சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


2001 இல் தொடங்கி கேரளாவின் பல இடங்களில் செந்நீர் மழை எனும் நிகழ்வு நடந்தது. இது ஒரு மர்மமாக இருந்தது. ஏறத்தாழ 50000 கிலோ செம்மழைத் துகள் அமைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் மகாத்மா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இரு அறிவியலாளர்கள் இச்செம்மழைத்துகள்களை மின்னணு நுண்ணோக்கியால் ஆராய்ந்தனர். அவர்கள் உயிர் செல்களை ஒத்த அமைப்புகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் டி.என்.ஏ அவற்றுள் இல்லை. இந்த செல் போன்ற அமைப்புகளில் உள்ள வேதிப்பொருட்கள் பெருமளவுக்கு கார்பனும் ஆக்ஸிஜனும் ஆகும். 25 ஜூலை 2001 அன்று கோட்டயம் சங்கனாச்சேரி என்னும் இடத்தில் வளிமண்டலத்துக்குள் நுழையும் விண்கல் வெடிப்பு நிகழ்ச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்தே இச்செம்மழை நிகழ்வு தொடங்கியது என்பதனைக் கருத்தில் கொண்டு, செம்மழைத்துகள்கள் விண்வெளி நுண்ணுயிரியாக இருக்கக் கூடுமா எனும் சுவாரசியமான ஊகத்தினை முன்வைத்துள்ளனர் கோட்ப்ரே லூயிஸும் சந்தோஷ் குமாரும். புகழ்பெற்ற Astrophysics and Space Science அறிவியல் ஆராய்ச்சி இதழின் ஜனவரி பதிப்பில் இந்த ஆய்வுத்தாள் வெளிவந்துள்ளது. ( ‘the Red Rain Phenomenon Of Kerala And Its Possible Extraterrestrial Origin ‘, 2 ஜனவரி 2006)

இந்த ஊகத்தினை மேலும் ஆராயும் சாட்சியங்கள் 15 ஜனவரி 2006 இல் அமெரிக்க பாலைவனமொன்றில் தரையிறங்கியிருக்கலாம்.

கடந்த ஐம்பது வருட காலங்களில் அண்ட வெளியில் விண்மீன்களுக்கிடையேயான வெளியில் இருக்கும் துகள்கள் குறித்து பல்வேறு ஊகங்கள் உருவாகியுள்ளன. உயிர் என இப்பூவுலகில் நாம் அறியும் நிகழ்வுக்கு காரணமான முக்கியமான கரிம மூலக்கூறுகள் (organic molecules) அண்டவெளியில் விண்மீன் மண்டலங்களுக்கிடையே இருக்கும் துகள் படலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அண்டவெளி விதைப்பரவல் கோட்பாட்டினைக் குறித்து ஒரு கட்டுரையை திண்ணையில் இக்கட்டுரையாளன் எழுதியது திண்ணை வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இக்கோட்பாட்டினைக் குறித்து திரு.ஜெயபாரதன் அவர்களும் விரிவானதோர் கட்டுரையை திண்ணையில் எழுதியுள்ளார்கள்.

ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கரால் வடிவமைக்கப்பட்டு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தால் நடத்தப்பட்ட பலூன் பரிசோதனை வளிமண்டலத்தின் உயர் அடுக்கான ஸ்ட்ராடோஸ்பியரில் (Stratosphere) நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தது. இந்நுண்ணுயிரிகளின் பரிணாமமானது புவி சார்ந்ததல்ல. மாறாக வளிமண்டல உயரடுக்குகளையே சார்ந்ததாகும். இப்பார்வையில் அவற்றினை புவி-சாரா உயிர்கள் (extra-terrestrial life) என அழைத்தல் தகும். இத்தகைய உயிர்களின் இருப்பினை சர்.ப்ரெட் ஹோயலின் அண்டவெளி உயிர்விதைப் பரவல் (panspermia) கோட்பாடு முன்னூகித்திருந்தது. இது இக்கோட்பாட்டினை ஏற்கும் அறிவியலாளர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனினும் ஹோயலின் கோட்பாட்டில் சில குறைகள் உண்டு. அதீத கற்பனையுடன், அடிப்படைவாத நுண்ணறிவு-வடிவமைப்புத்தன்மை (Intelligent Design) கோட்பாட்டின் தன்மை கொண்ட தாக்குதல்களை அவர் டார்வீனிய பரிணாம செயல்பாட்டின் மீது வைத்திருந்தார். உயிரினை உருவாக்கும் செயலிழைகள் (processes) அல்காரித தன்மை கொண்டவை என்பதன் அடிப்படையில் அத்தகைய செயலிழைகள் எங்கும் உருவாகும் சாத்திய கூறுகள் அதிகம். இன்று அதீத பெளதீகத்தன்மை கொண்ட நிலவெளிகளில் உயிர் அறியப்பட்டிருப்பது ‘அண்டவெளியில் உயிர்த்தன்மை கொண்ட மூலக்கூறு அமைவுகள் இயற்கைத்தேர்வு மூலமே உருவாக முடியும் ‘ என்பதற்கான நிகழ்தகவுகளை (probabilities) அதிகரித்தேயுள்ளது. ஆக, ஏதோ ஒரு விளிம்புக் கூட்டத்தின் அதீதக் கற்பனை கோட்பாடு என்பதாக இருந்த பான்ஸ்பெர்மியா இன்று அறிவியலின் உச்ச விளிம்பில் தீவிர உற்சாகத்துடன் விவாதிக்கப்படும் கருதுகோள் ஆகியுள்ளது. பான்ஸ்பெர்மியா கோட்பாட்டில் வால்நட்சத்திரங்கள், எரிகற்கள் மற்றும் விண்வெளித் தூசித்துகள்கள் ஆகியவற்றின் பங்கு மிகவும் அழுத்தமாகக் கூறப்படுகிறது.

விண்வெளித் தூசித்துகள்கள் உயிர் செயலாக்கத்துக்கு ஏதுவான மூலக்கூறுகளை கொண்டிருக்கலாம். சில அறிவியலாளரைப் பொறுத்தவரையில் ஆர்.என்.ஏ மற்றும் புரத மூலக்கூறுகள் இணைந்து ரைபோஸோம் (புரதத் தொடர்களை உருவாக்கும் அமைப்பு) போன்ற அமைப்புகளே ஒரு கிரகத்தில் உருவாகி விண்கற்கள் மூலமாக பிற கிரகங்களுக்கு சென்றிருக்கக் கூடும் (பார்க்க: டேவிட் வார்ம்ப்ழஷ் மற்றும் பெஞ்சமின் வெய்ஸ் எழுதிய ‘Did life come from another world ? ‘ -சயிண்டிபிக் அமெரிக்கன்-இந்தியா நவம்பர் 2005)

இதில் முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால் வால்நட்சத்திரத் தூசித்துகள்களை நாம் இதுவரை நேரடியாக ஆராய்ந்ததில்லை. இந்தச் சூழலில்தான் ‘ஸ்டார் டஸ்ட் ‘ (Stardust) எனும் விண்வெளி ஆராய்ச்சி ஓடத்தின் கொள்கலம் 15 ஜனவரி 2006 இல் அமெரிக்க பாலைவனத்தில் தரையிறங்கியது முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

பிப்ரவரி 1999 இல் இந்த விண்-ஆராய்ச்சி ஓடம் செலுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் ஸ்டார்டஸ்ட் ‘ஸ்டார்டஸ்டையே ‘ (நம் சூரிய மண்டலத்திற்கு வரும்) விண்மீன் மண்டலங்களுக்கிடையேயான தூசித்துகள்களை சேகரித்தது. ஆகஸ்ட் 2002 இல் (பின்னர் டிசம்பரில்) மற்றோர் விண்வெளித்தூசி வீச்சு நம் சூரியக் குடும்பத்துக்குள் வருவதறிந்து (1993 இல் கலிலியோ விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்டது) அதனையும் ஸ்டார்டஸ்ட் எதிர்கொண்டு சேகரித்தது. அதன் பின்னர் அது பலவிதங்களில் நம் சூரியமண்டலத்தையேச் சார்ந்த விண்வெளிப் பொருட்களைக் குறித்து நமது பார்வையை மாற்றியுள்ளது.

உதாரணமாக, நவம்பர் 2002 இல் அது அனுப்பிய விண்பாறை (asteroid) புகைப்படங்களைக் கூறலாம். அன்னிப்ராங்க் ஒரு விண்பாறை. Anne Frank – நாசி ஆக்கிரமிப்பின்காடுமைகளை தனது வாழ்நாள் குறிப்புகள் மூலம் மானுடத்தின் மனசாட்சிகளில் என்றென்றைக்குமாக ஏற்றிய யூதச் சிறுமியின் ஞாபகமாக இப்பெயர் இவ்விண்பாறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விண்பாறையின் பரிமாணங்கள், பூமியிலிருந்து கணிக்கப்பட்டதைக் காட்டிலும் இருமடங்காக இருப்பதை ஸ்டார்டஸ்ட் புகைப்படம் நமக்குக் காட்டுகிறது.

ஜனவரி 2004 அன்று இந்த ஓடம் வைல்ட்-2 (Wild 2) எனும் வால் நட்சத்திரத்தை நெருங்கியது.இந்த வால்நட்சத்திரத்தின் அண்மைக்கால வரலாறு சுவாரசியமானது. 1974 வரைக்கும் இவ்வால்நட்சத்திரத்தின் சூரியச் சுற்றுப்பாதை வியாழனுக்கும்(Jupiter) யுரேனஸுக்கும் நடுவில் அமைந்திருந்தது. அதாவது சூரியக்குடும்பத்தின் வெளிப்புற பரப்பில் இந்த வால்நட்சத்திரம் அமைந்திருந்தது. ஆனால் செப்டம்பர் 1974 இல் வைல்ட்-2 வியாழனுக்கு அருகில் -அதாவது 0.6 விண்வெளி அலகு(AU-Astronomical Unit: 1 AU=14,95,97,870.691 கிலோமீட்டர்கள். 0.6 AU =8,97,58,722.4146 கிலோ மீட்டர்கள்) -வந்தது. இதன் விளைவாக வைல்ட்-2 வின் சுற்றுப்பாதை மாறிவிட்டது. இப்போது அதன் சூரியனுக்கு அருகாமையிலான சுற்றுப்பாதை செவ்வாய் (Mars) கிரகத்திற்கு அருகாமையில் வரை வருகிறது. பொதுவாக வால்நட்சத்திரங்களில் நீர்-பனி-கரிம மூலகங்கள் அதிகம் காணப்படும். 1725 இன் வால்நட்சத்திரம் போன்றவற்றில் சமுத்திரங்கள் கூட இருக்கலாம் என கார்ல்சாகன் தமது ‘காமெட் ‘ எனும் நூலில் கூறுகிறார்.

வால்நட்சத்திரங்கள் எந்த அளவுக்கு அதிக தடவை சூரியன் அருகில் செல்கின்றனவோ அந்த அளவு அவற்றின் ஆவியாகிடும் பொருட்களை இழந்துவிடுகின்றன. இவ்வாறு எரிந்து தீரும் பொருட்களே வால்நட்சத்திரத்தின் ‘வால் ‘ போன்று காட்சியளிக்கின்றன. அதிக தடவை சூரியனை நெருங்கிடும் வால்நட்சத்திரங்களில் இவை ஒரு கட்டத்தில் தீர்ந்து போய்விடுகின்றன. ஆனால் வைல்ட்-2 இப்போதுதான் சூரியனுக்கு அருகில் வர ஆரம்பித்துள்ளது (ஹாலி வால்நட்சத்திரம் இதுவரை சூரியனை 100 முறை அணுகியுள்ளது. வைல்ட் 2 இதுவரை 5 முறையே அணுகியுள்ளது.) எனவே வைல்ட்-2 வால்நட்சத்திரத்தின் வால் தீர்க்கமாக உள்ளது. இவையெல்லாம் வைல்ட்-2 இன் வால் தூசித்துகள்களின் ஆராய்ச்சியினை மேலும் சுவாரசியமாக்குகின்றன.

ஸ்டார்டஸ்ட்டின் சேகரிப்புக்கலனிலிருந்து நீளும் சேகரிப்பான் ஒரு பெரிய டென்னிஸ் ராக்கட் வடிவில் இருக்கும். இது பிரத்தேயகமாக உருவாக்கப்பட்ட் ஏரோஜெல் எனும் பொருளால் ஆனது. இந்த ஏரோஜெல் என்பது நாஸாவின் ஜெட் ப்ரொபல்சன் பரிசோதனையகத்தால் (JPL) ஸ்டார்டஸ்டின் விண்வெளிதூசித்துகள் சேகரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டதாகும். பார்க்க ஏதோ அம்புலிமாமாவில் போடப்படும் ஆவி உருவப் படங்களைப்போல திண்மையற்ற தோற்றமளித்தாலும் அதன் தாங்கு திறனும், வெப்ப-காப்புத்திறனும் அசாத்தியமானதாகும். 2 கிராம் எரோஜெல் 2.5 கிலோ எடையுள்ள செங்கலைத் தாங்க முடியும். தீக்குச்சிகளை அதன் மீதுவைத்து அடியில் தீயினால் வெப்பப்படுத்தினாலும் தீக்குச்சி பற்றிக்கொள்ளாது. ஸ்டார்டஸ்டில் அனுப்பப்படும் முன்னர் இந்த ஏரோஜெல் வான்வெளியில் அது சந்திக்கப் போவது போன்றே அதிவேக தூசித்துகள்களால் தாக்கப்பட்டு அதன் சேகரிக்கும் திறன் கண்டறியப்பட்டது. இந்த வைல்ட்-2 எனும் வால்நட்சத்திரத்தை ஸ்டார்டஸ்ட் ஜனவரி 2004 இல் மிக அண்மையாக நெருங்கியது. 236 கிலோமீட்டர் அண்மையில் பலகோடிக்கணக்கான அதிவேக தூசித்துகள்கள் மணிநேரத்திற்கு 22000 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் வீசிய நிலையில் ஸ்டார்டஸ்ட் இத்தூசித்துகள்களை தனது டென்னிஸ் ராக்கட் வடிவில் உருவாக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த ஏரோஜெல் கொண்ட சேகரிப்பானில் சேகரித்துக்கொண்டது.இது தவிர முதன் முறையாக அறிவியலாளர்கள் வால்நட்சத்திரக் கருவினை இதுவரைக்கும் இல்லாத அளவு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டனர்.

ஸ்டார்டஸ்டின் சேகரிப்புக்கலம் கொண்டுவந்துள்ள தூசித்துகள்கள் ஏற்கனவே கலத்திலுள்ள கருவிகளால் எண்ணப்பட்டுள்ளன. இனி அவை ஆராயப்படும். இதில் உலகெங்கிலுமுள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கெடுக்கும். இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள இத்துகள்களில் புவியில் உயிரின் தோற்றம் முதல் வேற்றுலக உயிரின சாத்தியக்கூறுகள் ஊடாக சங்கனாச்சேரி செம்மழை வரையிலான மர்மங்களுக்கான விடைகள் நமக்காகக் காத்திருக்கக் கூடும். ஆனால் சில மைக்ரான் பரிமாணங்களே கொண்ட விண்வெளித் தூசித்துகள்கள் 1000 சதுர செமீ பரப்பளவு கொண்ட ஏரோஜெல்லில் வருடக்கணக்காக சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன (2000 முதல் 2006 ஆம் ஆண்டுவரை). எனவே இவற்றினை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அறிவியல் அமைப்பான Planetary society அறிவியல் ஆர்வமும் குறைந்த பட்ச திறனும் கொண்ட பொதுமக்களையும் கணினி-இணையம் மூலம் இத்தேடலில் ஈடுபடுத்த ஒரு செயல் திட்டம் தீட்டியுள்ளது. அதுதான் stardust@home.

எவ்வாறு உருவாயிற்று stardust@home ?

பெர்க்லீ கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பரிசோதனைச் சாலையைச் சார்ந்த ஆண்ட்ரூ வெஸ்ட்பால் இத்தேடலுக்கு தானியங்கி நுண்ணோக்கியினை பயன்படுத்த முனைகிறார். தானியங்கி நுண்ணோக்கி ஒவ்வோர் துகளின் ஒவ்வோர் மீச்சிறிய பகுதியையும் தானியங்கு முறையில் ‘ஸ்கேன் ‘ செய்திடும். இப்பிம்பங்கள் வரிசைமுறையில் சேர்க்கப்பட்டு ஒரு தொகுதியாக்கப்பட்டு அது பார்க்கப்படும் அதன் அடிப்படையில் துகள்களின் பரிசோதிக்கத் தக்க பகுதிகள் கணினியால் கணித்தறியப்பட்டு அந்த இடங்கள் மீண்டும் அறிவியலாளரால் பார்க்கப்படும். அதிஆற்றல் நுண்துகள் பரிசோதனைகளில் வெற்றி ஈட்டித்தந்த முறை இது ஆனால் ஏழு வருடங்கள் விண்வெளியில் கடும் சூழலில் இருந்து வரும் ஏரோஜெல் பதிவுகளினை ஆய்வதில் இது எந்த அளவு வெற்றிபெறும் என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில் ஏரோஜெல்லில் இந்த வருடங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான நுண் கீறல்கள், மற்றைய விண்வெளித்துகள்கள் அல்லாத பதிவுகள், மற்ற தேவையற்ற அழுத்த விளைவுகள் ஆகியவற்றிற்கு மத்தியில், வைக்கோல் போரில் ஊசியைத்தேடுவதைக் காட்டிலும் கடினமான முறையில் இந்த நுண் துகள்களை தேடிக் கண்டுகொள்ள வேண்டும். கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் பேரா.ஜிதேந்திர மாலிக் அத்தகையதோர் நுண்ணருமையாக திறம்பட பிரித்தறியும் கணினி மென்பொருளைச் சமைப்பது சாத்தியமே எனத் துணிந்துள்ளார். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதற்கும் கூட கணினிக்கு ஒரு விண்வெளித்துகளால் ஏற்படுத்தப்பட்ட ஏரோஜெல் பதிவினையும் அவ்வாறல்லாத அழுத்தப்பதிவையும் காட்டவேண்டும். நம்மிடமோ ஒரு விண்வெளித்தூசித்துகள் பதிவு கூட இல்லை. இனிதான் நாம் தேட வேண்டும். அதற்குதான் இத்தனைப் பிரயத்தனமுமே. அறிவியலாளர்கள் இப்போதைக்கு ‘இப்படித்தான் இருக்கக் கூடும் ‘ என்றுதான் சொல்லமுடியும். ஆனால் இந்த ‘கூடும் ‘ என்கிற வார்த்தை அலுப்பூட்டக் கூடியது. பிழைகளை உருவாக்க ஏதுவாகக் கூடியது.

இச்சூழலில்தான் வெஸ்ட்பால் புகழ்பெற்ற seti@home இனை நினைவு கூர்ந்தார். இதனடிப்படையில் பின்வரும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 260 x 340 மைக்ரான்கள் பரப்பளவு கொண்ட பதிவுகள் முழு சேகரிப்புக்கும் உருவாக்கப்படும். அதாவது 160000 வெவ்வேறு பகுதிகளாக இச்சேகரிப்பு பதிவுகளின் பகுதிகள் பிம்பமாக்கப்படும். இந்த நுண்ணோக்கிகள் ஒவ்வொர் பகுதிக்கும் 40 வெவ்வேறு புகைப்படங்களை உருவாக்கும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழங்களில் (20 மைக்ரானிலிருந்து 100 மைக்ரான்களுக்கும் அதிகமாக) அமையும். இந்த 40 படங்களும் இணைக்கப்பட்டு ஒரு படத்தொடராக்கப்படும். அதாவது ஒவ்வோர் பகுதிக்கும் தொடர்ந்து ஆழமாகக் காணக் கூடிய ஒரு படத்தொடர் கிட்டும். இனி ஒரு ‘மென்-நுண்ணோக்கி ‘ (virtual microscope) எனும் பிரோகிராம் இணையம் மூலம் இத்தேடலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும்.

அவர்கள் அதனை பயன்படுத்தி மேல் கூறிய படத்தொடரை விண்வெளித்துகளுக்காகத் தேடுவர். ஒவ்வொரு தனி மனிதருக்கும் சிறிய பகுதியே கிடைக்கும் என்றாலும் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தேடுவோர் மூலம் ஏரோஜெல் பதிவுகளின் பெரும் பகுதி தீர்க்கமாக அலசப்பட்டுவிடும். seti@home -இல் இருந்து stardust@home கணிசமாக வித்தியாசம் அடையும் இடம் இதுதான். seti@home இல் நாம் மென்பொருளை நம் கணினியில் நிறுவிவிட்டால் போதுமானது. ஆனால் இங்கோ நாம் நம் நேரத்தையும் திறனையும் செலவிட வேண்டும். தனிமனிதத் திறமையின் குறை நிறைகளை கணக்கில் எடுக்க வேண்டியுள்ளதால், நீங்கள் ஒரு விண்வெளித்தூசித்துகளை கண்டறியும் பட்சத்தில் அது மற்ற தேடுவோரால் மீள்-ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும். அவர்களாலும் உறுதி செய்யப்படும் துகள்கள் அறிவியலாளர்களால் பரிசோதனை செய்யப்படும். எனவே இத்தேடலில் பங்குபெற முன்பதிவு (இலவசமாகத்தான்) செய்வதுடன் நீங்கள் பயிற்சி பெற்று ஒரு தேர்வில் தேர்ச்சியும் பெறவேண்டும்.

விண்வெளித்தேடலில் உங்கள் வீட்டிலிருந்தே பங்கு பெற இந்த உரலை பார்க்கவும்:

http://stardustathome.ssl.berkeley.edu/participation.html

http://stardust.jpl.nasa.gov/home/index.html

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்