கைக்குமேல் புள்ளடி

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

அ.முத்துலிங்கம்


அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு முதல் தடவை போய்வந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் அங்கே பார்த்த ஆச்சரியம் என்னவென்று கேட்டேன். அவர் pulled tea என்றார். எனக்குப் புரியவில்லை. தேநீரை இழுத்துக்கொடுப்பது என்று சொல்லி சைகையிலும் காட்டினார். ஆற்றுவதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.
என்னிடம் சின்ன வயது ஆச்சரியங்கள் ஏதாவது நினைவிருக்கிறதா என்று கேட்டார். என்னுடைய கிராமத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எல்லாம் சுருட்டு பிடிப்பார்கள் என்று சொன்னேன். நம்பமுடியவில்லை என்றார். செத்த வீடுகளில் ஒப்பாரிவைப்பதற்கு பெண்கள் சம்பளத்திற்கு வருவார்கள் என்றேன். நம்பமுடியவில்லை என்றார். தேர்தல் சமயத்தில் எங்கள் கிராமத்தில் நடக்கும் ஒரு விசயத்தை சொன்னதும் அவர் ‘நம்பமுடியவில்லை, நம்பமுடியவில்லை’ என்று இரண்டுதரம் சொன்னார்.

இலங்கை சுதந்திரமடைய இன்னும் நாலு மாதங்கள் இருந்தபோது எங்களுக்கு முதல் தேர்தல் வந்தது. அது 1947ம் ஆண்டு. அதற்குப் பிறகும் பல தேர்தல்கள் வந்தன. ஆனால் முதல் தேர்தல் மறக்கமுடியாதது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, கோப்பாய் தொகுதி வேட்பாளராக கு. வன்னியசிங்கத்தை நிறுத்தியது. இன்னும் இரண்டு வருடத்தில் அவர் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி தமிழரசுக் கட்சியுடன் இணைவார். இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை பறித்ததை எதிர்த்து அப்படிச் செய்வார்.
என்னுடைய இரண்டு மாமாக்களும் அவருக்காக வேலை செய்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த தேநீர்க் கடையில் பாதியை அடைத்து தற்காலிகமாக ஒரு காங்கிரஸ் அலுவலகம் நிறுவப்பட்டது. நாங்கள் அங்கே இரவும், பகலும் வேலை செய்தோம். முன்பின் கேள்விப்படாத, முகம் தெரியாத கு. வன்னியசிங்கத்துக்காக ஜேய் போட்டு தொண்டை கிழியக் கத்தினோம். நோட்டீஸ் ஒட்டினோம். அதிலும் முக்கியமாக எதிர்க் கட்சி சுவரொட்டிகளை கிழித்தோம். அவர்கள் புத்திவந்து சுவரொட்டிகளை உயரத்தில் ஒட்டினால் அவற்றை தேடித் தேடி சாணியால் அடித்து அழித்தோம்.
என்னுடய மாமாக்கள் இப்படி உழைத்தார்கள் என்றால் அவர்கள் அளவுக்கு பாடுபட்ட இன்னொருவரும் எங்கள் ஒழுங்கையில் வசித்தார். திரவியம் மாமி. அவர் ஒரு சின்ன வீட்டில் தனியாக வாழ்ந்தார். அவருடைய ஒரே மகன் கொழும்பில் வேலை பார்த்தார். திரவியம் மாமிக்கு பொதுக் காரியங்களில் ஈடுபாடு அதிகம். உடம்பை முறித்து பாடுபடுவார். அவருடைய எல்லா பற்களும் முளைத்து முடிந்த பிறகு தோன்றிய ஒரு மேல்வாய் பல் அவர் சொண்டு மூடிய பிறகும் கொஞ்சம் வெளியே நீட்டும். அது எப்பவும் முகத்தில் சிரிப்பது போன்ற தோற்றத்தையே கொடுக்கும். ஆனால் அவர் உள்ளுக்குள் துக்கமாகவே இருந்தார். திடீரென்று அவர் வீட்டுக்குள் நுழையமுடியாது. கதவை தூக்கி திறந்து போகவேண்டும். அந்தச் சமயங்களில் தலை முழங்கால்களுக்கு கீழே தொங்க அழுவது தெரியும். அவருடைய கண்ணீர் கன்னத்தில் வழியாமல் டொக்கு டொக்கென்று நேராக பாயின்மேல் சத்தத்துடன் விழும்.
இவர் தையல் வேலையில் கெட்டிக்காரி. கை மெசினோ, கால் மெசினோ கிடையாது. காங்கிரஸ் கொடி நாலு வர்ணம் கொண்டது. பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று நீளத்துக்கு இருக்கும், ஆனால் கம்புக்கு பக்கத்தில் குறுக்காக சிவப்பு இருக்கும். இது தைப்பது கஷ்டம். திரவியம் மாமி இரவிரவாக கண்விழித்து தைத்துக் கொடுப்பார். இந்தக் கொடிகள்தான் ஊர்வலங்களில் எங்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
எதிர்க் கட்சி பெரிய ஊர்வலம் விட்டது. அவர்கள் சின்னம் கை என்றபடியால் ‘எங்கள் கையே எமக்கு உதவி’ என்று கோஷம் போட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் சின்னம் யானை. எங்கேயிருந்தோ ஒரு யானையை எங்கள் ஊர்வலத்துக்கு கொண்டுவந்துவிட்டார்கள். அது பெரிய வெற்றி ஊர்வலமாக அமைந்தது. ஊர்வலத்தில் போனவர்களுடைய கைகளில் திரவியம் மாமி தைத்த நாலு வர்ணக் கொடி பறந்தது. எங்கள் கோஷமும் வசதியாக அமைந்தது. ‘எங்கள் சிங்கம் வன்னிய சிங்கம்.’
இதற்கு முந்திய வருடம் ஹரிதாஸ் படம் வந்து நூறு நாட்களுக்கு மேலாக ஓடியது. ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ என்ற எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல் ஒலிக்காத இடம் இல்லை. எங்கள் ஊர்க் கவி ஒருத்தர் அதையே ‘வன்னிய சிங்கத்தை வென்றார் உண்டோ’ என்று மாற்றி எழுதி அந்த இசை மூலை முடுக்கெல்லாம் பரவியது. சில நாட்களில் மூலப் பாடலின் வரிகளே மறந்துவிட்டன. எதிர்க் கட்சியினரால் இதற்கு போட்டியாக ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஆனால் தேர்தல் அன்று என்னுடைய மாமாக்கள் தங்கள் அசாத்திய மூளையையும், தந்திரத்தையும் காட்டிவிட்டார்கள். வாழை மரங்கள், தோரணங்கள், நாலு வர்ணக் கொடிகள் என்று கட்சிப் பந்தல் நிறைய சோடனை. வாக்காளர்கள் எங்கள் கூடாரத்தில் வந்து குவிந்தனர். வாசலிலே, கொக்குவில் கிராமத்திலேயே அதி அழகியாகக் காணப்பட்ட பெண்ணும், அவளுடைய தங்கையும் நின்றனர். அவர்கள் வேலை வணக்கம் சொல்லி பன்னீர் தெளிப்பது. அவர்கள் மூவர்ணத்தில் சேலையுடுத்தி, நாலாவது கலரில் பிளவுஸ் அணிந்திருந்தார்கள். தேர்தலுக்காகவே படைக்கப்பட்ட அழகிகள் அவர்கள். வாக்குப்போடுவர்களின் கூட்டத்திலும் பார்க்க வாக்குப் போடுவதற்கு வயதுவராத பையன்களால் கூடாரம் நிரம்பியிருந்தது.
உள்ளே வாக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு வந்த பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆயுளில் ஒரு எழுத்தாணியையோ, பேனாவையோ, பென்சிலையோ தொட்டிராத விரல்கள் பென்சிலைப் பிடித்து புள்ளடி போடுவதற்கு சிரமப்பட்டன. இளைஞர்கள் அந்தப் பயிற்சியை கொடுத்தார்கள். யானைப் படம், யானைப் படம் – அதற்கு எதிரில் இருக்கும் பெட்டி – அதற்குள் இப்படி புள்ளடி போடவேண்டும் என்று காட்டிக் கொடுத்தார்கள். சிலர் கிழித்த கோடு வேகம் தாங்காமல் கீழே வந்து அடுத்த அபேட்சகர் சின்னத்தில் இடித்துக்கொண்டு நின்றது.
எங்கள் கிராமத்துப் பெண்கள், வீட்டு நகைகளை ஒன்றில் விற்றிருப்பார்கள் அல்லது அடமானம் வைத்திருப்பார்கள். நகைகள் இல்லாமல் அவர்கள் வெளியே போகமாட்டார்கள். இது எல்லோருக்கும் தெரியும். சின்ன மாமாவும், பெரிய மாமாவும் இதை முன்கூட்டியே உணர்ந்து நாலைந்து செட் நகைகள் தயாராக வைத்திருந்தனர். ஒரு செட்டில் நாலு காப்புகள், இரட்டைவடம் சங்கிலி ஒன்று, ஒரு அட்டியல் என்று இருக்கும். வாடகைக்கு இரண்டு ஏ40 கார்களைஉம் பிடித்திருந்தார்கள்.
தேர்தல் அன்று மாமாக்கள் வீதி வீதியாகப் போய் நகைகளைக் கொடுத்து, பெண்களை அலங்கரித்து கார் காராக கொண்டுவந்து வாக்குச் சாவடியில் இறக்கினார்கள். வாக்குப் பதிவானதும் இன்னொரு கார் அவர்களை திருப்பி எடுத்துப்போகும். அதே கார் இன்னொரு செட் பெண்களை, ஆனால் அதே நகைகளுடன், கொண்டுவந்து சேர்க்கும். இந்த வேலை துரிதமாக காலையில் இருந்து மாலைவரை நடந்தது.
நகைகள் பூட்டிய ஒரு மனுசியை ஏ40 காரில் கொண்டு வந்து பதவிசாக இறக்கினார்கள். மார்பிள் வைத்த சோடாவை உடைத்துக் குடித்தபின் அவர் தான் கையுக்குத்தான் புள்ளடி போடப்போவதாகக் கூறி அடம் பிடித்தார். ஏனென்று கேட்டால் ‘தம்பி, உன்கையே உனக்குதவி; யானை உதவி செய்யுமா’ என்று திருப்பிக் கேட்டார். சரி, மனுசியை விடுங்கோ. ‘கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த யோசனையும் சரிவராது’ என்று ஒரு பெரியவர் சொன்னார். இரவல் நகையை அடுக்கிக்கொண்டு அல்லி அரசாணிபோல அசைந்து, அசைந்து வாக்குச்சாவடிக்குள் போன மனுசி யாருக்கு அன்று வாக்குப் போட்டாரோ இன்றுவரை தெரியாது.
சாயரட்சையானபோது கு.வன்னியசிங்கம் எங்கள் கூடாரத்துக்கு வந்தார். அவருக்கு மூக்கை மறைக்குமட்டும் மாலைகள் போட்டார்கள். வெள்ளை வெளேரென்ற உடையில் கறுப்பாக இருந்தார். கழுத்தில் இரண்டு பக்கமும் விழ உத்தரியம் அணிந்திருந்தார். தலைமயிர் சிலுப்பிக்கொண்டு சிங்கம்போல இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஒரு சின்னப்பையன் போல கன்ன உச்சி பிரித்து, வழித்து தலைவாரியிருந்தார். என்னுடைய மாமாக்கள் இரண்டுபேரும் அவருக்கு கைகொடுத்தார்கள். அவர் மாலை மரியாதை எல்லாம் வெற்றிபெற்ற பிறகு என்று சொல்லிக் கழற்றிக் கொடுத்துவிட்டு புறப்பட்டார்.
இரவல் நகைகளை அணிந்த பெண்கள் வரிசை, வரிசையாக வந்துகொண்டே இருந்தார்கள். நகைகளில் வீசிய ஒளியையும் மீறி அவர்கள் கண்களில் ஒளி வீசியது. வந்ததும் சட்டென்று வாக்குப் போட்டுவிட்டு திரும்பாமல் எவ்வளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவுக்கு இழுத்தார்கள். நாங்கள் அடுத்த ட்ரிப்பில் வாறோம், அதற்கடுத்த ட்ரிப்பில் வாறோம் என்று கடத்தினார்கள். திரவியம் மாமியும் இப்படித்தான் கடத்தி, கடத்தி நின்றதில் அவரை திருப்பிக் கொண்டுபோக மறந்துவிட்டார்கள். இரட்டைவடம் சங்கிலி, நாலு காப்பு, அட்டியல் என்று அணிந்துகொண்டு, உள்ளங்கைகளை விரித்து நடந்தபோது அவருடைய நடையே வித்தியாசமாக மாறிவிட்டது. பஸ் பிடித்து எதிர் திசையில் போனார். சுன்னாகம் ஸ்டேசனில் கொழும்புக்கு முதன்முதலாக ரயில் ஏறினார். ரயிலில் போகும்போது இரட்டைவடம் சங்கிலியை மாத்திரம் கழுத்திலே விட்டுவிட்டு, மீதியை கழற்றி சேலைத் தலைப்பில் முடிந்து வைத்துக்கொண்டார்.
கொழும்பு கோட்டை நிலையத்தில் வந்து இறங்கிய திரவியம் மாமியிடம் ஒரு பெட்டிகூட இல்லை. மகனின் விலாசமும் இல்லை. ஆட்டுப்பட்டித்தெரு என்பது மட்டுமே ஞாபகத்தில் இருந்தது. நல்லகாலமாக ஆட்டுப்பட்டித்தெரு நடக்கும் தூரத்திலேயே இருந்தது. அங்கே போய் மகனுடைய பெயரைச் சொன்னதும் எல்லோருக்கும் அவனுடைய வீடு தெரிந்திருந்தது.
வீடு என்று தனியாக இல்லை; அனெக்ஸ் என்று சொல்லப்படும் ஒட்டுவீடு. ஒரு அறை, ஒரு குசினி, ஒரு குளியலறை, ஒரு விறாந்தை. திரவியம் மாமியின் மகன் ஆச்சரியப்பட்டு அம்மா என்று ஆசையோடு கத்தி வரவேற்றான். மருமகள் கையிலே ஒரு பெட்டியும் இல்லாததைப் பார்த்து பெட்டி கொண்டுவரவில்லையா என்றாள். வீட்டைக் கட்டிய நாளிலிருந்து சேகரித்த இருட்டு அங்கே இருந்தது. ஒரு சின்னத் தடுக்குப் பாயில் பேரன் படுத்திருந்ததை திரவியம் மாமி அப்பொழுதுதான் பார்த்தார். அவனை அப்படியே அள்ளி பூவாசனையை மணப்பதுபோல முகர்ந்து முகர்ந்து பார்த்தார். தன் கழுத்திலே போட்டிருந்த சங்கிலியை பேரனின் கழுத்தில் கழற்றிப் போட்டார். மகனும், மருமகளும் வாயடைத்துப்போய் பார்த்தார்கள்.

திரவியம் மாமி குற்றம் செய்து பழக்கமில்லாதவர். ஆகவே தன்னுடைய தடங்களை அழிக்க அவர் ஒருவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாலு காப்பும், இரண்டுவடம் சங்கிலியும், ஒரு அட்டியலும் அணிந்துகொண்டு ஒரு பெண் பஸ் பிடித்துப் போனதையும், சுன்னாகம் ஸ்டேசனில் கொழும்பு ரயிலில் ஏறியதையும் கண்ணால் பார்த்த சாட்சிகள் பலர் இருந்தனர்.
அவர் தன் மகனுடனும், மருமகளுடனும், பேரனுடனும் ஒரு முழுப் பகலையும், இரவையும் கழித்தார். அடுத்தநாள் காலை பொலீஸ் வந்தபோது அவர்கள் எப்படி வந்தார்கள் என்று அதிசயப்பட்டு வாயைப் பிளந்தபடி நின்றார். மகனும், மருமகளும் திகைத்துப்போய் என்ன என்ன என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பொலீஸ் அவரை ஜீப்பிலே ஏற்றியது. வாழ்நாள் முழுக்க கட்டை வண்டி தவிர வேறு ஒரு வாகனத்திலும் சவாரி செய்து அறியாதவர், மூன்று நாள்களுக்கிடையில் ஒரு தடவை ரயிலிலும், ஒரு தடவை காரிலும், ஒரு தடவை ஜீப்பிலும் தான் பயணம்செய்த அதிசயத்தை நினைத்துப் பார்த்தார். கொழும்பு மாநகரம் அப்பொழுதுதான் துயில் கலைந்துகொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்திலும் அவரால் ஜீப் ஓடும் வேகத்தையும், அது கிழிக்கும் நெடுஞ்சாலையையும், அவரைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் கட்டிடங்களையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் அவர் ‘நான் என்ன குற்றம் செய்தேன், ஐயா?’ என்றோ, ‘என்னை எங்கே கொண்டுபோகிறீர்கள்?’ என்றோ கேட்கவில்லை. நூறு காங்கிரஸ் கொடிகளை கையினால் தைத்துக் கொடுத்த திரவியம் மாமியின் ஒரே கேள்வியும், முதல் கேள்வியும் ‘கு. வன்னியசிங்கம் தேர்தலில் வென்றுவிட்டாரா?’ என்பதுதான்.
அந்த வருடம் கோப்பாய் தொகுதியில் யானை சின்னத்தில் போட்டியிட்ட கு.வன்னியசிங்கத்துக்கு 9619 வாக்குகள் கிடைத்தன. கை சின்னத்தில் போட்டியிட்ட எதிராளிக்கு 5266 வாக்குகள் கிடைத்தன. 276 செல்லாத வாக்குகள் விழுந்தன. இவை அவ்வளவும் கை சின்னத்துக்கு போடுவதற்கு பதிலாக வாக்காளர்கள் தங்கள் கைகளிலே புள்ளடிகள் போட்டதால் வந்தது என்று பேசிக்கொண்டார்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் 4353 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார். அதிலே ஒரு வாக்கு இரவல் நகைகளை திருடிக் கொண்டு கொழும்புக்கு ஓடிய திரவியம் மாமிக்கு சொந்தமானது.


amuttu@gmail.com

Series Navigation