கோவிலில் எம்மதத்தார்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

ஐயன் காளி


திண்ணையில் வெளிவந்த ஐயன் காளி கட்டுரைகட்கு அளப்பரிய உணர்வுகளோடு மின்னஞ்சல்கள் வந்தன. பாராட்டுக்களை பல்கிய கடிதங்களுக்கு நடுவே பல கேள்விகளும்; குறிப்பாய் நம் மதத்தாரை நாணமுறச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி.

சிலர் தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியில் வாழ்வை சாதிக்க வேண்டிய பிறப்பினராய் இருத்தல்கண்டு வருந்தியமைகண்டு யாம் வருந்தினோம். “வருந்தவேண்டுவது நீங்களல்ல என் சகோதரியே. நானும் ஒரு தலித்தே. தாழ்த்தப்பட்ட குலத்தவனே. தாழ்த்தும் வகுப்பாரை எதிர்ப்பவனே. எதிர்க்காதவரைதான் உலகம் ஏமாற்றவதும், நீவிர் ஏமாறுவதும். எதிர்த்து நில், எம் குழந்தாய்” என பதிலும் இறுத்தினோம்.

எம் இந்து மதத்தில் எப்பிறப்பையும் இகழாமல், இழிவுபடுத்தும் சாதியாருக்கு இணையானவராய் தனைக் காண்பவரே இறைக்கு துணையானவர். இருப்பினும், எம்மக்கள் நிலை என்ன?

காலணி அணிந்து காலாற நடக்க இயலுமா?

அடுத்தவருக்கு ஆடை செய்பவர் மேலாடை கழற்ற விழையாமல் மேம்பட்டுவிட்டவர் வீதிக்குள் நுழையமுடியுமா?

சொந்த விளை நிலம்கொண்டு தம் உழைப்பை விதைத்து விதியை வேறு செய்யும் வாழ்வு விளையுமா?

உயர்ந்தகுலத்தில் பிறந்தவர் எனும் பிரமிப்புக்கனவால் நான்கு வயது குழந்தைகூட, கோல் ஊண்றி நடக்கும் கூன் விழுந்த கிழவரையும் தரமின்றி “அடே, தாழ்த்தப்பட்ட சாதியானே, இங்கே வாடா, அங்கே போடா” என்று அழைக்க பழக்கப்படுத்தப்படுவதும் இங்கேதான்.

அதை பெருமையாய் பெற்றோர் பார்ப்பதும் இந்த பாரத பூமியில்தான்.

பல்லாயிரமாண்டுகளாய் பாரினில் எம்குலத்தாரை பார்க்கும் பார்வைக்கும், மலஓட்டத்தில் ஒய்யாரமாய் வாழும் பாழ்பன்றியை பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாட்டை பகுக்கத்தான் இன்னமும் எம்போன்ற தாழ்த்தப்பட்டவர்களால் இயலவில்லை.

இச்சூழலில், கோவிலில் கோவிந்தனை கண் குளிரக் காண இயலாத நிலைக்கு இந்துமதம் காரணமா? ஆம் என்போர் அனைவரும் ஆபிரகாமிய மதங்களின் அச்சாணி சுழற்றும் கயிறுகளின் பாவைகளாய், ஊடகவெளிகளில் உழைப்பின்றி கிடைத்த உன்னத நிலையின் சாறருந்தி உன்மத்தத்தில் உளறுகிறார்; உண்மை தெரியாதவர் சிலர்; தெரிந்தும் திரிப்பவர் பலர்.

சமூக பொருளாதார சகடத்தில் எப்போதும் மேலிருக்க அடிமைகளைத் தேடுபவர் அள்ளிவிடும் கதைகள் அவை. இமயமலை கீழுள்ள இப்பரதகண்டத்தின் இந்து மதத்தில் சாதி உயர்வு இழிவு இல்லை. இல்லை. இல்லை.

எனின், இதன் ஆரம்பம் எதில் என்பதற்கு பொருளாதாரத்தில் பலம்பெற சமூகக்குழுக்கள் ஒருவரை மற்றொருவர் ஏய்ப்பதில் இருந்து என்பதே பதில்.

“மாறாதது ஸ்ருதி; மாறுவதோ ஸ்ம்ருதி” என்றே இந்துமத நூல்களுக்கு இலக்கணமும் இருக்கிறது. இருப்பினும், எதிர்ப்பதுபோல ஏற்றுக்கொள்ள, மறந்துவிட்ட கொடுங்கனவை மலையில் செதுக்கிய சிலையாக்க, மனு ஸ்ம்ருதியின் கொடிய பக்கங்களை தங்கள் வசதிக்கு தக்கதாய் உயிர்ப்பிக்க இந்துத்துவ எதிரிகள் பாடுபடுகையில், ஸ்ம்ருதிகளில் இல்லை இந்த மதம், இந்த இந்து மதம் என்கிறீர். மாறும் ஸ்ம்ருதிகளிலும் பொதுவாய் விளையும் கருத்தென்ன என்பதை விளக்குவீரா எனவும் சில கேள்விகள். ஆதாரம் என்ன? எனவும் சில.

ஆதாரங்கள் இல்லாமல் அல்லல்தருவாரை எதிர்ப்பவர், ஆதாரங்கள் இல்லாததாலேயே தம் மதத்தை புரியந்துகொள்ள இயலாமலும், வெறுப்புறுவாரோடு வாதாட இயலாமலும் இன்னலுறுகிறார்; அவர்தம் சுயகுலம் வெறுக்கிறார்.

வெறுத்தலின் விளைவாய் விலக்கமும், விலக்கத்தின் பின் தொடரும் அகவெறுப்பும் ஆன்மீகத்தின்மேல் வெறுப்பாகி, பிறந்ததின் பலனை பெறவொண்ணாமல் செய்கின்றன. தாழ்த்தப்படும் எம்மக்கள் தலைநிமிர்ந்து கோவிலுக்குள் நுழைய, ஆலயங்களே அவரை அழைக்க, ஆதார கருத்துக்களை ஆடையாய் தரிக்க, இந்திய சமூக நீதிகளான ஸ்ம்ருதிகளில் சிலவற்றை சிறிதே இங்கே காணலாம்.

“துளிக்கூட இல்லை தீட்டு. தீண்டத்தகாதவராய் திரிக்கப்படுபவர் மற்றவரை தொட்ட இடம் கோவிலாகவோ, மத ஊர்வலமாகவோ, ஆச்சாரமாய் நடக்கும் யாகங்களாகவோ, திருவிழாக்களாகவோ, திருமணம் நடக்கும் இடமாகவோ இருந்தால்” – அத்ரி (பாடல் 249)

சததபம் சொல்லுகிறது: “தீண்டத்தகாதாரை தீண்டுதல் பிறழ்தல் இல்லை – மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதைகளிலும், மத ஊர்வலங்களிலும், ஊரார் அனைவரும் கலந்துகொள்ளும் சண்டைகளிலும், அல்லது இயற்கைசீற்றங்களிலும்”

“தவறில்லை. அதனால் ப்ராயச்சித்தமும் தேவை இல்லை. புனிதத் தலங்களிலும், திருமண-திருவிழா நிகழ்வுகளிலும், போரிலும், அல்லது, அந்தோ, அந்நகரமோ, கிராமமோ நெருப்பால் சூழப்படுகையிலும் மனிதர் மனிதரைத் தொடுவதால்” – என்கிறார் ப்ரஹஸ்பதி

நிச்சயமாய் சொல்லுகிறது நித்யசரபத்ததி: “சண்டாளரோ, புக்காசரோ புவனநாயகன் விண்ணையும் அளந்தவன் விஷ்ணுவின் கோயில் அருகில் இருக்கையிலேயோ, அல்லது விழிகளில் விஷ்ணுவை நிரப்ப பக்தியோடு கோயிலுக்குள் நுழைந்திருக்கையிலேயோ அடுத்தவரைத் தொட்டுவிட்டால் நீசம் நீங்க நீராடத் தேவையில்லை.”

கோயில் மட்டுமல்ல பொதுவிடங்களிலும் தொட்டுவிட்டால் தொடப்பட்டவருக்கு தோஷமில்லை என்று ஆண்ட வர்க்கத்தாரை அண்டி வாழ்ந்தவர் எழுதிவைத்ததைக் கவனியுங்கள். பொது இடங்களில் தோஷமில்லை, கோயில்களில் தோஷமில்லை என முடிந்த அளவு சீர்திருத்த முற்பட்டு, புரட்சியின் புரிதலை, மனித நேசத்தை புத்தகங்களில் புதைத்திருப்பதைக் காணுங்கள். ஏய்த்து வாழ்பவரே ஏணியின் உச்சத்தில் இருக்கையில், அவர்தம் தயவால்தான் வாழ்க்கை என்பதால் எதிர்த்து வாழ இயலாத ஏழை கல்வியாளர்களால் இவ்வளவுதான் இயம்பமுடிந்திருக்கிறது.

அனைத்து ஸ்ம்ருதிகளின் அர்த்தச்சாற்றாய் விளங்கும் “ஸ்ம்ருத்யர்த்தஸாரம்” சொல்லுவதோ கோவிலுக்குள் நுழைய மட்டுமல்ல, வழிபடவும் வக்கு உண்டு தீண்டத்தகாதவராய் திரிக்கப்பட்டவருக்கு என்று.

“விலக்கம் வேதப்பயிற்சிகளின் முன்நிகழ்வான முப்புரிநூலணியும் சடங்கிற்கு மட்டுமே”, எனத்தொடக்கும் யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியும் (I.93), கௌதம ஸ்ம்ருதியும் (IV.20) சொல்லுவதோ, “சண்டாளர்கள் மற்றவரும் வணங்கும் தெய்வீக உருவங்களை வணங்குவதிலிருந்தோ, ஸ்ம்ருதிகளின் விதிகளிலிருந்தோ விலக்கப்பட்டவர் இல்லை. விஷ்ணுவின் அனைத்து வடிவங்களையும் அவர் வணங்கத் தகுந்தவர்.”

தற்போதைய தலைமுறையினர் அறியா இவ்வரிகள், அக்காலச் சட்டப்புத்தகங்களின் கரையானும் அரியா வரிகளாய் அழிந்துவிடவில்லை அக்காலத்தே. தேவிபுராணத்தை ஆதாரமாய் காட்டும் நிர்ணயஸிந்து, ஒடுக்கப்பட்ட அந்த்யஜர்கள் பைரவருக்கு ஆகம விதிப்படி கோவிலே கட்ட உத்தரம் தந்திருக்கும் தகவலைத் தம்மைப் படிப்பவருக்குத் தருகிறது.

லோகத்தை காக்கும் திருவரங்கநாதர் லோகசாரங்கரெனும் பார்ப்பன பெரியாருக்கு பணித்த கட்டளை பாரதம் அறிந்ததே. “உயர்சாதி கொடுமையால் ஒடுக்கப்பட்டாரை உள்ளே வரவிடாமல் தடுப்பது தவறு, அத்தவறொழிக்கும் செயலாய் ஒடுக்கப்பட்டவரில் ஒருவரான திருப்பாணாழ்வாரை உன் தோளினில் ஏற்றி என் சன்னிதானத்திற்குத் தருவி. இனி இழிவாக்கப்பட்ட சாதியார் என்னருகில் அமர்ந்து தமிழ் பாடட்டும். உயர்சாதி என இறுமாந்திருப்போருக்கு இஃது ஒரு பாடமாய் இருக்கட்டும்” என இறை இயம்பிய கதையையும் இயற்றியவர்கள் உண்டு. இயற்றப்பட்ட இக்கதைகளை மறைத்தலும், அழித்தலும் இன்றி அனைவருக்கும் திருவிழாக்காலங்களில் கற்பித்துவரும் கலாச்சாரமும் இங்குண்டு.

பள்ளத்தில் இறங்கி பார் பயணுற உணவை உற்பத்தி செய்யும் வெள்ளாள சாதியில் பிறந்தவரை “நம் ஆழ்வார்” இந்த நம்மாழ்வார் என கைகூப்பும் மதம் இந்த மதம். இந்த இந்து மதம்.

நான்கு வர்ணங்கள் தாண்டி ஐந்தாம் வர்ணமாய் சண்டாளர்களை ஆக்குவது சாத்திரவிரோதம் என்பதை பிவி கானே எனும் பெரியார் வடித்தெடுத்த “தர்மசாத்திரங்களின் வரலாறு – Vol. II, Part I” உறுதி செய்கிறது. மொழி இலக்கணம் வடித்த பாணிணியும், மன இலக்கணம் தந்த பதஞ்சலியும் சாதி வேறுபாடுகளை அனுமதிக்கவில்லை.

எனினும், இங்கும் இருக்கிறது சாதிமுறை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இருந்ததுபோல. ஜப்பானிலும், இந்தோநேஷியாவிலும், அரேபியாவிலும், அயர்லாந்திலும், ஆப்பிரிக்காவிலும் இருப்பதுபோல.

எங்கெல்லாம் தொழிற்புரட்சி தீண்டியதோ அங்கெல்லாம் தீண்டாமை மறைந்தது. வெளித்தூண்டுதல்களாலும், உள்ளேயிருந்து உயர்த்தும் ஆன்மீக பலத்தாலும், சாதி தன்னை தகவமைத்துக்கொண்டு மாறுபாடுகளோடேயே மாந்தர் வாழும் இடமெல்லாம் திகழ்ந்துவருகிறது. தொழிற்புரட்சி தொடாத இடங்களிலும், சமூக-முதலாளித்துவம் உயராத இடங்களிலும் இன்னமும் இருக்கிறது சாதி முறை. கார்ல் மார்க்ஸும், மாக்ஸ் வெப்பரும் சொன்னது ஓரளவு ஒத்துவருவதும் இங்குதான்.

அத்தனை சாத்திரமும் அவலத்தை எதிர்க்கையில் எப்படி வந்தது இந்த இறுகிய கட்டுமானங்கள் என ஆராய்ந்தால் உயர்ந்தவை இச்சாதி, தாழ்ந்தவை இச்சாதி என்ற தணிக்கை ஆரம்பித்த காலம் ஆங்கிலேயராண்ட காலமே என்பதைக் காணலாம். அதுவரை இளகிய எல்லைகளையே சாதிகள் சந்தித்திருந்தன. ஆண்ட சாதியார் அடக்கப்பட்டவரானதும், அடங்கியவர் ஆள்பவரானதும் அனுதினமும் நடப்பியழ்வுகளாகவே நாடு பார்த்திருந்தது. இளகிய தன்மையை எடுத்துவிட்டால் இறுகிய சாதியார் இளைப்பார், அவரை நாம் வளைப்போம் என திட்டமிட்ட எவாஞ்சலிக்கர்கள் இயற்றிய சட்டத்தால் வந்தது பாரதீயர் சந்தோசத்திற்குச் சனி. ஜேம்ஸ் மில் போன்றோர் தீட்டிய சித்திரத்தில் இந்திய சாதியார் இணையமுடியாத வட்டங்களுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமுயல் ஆனார்.

பாரதத்தின் கலாச்சார வாழ்வை குறுகிய இறுகிய சாதிகளாய் பிரிப்பதால் காலனியாதிக்கத்தை நிலைநாட்டுதல் எளிது; பாரதத்தின் இயல்பான நெகிழ்வுத்தன்மைகொண்ட கலாச்சாரத்தை அழித்தல் எளிது; யூரோப்பிய கலாச்சார அரசியல் எதேச்சதிகாரத்தை நிலைநாட்டுதலும் எளிது என்றே இங்கனம் சாதி இறுக்கமான அமைப்பாக எடுத்தியம்பப்பெற்றது என்று ரொனால்ட் இண்டெனும் தன்னுடைய “இமேஜினிங் இண்டியா” நூலில் எழுதுகிறார்.

மாறக்கூடிய இந்து ஸ்ம்ருதிகளை காலத்திற்கும், காணவிருக்கும் இலக்கின் கோலத்திற்கும் ஏற்ப மாற்றிக்கொண்டு பயணிக்கவேண்டிய நாம், இன்னமும் விக்டோரியாவின் ஸ்ம்ருதிகளை பின்னேதள்ளாமல் பின்பற்றுகிறோம். கல்வி மற்றும் பொருளாதாரம் பாராமல் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பதை பாரத அரசாங்கமே பாரினில் நடத்திவருகிறது.

இருப்பினும், மனித இயல்பு ஆள்பவரின் ஆசைகளை புறக்கணித்துவிட்டு சாதியை மாற்றும் சம்பவங்களை நிகழ்த்துவதையும் காண்கிறோம். தமிழகத்தில் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்ட நாடார்கள் உயர்ந்த சாதியாராய் விளங்குவதைக்காணலாம். இதுபோன்றே பெங்காலில் எண்ணை பிழியும் சாதியாரும், பஞ்சாப்பின் ஒரு மாவட்டத்திலுள்ள தச்சர்களும், தங்களுடைய சாதியை உயர்ந்த சாதியாக்கியதைக் காணலாம். ஜி எஸ் குரியே மேலாண்மைத் துறைகளும், ராணுவத்துறைகளும் சாதிவேறுபாடின்றி தகுந்தவரை தக்கவைக்கின்றன என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்கிறார். அந்த்ரே பெய்டேல், அத்ரியன் மெயர் போன்றவர்கள் மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் செய்த ஆராய்ச்சிகள் தீண்டத்தகாதவர் பலர் தங்களுடைய சாதியை பழைய நிலையிலிருந்ததைவிட உயர்ந்தநிலைக்கு கொண்டுவந்திருப்பதைச் சுட்டுகின்றன. மற்ற சாதியாரும் இவ்வுயர்வை ஏற்று அவர்களை மதிக்கின்றனர், தீண்டுகின்றனர்.

நம்மறைகள் பகர்ந்தபடி தன்னைத் தன்னால் உயர்த்திக்கொள்ளுபவருக்கும், எதிர்மறைகள் எதிர்மறையாய் போதிப்பின்படி பிற மதங்களுக்கு மாறுவதால் உயர்வைத் தேடுபவருக்கும் ஒரு தெள்ளிய வேறுபாடு தெரிகிறது. மற்ற மதத்திற்கு மாறுபவர் அந்தந்த மதங்களில் பிற்படுத்தப்பட்ட கிருத்துவராகவும், இஸ்லாமியராகவுமே இருக்கிறார். அந்தந்த மதங்களில் உயர் சாதியாரால் ஏளனமாய் நடத்தவும்படுகிறார்.

மேலும், ஆபிரகாமிய மதங்களுக்கு மாறியவருக்கு இந்துக்கள் மரியாதை கொடுக்கவேண்டிய கட்டாயம் ஆபிரகாமிய மதங்கள் பலமுள்ளதாக விளங்கிய இடங்களிலேயே இருந்தன. தங்களுடைய மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்டவரை உயர்வாக மதிக்க இந்துமதத்தார் வற்புறுத்தப்பட்டனர். இதனாலேயே ஆபிரகாமிய மதங்களின் பலம் குறைந்த பகுதிகளில் மீண்டும் மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவராகவே இருக்கிறார். இஸ்லாம் போன்ற மதங்களில் பழைய சாதியின் பெயரை விடுத்து புதிய சாதிப் பெயர் பெற்று ஷேக்குகள் போன்ற இஸ்லாமிய சாதிக்கு முன்னர், பிற இஸ்லாமியர் தாழ்ந்த சாதியாராகவே இருக்கிறார்.

ஆனால், தன்னுடைய சாதியை இந்து மதத்தில் இருந்துகொண்டே உயர்த்துபவர்கள் அச்சாதியின்மேலுள்ள களங்கத்தை முற்றிலுமாய் அழிக்கிறார். மற்ற சாதியாராலும் மதிக்கப்படுகிறார். இதை கோயில்கள் பல நடத்தும் நாடார்களிடமும், நாயக்கர்களிடமும் காணலாம். கோவில்களை நடத்தவே உரிமை இருக்கும்போது, கோவில்களில் நுழைவதற்கு என்ன தடை?

நுழைய இருக்கும் தடைகளை அகற்ற இந்துமதப் புரிதல்கொண்டார் பாடுபடவே செய்கிறார். எதிர்மறை கருத்துக்களுக்கான எதிர்ப்பு சக்தியை இந்து மத மறைகளில் இருந்து அதன் சனாதன வேர்களே பூமியிலிருந்து உறிஞ்சித்தருகின்றன. உதாரணமாய், 2006ம் ஆண்டு நவம்பரில் ஒரிஸ்ஸாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தில், அதை ஆண்டிருந்த அரச பரம்பரைக்குச் சொந்தமான
ஜகன்னாதர் கோயிலில் தலித்துக்கள் நுழைய விஷ்வ ஹிந்து பரிஷத் போராடியதைச் சொல்லலாம். தலித்துக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது, வேண்டுமானால் அங்குள்ள ஒரு சுவரின் துளைகளிலிருந்து தரிசனம் செய்யலாம் என்கிற நிலையை எதிர்த்தனர். துறவி லக்ஸ்மனானந்த ஸரஸ்வதி தலைமையில் சென்ற குழு அனைவரும் சமமாய் தரிசனம் செய்ய வசதியாய் அச்சுவரை விலக்கப் போராடி வெற்றிபெற்றது. அச்சுவரும் இடித்துத்தள்ளப்பட்டது. சாதி, மொழி, இன, பால், வர்க்க வேறுபாடின்றி அனைத்து ஜகன்னாதர் கோவில்களிலும் பக்தர்கள் வழிபட்டுவருவதுபோல இங்கும் வழிபாடு நடக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு கட்டிட இடிப்பை பெரிதாய் பூதமாக்கும் ஊடகங்கள் இத்திருச்செயலை அரசாங்க நிர்வாகம் செய்ததாய் தகவல் வெளியிட்டன. இதில் துறவிகளின் பெயரோ, இந்து மதத் தலைவர்கள் பெயரோ வெளிவரவே இல்லை. இதுவரை.

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீநாத்ஜி கோவிலையும், ராஜஸ்தானிலுள்ள ஸுலியா கோயிலையும் சமீப கால உதாரணங்களாய் காட்டலாம்.

தென்னிந்தியா போலின்றி வட இந்தியாவின் கோயில்களின் தெய்வீக உருவத்தை கருவறைக்குள் சென்றும் வழிபடலாம். தென்னிந்தியாவில் உள்ள கோயில் விக்கிரகங்கள் போல வட இந்திய தெய்வங்கள் விலையுயர்ந்த அணிகலன்கள் இன்றி இருப்பதும் பக்தர்கள் திருவுருவத்திற்கு நேரடியாக பூசை செய்ய வசதி செய்கிறது. பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் தன் பக்தர்களிடம், பூரி ஜகன்னாதரை கட்டி அணைத்து வணங்கவேண்டும் எனச் சொல்லுவார்.

தேவையற்ற போலித்தன ஆச்சாரங்களை விட்டுவிட்டு அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழையவேண்டும் என்பது மற்ற கோயில்களிலும் விரைவாக நடந்துவருகிறது. ஏன், அம்பேத்காரை கோவிலுக்குள் நுழையக்கூடாதெனச் சொன்னவரின் பேரர் அது ஒரு தவறு என்றும், அம்பேத்காரை அவரது தாத்தா அணைத்து உச்சிமோந்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கவேண்டும் என்றும் இப்போது பேட்டி அளிக்கிறார். அந்தத்தவறை அவரது தாத்தா செய்யாவிட்டால் இந்துமதத்தின் மிகப்பெரிய ஞானியை நாம் இழந்திருக்கமாட்டோம் என்கிறார் அவர்.

இந்த மனமாற்றத்திற்குக் காரணம் மதமாற்றம் இல்லை, இந்துமதத்தின் ஆன்மீக விதிகளை அம்மதத்தார் புரிந்துகொண்டதே.

இந்து மதத்தின் இணையற்ற ஞானியான அம்பேத்காரின் பெயரை உபயோகித்து புத்தமதத்திற்கு மாறுபவர்களுக்கு ஒரு உண்மை தெரியாமல் இருக்கலாம்; ஒருவர் உய்வடைய அவர் தம் மதத்திலிருந்து மாறித்தானாகவேண்டும் என்று புத்தமதம் சொல்லவில்லை என்பதுவே அவ்வுண்மை. இதுவே தெரியாதவர்களுக்கு, புத்தமதத்திலும் சாதிப்பாகுபாடு உண்டென்பதும், போதிசத்துவ நிலையை அடைய ஒருவர் பார்ப்பன அல்லது சத்திரிய சாதியினராய் பிறந்திருக்கவேண்டுமென்கிற கருத்து இன்னமும் அப்படியே இருக்கிறது என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

aiyan.kaLi@gmail.com
http://aiyan-kali.blogspot.com

Sources:

1. History of Dharmasastra, Kane PV

2. “Varna and Caste” | Caste in Modern India and Other Essays (Asia Publishing House, London 1962), pp.63-69, Srinivas MN

3. Society in India (University of California Press, Berkley, 1970), Vol.2, pp 545 – 552, David G. Mandelbaum

4. Caste in India, 4th ed., (Oxford University Press, London, 1963), p.I., JM Hutton

5. Homo Hierarchus: The caste system and Its Implications (University of Chicago Press, Chicago, 1980), p. 191, Louis Dumont

6. Imagining India, (Basil Blackwell, Cambridge, 1990), pp 31 – 32, 69., Ronald Inden

7. Caste, Class and Occupation, (Popular Depot, Bombay, 1961), GS Ghurye

8. Caste, Class and Power: Changing Patterns of Social Stratification in a Tanjore Village, (University of California Press, Berkeley, 1965), Andre Beteille

9. Sociological Bulletin, vol. 42. nos. 1 and 2 (March – September 1993), pp. 85 – 112., J. Lerche

10. The Religion of India: The sociology and Hinduism and Buddhism, trans. and ed. Hans H. Gerth and Don Martindale, (Free Press, Glencoe, Ill., 1958), p. 38, Max Weber

11. New-York Daily Tribune, June 25, 1853 | MECW Volume 12, p. 125., Karl Marx

Series Navigation

author

ஐயன் காளி

ஐயன் காளி

Similar Posts