சங்கச் சுரங்கம் – 4 : திருமுருகாற்றுப்படை

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

சு.பசுபதி, கனடா“ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா” என்ற பாடல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தச் சொற்றொடரைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம் மீண்டும் எழுந்தது. சிறுவயதில் ” ‘ஆறுபடை வீடு’ என்றால் என்ன? ” என்று ஒருவரைக் கேட்டிருந்தேன். சூரன் போன்ற அசுரர்களுடன் முருகன் போர்செய்த போது தன் படைகளுடன் தங்கியிருந்த ஆறு தலங்களுக்குத் தான் இந்தப் பெயர் என்றார் அவர். சில ஆண்டுகள் கழிந்தன; நானும் கந்தபுராணம் போன்ற நூல்களைப் படித்துப் பார்த்தேன். ஆறு படைவீடுகளில் சூரனை வென்ற இடமான திருச்செந்தூர், மற்றும் கதிர்காமத்திற்கு அருகில் ஏமகூடம் போன்ற இடங்களில் முருகனின் படைகள் தங்கியிருக்கலாம் என்று தோன்றியது ; ஆனால், மற்றபடி மற்ற ‘படை’ வீடுகளுக்கும் முருகனின் ‘படை’களுக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது மீண்டும் அந்தச் சந்தேகம் மனத்தை உறுத்தியது. என் நண்பர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் இதைச் சொன்னேன். அவர் , அண்மையில் டொராண்டோவிற்குக் குகன் என்ற ஒரு முருக பக்தர், தமிழறிஞர் புதிதாக மதுரையிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருப்பதாகச் சொல்லி,
அவரை அணுகும்படி ஆலோசனை கூறினார். ‘சரி!’ என்று குகனைத் தொலைபேசி மூலம் கூப்பிட்டு, வீட்டின் முகவரி தெரிந்து கொண்டு, அவர் வீடு சென்றேன்.

குகன் வீட்டில் ஒரு புதுமையைக் கண்டேன். வீட்டு வாசலில் , கதவுக்கு மேலே, ஒரு கயிற்றில் ஒரு பந்தும், ஒரு பொம்மையும் தொங்கிக் கொண்டிருந்தன. பாவம், ஏதோ ஒரு குழந்தை நினைவில் இப்படிச் செய்திருக்கிறாரா? ஒன்றும் புரியவில்லை. இப்போது இரண்டாம் கேள்வியும் என் மனத்தில் தொற்றிக் கொண்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடனே, என் இரண்டு ஐயங்களையும் அவசரம் அவசரமாய்க் கொட்டினேன்.

குகன் சிரித்தார். ” சரி, முதலில் ‘ஆறுபடை’வீடு விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம். பிறகு என்னுடைய வீட்டு வாசலில் தொங்கும் ‘தோரண’த்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார்.

” ‘ஆறு’ என்றால் வழி; ‘ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘வழிகாட்டுதல்’. ‘ஆற்றுப்படை’ என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர்,
பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, “அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள்” என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுப்படை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர். ஆற்றுப்
படையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள் என்ற வழக்கு மாறி, பின்பு படை வீடு, ஆறுபடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட ‘ஆறுபடை வீடு’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தாமல், ‘ஆறு திருப்பதி’ ‘அறுபத நிலை’ ‘ஆறு நிலை’ போன்ற சொற்றொடர்களையே
பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு படை வீடு என்று சொல்லவில்லை. ‘ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோ னே’ என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்… ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த
400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது.”

” அப்படியானால், நாம் இனிமேல் ‘ஆற்றுப்படை வீடுகள்’ என்றுதான் அந்தத் தலங்களை அழைக்க வேண்டுமா?” என்றேன்.

‘ஆறுபடை வீடுகளை’ திரும்பவும் மக்கள் பேச்சில் ‘ஆற்றுப்படை’ வீடுகளாக மாற்றுவது கடினம்தான்! அதன் உண்மை வடிவைத் தெரிந்து கொண்டு, இப்படி ஆறு வீடுகள் என்று குறிக்கும் கெளமார நெறிக்கே வழி காட்டிய நக்கீரருக்கு மனத்தில் நன்றி சொல்லி, இனி அச்சொற்றொடரைப் பயன்படுத்துவோமே? ” என்றார் குகன்.

“சரி, என் இரண்டாம் ஐயம் ..” என்று இழுத்தேன்.

குகன் சிரித்துவிட்டு, “முதலில் நான் திருமுருகாற்றுப் படையிலிருந்து ஒரு துளித் தேன் சொட்டைத் தெளிக்கிறேன். முழுத் தேனாற்றில் மூழ்க நேரமில்லை. பிறகு அந்த தோரண மர்மத்தை விளக்குகிறேன். ஆனால், முதலில் ஒரு சிறு துப்பு: அதற்கும் அந்த நூலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது” என்று சொல்லி, என் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டார். நானும் திருமுருகாற்றுப் படை பற்றிக் கேட்கத் தயாரானேன்.

மதுரை கணக்காயர் மகன் நக்கீரனார் எழுதிய 317 அடிகள் கொண்ட இந்நூல், ஆசிரியப்பா என்ற செய்யுள் வகையில் இயற்றப் பட்டது. சங்க நூல்களுக்கே ஒரு கடவுள் வாழ்த்துப் போல் விளங்கும் இந்நூல் பத்துப் பாட்டில் முதல் பாட்டு ; இது பதினோராவது சைவத் திருமுறையிலும் இடம் கொண்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் உள்ள ஒரே நூல் இது ஒன்று தான்! திருப்பரங்குன்றம்,
திருச்சீரலைவாய் , திருவாவினன்குடி , திருவேரகம் , குன்றுதோறாடல் , பழமுதிர்சோலை என்ற ஆறு ‘வீடு’களைப் பற்றி மிக்க கவித்துவத்துடன் பாடியுள்ளார் நக்கீரர்.

” இந்த இடங்களெல்லாம் இப்போது நாம் சொல்லும் அதே ஊர்களா? ” என்று கேட்டேன்.

” கிட்டத் தட்ட அப்படித்தான்! திருச் சீரலைவாய் திருச் செந்தூரைக் குறிக்கும். திருவாவினன் குடி பழனியன்று; ஆனால், பழனியைச் சார்ந்தது. திருவேரகம் ஒரு மலை நாட்டுத் தலம் என்று நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அருணகிரி நாதர் அது சுவாமிமலை என்கிறார். ‘குன்றுதோறாடல்’ என்ற சொற்றொடர் குறிஞ்சித் தெய்வமான முருகன் ‘எல்லாக் குன்றுகளிலும் இருப்பான்’ என்பதைக் காட்டுகிறது. பலர் ஐந்தாம் படைவீடு ‘திருத்தணி’ என்று நினைக்கிறார்கள். ஆனால் முருகன் இருக்கும் எல்லாக் குன்றுகளுமே இந்தப் படைவீட்டில் சேர்ந்தவையே! சிலர் ‘பழமுதிர் சோலை மலை தற்போதைய அழகர் கோவில்’ என்பர்; சிலர் ‘இல்லை’ என்பர்.” என்றார் குகன்.

” நூலின் தொடக்கமே மிக அழகு! ” என்று தொடர்ந்தார் குகன்.

‘ உலகம் ‘ என்ற , பிற்காலத்தில் மங்களச் சொற்களில் ஒன்று என்று சுட்டப் பட்ட, வார்த்தையுடன் தொடங்குகிறது நூல். முதலில் நீலக் கடலைக் காட்டுகிறார் நக்கீரர்; பிறகு அதன் மேல் எழும் காலைக் கதிரவன். இதற்குள் நம் மனக்கண் முன் நீல மயில் மேல் இருக்கும் முருகன் தோன்றிவிடுகிறான்! அவ் வடிவம் பேரொளிப் பிழம்பாக இருக்கிறது. எப்படிப் பட்ட சோதி? காலம், வெளி இரண்டையும் கடந்த
ஒளி என்பதை ஒரே அடியில் சொல்கிறார் நக்கீரர்.

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி

ஓவற – இடைவிடாமல், நீக்கம் இன்றி ; அதாவது கால எல்லை இல்லாமல்.
சேண்- நெடுந்தூரம். இட எல்லையையும் கடந்து விளங்கும் ஒளி.

பிறகு அச் சோதியின் காலைக் காட்டுகிறார். பிறகு கை; மார்பு; மார்பில் புரளும் மாலை; தலை; தலையில் சூடியுள்ள கண்ணி. பிறகு கையில் வேல் காட்டுகிறார். அவன் யார்? ” மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன் ” என்கிறார். மறுவற்ற கற்பினையும் (அக அழகினையும்) , ஒளி பொருந்திய நெற்றியையும் (புற அழகினையும்) உடைய தெய்வயானையின் கணவன் என்கிறார். ( பாட்டின் முதல்
பகுதி திருப்பரங்குன்றமல்லவா? அக்குன்றத்தில் தானே முருகன் தெய்வயானையை மணம் புரிந்தார்?)

