க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue


இந்தியாவின் தெருவெங்கும் இப்போது செல்லுலார் தொலைபேசிகள். இங்கேயே இப்படியென்றால், மற்ற நாடுகளில் இதன் வீச்சு இன்னும் அதிகம். பின்லாந்தில் சுமார் 90 சதவீதம் பேர் செல்லுலார் தொலைபேசியில்தான் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

இந்தப் புரட்சிக்கு யார் காரணம் ?

சமீபத்தில் ஓ. கேஸி கார் எழுதிய ‘காற்றிலிருந்து பணம் ‘ என்ற புத்தகத்தைப் படித்தேன். இதில் செல்லுலார் தொலைபேசி என்ற புரட்சிக்குக் காரணமான க்ரெக் மக்கா அவர்களைப்பற்றி விலாவாரியாக வாழ்க்கை வரலாறும் அவரது சாதனைகளைப் பற்றியும் புத்தகம். நிச்சயம் இந்தப் புத்தகம் க்ரெக் மக்காவைப்பற்றி முழுவதுமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஏனென்றால், க்ரெக் மக்கா இன்னும் சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

கார் எழுதிய இந்தப் புத்தகம் அழகாகவும், படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் மக்கா எவ்வாறு அடித்தளத்திலிருந்து ஒரு மாபெரும் கேபிள் டெலிவிஷன் கம்பெனியைக் கட்டினார் என்பதையும், எவ்வாறு அவர் புத்தம்புது செல்போன் தொழிலைக் அறிமுகப்படுத்தி பெருமளவுக்கு கட்டினார் என்பதையும், அப்படி பெரியதாகக் கட்டிய செல்போன் தொழிலை எப்படி அவர் AT&T நிறுவனத்துக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்தார் என்பதையும் சொல்கிறது.

இப்போது டெலெடெஸிக் என்ற உலகளாவிய துணைக்கோள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம், இணையமும், தொலைத்தொடர்பும், துணைக்கோள்கள் மூலம் உலகத்தில் உள்ள எல்லோருக்கும், எங்கிருந்தாலும் வணிக நிறுவனங்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், வண்டியோட்டிகளுக்கும் எல்லோருக்கும் எப்படி கையில் எளிய விலையில் கையில் கிடைக்கும் என்பதையும் இந்தப் புத்தகம் பேசுகிறது.

மக்கா கண்ணாடி போட்டு புத்தகத்ைதை உருப்போடும் புத்தகப்புழு அல்ல. அவருக்கு டிஸ்லெக்ஸிக் என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத வியாதி கூட உண்டு. இருந்தும் அவர் விமான ஓட்டி தேர்வுக்கு சென்று தேர்வும் ஆகி இருக்கிறார். அவருக்குக் கீழ் வேலை செய்யும் மக்கள் அவரை ரொட்டிகளால் அடிக்கக் கூட அனுமதிக்கிறார். கெய்க்கோ என்ற திமிங்கலத்தின்மீது சவாரி கூட செய்திருக்கிறார். (இந்த திமிங்கலம், ஃப்ரீ வில்லி என்ற படத்தில் நடித்தது.)

இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது இவர் ஒன்றும் மிகச்சிறந்த மாணவராக கருதப்படவில்லை. அவர் படித்தது வரலாறு. தொழில்நுட்பம் அல்ல. (எப்படி மக்கள் வெற்றியடைகிறார்கள் எப்படி தோல்வி அடைகிறார்கள் என்பதை ஆராய எனக்கு உதவியது வரலாறு படிப்பு என்று புத்தகத்தில் கூறுகிறார் மக்கா)

மக்காவின் அப்பா ஒரு பாடாவதி கம்பெனி ஒன்றை பலத்த கடனுக்கிடையில் நடத்தி வந்தார். அப்பாவிடமிருந்து மகன் அந்த நிறுவனத்தை பெற்றுக்கொண்டு நடத்த ஆரம்பித்தார். வெகுவிரைவில் ‘கடன்வாங்கி நிறுவனம் வாங்கும் ‘ லிவரேஜ் சமாச்சாரங்களில் பெரிய ஆளானார். ‘எனக்கு இருக்கும் பணத்தேவை எந்நாளும் என் எதிர்காலத் திட்டங்களை பாதிக்க விடுவதில்லை ‘ என்று மக்கா புத்தகத்தில் கூறுகிறார்.

‘எனக்கு கீழ்ப்படியும் வேலையாட்களை நான் வேலைக்கு எடுப்பதில்லை. என்னோடு சண்டை போடும், ஆர்வமான, தான் நினைப்பதை தெளிவாகக் கூறும் நபர்களே எனக்குத் தேவை. ஏனெனில் அவர்களால் தான் உருப்படியான வேலையைச் செய்ய முடியும் ‘ என்று கூறுகிறார் மக்கா.

இருப்பினும் மக்கா மிகத் தெளிவான திட்டங்களுடனேயே எந்த வேலையையும் ஆரம்பிக்கிறார். ஒரு திட்டத்தை செயல் படுத்தும் முன்னர் அந்தத் திட்டம் தோற்றுவிட்டால் எடுத்துக்கொள்ள மிகத்தெளிவான இரண்டாவது திட்டத்தை தயார் செய்துவிட்டே முதல் திட்டத்தை ஆரம்பிக்கிறார் என்று பலர் கூறுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எதிர்கால தொழில்முனைவோர்களுக்கு மிகச்சிறந்த புத்தகம்.

‘Money From Thin Air ‘

***

Series Navigation