சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

சு. பசுபதி, கனடா


நண்பர் நாணு ஊருக்குப் புதியவர்; அவர் வீட்டில் அன்று எனக்குப் பலத்த விருந்து. அதற்குப் பின் நாங்கள் இருவரும் சோபாவில் உட்கார்ந்து ‘உண்ட களைப்பை’ப் போக்கிக் கொண்டிருந்தோம். நாணுவின் மனைவி சமையலறையில் வேலை செய்துகொண்டே நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களுடைய இளம்பெண், லதா . . நடனம் நன்றாக ஆடுவாள் என்று நாணு சொல்லிக் கேள்வி . . . இன்னொரு சோபாவில், ஒரு நர்த்தன நிலையில் வளைந்து/ உட்கார்ந்து/ படுத்து ஒரு புதினம் படித்துக் கொண்டிருந்தாள். நாணுவின் ஐந்து மாதக் குழந்தைக்கு , அவர்களுடைய பெரிய பையன் ஒரு கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.

“நாணு சார், உங்கள் வீட்டைப் பார்த்ததும் ‘சிறுபாணாற்றுப் படை’ என்ற சங்க நூலில் உள்ள சில கவிச்சித்திரங்கள் தான் நினைவிற்கு வருகின்றன.” என்றேன். “சொல்லுங்கோ, சார் “ என்று ஊக்கம் கொடுத்து ஒரு காபி டம்ளரை என் பக்கம் நகர்த்தினார் நாணு. ‘ஸ்டார்பக்ஸ்’ காபியை, அதற்குரிய மரியாதை கொடுத்து,
துளித் துளியாக ருசித்துக் குடித்தபடியே பேசத் தொடங்கினேன்.

பாணர்களில் இருவகை. நரம்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சிறிய யாழ்(அல்லது சீறியாழ்) வாசித்தால் சிறுபாணர்; பெரிய யாழ் (பேரி யாழ்) வாசித்தால் பெரும் பாணன் என்பர். ஓய்மான் நாட்டு வள்ளல் நல்லியக்கோடனிடம் சென்றால் பரிசு பெறலாம் என்று ஒரு சிறுபாணனை நோக்கிச் சொல்கிற ‘ஆற்றுப்படை’ பாடல் மரபில் அமைந்தது சிறுபாணாற்றுப்படை. புலவர் நல்லூர் நத்தத்தனார் பாடியது. இது பத்துப் பாட்டில் மூன்றாவது நூல். 269 அடிகள் கொண்டது.

“ உங்கள் மகள், மகன், விருந்து போன்ற அனுபவங்கள் அந்த நூலில் உள்ள சில அருமையான சித்திரங்களை நினைவு படுத்துகின்றன. அவற்றில் சில பகுதிகளை மட்டும் இப்போது சொல்கிறேன் ” என்று தொடர்ந்தேன்.

“ பாணனுடைய மனைவி விறலி. ஆடற்கலையில் தேர்ந்தவள். ( நாணுவின் பெண் லதா சடாரென்று படிப்பதை நிறுத்தி என்னைப் பார்க்கத் தொடங்கினாள்.) அவளைப் பற்றி மிக அழகாக ஓர் ஓவியம் தீட்டுகிறார் புலவர்.

ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண் டருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பு; கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயில்மயில் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ
வயங்குஇழை உலறிய அடியின்: . . .

விறலியின் கூந்தலிலிருந்து வர்ணனை தொடங்குகிறது.