அவர் கவிநயத்திற்கு இன்னொரு உதாரணம் பார்க்கலாம். முருகனின் மார்பைச் சொல்லவந்தவர் அதில் தேர் உருளை போன்ற வட்டமான கடம்ப மலர் மாலை புரள்கிறது என்கிறார். கடம்ப மரம் எங்கிருக்கும்? அடர்த்தியான காட்டில். இந்த அடர்த்தியும், செழுமையும் எப்படி வந்தது அக் காட்டிற்கு? மழை பெய்ததே காரணம். மழை எப்படிப் பெய்ந்தது? கடலில் நீர் மொண்டு கருக்கொண்டதால் மழை பெய்தது என்கிறார்.இப்படிச் செய்திகளைக் கோத்துச் சொல்லும் உத்தியில்
திளைக்கிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறி
தலைபெயல் தலைஇய தண்நறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்.

கார்கோள்- கடல்; மேகம் கடல் நீரைக் கொள்வதால் (அறிவியல் உண்மை அல்லவா?) கடலைக் ‘கார்கோள்”என்று அழைக்கிறார் நக்கீரர். இச் சொல்லைக் கடலுக்குக் காரணப் பெயராக முதலில் பயன்படுத்தியவர் இவர்தான் என்கிறார் சிலம்பொலி செல்லப்பன்.
( கமம்-நிறைவு; சூல்-கர்ப்பம்; வாள் போழ் விசும்பு-ஒளியுடைய ஞாயிறும், திங்களும் இருளைப் பிளக்கும் ஆகாயம்; வள் உறை- வளமான நீர்த்துளி; தலைப் பெயல்- முதல் மழை; தலைஇய-பெய்த; பொதுளிய-தழைத்த; பராரை-பருத்த அடி; மரா அத்து- (கடம்ப) மரத்து )

“சரி, நீங்களே நூலின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டாம் சந்தேகத்தைத் தீர்க்கிறேன். திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்ல வந்த நக்கீரர், அது மதுரைக்கு மேற்கே இருக்கிறது என்று சொல்லும்போது, மதுரையின் சிறப்பை விவரிக்கிறார். நகரின் மதில்மேல் ஒரு கொடி உயர்ந்து பறந்து கொண்டிருக்குமாம். வாயிலில் பந்தும் , பாவையும் (பொம்மையும்)
தொங்குமாம்.

வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர்அரூ வாயில்

[ வரிந்து புனையப்பட்ட பந்தோடு, பொம்மைகள் தொங்க, பகைவர்களை அழித்துப் போர் அரியதாகப் போன வாயில் ]

பந்தும், பாவையும் பெண்கள் ஆடும் பொருள்கள். இது பகைவர்க்கு ஒரு குறிப்பைத் தரும் தோரணம். பகைவர்கள் இந்த மதுரைக்குள் வரமுடியாது. அப்படிப் புக விரும்பினால், தங்கள் ஆண்மையை இழந்து, தாங்கள் பெண்களைப் போன்றவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க, தொங்கும் பந்தையும்,
பாவையையும் எடுத்து விளையாடிப் பின்னர் உள்ளே போக வேண்டும். வீரர்கள் வெளியே நின்று கோட்டையை முற்றுகை இடலாம். ஆண்மை இலாதவர்கள் வீரம் இழந்து உள்ளே போகலாம். இதுதான் அந்தத் தோரணம் சொல்லும் குறிப்பு. நக்கீரர் பாடும் காலத்தில், அந்த வாயில் மங்கல வாயிலாக, போருக்குரிய அறிகுறிகள் இல்லாமல் உள்ளது.

” நான் மதுரைக் காரன் அல்லவா? அதற்காக திருமுருகாற்றுப்படையில் வருகிற மாதிரி என் வீட்டு வாசலிலும் ‘பந்தும், பாவையும்’ தொங்கவிட்டேன் ” என்றார் குகன்.

குகனுக்கு நன்றி சொல்லி விட்டு, அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த கீழ்க்கண்ட பாட்டை, ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ மெட்டில் முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பினேன்.

சண்முக வேலனே கந்தா ! – சிவ
சங்கரன் மைந்தா! எனக்கு வரந்தா!

ஆறு முகன்புகழ் பாடும் –முரு
. . காற்றுப் படையென்ற நூலினைப் பாரு!
கீரனின் நூல்தமிழ்ச் சாறு — கந்தன்
. . கீர்த்தியைத் தேக்கிடும் வீடுகள் ஆறு !

~*~o0O0o~*~

pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா