கொள்கை

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

பசுவய்யா


மேற்கே
ரொமாண்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஷனிஸம்
என் மனைவிக்கு
தக்காளி ரஸம்

அப்பால்
ஸிம்பலிஸம்
கூபிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்

அப்பால்
அதற்கும்
அப்பால் ?
சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும் கனிவாய்.
சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயைகூர்ந்து

ஸாத்ரேக்கு
எக்ஸிஸ்-
டென்ஷியலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று
காமுவின் விதவைக்கு
மற்றொன்று
பிறிதொன்று
அவர் அருமைப்
பாட்டிக்கு.

கரடிக்குக் கம்யூனிஸம்
கதர்க்குல்லா சோஷலிஸம்
டாலர் ஹ்யூமனிஸம்
பீக்கிங்க்கு
என்ன ?
சொல்லும்
ஏ.ஐ.ஆரே
சொல்லும்
மிக விரைவாய்.

நாம எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியாரிஸம்
**

இலக்கியவட்டம், செப்டெம்பர் 1964

Series Navigation

பசுவய்யா

பசுவய்யா