சங்கிலி

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

வண்ணதாசன்


‘புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ‘ ‘– பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள். இறங்குகிற கூட்டத்தின் கடைசி ஆள் தரையில் காலை வைப்பதற்குள்ளாகவே மூன்று நான்குபேர் பஸ்ஸிற்குள் தங்களைத் திணித்துக்கொண்டிருக்க, குழந்தையும் கையுமாக விலகி வந்து வந்து நின்றவன்–

‘இந்தா, நீயே பாத்துக்கோ ‘ என்று கொஞ்சம் கோபமாகவே அவளிடம் குழந்தையை நீட்டினான். குழந்தை அதன் நான்கைந்து வயது உற்சாகத்துடன், கூட்டத்தை, பஸ்ஸை, இரைச்சலை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கழுத்தில் செயின் கிடக்கிறதையே அறியாத மலர்ந்த விழிகளுடன், அதனுடைய உலகத்தின் வேலியற்ற சந்தோஷத்தில் மிதந்து நின்றது முகம். அதை வாங்கிக் கொண்டே, அவனுடைய கோபத்தை ஏற்றுக்கொள்கிற ஒரு உள் உதட்டுச் சிரிப்புடன் அவள் நடந்துகொண்டு வந்தாள். அவளுடைய கை தன்னையறியாமல் குழந்தையின் கழுத்தில் கிடந்த செயினையும், அதன் சட்டையுடன் ஊக்கால் மாட்டப்பட்டிருக்கிற இடத்தையும் தடவி அதன் பத்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

அவன் மறுபடியும் கொஞ்சம் அதிகமாகக் கோபப்பட்டான்.

‘நான்தான் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே செயின் எல்லாம் என்னத்துக்குப் போடுதே, நாம என்ன கல்யாண வீட்டுக்கா போறோம்…ஃப்ரண்டு வீட்டுக்குத்தானேன்னேன் கேட்டாத்தானே. ‘

அவனுடைய கோபத்தை மேலும் குறும்பாகக் கிளறி விடுகிறதுபோலே, இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சிரித்துக்கொண்டு– ‘கல்யாண வீட்டுக்குன்னாப் போட்டுக் கிடலாமோ. அப்பவும்தான் சொல்வீங்களே தங்கச் சப்பரம் புறப்பட்டாச்சான்னு. ‘

அவளுடைய சிரிப்பை இதைச் சொல்லும்போது அவள் குரலில் ஏறி இறங்கின நடிப்பை உணர்ந்தபோது அவனுக்கும் சிரிப்பு வந்தது. ‘எத்தனை தடவை நீ, நான் அப்படிச் சொன்ன உடனே எல்லாத்தையும் கழட்டி ஒழுக்கறைப் பெட்டியிலே வச்சுட்டுப் போயிட்டே ‘ அப்படிப் போனதிலே மற்றவங்க உன் வெறுங் கழுத்தைப் பார்த்து வான்னு கேட்காமப் போயிட்டாங்க ‘ என்று மறுபடியும் கேட்கலாம். ஆனால் மறுபடியும் சிரிக்கத்தான் போகிறாள். எதுக்கு இவ்வளவும் சொல்கிறான் என்று யோசிக்கப்போவதில்லை. கண்டிப்பாக நகையெல்லாம் போடக்கூடாது என்று சொல்லவும் முடியவில்லை. எல்லாம் அவள் கல்யாணத்தோடு போட்டுக்கொண்டு வந்தது இப்போது குழந்தைக்குப் போட்டிருக்கிற வாத்து டாலர் போட்ட செயின்கூட அவள் அம்மா வீட்டிலிருந்து கல்யாணத்தில் போட்டதுதான்.

இவள் கேட்கமாட்டாள். இன்னொருத்தி என்றால் தான் புதிதாக எதுவும் செய்து போடாததை இங்கே குத்தி அங்கே வாங்குகிறது போல ‘கல்யாணத்துக்குப் பொறவு நீங்க பண்ணிப் போட்ட மூணு வடம் சங்கிலியையும் ஒட்டியாணத்தையும் வேணும்னா நான் ஒரு இடத்துக்கும் போட்டுக்கிட்டு வரலை ‘ என்று சொல்லி குரூரமாகத் திருப்திப்படலாம். அப்படியும் இருப்பார்கள். அப்படிச் சொல்லக்கேட்டு அதற்குப் பதில் சொல்லமுடியாது குனிபவர்களும் இருப்பார்கள்.

இவன் இப்படியாக யோசித்துக்கொண்டு வருவதை எப்போதாவது ஒன்றாக வெளியே வருகிற இவன், இதே போன்ற கோபத்துடனேயே இருந்து, இந்தச் சாங்காலத்தையே இதன் மூலம் மகிழ்ச்சிக் குறைவானதாக்கிவிடக்கூடாது என்று உணர்ந்து, அதைத் தவிர்ப்பதுபோல்–

‘உங்க ஃப்ரண்ட் வீட்டில இருப்பாரா இப்ப ? ‘ என்று ஒரு பொதுவான கேள்வியைக் கேட்டாள். குழந்தை அவளுடைய தோள் பக்கம் திரும்பிப் பின்னால் நகர்கின்ற மரங்களை, வாகனங்களை, சைக்கிள் ரிக்ஷாவின் அலாதியான மணியடிப்பை எல்லாம் பார்த்துக்கொண்டு வந்தது.

‘இருப்பான். இல்லாமல் எங்கே போகப்போறான். எவ்வளவு நாளாகக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கான். இன்றைக்குத்தான் நமக்கு நாள் வாய்ச்சிருக்கு இதுக்கு ‘ என்று அந்தப் பிரியமான சிநேகிதனின் ஞாபகமும், அந்த ஞாபகம் கிளம்பின அவனுடைய முகமும் பாவனைகளும், கருநீல ஈறு தெரியச் சிரிக்கிற நிறைந்த சிரிப்பும், ரொம்பப் பல சமயங்களில் அதிகபட்ச மனிதாபிமானத்துடன் அவன் நடந்து கொள்கிற முறைகளும் டா கொண்டுவந்து விநியோகிக்கிற ஒரு கிழிந்த டிராயர்ப் பையனிடம்கூட ஒரு நெருக்கத்தை உடனடியாக அடைந்துவிட முடிகிற அவனுடைய சுபாவமும் எல்லாம் அவனுக்குள் சொல்லமுடியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது.

காரியம் காரணம் எல்லாம் பார்த்துப் பழகுகிறவர்களே அதிகம் இருக்கிற அலுவலக உலகத்தில், தன்னை இவன் சிநேகிதனாகத் தேர்ந்து எடுத்துக்கொண்டது எவ்விதம் என்று புரியாது. ஆனால் அப்படி நிகழ்ந்ததற்கான நெகிழ்ச்சியுடன் நடந்துகொண்டிருந்தான். அந்தச் சிநேகிதத்தின் ஒட்டு மொத்தமான பரிமாணத்தை, இதோ அவன் வீட்டைச் சமீபிக்கிற இப்போதுதான் உணர்ந்ததுபோலவும், உணர்ந்ததை ஒரு பாடலைப் போலப் பாடி நடக்கவேண்டிய நேரம் இதுவென்றும் அவனுக்குப் பட்டது. குழந்தையை மனைவியிடமிருந்து வாங்கி, மாறி மாறிக் கொஞ்சிக் கீழே விட்டு நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். கூட ஒருத்தி வாராங்கிறதாவது ஞாபகமிருக்கட்டும் ‘ என்று சீண்டிக்கொண்டு அவளும் உடன் நடந்தாள்.

மனதின் அலைகளுக்கேற்பச் சுற்றுப்புறமும் வர்ணங்கள் அடைந்ததுபோல எல்லாம் கலகலத்துக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி, ஏப்ரலின் மலர்ச்சியைக் கிளை நுனிகளில் ஏந்திக்கொண்டு கம்மென்று வாகை மரங்கள் வாசனையைப் பெய்து கொண்டிருந்தன. வெகுதூரம் வரை கூடவே வந்து நம் விரட்டலுக்குப் பின் மனமின்றித் திரும்புகிற செல்லமான வீட்டு நாய்க் குட்டியாக வேப்பம்பூவின் வாசனையும் விட்டுவிட்டுக் கூடவே வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒரு டவுனின் கடைசியில், இப்படி ஒரு கிராமத்தின் அடையாளங்கள் அடங்கிய தெரு இருப்பதே நன்றாக இருந்தது. கட்டிடங்களுக்கு மத்தியில் துண்டு விழுந்தது போல ஒரு மைதானம் இருந்தது. பிந்தின அறுவடைக்குக் களம் போட்டுப் பிணையல் அடித்துக் கொண்டிருந்தார்கள் அதில்.

அந்தத் திருப்பம் தாண்டினால் சிநேகிதனுடைய வீடு தான். சட்டென்று கொரகொரவென்று ஒரே சப்தமாக வந்தது. நூறு நூற்றைம்பது என்று பழுப்பும் வெள்ளையுமாக ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கலைந்து நெருங்கி மறுபடி முன்புகுந்து செருகி என்று தாராக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துப் பெருகி இவர்கள் பக்கம் வந்து சற்றுப் பள்ளமாக மடிந்து மைதானத்துக்குள் இறங்கியது. குழந்தை தாராக் கோழிக்குப் பின்னால் ஓடியது.

அது கொஞ்சம் ஓடுவது வரை அனுமதித்துவிட்டு, ஒரு பாதுகாப்பற்ற எல்லைக்குள் அது நுழைத்துவிட்டதைத் திடாரென்று கண்டதுபோல் ‘ஓடியா, ஓடியா. அங்கே எல்லாம் போகக்கூடாது. பூச்சாண்டி பிடிச்சிக்கிட்டுப் போயிடுவான். யாராவது சங்கிலியை அறுத்துக்கிட்டு இப்படி குறுக்கே மைதானத்தில் விழுந்து ஓடினாக்கூடத் தெரியாது ‘ என்று தானே அந்த இடம் போய் குழந்தையை அந்த அரூபமான திருட்டுக் கைகளிலிருந்து காப்பாற்றிவிட்ட நிம்மதியுடன் வந்துகொண்டிருந்தாள். குழந்தையின் பார்வை அதன் பிடிமானத்திலிருந்து நழுவி தாராக்கோழிகள் போவதையே துரத்திப் பிடித்தது. ‘போவ்…போவ்வ் ‘ என்று வாத்துக்காரன் சத்தம் போடுவது மைதானத்தின் மத்தியில் கேட்டது.

வீட்டில் சைக்கிள் இருந்தது.

அவனுடைய சிநேகிதன் உபயோகிக்கிற அந்த லேடாஸ் சைக்கிள் இருந்தால் அவன் இருக்கிறதாகத்தான் அர்த்தம். வீட்டு வாசலில் காட்டுக்கொடிகள் போல விறைப்பாக முறுக்கிக்கொண்டு மேலேறிப்போய் படர்ந்து கிடக்கிற ரங்கூன் க்ரீப்பரின் அதிகம் கவர்ச்சியற்ற எளிமையான நீண்ட பூக்கள், இன்னும் இருட்டாத சாயங்கால மங்கல் வெயிலில் தொய்வாக அசைந்து ஆடின. உதிர்ந்ததும் வாடினதுமாக அந்தத் தாழ்வாரப் பகுதியும் மிகுந்த உபயோகத்திற்குள்ளான பிரம்பு நாற்காலிகள் கிடக்கிற இடமும், வாசலும் பூச்சிந்தின கோலத்துடன் இருந்தது.

சின்னப் பிள்ளைகளுக்குப் பூவை விடவும், இலைகளை விடவும், அந்திமந்தாரை விதைகளை விடவும், பசலிப் பழத்தை விடவும் கூடின சிநேகிதம் உண்டா என்ன ? ‘வாங்க வாங்க ‘ என்ற சிநேகிதனும் அவருடைய மனைவியும் வரவேற்று அழைத்தபோதும், எல்லோருமாக உள்ளே சென்ற போதும் எல்லாம் குழந்தை வாசலிலேயே தங்கி, அவற்றைக் கைநிறைய, மடி நிறையச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டது. தனிமை தெரியாத, பயம் தெரியாத, தனக்குத்தானே பேசிக் கொள்கிற அந்தச் சின்னஞ்சிறு உலகத்தின் சந்தோஷத்துடன் அது தனித்திருந்தபோது உள்ளிருந்தே பதறிக்கொண்டு வந்து, ‘ நல்ல வேளையாப்போச்சு. இங்கேதானே இருக்கே. கழுத்தில் செயின் வேறே கிடக்கு. எங்கேயும் தெருவாசலுக்குத்தான் போயிட்டயோண்ணு பயந்து போயிட்டேன் ‘ என்று குழந்தையைப் பார்த்துச் சொல்லி, அதன் இது வரையிலான பிரத்தியேக உலகங்கள் நொறுங்கும்படியாக உள்ளே எடுத்துக்கொண்டு போனாள். படியில், நடையில், அறையில் என்று சிதறிக்கொண்டே போன க்ரீப்பர் பூவுடன் குழந்தையின் அழுகையும் கசங்கிக் கசங்கிக் கேட்டது. ‘வேண்டாம் வேண்டாம் ‘ என்று சொல்லியும் சமாதானம் ஆகிறதாக இல்லை.

முதல் தடவையாகத் தாய்மையடைந்து வயிறு கனத்து அமர்ந்திருக்கிற வெட்கத்துடன் சிநேகிதனின் மனைவி பேசிக் கொண்டிருக்க, சிநேகிதனே சிறுசிறு தின்பண்டங்களை எடுத்துவந்து உபசரித்தான். உயரமான கண்ணாடிப் பூந்தம்ளர்களில் டா கலந்து கொண்டுவந்து கொடுத்தான். போலியற்ற அவனுடைய உலகத்தில் நுழையத் தயங்கத் தனக்கோ, தன் மனைவிக்கோ அவசியமில்லாததுபோல இருந்தது.

சிநேகிதனுக்குச் சுலபமாகக் கிண்டல் பண்ண முடிந்தது. சிரிக்க வைக்கவும் ஒருமையில் கூப்பிட்டு இன்னும் சிறிது கேக் கூடுதலாக எடுத்துக்கொள்ளச் சொல்லவும் முடிந்தது. முதலில் ‘ஐயையோ, போதும் ‘ என்று மறுத்தவளிடம் வெட்கமான புன்னகையைத் தருவித்து அந்தச் சிரிப்புடன் கேக்கின் பிறிதொரு விள்ளலை வாங்க வைக்க முடிந்தது.

எல்லாம் இதமாக இருந்தது. போகவேண்டிய தூரம், டவுன் பஸ் நெரிசல், ஞாயிற்றுக்கிழமை அரசியல் கூட்டத்துக்காகச் சுற்றி வளைத்துப் போய் நிற்கிற பஸ், ஒருவேளை குழந்தை தூங்கிப்போய்விட்டால் அப்படி பஸ் நிற்கிற இடத்திலிருந்து வீட்டிற்குச் சுமந்து செல்லவேண்டிய சிரமம். எல்லாம் இல்லாவிட்டால் ரொம்ப நேரம் இங்கேயே இருந்துவிட்டுப் போகலாம்.

அந்தச் சமயத்தில்தான் தெருவில் மிட்டாய்க்காரன் சத்தம் கேட்டது. ‘இவர் இங்கேயும் வருவாரா ‘ என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே குழந்தை எழுந்து தெருவுக்கு ஓடியது. இவனுக்கே இந்தத் தடவை குழந்தை கழுத்தில் சங்கிலி கிடப்பது ஞாபகம் வந்தது. குழந்தையின் பின்னால் புறப்பட்டு அதன் பெயரைச் சொல்லி நிறுத்தினான். அது நடையிலேயே நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவரேதான். அதே ஜவ்வு மிட்டாய்க்காரர்தான். இவன் சின்ன வயதாய் இருக்கும்போதே, இவனுக்குக் கையில் வாட்ச் மிட்டாய், தேள் மிட்டாய் எல்லாம் கட்டி, கடைசியில் ஒரு பிசுக்கை உதட்டிலும் ஒட்டிவிடுகிற அதே அம்மன் தழும்புக்காரர். தலைப்பாகை, கோட்டு, மீசை, பூ விழுந்த கண், ஒரு குடையைப்போல மூடப்பட்டிருக்கிற மிட்டாய்த்தடி, அவர் தோளில் தொங்குகிற தகரக் குழாயை உதட்டில் பொருத்தி, ‘பாப்பா, ஏ, பாப்பா ‘ என்று அதன் உலோக விசித்திரம் நிறைந்த குரலிலேயே கூப்பிடுகிற நேர்த்தி–எல்லாம் இன்னும் அப்படியே இருந்தன.

தோளில் பம்பரக் கயிறு கட்டித் தொங்கவிட்டிருந்த மணியை, எல்லாப் பிள்ளைகளும் அடித்துக்கொண்டிருந்தார்கள். சட்டை போடாத, தலை கலைந்த, அறுப்புக் களத்திலிருந்தும் பிணையல் அடிப்பில் இருந்துமெல்லாம் ஓடிவந்து சுற்றிச் சூழ நின்றுகொண்டிருந்த அந்தப் பிள்ளைகள், மாறி மாறி அந்த மணியை விடாமல் அடித்துக்கொண்டு, காசு வாங்காமல் கடைசியில் மிட்டாய்க்காரரே அவர்கள் உதட்டில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தடவிவிடப் போகிற மிட்டாய்த் துண்டை எதிர்ப்பார்த்தபடி அவரைச் சூழ்ந்திருந்தார்கள். அதனதன் உடம்பின் உயரத்திற்கேற்பக் கபடும் பயமும் அற்ற முற்றிலும் குழந்தைத்தனமான அந்த முகங்கள் தாழ்ந்தும் உயர்ந்தும் வாய் பிளந்து கிடந்தன. ஒருவேளை, மிட்டாய்க் கிடைக்காமற்போகிற ஏமாற்றத்திலுங்கூட அந்த முகங்களில் மாறாத இந்தப் பிள்ளைத்தனம் இருக்குமென்று பட்டது.

நடையில் நின்றுகொண்டு, தன் கட்டளையை எதிர் பார்த்திருக்கிற தன் குழந்தை அதன் வயதுக்குரிய தன்னிச்சையை, அடிப்படையான பிள்ளைத்தனத்தை இழந்திருப்பது போலவும் பாதுகாப்பைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிற ஒரு பய உணர்வுடன் தயங்கித் தயங்கி இது நிற்பதுபோலவும் கழுத்தில் கட்டியிருக்கிற சங்கிலியே காலில் கட்டின சங்கிலி போல இதை இதன் எல்லையற்ற சுபாவங்களிலிருந்து தடுத்தும் விலக்கியும் போட்டிருப்பது போலவும் பட்டது.

‘என்ன, வெளியே எழுந்திரிச்சு வந்து ரொம்ப நேரம் நின்னாச்சு ? ‘ என்று அவனுடைய சிநேகிதன், சிநேகிதனுடைய மனைவி, அவனுடைய மனைவி எல்லாம் வீட்டிற்குள்ளிருந்து எழுந்து வாசலுக்கு வந்தபோது, அவன் எல்லோருக்கும் ஒரே பதிலாகச் சொல்வதுபோலத் தெருப்பக்கமாய்க் கையைக் காட்டினான்.

தெருவிளக்கின் வெளிச்சத்தில், அந்த மிட்டாய்க்காரின் மணியை அடிக்கிற பிள்ளைகளோடு பிள்ளையாக அவனுடைய குழந்தையும் தன்னை மறந்து நின்றுகொண்டிருந்தது. யானைக்குட்டி தெருவில் வருவதைப் பார்க்கிற, கட்டடம் கட்டுவதற்குத் தட்டின ஆற்று மணலில் விளையாடுகிற, பஞ்சு மிட்டாய் விரும்பித் தின்கிற எல்லாப் பிள்ளைகளின் முகத்தையும் இவன் குழந்தை இப்போது அடைந்துவிட்டது போலிருந்தது. அவனுடைய சந்தோஷத்தையும் மீறி அவனுடைய மனைவி எதையோ கேட்க அவசரப்பட்டு உதடு பிரித்தபோது அவன் அவளை அவசரமாக அமைதிப்படுத்திக் கையை நீட்டினான்.

கழற்றின சங்கிலி கையில் இருந்தது.

Series Navigation