க்ருஷ்ண லீலை

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

மலர்மன்னன்




வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர்.

வீட்டு வாசற்படியில் வாட்ட சாட்டமான வஸ்தாது வேணு முதலி நின்றிருப்பதைக் கவிஞர் தொலைவிலிருந்தே பார்த்து விட்டார். வேணு முதலி காலைப் பொழுதில் தேடி வருவதானால் ஏதாவ்து முக்கியமான சமாசாரமாகத்தானிருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டார். இவர் அணுகுவதற்குள் வேணுவே அவரை நோக்கி விரைந்து வந்துவிட்டார்.

“சுதேசிகள் சாம்ராஜ்யத்தின் உளவுப் படைத் தலைவர் வேணு முதலியார் அதிகாலை வேளையில் கொண்டு வந்துள்ள அதி முக்கியத் தகவல் என்னவோ?” என்று சிரிக்காமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு கேட்டார், கவிஞர்.

“நீங்க எவ்வளவுதான் சிரிப்புக் காட்டினாலும் இப்பச் சிரிக்கிற நெலமையிலே அடியேன் இல்லே சாமி. வெவகாரம் அப்படி” என்றார், வேணு.

“எந்த நிலையிலும் சிரித்துக் களித்திருக்கப் பயிலவேண்டும் வஸ்தாது அவர்களே. உடம்பைத் திடமாக வைத்திருப்பதுபோல மனதையும் வைத்திருக்க வேண்டாமா? சரி, விஷயத்தைச் சொல்லும்.”

“வீட்டுக்குள்ள போயி பேசிக்கலாம், சாமி” என்று திரும்பி நடந்தார், வேணு. கவிஞர் ஆழ்ந்த யோசனையுடன் மெளனமாகப் பின் தொடர்ந்தார்.

இருவருமாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

கணவருடன் வேணு முதலியாரும் வருவதைப் பார்த்த செல்லம்மா கூடத்தில் ஒரு பாயை விரித்துப் போட்டாள்.
உள்ளே சென்று குடிப்பதற்கு ஒரு செம்பில் நீரும் வெற்றிலைச் செல்லமும் கொண்டுவந்து வைத்தாள்.

கவிஞரும் வேணு முதலியாரும் பாயில் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டனர். கவிஞர் வெற்றிலைச் செல்லத்தை இழுத்து நடுவில் வைத்து ஒரு சுற்றுத் தாம்பூலம் தரிக்க ஆயத்தமானார்.

“கைகால் முகம் கழுவிக்கொண்டு வந்தால் பயத்தங் கஞ்சி தயாரா இருக்கு. கொண்டு வந்துடுவேன். முதலியார்வாள், நீங்களும் சாப்பிடுவேளோன்னோ” என்றாள் செல்லம்மா.

“இருக்கட்டும், செல்லம்மா. பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று மனைவியை உள்கட்டுக்கு அனுப்பிவைத்தார், கவிஞர். மெளன மாக அமர்ந்திருக்கும் வேணுவைப் பார்த்து, “இப்போது உங்கள் ரகசிய மூட்டையை அவிழ்க்கலாம் அல்லவா வஸ்தாது அவர்களே” என்றார்.

வேணு. தொண்டையைக் கனைத்துக் குரலைச் சரிசெய்து கொண்டு, ரகசியமாகப் பேசலானார்: “அந்தப் பாப்பா ராவ் நாயுடு எதிர் வீட்டுக்கே குடி வந்துடப் போறாராம். உங்களையும் உங்களைத் தேடி இங்க வரவங்களையும் கண்காணிக்கறதுக்கு செளகரியமா இருக்கும்னு எதிர் வீட்டுக்குக் குடி வந்துடலாம்னு அவர் முடிவு பண்ணியிருக்கறதாப் பேச்சு!”

“எதிர்வீட்டுக்கா? ஆகா, அருமையான வீடாயிற்றே! போயும் போயும் அந்நிய ராஜாஙகத்துக்கு உளவு பார்க்கிற அடிமையா அங்கு குடியேறுவது? அதிலும் சுதந்திர தாகம் மிக்க கவிராஜ சிங்கம் ஒன்று விதிவசத்தால் ஓர் எலி வளையில் குடியிருக்க, அது கண்டு எள்ளி நகையாடுவதே போல் குள்ள நரியொன்று எதிரில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் உலா வருவதா? தேவி, இதுவா உன் சித்தம்?” என்று குமுறினார் கவிஞர்.

“அந்த ஆளு எதிர் வீட்டுக்குக் குடி வராம உடனே தடுத்தாகணும், எப்படியாச்சும்” என்றார், வேணு, அவசரமாக.

“அவர்தான் குடி வரப் போறார்னு உங்களுக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்?” என்று கேட்டார் கவிஞர்.

“நேத்து சாயங்காலம் இன்ஸ்பெக்டர் அப்துல் கரீம் நம்ம தரகன் தணிகாசலத்தைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கார். பாப்பா ராவ் நாய்டுவுக்காக எதிர் வீட்டைப் பேசி முடிக்கச் சொல்லி உத்தரவே போட்டுட்டாராம். தணிகாசலம் ராவோட ராவா எங்கிட்ட வந்து விவரம் சொல்லிட்டான். நானும் இதை உங்க காதிலே போட்டுட லாம்னு காலம்பறவே வந்து பார்த்தா அம்மா நீங்க இல்லேன்னுட் டாங்க. சரிதான்னு கார்த்திருந்தேன். நீங்களும் ஒரு வழியா வந்து சேர்ந்தீங்க. சாமீ, குறிப்பா நம்ம வீட்டுக்கு எதிர் வீடாப் பார்த்து அந்த வேவுகாரன் குடிவரணும்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவ்வளவு பெரிய புதுச்சேரியிலே ஒரு பிரிட்டிஷ் போலீஸ் சி.ஐ.டி.க்கு வேற எங்கயும் வீடே கிடைக்கலி யாமா?”

கவிஞர் பதில் அளிக்கத் தோன்றாமல் சிந்தனையில் ஆழ்ந்தபோது பாசுரம் ஒன்றைக் கர்ண கடூரமான குரலில் நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டு எங்கிருந்தோ தடதடவென்று உள்ளே பிரவேசித்தார், குவளை கிருஷ்ணமாச்சாரி. அவரைக் கண்டதும் கவிஞரின் முகம் மலர்ந்தது.

“ஆகா, சமய சஞ்சீவி, சரியான சமயத்திற்கு வந்துவிட்டாய் குவளைக் கண்ணா” என்று வரவேற்றார், கவிஞர்.

“என்ன விசேஷம், வரவேற்பு தடபுடலாய் இருக்கிறது” என்றார், குவளை.

“மனிதன் குடியிருக்கிற வீடு என்றால் காலை எட்டிப்போட்டு நடை ப்ழக நீண்ட தாழ்வாரங்கள் வேண்டும். உட்கார்ந்து படிக்க, எழுதக் காற்றோட்டமும் வெளிச்சமுமாய் விசாலமான அறைகள் வேண்டும். விருந்தினரை உபசரித்து மகிழப் பரந்த கூடம் வேண்டும். மாலை வேளையும் இரவிலும் பிரபஞச வெளியில் சஞ்சரிக்க விரிந்த மொட்டை மாடியும் வேண்டும். இதெல்லாம் இந்த எலி வளையில் இல்லை. ஆனால் நல்ல மனம் இருக்கிறது நம்ம வீட்டுக்காரர் விளக்கெண்ணெய்ச் செட்டியாருக்கு. என்னிடம் வாடகை கேட்பதற்காக வரும் அவர் என் பாட்டை மட்டும் கேட்டுவிட்டுத் திருப்தியாகப் போய்விடுகிற விஷயம் உனக்குத் தெரியும்தானே” என்றார், கவிஞர்.

“ஆஹா, அதிலென்ன சந்தேகம்? ஆனால் இப்போது சபாபதிச் செட்டியாரைப் பற்றி, தப்பு, தப்பு, உங்கள் பாஷையில் விளக்கெண்ணெய்ச் செட்டியாரைப் பற்றிய பேச்சு எதற்கு?”

“இந்த வீடு நாம் பேசிக்கொள்கிற சப்தத்தால் அதிர்ந்து, இப்போதே நம் தலையில் இடிந்து விழுந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். வீட்டின் மோசமான நிலைமையைப் பற்றிச் செட்டியா ரிடம் எத்தனை த்டவை நினைவூட்டினாலும் சரி செய்துடலாம் என்று அவர் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பதோடு சரி. உடனே புதிசா என்ன பாட்டு கட்டியிருக்கீங்க சாமீ, பாடுங்களேன் கொஞ்சம், கேட்டுட்டுப் போறேன் என்று பேச்சை மாற்றிவிடுவார். நானும் விளக்கெண்ணைய்ச் செட்டியாருக்கு வாயிதா எட்டு மாதம்வரை தாங்குமென்று இங்கேயே கிடக்கிறேன். ஒருவேளை இநத வீட்டைத் தரைமட்டமாக இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்ட வேண்டுமே தவிர மராமத்துப் பார்ப்பதெல்லாம் வீண் என்று நினைக்கிறாரோ என்னவோ! அதனால்தான் வாடகை வாங்கு வதிலும் அவர் கறாராக இருப்பதில்லை போலிருக்கிறது. நம் நிலை இப்படி என்றால் நம்மை ஏளனம் செய்வதுபோல் மாளிகை மாதிரி இருக்கிற எதிர் வீட்டிற்கு உளவாளி ஒருவன் குடி வரப் போகிறானாம்! வேணு முதலியார் சொல்கிறார்!”

“என்ன, உளவாளி எதிர் வீட்டிற்குக் குடி வரப் போகிறானாமா?
உங்களையும் யாரெல்லாம் உங்களைத் தேடி வருகிறார்கள் என்று வருகிறவர்களையும் வேவு பார்க்க வசதியாக இருக்கும் என்று நினக்கிறார்களாமா? அதையும் பார்த்துவிடலாம்” என்று கறுவிய குவளை, “சரி, என்ன வாடகையாம் எதிர் வீட்டுக்கு” என்று வேணுவிடம் விசாரித்தார்.

“மாதம் பனிரெண்டு ரூபாய் என்று தணிகாசலம் சொன்னான்.”

“அவ்வளவுதானே! கொடுத்துவிட்டால் போச்சு. பாரதி, இன்றைக்கே நீங்கள் எதிர் வீட்டிற்குக் குடி மாறுகிறீர்கள். சரிதானா?” என்றார், குவளை அலட்சியமாக.

“என்ன ரொம்பத்தான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறாய்! அதென்ன அவ்வளவு சுலபமா?”- கவிஞர் சிரித்தார்.

“நான் எதற்கு இருக்கிறேன்? எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். பாரதியார் எதிர் வீட்டிற்குக் குடிபோக ஆசைப்படுகிறார் என்று சொன்னால் பராசக்தியே நம்ம சபாபதிச் செட்டியார், அதுதான் உங்கள் விளக்கெண்ணெய்ச் செட்டியார் கனவில் போய் உத்தரவு போட்டு அவரும் சந்தோஷமாக எல்லாம் பேசி முடித்துக் கொடுத்துவிடுகிறாரா இல்லையா பாருங்கள்” என்றார், குவளை.

“மாதம் பன்னிரண்டு ரூபாய் வாடகை என்கிறாரே! சுதேச மித்திரனிலிருந்து எனக்கு வருவதே முப்பத்தைந்துதான். அதில் பன்னிரண்டை வீட்டு வாடகைக்கே கொடுத்துவிட்டால் மற்ற செலவுகளைச் சமாளிக்க வேண்டாமா” என்று வாய்விட்டுக் கவலை தெரிவித்தார் கவிஞர்.

“அட, பரவாயில்லையே! கவிஞர் பெருமானுக்கு இதைப்பற்றி யெல்லாங்கூடக் கவலைப்படத் தெரிந்துவிட்டதே! ஆனால் உங்களுக்கு இந்தக் கவலையெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்” என்று சிரித்தார், குவளை.

அடுக்களை வாசலில் நின்றுகொண்டு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த செல்லம்மா, “அவர் என்ன குடும்பச் செலவுக்கு என்ன செய்வது என்றா கவலைப்படுகிறார்? பத்திரிகை, தபால் என்றெல்லாம் எத்தனை அத்தியாவசியச் செலவுகள் இருக்கு அவருக்கு” என்று புன்னகைத்தாள்.

“எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் தானாகவே நடக்கும். நீங்கள் தயாராக இருங்கள். பொழுது சாய்வதற்குள் எதிர் வீட்டில்தான் உங்களுக்கு ஜாகை” என்று சர்வ நிச்சயத்துடன் அறிவித்துவிட்டு பதிலுக்குக் காத்திராமல் சிட்டாய்ப் பறந்து வெளியேறினார் குவளைக் கண்ணன் என்று கவிஞர் ஆசை ஆசையாய் அழைக்கிற கிருஷ்ணமாச்சாரியார்.

மதியம் கவிஞர் முன் தோன்றினார், குவளை. “இந்தாரும், பிடியும்” என்று கனமான இரும்புச் சாவியை இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து உருவியெடுத்து நீட்டினார். “புறப்படும்” என்று ஒரே வார்த்தையில் உத்தரவிட்டார். பிறகு வாசலுக்குப்போய் தெருவோடு சென்ற ஓர் ஆளை அதிகாரமாக அழைத்து உள்ளே கூட்டி வந்தார். செல்லம்மா வியந்து நிற்க, பாப்பா சகுந்தலாவும் மூத்தவள் தங்கம்மாவும் வேடிக்கை பார்த்திருக்க, குவளை முன்னின்று அந்த ஆள் துணையுடன் வீட்டில் சொற்பமாகவே இருந்த பாத்திரம் பண்டங்களையெல்லாம் திரட்டி மூட்டை முடிச்சுகளாக்கினார்.

“ஸ்வாமி, நீங்கள் முன்னால் போய் எதிர் வீட்டுக் கதவைத் திறவுங்கள். அம்மா. நீங்களும் கூடப்போய் வலது காலை எடுத்துவைத்து உள்ளே சென்று இப்போதைக்குக் கீழ் வீட்டை மட்டும் கழுவிவிட்டு ஒரு கோலம் போட்டு விளக்கேற்றி வையுங்கள். பின்னாலேயே நானும் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன். பசும்பாலுக்கும் சொல்லி வைத்திருக்கிறேன். வந்ததும் சம்பிரதாயமாகக் காய்ச்சிக் குடித்து ஜாகை மாறிய சடங்கைப் பூர்த்தி செய்துவிடலாம்” என்றார், குவளை.
“கண்ணா, இப்போது நீ என் எஜமானனா சேவகனா” என்று திகைப்புடன் கேட்டார், கவிஞர்.

“இந்த ஆராய்ச்சியையெல்லாம் அப்புறம் வைத்துக்கொள்ளலாம். முதலில் எதிர் வீட்டிற்குப் புறப்பபடுங்கள் கவிராஜரே! ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவின் மூன்று மெத்தை பெரிய வீட்டில் வசிக்கப் போவது பிரிட்டிஷ் ராஜாங்க அடிமைத் தொழில் செய்பவனா அல்லது சுதேசிக் கவிஞர் திலகம் சி. சுப்பிரமணிய பாரதியா என்று பார்த்துவிடுவோம்” என்று அறைகூவல் விடுப்பது போலக் கூறினார், குவளைக் கண்ணன்.
மின் வேகத்தில் கவிஞர் குடும்பம் எதிர் வீட்டிற்குக் குடி பெயர்ந்துவிட்டது. செல்லம்மாவுக்கு நடப்பதெல்லாம் எதோ மாயா ஜாலம் போல இருந்தது. கவிஞருக்குத் தொடக்கத்தில் சிறிது பரபரப்பு இருந்தது. பிறகு இதெல்லாம் சகஜம்தான் என்கிற இயல்பு நிலை வந்துவிட்டது.

அன்று இரவே கார்த்திகை மாதத்துக் கருமுகில்கள் சொல்லி வைத்தாற்போல் படை திரண்டு வந்து புதுச்சேரியின் வானத்தில் கவிந்தன. மேகங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து மின்னல் கொடிகள் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குப் பாய்ந்து மறைந்த வண்ணமிருந்தன. மின்னல் மறைகிறபொதெல்லாம் அதைத் தொடர்ந்து செவிப் பறைகளைக் கிழித்தெறிய எத்தனிப்பதேபோல் இடிகள் பிளிறின. கண்ணுக்குத் தென்படாததொரு பிரமாண்ட வில்லிலிருந்து எய்யப்பட்ட பாணங்களென கனமான மழைச் சாரல்கள் மண்ணை நோக்கி விரைந்தன. செல்லம்மா குழந்தைகளை இறுக அணைத்து, இழுத்துப் போர்த்துப் படுத்திருந்தாள். நல்ல வேளை, வீடு மாறி வந்தது, இந்தப் பேய் மழைக்கு அந்த வீடு தாங்குமா எனத் தூக்கக் கலககத்திற்கு இடையேயும் அவள் மனம் ஆறுதலடைந்தது. கவிஞரோ மொட்டைமாடியில் நின்றவாறு, மழையில் தெப்பமெனத் தாம் நனைவதையும் பொருட்படுத்தாது வருணதேவனின் ஆவேசத்தை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தார்.

பொழுது விடிந்த பிறகுதான் மாரிக் கால மழையின் ஊழிக் கூத்து எத்தனை சேதாரங்களை விளைவித்திருக்கிறது என்பது புலப் பட்டது. நூறு வயதான மரங்கள்கூடத் தாக்குப் பிடிக்க மாட்டாமல் வேரோடு சாய்ந்து போர்க்களத்தில் வெட்டுண்டு வீழ்ந்த அரக்கர் போல் தெருவின் குறுக்கே வழி மறித்துக் கிடந்தன. முக்கியமாகக் கவிஞர் முதல் நாள் வரை குடியிருந்த வீடு உருக் குலைந்து போயிருந்தது. மொட்டை மாடியிலிருந்து பார்த்த பொழுது அந்த வீட்டின் பின்கட்டு முழுவதுமே இடிந்துபோய் விட்டிருப்பது தென்பட்டது. கவிஞர் மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரைப் பற்றிக் கொண்டு தெருவைப் பார்த்து பிரமித்து நிற்கையில் கீழேயிருந்து குவளைக் கண்ணனின் குரல் அட்டகாசமாக ஒலித்தது:

“பார்த்தேளா ஸ்வாமீ, இனி வேவுகாரன் என்ன செய்வான்? மோசமான வீடாக இருந்தாலும் பரவாயில்லை உஙகளை வேவு பார்க்காமல் விடுவதில்லை என்று எங்கே நீங்கள் இருந்த வீட்டுக்கு வந்துவிடுவானோ என்றுதான் அந்த வீட்டையே உருக்குலைத்துப் போட்டுவிட்டான் வருண பகவான். திருப்திதானே?”
“வருண பகவானா? கிருஷ்ணா, உண்மையில் லீலையெல்லாம் உனதே அல்லவா” என்று மனம் நெகிழ்ந்தார் கவிஞர். நெகிழ்ந்த மாத்திரத்தில் கவியுள்ளம் விழித்துக் கொண்டது:
”நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?”
+++++
ஆதாரம்: திரு ரா.அ. பத்மநாபன் தயாரித்த ‘சித்திர பாரதி’யும் திருமதி சகுந்தலா பாரதி இயற்றிய ‘என் தந்தை’யும்.

—-(அமுதசுரபி செப்டம்பர் 2010 இதழில் பாரதி நினைவு சிறப்புச் சிறுகதையாக வெளிவந்தது)

.

Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts