண்ணம் இங்கு எவருக்கும் இல்லை. ஆனால் அஃப்ஸலைச் சிறையில் வைத்திருக்கையில் அப்பாவிகள் எவரேனும் பயங்கர வாதக் குழுக்களால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டு அஃப்ஸலை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை மொய்லி உணர வேண்டும். மேலும், தேசத் துரோக பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடும் தவறான போக்கு உயிருக்கு உலை வைத்துவிடும் என ஒரு முன்னெச்சரிக்கை இருப்பதும் அவசியமாகிறது. இது ஆசை வலையில் வீழ்ந்து பயங்கரவாதிகளுக்குத் துணை போக நினைப்பவர்களை யோசிக்க வைக்கும். எனவேதான் அஃப்ஸலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை விரைவாக நிறைவேற்றப்பட்டு விடுவது நல்லது எனக் கருதப்படுகிறது.

அஃப்ஸல் குருவின் கருணை மனு மீது உடனடியாக முடிவு எடுத்து மேல் நடவடிக்கை எடுக்க உதவுமாறு குடியரசுத் தலைவரிடம் பிரதமர் கேட்டுக் கொள்வதுதான் இந்த விஷயத்தில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய அவசரக் கடமையேயன்றி, சட்டம் அறியாத ஒரு சட்ட அமைச்சர் மனம் போன போக்கில் விளக்கம் அளிக்க இடம் கொடுப்பதல்ல!
+++++

Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts