கோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

தாஜ்


கோலம்
——-
மையத்தில் ஒற்றைப் பட்சி
சிறகசைத்துப் பறக்க
புள்ளிகளை அளந்து
வரிசைக் கிரமமாக வைத்தேன்
ஒவ்வொன்றாய்ப் பற்றி
வரைதலைத் தொடங்கினேன்
கற்ற கோலம் கைகொடுக்க
இட்ட கோலத்தை முன்னெடுத்தேன்

உச்சத்தில் அன்னியமென்று விட்ட
இறைச்சுழி வேண்டுமென்றார்கள்
மையத்தில் மனையிட்டு
ஜோடிக்கிளியாய்க்
காணணும் என்றார்கள்

என் கோலம் பெரிதாகிப்போனது
ஜோடிக்கு உயிர்ப்பாய்
குஞ்சுகளை வரைந்தேன்
ஒவ்வொரு வளைவுகளிலும்
அழகின் அர்த்தம் கண்டாலும்
எட்டெடுத்து வைத்ததில்
எங்கோ பிசகி
வட்ட வட்டப் பின்னலாய்
கால்போன திசைக்கும் விரிந்தது
எந்த திசையில் நின்று பார்த்தாலும்
என் கோலம்
எனக்கே புரியவில்லை

– கணையாழி மார்ச் 1997

***

வீட்டில் ஒரு பூனை
——————-
விட்டத்தின் கறுப்பில்
ஒரு நட்சத்திர சிமிட்டல்
வட்டக் குறைவாய்
ஒரு வெள்ளை மினுப்பு
சாடிப் பாயும் தருணம்
தட்டுப் பட்டது மறுபுறம்
திட்டுத் திட்டாய் வேறு நிறம்
ஓட்டம் ஓடி தாவிக் கவ்வியது
பெருத்ததொரு இரையை
நட்ட நடு இரவில் கிளைக்கும்
பூனைகளின் காலம்

ஈர்த்த சுடரொளியும்
வெள்ளைத் தகிப்புமாய்
கிடைக்கப் பார்த்தவர்கள்
சிலிர்த்து உச்சத்தில் பார்க்க
வீட்டில் பரவசப் பெருமூச்சு
என் பாதம் கண்ட இடமெல்லாம்
வட்டமிட்டுத் திரிந்துவிட்டு
காலடியின் கீழிருந்து
மேலே பாய்ந்த பயத்தில்
உறவை அழைத்து கிறீச்சிட
‘மியாவ் ‘ கேட்டது பதிலாய்

– காலச்சுவடு ஜனவரி-ஏப்ரல் 1998

***

உட்கடல்
———-
வசந்தத்தின் கடற்கரையோரம்
நண்டுகள் பிடித்து
விளையாட நான்
வண்ணத்தில் நீ
சிப்பிகளை சேகரித்தாய்.

மலையேறிக் கொண்டிருந்த
ஒரு முன்பனிக் காலத்தில்
நடையின் லாவகத்தோடு
முன்னால் நீ
போய்க் கொண்டிருந்தாய்.

உச்சிப் பொழுது சுடுமணலில்
வேகம் சுழித்துத் தடுமாற
பாத ரணங்களோடு
அடிகளை அழுந்தப் பதித்தபடி
கடந்து கொண்டிருந்தாய்.

நினைவின் தூரிகையால் உன்னை
தீட்டிப் பார்த்தபோது
உயிர் பெற்ற மார்பகங்கள்
தேம்பி விம்ப
எங்கோ பறந்து விட்டேன்.

வடிவாய் வடித்து கரமெடுக்க
நிர்வாண நிலை வேண்டும்
தரித்த உடுப்புகளை
கழட்டிக் கடாச உன்னால் அல்ல
என்னாலும் இயலாது.

வழி அற்றுபோன
வனாந்திர வயிற்றில்
நான் புலம்ப நீ
எங்கோ விலாநோக
கிறீச்சிடுவதேன்
என் காலைச் சுற்றிய
பாம்பு உன் கழுத்தில்
தொங்குகிறதா ?

– அச்சிலிருக்கும் ‘அபாயம் ‘ தொகுப்பிலிருந்து..

***

tajwhite@rediffmail.com

Series Navigation