விறலியின் இருண்ட கூந்தல் ( கதுப்பு) எண்ணெய் பூசிய மினுமினுப்புடன், மெல்லியதாய் கீழே விழும் மேகம் போலத் தோன்றுகிறது. தோகை (கதுப்பு) விரித்து ஆடும் ஆண்மயில், விறலியின் சாயலைப் பார்த்து, இவளுடைய சாயல் போல நம் சாயல் இல்லையே என்று நாணி அருகில் இருந்த பெண்மயிலுக்குப் பின் ஒளிந்து கொள்கிறது. விறலியின் பாதம் ஓடி இளைத்த ( சாஅய்) நாயின்
நாக்குப் போலவும், ( வறுமையினால்) நகைகளற்றும் இருந்தது.
. . இப்படி விறலியை மிக அழகாக வர்ணித்துக் கொண்டே போகிறார் புலவர்.
‘கதுப்பு’ ( சாயல்) போன்ற சொற்களைச் சொல்லி, பின்னர் அதே வார்த்தைகளை ‘கதுப்பு’ (சாஅய்) மீண்டும் உவமையாக்கிச் சொல்வதை ‘அந்தாதித் தொடை உவமை’ அல்லது ‘ஒற்றைமாலை அணி’ என்று சொல்வர். இப்படி 18 அடிகளில் ‘ஒற்றைமாலை அணிக்கு’ ஓர் சிறந்த எடுத்துக் காட்டை இந்நூலில் வரைகிறார் புலவர் நத்தத்தனார்.

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
நடைமெலிந்து அசைஇய நன்மெல் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர .

இப்படிப் பட்ட அழகிய விறலி, பாலைவனத்தில் நடந்த சோர்வினால் மரநிழலில் உட்காருகிறாள். அவளுடைய கால்களைக் ‘கல்லா’ இளையர்கள் மெல்ல வருடுகிறார்கள்.

லதா சடாரென்று இடைமறித்தாள் .” மாமா, இளையர்கள் என்றால் பெண்களா? ஆண்களா? ” என்று கேட்டாள். சமையலறையில் இதுவரை கேட்டுக் கொண்டிருந்த மாவரைக்கும் சப்தம் திடீரென்று நின்றது.

கூச்சத்தை மறைக்க, நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “ விறலியர் அடிகளை வருடியதால், இளையர் என்றால் ஆண்களை விலக்கிப் பெண்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளவேண்டும் என்கிறார் சிலம்பொலி செல்லப்பன் . இளையர் என்றால் விறலியரின் மாணவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். அம்மாணவர்கள் இன்னும் ஆடற்கலையை முழுதும் கற்றுக் கொள்ள வில்லை. அதனால் ‘கல்லா இளையர்’ என்றழைக்கப் படுகிறார்கள். தன் தொழிலைத் தவிர வேறெதுவும் ‘கல்லாத இளையர்’ என்கிறார் நச்சினார்க்கினியர். ”என்றேன். சமையலறையில் மாவரைக்கும் சப்தம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.

“ சரி, மாமா. ஆனால், நீங்கள் அந்த விறலியைப் பற்றிய முழு வர்ணனையைச் சொல்லவில்லையே?” என்று குழைந்தாள் லதா. சமையலறைச் சப்தம் மீண்டும் நின்றது. எனக்கு நெற்றி வியர்க்கத் தொடங்கி விட்டது. “ அந்த வரிகளை மறந்து விட்டேன், லதா. இன்னொரு முறை சொல்கிறேன்” என்று மழுப்பிச் சமாளித்தேன். ( உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம். அறிஞர் கமில் ஸ்வெலெபிலின் கணிப்பில் நூலில் காணப்படும் அந்த விறலியின் ‘பாதாதி கேச’ வர்ணனை பழந்தமிழ் இலக்கியத்திலேயே மிகச் சிறந்தவற்றில் ஒன்று என்கிறார்!)

“ நூலில் உள்ள இன்னொரு சித்திரம். கேளுங்கள்! மூவேந்தர்களை விட நல்லியக் கோடன் சிறந்த வள்ளல் என்று சொல்வதற்குமுன் பாணன், சேர, சோழ, பாண்டிய நாடுகளை வர்ணிக்கிறான் . உதாரணமாக, பாண்டி நாட்டுக் கொற்கையில் உப்பு வணிகர்கள் (உமணர்கள்), உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி, மனைவிகளுடனும் (உமட்டியர்), குழந்தைகளுடனும் வருகின்றனர். கூடவே தங்கள் குழந்தையைப் போலவே அவர்கள் செல்லமாக வளர்த்த ஒரு மந்தியும் வருகிறது. அதன் தலையைச் சுற்றி ஒரு பூமாலை போட்டு அழகு செய்திருக்கின்றனர். பயண நடுவில் குழந்தைகள் அழுகின்றன. கிலுகிலுப்பைக்கு எங்கே போவது? பாண்டி நாடல்லவா? எங்கே பார்த்தாலும் முத்துகள். அவற்றை எடுத்து , கிளிஞ்சல்களில் போட்டு மூடி, கிலுகிலுப்பை செய்கிறார்கள் உமட்டியர்கள். குரங்கு அதை ஆட்டி, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுகிறது.

செய்பூங் கண்ணி செவிமுதல் திருத்தி
நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி ….
. . . . . .
உளர்இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்.

“ பிறகு இன்னொரு சித்திரம். நல்லியக் கோடன் அவையில் பாணர்களுக்கு விருந்து. பீம பாகம், நள பாகம் என்று இரண்டு வகைப் பாக சாத்திரங்கள் உண்டு. “பீமன் எழுதிய “சமைத்துப் பார் !” நூல்படி (“மீனாக்ஷி அம்மாள் தான் எனக்கு ‘அதாரிடி’ “.சமையல் அறைலிருந்து ஒரு குரல் கேட்டது. ) பற்பல உணவு வகைகளைத் தருவானாம் நல்லியக்கோடன். இதைச் சொல்லும்போது, சங்க காலத் தமிழ்நாட்டில் பாரதக் கதைகள் தெரிந்திருந்தன என்பதையும் நமக்கு உணர்த்துகிறார் புலவர் நத்தத்தனார். ”

” அர்ஜுனன் காண்டீவ வனத்தை எரித்த அம்புகள் கொண்ட தூணியை உடையவன்; பூவேலை செய்த கச்சொன்றைக் கட்டியவன். அவன் அண்ணன் பனிமலை போன்ற மார்புடைய பீமன். பீமன் இயற்றிய, நுண்ணிய விஷயங்கள் கொண்ட, சமையல் நூலின் செய்முறைகளிலிருந்து கொஞ்சமும் தவறாமல் செய்யப்பட்ட பல்சுவை உணவைப் படைத்து, உண்கலத்தைச் சுற்றிச் சிறுசிறு துணைக் கலங்களிலே காய்கறிகளைப் படைப்பார்கள். உணவுள்ள பொன்கலம் சந்திரன் போலவும், சுற்றிலும் உள்ள சிறு கலங்கள் நக்ஷத்திரங்கள் போலவும் இருக்கும்! ”

கா எரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்பவன பேணி
….

இப்படி நான் சிறுபாணாற்றுப்படையைப் பற்றி மேலும் பேசத் தொடங்கியபோது, நாணுவின் மனைவி நாணுவைச் சைகை செய்து சமையல் அறைக்கு வரச் சொன்னாள். சற்றே உரத்த குரலில் அவள் சொன்னது என் காதிலும் கேட்டது. (ஒருவேளை, அதற்குத்தான் குரலை உயர்த்தினாளோ?) ” ஏன்னா, இந்த உங்கள் நண்பர் சுத்த வியவஸ்தை கெட்டவராக இருக்கிறாரே? முதலில், ஏடாகூடமாக ‘பெண்ணின் காலை வருடும் இளையர்’ என்று லதா முன் பேசுகிறார். பிறகு, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டுக் காட்டும் நம்பையன் ஒரு மந்தி போலிருக்கிறான் என்கிறார். சரி, போனால் போகிறது என்றால்… மனுஷனுக்கு எப்படியோ இன்றைய சமையல் உங்களுடையது என்று தெரிஞ்சுட்டுது போலிருக்கே? உங்களைக் ‘காக்கா’ப் பிடிக்கப் ‘பீம பாகம்’ ன்னு வேறே உச்சியிலே ஐஸ் வைக்கறார். அதே சமயம், நான் சமைக்கவில்லை என்பதையும் வாழைப்பழத்தில் ஊசி மாதிரி சொருகறார் ” என்று அவளுடைய குரல் உயர்ந்து கொண்டே போனது.

நான் அவசரம் அவசரமாக என் செருப்பைத் தேடினேன்.
~*~o0O0o~*~
pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா