சங்கம் எனது ஆன்மா

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்


குவாலியரில், 1939இல் ஆர்ய குமார் சபா என்ற ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவின் மூலம் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தோடு முதன் முதலில் தொடர்பு கொண்டேன். நான் தீவிரமான சனாதனக்குடும்பத்திலிருந்து வந்தேன். ஆனால், நான் வாராவாரம் நடக்கும் ஆர்ய குமார் சபாவின் ‘சத்சங் ‘ கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஒரு முறை, ஆர்யகுமார் சபாவின் மூத்த பணியாளரும், பெரும் சிந்தனாவாதியும், சிறந்த அமைப்பாளருமான ஸ்ரீ பூதேவ் சாஸ்திரி அவர்கள் எங்களை, ‘மாலை நேரங்களில் என்ன செய்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். நாங்கள், ‘ஒன்றும் செய்வதில்லை ‘ என்று பதில் சொன்னோம். காரணம், ஆர்யகுமார் சபா ஞாயிறு காலைகளில் வழக்கமாகக் கூடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் எங்களை ‘ஷாகா ‘ (கிளை)க்கு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆகவே, நாங்கள் குவாலியரில் ஷாகாவுக்குச் செல்ல ஆரம்பித்தோம். இதுவே என் முதல் ஆர் எஸ் எஸ் தொடர்பு. குவாலியரில் அப்போதுதான் ஷாகா ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் மஹாராஷ்டிர பையன்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால், எல்லா ஸ்வயம் சேவக்குகளும் மராத்தியிலேயே பேசினார்கள். நான் ஷாகாவுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஷாகாவில் விளையாடப்படும் விளையாட்டுகளும், வாராந்தரி ‘பெளதிக் ‘ (சொற்பொழிவுகள்)உம் எனக்குப் பிடித்திருந்தன.

ஸ்ரீ நாரயண்ராவ் தார்த்தே என்ற ஒரு பிரசாரகர் நாக்பூரிலிருந்து வந்து ஷாகாவை ஆரம்பித்திருந்தார். அவர் உண்மையிலேயே ஒரு சிறப்பான மனிதர். வெகு எளிமையானவர், சிந்தனாவாதி, சிறந்த அமைப்பாளர். நான் இன்றுள்ள நிலைக்குக் காரணம் ஸ்ரீ தார்த்தே அவர்கள் என்னை உருவாக்கிய விதமேயாகும். அவருக்கு அடுத்தபடி நான் தீன் தயாள் உபாத்யாயா அவர்களாலும், பாவுராவ் தேவரஸ் அவர்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது குவாலியர் கிளை பாவுராவ்ஜி அவர்களுக்குக் கீழ் இல்லை. ஆனால் ஒருமுறை அவர் குவாலியருக்கு அப்போதைய பெளதிக் பிரமுக்-ஆக இருந்த ஸ்ரீ பாலாசாஹேப் ஆப்தே அவர்களுடன் வந்திருந்தார். ஆப்தேஜி அவர்கள் மெதுவாகப் பேசுபவர். வெகு விரைவில் நாங்கள் அவரால் ஈர்க்கப்பட்டோம். நான் அவருடன் வெகு சில நிமிஷங்களே பேசினேன். ஆனால், அதே வருடம் (1940), நான் முதல் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாம் ( Officers ‘ Training Camp ) சென்றபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு சென்றது பயிற்சி முகாம் முடிவு விழாவில் கலந்து கொள்ள. பயிற்சி எடுத்துக்கொள்ள அல்ல. டாக்டர் ஹெக்டேவார் அவர்களும் அங்கு அதே நேரத்தில் வந்திருந்தார்கள். நான் அவரை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன். பிறகு டாக்டர்ஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நான் பார்க்கச் சென்றேன். 1941இல் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது முதலாம் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். 1942இல் நான் இடைநிலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டாம் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டேன். நான் பி.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, 1944இல் மூன்றாம் வருடப்பயிற்சியை மேற்கொண்டேன்.

நான் ‘ஹிந்து தன்-மன் ஹிந்து ஜீவன் ‘( ஹிந்து உடல்-மனம் ஹிந்து வாழ்க்கை) கட்டுரையை எழுதும்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். குவாலியரில் நான் இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும், கான்பூரில் டி.ஏ.வி கல்லூரியில் எம்.ஏ படித்தேன். அப்போது குவாலியரில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க கல்லூரி இல்லை. பிரிவினையின் காரணமாக, என்னால் சட்டப்படிப்பு படிக்க முடியாமல் போனது. பிறகு, 1947இல் நான் என் கல்வியை விட்டுவிட்டு ஆர் எஸ் எஸில் முழுநேர ஊழியனாகச் சேர முடிவு செய்தேன். 1947 வரை நான் ஷாகா அளவில் ஆர் எஸ் எஸ் வேலைகளைச் செய்து கொண்டே படிப்பையும் கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது 1942இல் ‘இந்தியாவை விட்டு வெளியேறு ‘ இயக்கத்தில் கலந்துகொண்டதால் சிறைப்பட்டேன். அச்சமயம் எனது இடைநிலைத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். நான் ஆக்ராவில் இருக்கும் எனது பூர்வீக கிராமமான பாடேஷ்வரில் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 16.

எனது தந்தையார் ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவரல்ல. ஆனால் எனது அண்ணன் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் ஷாகாவுக்குச் செல்வார். ஒரு முறை குளிர்கால பயிற்சி முகாமுக்கு சென்றபோது பிரச்னையை உருவாக்கினார். அவர், ‘மற்ற ஸ்வயம் சேவக்குகளுடன் சேர்ந்து நான் உணவருந்த முடியாது. எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்வேன் ‘ என்றார். எவ்வாறு ஆர் எஸ் எஸ் இந்தப் பிரச்னையைக் கையாண்டது பாருங்கள். அந்த பயிற்சி முகாமின் சர்வாதிகாரி (சுப்பரிண்டண்ட்) அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தம் உணவைத் தயாரித்துக்கொள்ள வேண்டிய எல்லாப்பொருட்களையும் அவருக்குக் கொடுத்தார். என் அண்ணன் குளித்துவிட்டு, தன் பூணூலை சரி செய்து கொண்டு தன் உணவை தயாரிக்க ஆரம்பித்தார். முதல் நாள் அவரே தன் உணவை தயாரித்துக்கொண்டார். அடுத்த நாள், அவரால் தயாரிக்க முடியவில்லை. எல்லா ஸ்வயம் சேவக்குகளுடன் இணைந்து உணவருந்த வரிசையில் நின்று கொண்டார். 44 மணி நேரத்தில் அவர் மாறிவிட்டார்.

ஆர் எஸ் எஸ் தனி மனிதர்களை மட்டும் மாற்றுவதில்லை. அது பொது மனத்தையே மாற்றுகிறது. இதுதான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஒழுக்கநெறிகள். நமது ஆன்மீக பாரம்பரியத்தில், ஒரு தனிமனிதன் எந்த வித உயரத்தையும் அடைய முடியும். சரியான யோகத்தைக் கைக்கொள்வதன் மூலம், யாரும் தான்-உணர்ந்து நிர்வாணத்தை அடையலாம். ஆனால் சமூகத்தை என்ன செய்வது ? பொதுவாக யாரும் சமூகத்துக்கான தன் கடமையைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆர் எஸ் எஸ் முதன் முறையாக, தனி மனிதர்களை மாற்றுவதன் மூலம் சமூகத்தை மாற்ற முடியும் எனச் சிந்தித்தது. பயிற்சி முகாமில் இருந்த சர்வாதிகாரி அவரைத் திட்டியிருந்தாலோ, அவரது உணவை தானே தயாரித்துக்கொள்ள அனுமதிக்காமல் இருந்தாலோ, அவரது ஆன்மீக வளர்ச்சி தடைபட்டிருக்கலாம். ஆனால் ஆர் எஸ் எஸின் உள்ளே அவர் 44 மணி நேரத்துக்குள் மாறிய மனிதராகிவிட்டார். இதுதான் ஆர் எஸ் எஸின் ‘ரகசிய முறை ‘. இவ்வாறுதான் சமூகம் மாறுகிறது. இது ஒரு நீண்ட வழி. ஆனால், இதற்கு எந்த வித குறுக்கு வழியும் கிடையாது; திடார் ரசவாத முறையும் கிடையாது.

அமைப்பின் உள்ளே தீண்டாமை இல்லை என்பதற்காக காந்திஜி ஆர் எஸ் எஸை பாராட்டியிருக்கிறார். ஆர் எஸ் எஸ் மட்டுமே சமூகத்தைச் சீரமைக்கிறது. மற்ற இயக்கங்கள் எல்லாம், சமூகத்தை, தனி ‘அடையாளங்கள் ‘ மூலமும், வெவ்வேறு ‘ஆர்வங்கள் ‘ மூலமும், சிறப்பு ‘அந்தஸ்துகள் ‘ மூலமும் பிரிக்கின்றன. தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படுபவர்களின் ‘தனித்துவத்தை ‘ ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், இவைகள் தொடர்ந்து தீண்டாமையை ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ‘நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள்; உங்களுக்கு சமூகத்தில் இடம் கிடையாது ‘ என்பன போன்று. ஆர் எஸ் எசுக்கு இரண்டு முக்கிய வேலைகள் இருக்கின்றன. முதலாவது இந்துக்களை அமைப்பு ரீதியான முறையில் ஒன்றுபடுத்துவது. வலிமையான இந்து சமூகத்தைக் கட்டமைப்பதற்காகவும், இறுக்கமாக ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதற்காகவும், ஜாதி போன்ற செயற்கை வித்தியாசங்களைத் தாண்டி மேலே வரவேண்டும். அடுத்த வேலை இந்துக்களல்லாதவர்களாக இருக்கும் முஸ்லீம்களையும் கிரிஸ்தவர்களையும் தேசீய நீரோட்டத்துக்கு கொண்டுவருதல். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும். யாரும் அதற்கு மறுப்புச் சொல்ல உரிமை இல்லை. நாம் மரங்களையும், விலங்குகளையும், கற்களையும் இன்னும் பலவற்றையும் கும்பிடுகிறோம். நம்மிடம் கடவுளைக் கும்பிட நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. அவர்கள் கடவுளைக் கும்பிட எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த நாடு அவர்களாலும் தாய்நாடாகப் பார்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றிய தேசபக்தி உணர்வு இருக்க வேண்டும். ஆனால், உலகத்தை ‘தாருல் ஹாராப் ‘ (இஸ்லாம் அல்லாதாரின் சமூகம்) என்றும், ‘தாருல் இஸ்லாம் ‘ (இஸ்லாமியரின் சமூகம்) என்றும் பிரிக்கும் இஸ்லாமியக் கருத்து இதன் குறுக்கே வருகிறது வருகிறது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத நாட்டிலும், வளமையுடன் இருப்பதற்கும், வளர்வதற்குமான கலையை இஸ்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னவாயினும், அவர்களும் இங்கேதான் வாழ வேண்டும். ஆகவே அவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த விஷயம், முஸ்லிம் நாடுகளில் ஆழமான சிந்தனைக்கும், தீவிர கவலைக்கும் காரணமாக இருக்கிறது. ஏனெனில் குரான் இது சம்பந்தமாக எந்த வித அறிவுரையையும் வழங்கவில்லை. அது முஸ்லீம் அல்லாதவர்களை கொல்வதைப்பற்றியும், அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்வதைப் பற்றியுமே பேசுகிறது. ஆனால், அதை எப்போதும், எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் சிறுபான்மையாக இருந்தால் எப்படி இதைச் செய்வது ? அப்படி செய்ய முனைந்தால், பெரும் சண்டை நடக்கும், அதில் பெரும் அளவில் சிறுபான்மையினர்தானே இறப்பார்கள் ? ஆனால், முஸ்லீம்களே முன்வந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும். நாம் அவர்களுக்காக மாற்றித்தர முடியாது.

காங்கிரஸ் முஸ்லீம் பிரச்னையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ‘சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்தும் கொள்கையை ‘ (policy of appeasement) தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். அதற்கு என்ன விளைவு நடந்திருக்கிறது ? இந்த நாட்டின் முஸ்லீம்கள் மூன்று வழிகளில் நடத்தப்படலாம். முதலாவது ‘திரஸ்கார் ‘ என்னும் உதாசீனம். அதாவது அவர்கள் மாறவில்லை என்றால் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு அவர்களை நம் தாய்நாட்டு மக்களாக பாவிப்பதை நிறுத்துவது. இரண்டாவது ‘புரஸ்கார் ‘ என்னும் ‘குஷிப்படுத்துதல் ‘ (appeasement), அவர்கள் நல்லபடியாக நடந்துகொள்ள அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல். இதுவே காங்கிரஸாலும் மற்றவர்களாலும் அவர்களுக்குச் செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது ‘பரிஸ்கார் ‘ என்னும் மாற்றுதல். அவர்களுக்கு சரியான பாரம்பரியத்தைக் கற்றுத்தந்து அவர்களை மாற்றுவது. அவர்களது மதத்தை மாற்றுவது என்று பொருளல்ல. அவர்கள் அவர்களது மதத்தை பின்பற்றட்டும். மெக்கா முஸ்லீம்களுக்கு புனிதஸ்தலம்தான். ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யட்டும். நமக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், மக்காவையும் இந்தியாவையும் முன்னர் வைத்து அவர்களை யாரேனும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா முஸ்லீம்களுக்கும் இந்த உணர்வே இருக்க வேண்டும். நாம் வாழ்வதும் சாவதும் இந்த நாட்டுக்குத்தான்.

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ‘ஹிந்து தன்-மன், ஹிந்து ஜீவன் ‘ என்ற கட்டுரையை எழுதினேன். அப்போது நான், ‘காபூலுக்குச் சென்று எத்தனை மசூதிகளை உடைத்தோம் என்று யாரேனும் சொல்லுங்கள் ‘ என்று குறிப்பிட்டேன். அந்த வார்த்தைகளை இப்போதும் கூறுவேன். ஆனால், நாம் அயோத்தியில் இருந்த கட்டிடத்தை கீழிறக்கினோம். உண்மையில், அது முஸ்லீம் ஓட்டு வங்கிக்கு எதிரான எதிர்வினையே. நாம் அந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமும், சட்டத்தின் வழியிலும் தீர்க்க விரும்பினோம். ஆனால், தீய செயலை எப்படியும் புரஸ்கார் (குஷிப்படுத்தல்) செய்யமுடியாது. கெட்ட செயலையும் நல்ல வழியிலேயே மாற்றுவோம். ஆர் எஸ் எஸின் முதல் வேலையான, இந்து சமூகப்புத்துணர்வு இன்று அடையப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். முன்பு ஆக்கிரமிப்புகளின் போது இந்துக்கள் வளைந்து கொடுத்தார்கள், இன்று வளைந்து கொடுப்பது இல்லை. இந்து சமூகத்தின் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது. புதிதாக கண்டுகொள்ளப்பட்ட சுய உறுதிப்பாட்டோடு ஏராளமான மாற்றங்களும் வந்திருக்கின்றன. இது நம்மை தக்கவைத்துக்கொள்வதற்கான கேள்வி. இந்து சமூகம் விரிவடையாமல் போயிற்றென்றால், அது இன்னொரு உயிர்வாழும் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். நாம் விரிவடையவேண்டும். மற்றவர்களையும் நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். இன்று யாதவர்களும், ஹரிஜன் என்று அழைக்கப்பட்டவர்களும் நம்மோடு கூட வருகிறார்கள். என்ன இருந்தாலும், நாம் இந்துக்களாகவே வாழ வேண்டும். ஒரு முறை யாதவர் தலைவர் என்னிடம் வந்து சொன்னார், ‘யாதவர்களைப் பழிக்காதீர்கள். எல்லா யாதவர்களும் முலயாம் சிங்கோடும், லாலூ பிரசாத்தோடும் இல்லை. பக்குவப்பட்ட யாதவர்கள் அவர்களை விரும்புவதில்லை. நீங்கள் எங்காவது ராஜ்புட், குர்மி, குஜ்ஜார் முஸ்லீம்களைப் பார்க்கலாம். ஆனால் யாதவ முஸ்லீம் ஒருவரைக்கூட பார்க்க முடியாது. யாதவர்கள் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். இந்த யாதவ-முஸ்லீம் கூட்டணி வெறும் ஓட்டுக்காக போடும் கூச்சல் அன்றி வேறல்ல ‘ என்றார்.

என்னுடைய நீண்ட ஆர் எஸ் எஸ் தொடர்புக்கு எளிய காரணம், நான் சங்கத்தை நேசிக்கிறேன் என்பதுதான். அதன் கொள்கையை விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அது மக்களிடமும், அதனுள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவரும் கொண்டுள்ள அன்பே நான் ஆர் எஸ் எஸை விரும்பக்காரணம். நான் லக்னெளவில் இருக்கும்போது நடந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது சோஷலிஸ இயக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது மூத்த சோஷலிஸ தலைவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். அவர் தன் வீட்டில் தனியே இருந்தார். யாரும் அவரது உடல் நலத்தை விசாரிக்கச் செல்லவில்லை. ஆச்சார்ய நரேந்திர தேவ் அவர்கள் இதனை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரை பார்த்தார். ஆச்சார்யா அப்போது சொன்னார், ‘என்ன சகோதரத்துவம் இந்த சோஷலிஸ கட்சியில் ? ஒருவரும் உங்களை வந்து பார்க்கவில்லை. இது ஆர் எஸ் எஸில் எப்போதும் நடக்காது. ஒரு ஸ்வயம்சேவக் உடல்நலம் குன்றி ஒரு நாளைக்கு ஷாகாவுக்குச் செல்லவில்லை என்றாலும், அவரது நண்பர்கள் உடனே அவரது வீட்டுக்குச் சென்று அவரது நலம் பற்றி விசாரிப்பார்கள் ‘. நான் அவசரநிலையின் போது உடல்நலம் குன்றி இருந்தபோது, என்னுடைய வீட்டார் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படிப்பார்த்தால், அவர்களை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்தார்கள். ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் மட்டுமே எனக்கு உதவினார்கள். தொடர்பும், சகோதரத்துவ உணர்வும் எவ்வாறு ஆர் எஸ் எஸில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். உண்மையில் சங்கமே எங்கள் குடும்பம். நாமெல்லோரும் ஒன்று.

ஆரம்பத்தில் சமூகத்தில் எல்லா தரப்புகளிலும் நம் வேலையை பரப்ப முடியவில்லை. ஏனெனில் அப்போது நம்மிடம் அவ்வளவு இயக்கத்தினர் இல்லை. ‘மனிதனை உருவாக்குவதே ‘ ஆர் எஸ் எஸின் முதன்மையான வேலை. இப்போது நம்மிடம் ஏராளமான இயக்கதினர் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் எல்லாத்தரப்பினரையும் தொடர்பு கொண்டு எல்லா துறைகளிலும் பரவி வருகிறார்கள். எல்லா பகுதிகளிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. ‘மனிதனை உருவாக்கும் ‘ வேலை எப்போதும் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது. இது தொடர்ந்து நடக்கும். இது தொடர்ந்து நடந்தாக வேண்டும். இதுதான் ஆர் எஸ் எஸ் இயக்கம் என்பது.

***

Series Navigation

இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்

இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்