கொழுக்கட்டைக் கள்வர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

மெலிஞ்சிமுத்தன்நேசனே உம் கைகளில்
நீண்ட இரும்பாணிகள்
நிட்டூரமாயறய
நேசக் கண்ணீர் சொரிந்து
பலி ஆனீர்………

‘ பதின் நான்காம் ஸ்தலம்” முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத செபம் ஒன்றைத் தொடங்கி புதுசாய் ஒரு குறுக்குப் பாதையை தொடங்கிக் கொண்டிருப்பார் ‘சங்கித்தன்”. சங்கித்தன் எவ்வளவுதான் கெட்டிக் காரனாய் இருந்தாலும் பழய செபங்களையும் புதுச்செபங்களையும் பொருத்துவது என்றால் கொஞ்சம் கடினமான வேலைதான். இருந்தாலும் எல்லாத்துக்கும் இடையில் கொஞ்சம் ‘பரமண்டல மந்திரத்தையும்”கொஞ்சம் பிரியத்த மந்திரத்தையும் கலந்துகட்டி ஒப்பேற்றினால் கால வித்தியாசம் தெரியாது. கால வித்தியாசம் தெரியவில்லையென்றாலும் ‘கால்” வித்தியாசம் தெரியும். எனக்கு முழங்கால் மடக்கி இருப்பதென்றாலே சரிவராததொரு வேலை. ஆனாலும் கோயிலுக்குள் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை எனக்குப் பின்னால் இருந்து ‘சவீனா ரீச்சர்” கண்குத்திப் பார்த்துக்கொண்டிருப்பாள். நான் முழங்காலில் இருக்கவில்லை என்றாலோ, பக்கத்திலிருக்கிற சளிப்பயல் இன்பராசைச் சுறண்டிக் கதைத்தாலோ பின்னால் நசியாமல் வந்து மண்டையில ‘டொங்” என்று குட்டும் மனிசி. சவீனா ரீச்சருக்கு முழங்கால் மடித்து இருப்பதென்றால் சரியான விருப்பம் போல… ‘கறாத்தே” பளகும் ஆட்கள் குத்துகிற கைகளின் மொளிகள நிலத்தில் ஊண்டி சமன் செய்வது போல மனிசி முழங்கால செய்து வைத்திருப்பாபோல.

சவீனா ரீச்சர் கிறிஸ்தவக் கடமைகளை தவறாமல் கடைப்பிடிக்கின்ற ஒரு மனிசியென்று சொல்லலாம். எப்போதுமே கோயிற் காரியமென்றால் ரீச்சர்தான் முன்னால் நிற்பார். ‘பெரியகிழமை வருகுதென்றால் ” முதற்கிழமையே ஊரில் ஆயத்தங்கள் தொடங்கிவிடும். ‘பெரிய சிலுவைப் பாதை” வரப்போகும் வீதிகளெல்லாம் சிரமதானங்கள் உசாராக நடக்கும். அரிசிமாவு இடிப்பதற்கும் அனேகமாக ரீச்சர் வீட்டு உலக்கைதான் ஊரைச் சுற்றி வரும். சிலுவை சுற்றாத இடமெல்லாம் ரீச்சர் வீட்டு உலக்கை சுற்றி வரும்.
கோயிலில் துண்டுறுட்டிப் போட்டு ‘பெரிய சிலுவைப் பாதைக்கு” ஆட்களை எடுப்பார்கள். பெரிய சிலுவைப்
பாதையில் சிலுவை சுமப்பவர்கள் நாற்பது நாளும் ‘ஒறுத்தல்” செய்து வெள்ளை உடுப்போடு வருவார்கள். ஒவ்வொரு
‘ஸ்தலத்திற்கும்” ஒவ்வொருவர் சிலுவையைக் கைமாற அவர்களின் தலைகளுக்கு ஈச்சம் முள்ளில் செய்த ‘முள்முடி”
வைக்கப்படும். முள்முடியை வைத்துக்கொண்டு தலையை சாய்த்து சாந்த சொரூபிகளாக அவர்கள் நிற்க. அநேகமானவர்களின்
வீட்டுப் பெண்களின் கண்களிலிருந்து பொலு பொலுவென கண்ணீர்க் கால்வாயொன்று ஓடிக்கொண்டிருக்கும்.

எங்கே சுமந்து போறீர்
சிலுவையை நீர்
எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே
அங்கம் நடு நடுங்க
எங்கே போறீர்……

என்ற பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க காணி காணியாய்க் கடந்து கொண்டிருப்பார்கள் யேசுநாதர்கள். பெரிய வெள்ளிக்
கிழமை கண்ட யேசுநாதர்கள ‘உயிர்த்த ஞாயிறு “காண வேண்டுமென்றால் நம்பிக்கையோடு இறைச்சிக் கடைக்கோ,
கள்ளுத் தவறணைக்கோ போனால் கண்டு கொள்ளலாம். அநேகமான கரையோரக் கிராமங்களில் யேசுநாதர்கள் இப்படித்தான்
நடந்துகொள்கிறார்கள். சங்கித்தன்களும், சவீனா ரீச்சர்போன்ற ஆட்களும்தான் எங்களைப்போன்ற ‘குழந்தை யேசுக்களை”
வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
00
பெரிய வெள்ளிக்கிழமை இரவு வந்தால் தவறாமல் ரீச்சர்
வீட்டில் களவுபோவது வளக்கம். ரீச்சர் வியாழக் கிழமையே ப+சைக்கு முதல் ‘காகுவின் மகள் லுமினாவைக்” கூப்பிட்டு அரிசிமா
இடித்து வறுத்து தயாராக வைத்து விடுவாள். வெள்ளிக் கிளமை ப+சைக்கு போவதற்கு முன்னரே பயறெல்லாம் குளைத்து
கொழுக்கட்டை பிடித்து ஓர் இசத்துக்குள் மூடி வைத்துவிடுவாள். ரீச்சர் எப்ப கோயிலுக்குப் போவாள் என்று பார்த்தபடியே
அஞ்சாறு இழந்தாரிப் பொடியள் பார்த்துக்கொண்டிருப்பானுகள். ரீச்சர் போறாவாம் எங்க இவனுகள் ‘கொழுக்கட்டை வேட்டையில்”
இறங்கி விடுவான்கள். ரீச்சர் வீட்டுக் கொழுக்கட்டையில் தவறாமல் ரீச்சரின் (குட்டுகிற)கை விரல்கள் நான்கும் பதிந்து
இருக்கும்.
அனேகமாக எங்களோட்டப் பெடியளுக்கு ‘சவீனா ரீச்சர்தான்” அச்சசிற்ற சிலுவ அடையாளத்தினாலே என்று சொல்லித்
தந்திருப்பாள். ரீச்சர்தான் என்ர கடைசித் தம்பிக்கும் சொல்லிக் கொடுத்தாள். நாங்கள் வளர வளர ரீச்சர் வீட்டில் கொழுக்கட்டைக்
களவும் ஒரு சம்பிரதாயமாகவே மாறிப்போனது.
கூடிக் களவு செய்தல் என்பது களவின் தன்மையையே கெடுத்து விடக்கூடியது.
உண்மையில் களவு என்பதும் ஒருவிதத்தில் மென்மையானது என்று ‘கொழுக்கட்டைக் களவின்” தன்மையை வைத்தே புரிந்து
கொண்டேன். அதைவிட சுடச் சுட களவெடுப்பதுதான் எவ்வளவு ஆனந்தமான விடயம்… அது மட்டுமன்றி களவு இரகசியத்தை
விரும்புகிறது,அது இன்னொரு களவுக்கான ஆயத்தத்தை முதற்களவிலேயே நிகழ்த்திவிடுகிறது. இரகசியம் கசியும்போது
களவு அதன் அழகை இழக்கிறது.
ரீச்சர் வீட்டில் கொழுக்கட்டைகளை சுடச்சுட அள்ளி சறத்தினுள் போட்டுக் கொண்டு ‘மதகடியில்”
போயிருந்து பங்கு பிரிப்பதில் சிலவேளைகளில் சண்டை வந்துவிடும். உருந்துண்ட கொழுக்கட்டைகள் சறக்காறனுக்குப் போக மிகுதி
பிரிக்கப்படும். ஆளுக்கொரு ‘ஏவறைகளோடு” கொழுக்கட்டைக் காரர்கள் பிரிந்து போகும்போது அனேகமாக ப+சை முடிந்து சனங்கள்
வீடு திரும்பிக்கொண்டு இருப்பார்கள்.

00

இயக்கக் காரர்கள் புதிது புதிதாக ஊருக்குள் வந்துபோய்க்கொண்டிருந்த காலம். கொழுக்கட்டைக் கள்வர்கள்
ஒரு ‘பெரியசனிக்கிழமை” கோயில் ‘போட்டிக்கோவினுள்”ஒன்று கூடினார்கள். வெள்ளிக்கிளமை செத்த இயேசு
சனிக் கிழமை கல்லறைக்குள் இருப்பதால் கோயில் ப+ட்டிக் கிடந்தது. கூட்டம் கூடிய’கொழுக்கட்டைக் கள்வர்கள்”
அன்று புதிதாக ஒரு தீர்மானம் எடுத்தார்கள். ‘ஊருக்குள் நடக்கும் தீமைகளுக்கு எதிராக ஒரு இரகசிய இயக்கத்தைக்
கூட்டி இயங்குவது” என்பதுதான் அந்தத் தீர்மானம். ‘சாமர்த்தியமாக மதில் பாய்ந்து கொழுக்கட்டை திருடி உருந்திண்டாமல்
கொண்டு வருவதில் கை தேர்ந்த ஒருவன்” தலைவனாக தெரிவுசெய்யப்பட்டான். அதன் பின் சனங்களைப் பயப்படுத்த
நமக்கு ‘துவக்குகள்”வேண்டுமென்றான் ஒருவன். துவக்குகள் செய்வதற்கான பலகைகளை எடுப்பதற்கு ‘வள்ளம் செய்யும்
சிமியோனின் பட்டறையில் பலகைதிருடுவது என்று முதல்நடவடிக்கை தீர்மானமானது. அடுத்த தீர்மானம் பட்டாசுத் திரியில்
ஊதுபத்தியைக் கொழுத்தி விதானைவீட்டுப் ப+வரசம் பொந்தினுள் வைத்து விதானையை பயமுறுத்துவது என்பது.
திட்டமிட்டபடியே பலகைதிருடும் நடவடிக்கை ஒரு கிழமைக்குள் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் விதானை வீட்டுப்
ப+வரசம் பொந்தினுள் பட்டாசு வைக்கப்போன ‘பாதிக்குண்டி டக்கிளஸ்” விதானையிடம் பிடிபட்டு தகப்பனிடம் விதானை
முறையிட்டதால் முற்றத்துப் ப+வரசில் கட்டி அடிக்கப் பட்டதிலிருந்து அவன் இயக்கத்துக்கு வாறதும் இல்லாமல் போனது.
பலகைகள் சேகரித்திருந்தாலும் துவக்கின் முன்னால் வரும் குழாய்களை எடுப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.
ஒருவன் வலைகளின் கண்கோர்க்கும் குளாயினை தகப்பனுக்குத்தெரியாமல் எடுத்து வெற்றிகரமாக பலகையில்மூட்டி ஒரு
அசலான துவக்குபோலவே செய்தான். இன்னொருவன் தன்னுடைய பாணியில் ‘சைக்கிள் போக்கினை”வெட்டி ஒன்றினைச்
செய்தான். யாருடைய துவக்கு வடிவானது என்ற விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கவே ‘ரீச்சர்”வீட்டில் திருடிய
‘அடுப்ப+தும் குழல்” யாருக்குச் சொந்தம் என்ற இருவருக்கிடையிலான சண்டையில் இயக்கம் பிரிந்துபோனது. அதன் பிறகு
அப்படியே சோர்ந்து கிடந்த பெடிகளை அதன்பின்வந்த ‘பெரியவெள்ளிக் கிழமையொன்று” உசுப்பேத்தியது. இம்முறை
ரீச்சர் வீட்டில் அரிசிமாவு இடிக்கவில்லை. ஆயினும் ‘கோதுமை மாவுக் கொழுக்கட்டை”.

கோதுமை மாவினை அங்கே பலர்
விரும்புவதில்லை. ஏனெனில் கொழுக்கட்டைக் கள்வர்களின் மூன்றாம் தலைமுறையினர் அதனை ‘சவப்பெட்டிக்கு பசை
கிண்டும் மாவு” என்றே அழைத்து வந்தனர். அதனை அவர்கள் கைகளில் தொடவே கூச்சப்பட்டனர். அவர்களிடையில்
இருந்த மனநிலை கொழுக்கட்டைக் கள்வர்களிடமிருந்து முற்றுமுழுதாக அகலாதபோதிலும் ரீச்சர் வீட்டுக் கொழுக்கட்டை
ருசியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் களவுசெய்யும் சம்பிரதாயம் அம்முறை நடந்தேறியது. ஆனால் யார் யாரெல்லாம்
கொழுக்கட்டைக் களவில் ஈடுபட்டவர்கள் என்பதை டக்ளஸ் ரீச்சரிடமும் பாடகர் குளாமிலிருந்த குமர்ப் பெட்டைகளிடமும்
சொல்ல கொழுக்கட்டைக் கள்வர்களுக்கு பெருத்த அவமானமாகிப் போனது. அதன்பின்னர் கொழுக்கட்டைக் களுவும்
இல்லாது போனது.

00
சவீனா ரீச்சர் ஊரைவிட்டு இடம்பெயர்ந்த போது கொழுக்கட்டைக் கள்வர்களும் இடம் பெயர்ந்தார்கள்
பெரிய வியாழக்கிளமை அல்லாத நாட்களிலும் யேசுநாதர்கள் பிடிபட்டுக்கொண்டிருந்தார்கள்,
சிலுவைகளுக்குப் பதிலாக சன்னங்களால் துளையுண்டு கிடந்தார்கள். நீண்டதொரு ‘தபசு காலத்தில்”
கொழுக்கட்டைக் கள்வர்கள் பசியோடு கிடந்தார்கள். அவர்களின் வயிறுகள்’பசாம்” வாசித்தன.
பிரேதப் பெட்டிகளுக்கு ஒட்டும் மாவுகூடக் கிடையாமல் கொழுக்கட்டைக் கள்வர்களின் சடலங்களை
ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்கிளஸ் மட்டும் ‘உயிர்த்த ஞாயிறைக்
கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்.

நிறைவடைந்தது.

மெலிஞ்சிமுத்தன்

Series Navigation

மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன்

மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன்