கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

சொதப்பப்பா


திமுக தலைவர் கருணாநிதி

பாஜகவுடன் கூட்டு என்னும்போது:

ஜாதி மதம் இனம் போன்ற மனமாச்சர்யங்களிலிருந்து விடுபட தந்தை பெரியார் காட்டிய வழியில், அண்ணா நீட்டிய விரலில் இருந்து தோன்றும் எங்கள் கொள்கை என்றைக்கும் மாறாது. அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்ற அநியாயத்தை எதிர்த்தோம். இன்று மதத்துக்கு ஒரு நீதி என்னும் அநியாயத்தை எதிர்க்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் அண்ணா காட்டிய வழியில் அனைவரும் ஒன்றே சட்டமுமாக பொது சிவில் சட்டத்தை ஏற்கவேண்டும் இல்லையேல் ஏற்க வைக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. இது என்றும் மாறாது.

பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது அவரது ஆசை என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, அதே இடத்தில்தான் கோவில் கட்டவேண்டும் என்று சொல்லவில்லை. அயோத்தியில் ஏற்கெனவே நிறைய ராமர் கோவில்கள் இருக்கின்றன. அத்தோடு இதுவும் எங்காவது கட்டப்படுவதில் யாருக்கு என்ன பிரச்னை இருக்க முடியும் ?

வாஜ்பாய் நல்லவர் எமக்கும் மாறனுக்கும் நண்பர். தமிழ்நாட்டின் பா ஜ க தான் பிற்போக்கு, ஆரியநலன் காத்திடும் கும்பல். தமிழின விரோதி. வாஜ்பாய் தமிழ் காக்கும் படைத் தளபதி. அழகிரியைக் கைது செய்த அம்மையார் மீது நடவடிக்கை எடுக்காத குள்ள நரி என்று நான் சொல்லமாட்டேன்.

காங்கிரஸ் என்பது பாழ்பட்ட கோட்டை, பாம்பு புழங்கும் குட்டை. அதை எதிர்த்து தமிழினம் காக்க பா ஜ க வை அரியணை ஏற்றுவதே தமிழ்மக்களின் கடமை.

*******

திமுக தலைவர் கருணாநிதி

காங்கிரசுடன் கூட்டு என்னும்போது:

இஸ்லாமிய பெருமக்கள் நான்கு திருமணம் செய்து கொள்ள நபிகள் நாயகம் அறிவுரை செய்திருக்கிறார். பெண்களைப் பாதுகாக்க பெரும் கடமை ஆண்களுக்கு உண்டு . அதனை அடாது என கருதி அடுமதியோர் அதனை அழித்திட நினைக்கின்றார். இஸ்லாமிய மகளிர் மானத்துடன் பர்தாவில் செல்ல விரும்புகின்றார், அதனை கெடுமதியோர் கெடுத்து ஆடையின்றி அவரைப் பார்த்துவிட துடிக்கின்றார். பெருந்தகையான இஸ்லாமிய ஆண்களின் பாதுகாப்பில் இஸ்லாமிய மகளிர் இருந்திடவேண்டும். அதனைக் கெடுக்க கெடுமதியோர் திட்டம் தீட்டியிருக்கின்றார். அதனை அழித்து இஸ்லாமிய பெருங்குடி மக்களைக் காப்பது திராவிடவழித்தோன்றல்களின் கடமை. பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டத்தை இஸ்லாமியர் மீது திணிப்பது என்று அன்றே பெரியார் சொன்னார். அண்ணாவும் வலியுறுத்தினார். இந்து என்றாலே திருடன் என்பது நான் உனக்குச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருப்பினும் முன்பே ஞாபகப்படுத்தியிருக்கிறேன். விரைந்து வா. பொது சிவில் சட்டம் என்னும் திருட்டு சிவில் சட்டத்தை உடனே நிறுத்திடு. திராவிடம் காத்திடு.

இஸ்லாமியப் பெருமக்கள் எந்த இடத்திலாவது ஒரு முறை மசூதி இருந்தால் அந்த இடம் இறைவனுக்கே அர்ப்பணமானது என்றும் அதில் வேறொரு கட்டடமோ கோவிலோ கட்டக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். எனவே அயோத்தியில் இருக்கும் அத்தனை கோவில்களையும் இடித்துவிட்டு அங்கு ஒரு பெரிய மசூதி கட்டுவதே, பெரியார் அண்னா வழி வந்த திராவிட பேரியக்கத்தின் முதல் குறிக்கோள் என்பதைக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

எனவே கொள்கை என்பது வேட்டி அதை கழகம் விட்டுக் கொடுக்காது. கூட்டணி என்பது மஞ்சள் துண்டு போன்றது. எம் குடும்ப நலனே கழக் நலன் என்னும் அதிமுக்கிய கொள்கை அறிக்கையை உடன்பிறப்பின் முன்னே நான் வைக்கிறேன். கலங்காதே , மயங்காதே , மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் ஆனால் முல்லை மணக்காது, ரோஜாவின் முள் விரலைப் பதம்பார்க்கும். மல்லிகை எது ரோஜா எது என்றறியாத அப்பாவி மக்களைக் காத்திட வேண்டியது எமது கடமை. கொள்கை காக்கக் கூட்டணி நிச்சயம் காங்கிரஸோடு தான். மாறனைக் காக்கவும், கலாநிதியைக் காக்கவும் என்று புறம்பேசுவோர் முகத்தில் கரி பூச தார்ச்சட்டியுடன் , உடன் பிறப்பே புறப்படு.

இந்திராவின் மருமகளே வருக, இனிய ஆட்சியும் என் மருமானுக்கு அமைச்சர் பதவியும் தருக.

***

அதிமுக தலைவர் ஜெயலலிதா

பாஜகவுடன் கூட்டு என்னும்போது:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல், வேறு இத்தாலியிலா கட்ட முடியும் ? அயோத்தியில்ராமர் கோவில் கட்டுவது என்பது காஞ்சி சங்கராசாரியார் ஆணையிட்ட படி மதமாற்றத் தடுப்புச்சட்டம் இயற்றியபோதே முடிவாகிவிட்ட விஷயம். ராமர் கோவில் கட்டுவதே எங்கள் இதய தெய்வம் எம் ஜி ராமச்சந்திர மூர்த்தியை நினைவு படுத்தும் விஷயம் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அயோத்தியில் கோவில் கட்டக் கூடாது என்று சொல்பவர்கள் எல்லோரையும் எஸ்மா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து அவர்கள் வேலையைப் பறித்து புரட்சி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.

இத்தாலியின் பிரதமர் இத்தாலியராய்த் தானே இருக்கிறார் ? இந்தியராய் இருக்கிறாரா ? ராஜிவ் காந்தியைக் கணவராய் அடைந்த ஒரே தகுதி போதுமா ? என்னைப் போல் புரட்சித் தலைவரின் படத்தில் அவர் டூயட் பாடியிருந்தால் ஏதும் தகுதி பெற்றிருக்க வாய்ப்புண்டு. ஏன் இத்தாலிய மருமகள் இந்தியாவிற்குப் பிரதமராய் இருக்க வேண்டும் என்று கேட்கிறேன். இங்கே தகுதி வாய்ந்தவர்கள் என்னைப் போல் புரட்சித்தலைவிகள், அம்மாக்கள் இல்லையா ? அம்மா ஆகாமலே அம்மா ஆகிவிட்ட என்னை விடவும், மனைவி ஆகாமலே மனைவி ஆகிவிட்ட என்னை விடவும், புரட்சி பற்றித் தெரியாமலே புரட்சித் தலைவி ஆகிவிட்ட என்னை விடவும் பிரதமராகும் தகுதி வேறு யாருக்கும் கிடையாது என்று ஆட்டுக் குட்டி, எருமைக்குட்டி போன்றவற்றை வைத்துப் பின்னிய குட்டிக் கதைகள் கூறி காளிமுத்து விளக்குவார்.

கட்சிக் காரர்களைக் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ண வைக்கும் திறமை கூட இல்லாத தலைவியும் ஒரு தலைவியா ? சோனியாவின் காலில் யாரும் விழுந்தார்களா ? என் காலில் விழுந்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பேசுங்கள் என்னை விடவும் தகுதி யாருக்கு உண்டு ?

அயோத்தியில் கோவில் கட்டாமல் ஆர்மீனியாவிலா ராமர் கோவில் கட்டுவார்கள் ? ஒரே நாடு இஇந்தியா, ஒரே சட்டம் அனைவருக்கும் பொது, ஆனால் எனக்கு எதுவும் சட்டம் இல்லை.

***

காங்கிரசுடன் கூட்டு என்னும்போது:

அயோத்தியில் கோவில் எதற்கு, இந்தியா முழுக்கவே ராமருக்குக் கோயில் தான். பொது சிவில் சட்டம் எதற்கு ? என்ன சட்டம் இருந்தாலும் என்னைப் போன்றவர்களை ஒன்றும் செய்யாது.

சோனியாவே நம் பிரதமராக தகுதியானவர் என்று நான் சொல்ல மாட்டேன் , ஏன் நான் பிரதமர் ஆகி சோனியா பஞ்சாயத்து துணை மந்திரி ஆகலாம்.

பா ஜ க அரசைக் கவிழ்க்க என்னுடன் துணை நின்ற காங்கிரஸ் தலைவி சோனியாவின் பிறந்த நாடு இத்தாலி என்றாலும், புகுந்த நாடு இந்தியா . ராஜீவ் காந்தியின் மனைவி ஆனபோதே அவருக்கு இந்தியாவை ஆளும் தகுதி வந்துவிட்டது. இந்தியாவை ஆளும் தகுதி இல்லையென்றாலும் எனக்குக் கீழ் துணை அமைச்சராய் இருக்கத் தகுதி வந்து விட்டது. நான் ஊழல் வழக்கில் கருணாநிதியால் பழி வாங்கப் படும் நேரம் வந்தால் ஒரு வேளை இந்த சோனியாவையும் பிரதமராக்க முயற்சி செய்வேன்.

***

Series Navigation