கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஞாநி


மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியையும் அவர் மீது அன்பும் மதிப்பும் வைத்துள்ள அவருடைய இளம் எழுத்தாள நண்பர்களையும் குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரனின் உடல் ஊனத்தையும் கிண்டல் செய்து , எழுத்தாளர் ஜெயமோகன் பொறுப்பில் வெளிவரும் ‘சொல் புதிது’இதழில் ஆய்வாளர் வேதசகாயகுமார் எழுதிய ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற சிறுகதைக்கு (நியாயமான) கண்டனங்கள் பரவலாக எழுந்துள்ளன. இழிவான அவதூறுகள் செய்வதில் சுந்தர ராமசாமியும் காலச்சுவடு இதழும்தான் முன்னோடிகள், சுந்தர ராமசாமி இதர கல்வியாளர்கலை விமர்சித்துவிட்டு வசந்தி தேவியை மட்டும் கொண்டாடுவதன் ரகசியம் என்ன என்று அவதூறான தொனியில் பதில் தாக்குதல்களும், கூடவே யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கும் அறிவிப்பும் ‘சொல் புதிது’ தரப்பிலிருந்து வந்துள்ளன.

இது சுந்தர ராமசாமியின் வட்டத்தினருக்கும் ஜெயமோகன் வட்டத்தினருக்கும் இடையில் நடக்கும், நடந்து வரும் கருத்து மோதல்களின் இன்னொரு மோசமான அத்தியாயம் என்றாலும், இதே தருணத்தில் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் ஒத்த கருத்தினராக சந்திக்கும் ஒரு புள்ளியே என் கவனத்தில் முக்கியமானதாகிறது.

இன்றைய தமிழ்ச் சூழலின் கோளாறுகளுக்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் திராவிட இயக்கமும்தான் என்று ஒரே கருத்தை மேற்படி இருவரும் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

அண்மையில் குமுதம் தீராநதி இதழில் கலிபோர்னியாவிலிருந்து கோகுல் என்ற வாசகர் கேட்ட கேள்விக்கு சு.ரா ஒரு பதிலளித்திருக்கிறார். கேள்வி உலகம் முழுவதும் அமெரிக்கா, இராக், ஆப்கனிஸ்தான்,பாலஸ்தீனம், பாகிஸ்தான், ஈழம் என்று நெருக்கடிமிகுந்த காலச் சூழலில் தமிழ்ப் படைப்பாளியின் குரல் எப்படி ஒலிக்கிறது என்பதுதான். இதற்கான பதிலில் சு.ரா சொல்லும் சில வாக்கியங்கள் முக்கியமானவை:

“ இந்தியா விடுதலை பெற்றதும் உலக அரசியலில் மக்கள் கொண்டிருந்த ஆர்வம் சரியத்தொடங்கியது. திராவிட சிந்தனை எழுச்சி மனித கொடுமை சார்ந்த பொதுச் சிந்தனையை உலகப் பரப்பிலிருந்து நகர்த்தி, பிரசாரத்துக்கேற்ப சுருக்கிக் கொண்டே வந்து தமிழகத்துக்குள் விளிம்பு கட்டிற்று…”

“..பிராமணர்களை சுரண்டலின் தனிப்பெரும் உருவமாகக் காட்ட விரும்பிய பெரியார் உலக வரலாற்றுண்மைகளுக்கு அழுத்தம் தராத போக்கை அதிகம் கடைப்பிடித்தார்.”

“..உலக வரலாறு சார்ந்த பேரறிவை பெரியார் தன் பார்வையில் இணைத்துக் கொண்டிருந்தால், கொடுமைக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தி, பிராமணர், பிராமணனரல்லாதார் இடையே இன்று வரை தொடர்ந்து வரும் வெறுப்பையும் தவிர்த்திருக்கலாம்/ தணித்திருக்கலாம்.”

சுந்தர ராமசாமி தனக்கே உரிய வார்த்தை வளைப்புகளுடன் மறைமுகமாகச் சொல்லுவதை, ஜெயமோகன் நேரடியாகவே பால் சக்கரியாவின் சிறுகதைத் தொகுப்பான “யாருக்குத் தெரியும் ?” நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் கூறுகிறார்.

“தமிழில் அப்படிப்பட்ட ( மலையாளச் சூழல் போன்ற) ஓர் அறிவுச் சூழல் உருவாகாமல் போனதற்கு திராவிட இயக்கம் முக்கியமான காரணம் என்பது எனது எண்ணம்.அறிவார்ந்த இயக்கங்களான தனித்தமிழ் இயக்கம்,தமிழிசை இயக்கம் ஆகியவற்றை மேலோட்டமான கோஷங்களாகத் திரித்ததும், நவீனத்துவ இயக்கமான மணிக்கொடி மரபை இருட்டடிப்பு செய்ததும், இடதுசாரி அரசியலின் கோஷங்களைத் திருடிக் கொண்டு ஆடம்பர,அலங்கார, அரசியல் மூலம் அவர்களை ஓரங்கட்டியதும், திராவிட இயக்கத்தின் எதிர்மறைப் பங்களிப்பு. ஈ.வெ.ராமசாமி ஒரு சமூகத்தை அறிவார்ந்த விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் படிப்போ, அறிவாற்றலோ, நிதானமோ இல்லாதவர் என்று கருதுகிறேன். தமிழக கலாச்சார மறுமலர்ச்சியின் உண்மையான நாயகர்களாக அடையாளம் காண வேண்டிய அயோத்தி தாச பண்டிதர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், லட்சுமணப்பிள்ளை போன்றோரை வரலாற்றிலிருந்து மறைத்து அசட்டுப் பிரச்சாரகர்களான கருணாநிதி முதலியோரை முன்னிறுத்தியது திராவிட இயக்கம்.”

வேறொரு கேள்வி பதிலில் சு.ரா பெரியாரின் முக்கியமான பங்களிப்பு இட ஒதுக்கீடு என்று ஏற்றுக் கொள்கிறார். அவருடைய பல கோட்பாடுகளை அவரது வழி வந்தவர்கள் விட்டுவிட்டதாகவும் சொல்லுகிறார். ஆனால் அறிவுத்தளத்தில் பெரியாரின் பங்குதான் சு.ரா , ஜெயமோகன் இருவராலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

முதலில் சில அடிப்படைத் தவறுகளை கவனிப்போம்.

திராவிட இயக்கம் என்று பொத்தாம் பொதுவாக பெரியார் முதல் கருணாநிதி-ஜெயலலிதா வரை எல்லாரையும் உள்ளடக்கி ஒற்றையாக ஒன்றை சித்திரிப்பது தவறானது; நேர்மையற்றது.காங்கிரஸ் இயக்கத்தை எடுத்துக் கொண்டால், தெளிவாக திலகர் காலம், காந்தி காலம், நேரு காலம், இந்திரா காந்தி காலம், என்று பிரித்துப் பார்த்துத் தான் ஆய்வாளர்கள் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். திராவிட இயக்கம் என்று வந்து விட்டால் மட்டும் பெரியாரையும் மு.க.அழகிரியையும் சசிகலாவையும் ஒன்றாக திராவிட இயக்கம் என்று சொல்லிவிடுவது எப்படி நியாயம் ?

அதிலும் பெரியார் 1949ல் தி.மு.க உருவானது முதல் 1967ல் அது ஆட்சியைப் பிடிக்கும் வரை அதை ஆதரிக்கவே இல்லை. அதற்கு எதிர் நிலையில் இருந்த காங்கிரசையும் காமராஜரையும்தான் ஆதரித்தார். 1967லேயே அவருக்கு 88 வயதாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஆறே ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். எனவே பெரியாரின் திராவிட இயக்கம் மீதான விமர்சனம் எதிலும் 1949க்குப் பிந்தைய, இன்னும் சரியாகச் சொல்வதானால், 1947 ஆகஸ்ட் 15 துக்க நாளென்பதை ஏற்காத அண்ணா, பிறகு உருவான தி.மு.க. செயல்பாடுகள் பற்றிய விமர்சனத்தை சேர்த்துக் கொள்ள முடியாது. பெரியார் 1944ல் திராவிடர் கழகத்தை உருவாக்கியபோதே தனது இயக்கமோ கட்சியோ இனி தேர்தல் அரசியலில் ஈடுபடாது என்று அறிவித்து விட்டார்.

சு.ரா குறிப்பிடுவது போல இந்திய விடுதலைக்குப் பிறகு திராவிட சிந்தனை எழுச்சி ஏற்படவில்லை. திராவிட சிந்தனை எழுச்சி எற்பட்டது 1800களின் பிற்பகுதியில். அதற்கு எழுச்சி வடிவம் கொடுத்து பெரியார் முன்னோக்கி நகர்த்தியது 1920களிலிருந்து 1950 வரை. அதன் பிறகு (இந்திய விடுதலைக்குப் பிறகு) தேர்தல் அரசியலில் திராவிடக் கட்சி பங்கேற்றது. அதிலிருந்து விலகி நின்றவர் பெரியார்.

பெரியார் “..உலக வரலாறு சார்ந்த பேரறிவை தன் பார்வையில் இணைத்துக் கொண்டிருந்தால், கொடுமைக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தி, பிராமணர், பிராமணனரல்லாதார் இடையே இன்று வரை தொடர்ந்து வரும் வெறுப்பையும் தவிர்த்திருக்கலாம்/ தணித்திருக்கலாம்.” என்கிறாரே சு.ரா. பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பைத் தணிக்க பெரியார் பாடுபட்டார். அதற்கு அவர் சொன்ன சுலபமான தீர்வுபிராமணர்கள் தங்களுடைய மேலாண்மைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். பிராமணர்களால் நடத்தப்படும் லட்சுமிபுரம் யுவர் சங்கக் கூட்டத்தில் பெரியார் பிராமணர்களுக்கு விடுத்த கனிவான வேண்டுகோள் பரவலாக அறியப்படவில்லை. சரி. பெரியார் இணைக்கத் தவறியதாக சு.ரா குறிப்பிடும் அந்த உலக வரலாறு சார்ந்த பேரறிவு என்பதுதான் என்ன ?

1933ல் பெரியார் , தன் சகா எஸ்.ராமநாதன், உதவியாளர் ராமு இருவருடனும் சுமார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து ஜெர்மனி, சோவியத் யூனியன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல்,துருக்கி, எகிப்து, க்ரீஸ் முதலிய நாடுகளுக்குச் சென்றார். இந்த்ப் பயணத்தின் நோக்கமே அங்கெல்லாம் பகுத்தறிவாளர் அமைப்புகள், சமத்துவம் நாடும் சங்கங்கள் எப்படி செயல்படுகின்றன என்று கண்டறிவதுதான். சென்று கண்டறியும்படி சுயமரியாதை இயக்க மாநாட்டில் சவுந்தரபாண்டியன் முன்வைத்த யோசனையின் பேரில் இது நடந்தது. ஜெர்மனியில் பெரியார், நிர்வாண இயக்கத்தினரின் முகாமுக்குக் கூட சென்றார். அவர்கள் விதிப்படி நிர்வாணமாகவே சென்றார். திரும்பி வந்தபிறகு குடி அரசு இதழில் நிர்வாண இயக்கத்தின் கோட்பாடுகளைப் பற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

உலக வரலாறு சார்ந்த பேரறிவு என்பது என்னா ? எந்த வடிவத்தில் மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்தினாலும் அதை எதிர்த்து மக்கள் எழுச்சி எழுந்தபடியேதான் இருக்கும் என்பதுதான் உலக வரலாறு. தமிழ்ச் சூழலில் அடிமைத்தனம் பிராமணியத்தின் வர்ணாசிரம வடிவத்தில் இருந்தது. இதை பெரியார் அடையாளம் கண்டு எதிர்த்தார். அவருக்கு முன்னர் தமிழகத்தில் சித்தர்களும், வள்ளலாரும், பாரதியும் மத எல்லைக்குள் நின்றுகொண்டே தனி நபர்களாக எதிர்த்துத் தோற்றார்கள். மத எல்லைக்கு வெளியே சென்று நாத்திகம் பேசி எதிர்த்தவரும், இயக்கம் கட்டியவரும் பெரியார்தான்.

“ஈ.வெ.ராமசாமி ஒரு சமூகத்தை அறிவார்ந்த விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் படிப்போ, அறிவாற்றலோ, நிதானமோ இல்லாதவர் என்று கருதுகிறேன்.” என்கிறார் ஜெயமோகன். (இப்படிக் கருதுவதற்கான படிப்பும், அறிவாற்றலும், நிதானமும் உடைய இவர் தமிழர்களை அறிவார்ந்த விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்வதற்காகவே நடத்தும் இதழில்தான் நாச்சார் மட விவகாரம் வெளியிடப்பட்டு மனுஷ்யபுத்திரன் நொண்டி நாயாக கேலி செய்யப்படுகிறார்.)

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் சமூகத்தின் அறிவார்ந்த விழிப்புணர்வுக்குப் பணியாற்றிய முன்னோடியான இயக்கம். பகுத்தறிவு அடிப்படையிலான, சுயமரியாதைத் திருமணம் என்ற புதிய வடிவத்தை, சாதிமறுப்புத் திருமணத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு அதுதான் அறிமுகப்படுத்தியது. சமூக மனதில் இன்று தாலியோ சடங்கோ இல்லாத பதிவுத் திருமண முறைக்கு எதிர்ப்பில்லாததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்தான்.

பள்ளிப்படிப்பை ஆரம்பத்திலேயே கைவிட்ட காமராஜர் பள்ளிக் கல்வியை தமிழகத்தில் விரிவுபடுத்திய மாதிரி, பள்ளிப் படிப்பை மூன்றாம் வகுப்போடு முடித்துக் கொண்ட பெரியார்தான் இன்று சு.ராவும் ஜெயமோகனும் பின்பற்றும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 50 ஆண்டுகள் முன்பே பிரசாரம் செய்தார்.

மதம், ஆத்மா, கடவுள் பற்றிய தத்துவ விசாரணை முதல் அன்றாட அரசியல் நடப்பு வரை ஏராளமான விஷயங்களைப் பற்றி அவர் பேசியும் எழுதியும் உள்ளவை பல்லாயிரம் பக்கங்கள். பெரியாரும் சுய மரியாதை இயக்க்த்தினரும் நடத்திய பத்திரிகைகளில் வெளிவந்துள்ள உலக நடப்பு பற்றிய கட்டுரைகளின் அளவுக்கு இன்று வரை காலச்சுவடோ, சொல் புதிதோ உலக விஷயங்களை எழுதியதில்லை. இத்தனைக்கும் பெரியார் இயக்கப் பத்திரிகைகள் அறிவுஜீவிகளுக்கான சிறு பத்திரிகைகளாக நடத்தப்பட்டவை அல்ல. ஓரளவு படிக்கத் தெரிந்த எல்லாருமே படித்துப் புரிந்து கொள்ல வேண்டும் என்ற அக்கறையில் நடத்தப்பட்டவை.

எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா மிகுந்த உழைப்புடன் ஆய்வு செய்து திரட்டி எழுதிய “பெரியார்- சுயமரியாதை-சமதர்மம்” ( விடியல் வெளியீடு) நூலிலிருந்து இது தொடர்பாக இதோ ஒரு பகுதி :

மணிக்கொடி மரபை இருட்டடிப்பு செய்தார்கள் திராவிட இயக்கத்தினர் என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜெயமோகன். உண்மையில் இருட்டடிப்பு செய்யப்பட்டது சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கப் படைப்பாளிகள்தான். ஐம்பதுகள் தொடங்கி எண்பதுகள் வரை வந்த கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான தமிழ் இலக்கிய வரலாறு நூல்களில் மணிக்கொடி, புதுமைப்பித்தன் பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் அவற்றில் திராவிட, சு.ம இயக்கப் படைப்பாளிகள் பற்றி விரிவாக எதுவும் இல்லை. இருந்தாலும் அண்ணா, கருணாநிதி, தென்னரசு என்று ஒரு சில பெயர்கள் கூறப்பட்டிருக்கும். அவ்வளவுதான்.

உலக விஷயங்களை, அரசியல் தத்துவங்களை எளிய தமிழில் சிறப்பாக எழுதியதற்காக ( நியாயமாகவே ) கொண்டாடப்படுகிற வெ.சாமிநாத சர்மாவின் பெயர் அளவுக்கு ஏன் எஸ்.ராமநாதன், ராகவன், குத்தூசி குருசாமி பெயர்கள் பரவலாக இன்று அறியப்படவில்லை ? இருட்டடிப்பு யாருக்கு நிகழ்ந்திருக்கிறது ?

ஜெயமோகன் குறிப்பிடும் ஆபிரகாம் பண்டிதரும், லட்சுமணப் பிள்ளையும் அறிஞர்கள்தான். ஆனால் அவர்களை பெரியாருக்கு சமமாக வைக்க இயலாது. பெரியார் களப்பணியாளர். எழுதுவது, பேசுவது, போராட்டம் நடத்துவது என்று மூன்று வழி முறைகளையும் பின்பற்றி இயக்கம் கட்டியவர். 94 வயதில் செத்துப் போவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை பொதுக் கூட்டத்தில் பேசி மக்கள் கருத்தை உருவாக்க முயற்சித்தவர். 90வது வயதில் 141 நாள் டூர். 180 கூட்டம். 91வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம். 93வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம். 94வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம். கடைசி 98 நாட்களில் 38 நாள் டூர். 42 கூட்டம். ( தகவல்கள் நன்றி: வே.ஆனைமுத்து.)

ஜெயமோகன் குறிப்பிடும் அயோத்திதாசப் பண்டிதரும் களப் பணியாளர்தான் எனினும் அவர் இயங்கிய தளம் வேறு. அது விளிம்பு நிலை தளம். நாராயண குரு போன்று ஆன்மிக எல்லைக்குள் நின்று சமத்துவத்துக்கு முயற்சித்த தளம். பெரியார் மெயின்ஸ்ட்ரீம் பாலிடிக்ஸுக்குள் தீவிரமாக இயங்கியபடி அதன் அரசியல், ஆன்மிக, கலாசார சித்தாந்தங்களுக்கு சவால் விடுத்தவர். அதற்குள் இருந்து கொண்டே மாற்றுக் கலாசார சிந்தனைகளைப் பரப்ப முயற்சித்தவர். இது ஒன்றும் எளிதான வேலை அல்ல.

பல சிறந்த படைப்புகளை அளித்தவர்களான சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் பெரியார், திராவிட இயக்கம் போன்றவற்றை விமர்சிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. 1) காந்தி, காந்தியம் இவற்றிலிருந்து பின்னாளைய காங்கிரஸ் இயக்கத்தைப் பிரித்துப் பார்ப்பது போலவே பெரியார், பெரியாரியம் இவற்றிலிருந்து பின்னாளைய திராவிடக் கட்சிகளைப் பிரித்துப் பார்ப்பது அடிப்படைத் தேவை. 2.) அறிவு மரபு என்பது அகாடெமிக் ஸ்காலர்ஷிப், புத்தகம் எழுதுவது என்பது மட்டுமல்ல. மக்களிடையே இயக்கம் நடத்தியபடி மக்கள் மன நிலைகளில் மாற்றம் வர உழைக்கும் கூட்டுமுயற்சிகளும் அறிவு மரபு வழி சார்ந்து அதை வளப்படுத்துபவைதான்.

இந்தப் பார்வை இல்லாமல் வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம், தமிழகத்தில் இந்த்துவா பரவுவதற்கு இன்னமும் தடையாக இருக்கும் சிந்தனையான பெரியாரியத்தை உடைக்க முயற்சிப்பவர்களுக்கே பயன்படும். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பெரியாரியத்தின் அடையாளங்களாகக் காட்டி பெரியாரியத்தைக் கொச்சைப்படுத்துவதும் நடு சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி தலித்- மேல்சாதிக் கூட்டணியை இந்துத்துவாவுக்கு சார்பாக கட்டி எழுப்ப முயற்சிப்பதும் நடைபெற்று வரும் சூழலில், சு.ராவும் ஜெயமோகனும் தங்கள் நிலை என்ன என்று வார்த்தை விளையாட்டுகள் இல்லாமல் தெளிவுபடுத்துவது அவசியம்.

தீம்தரிகிட ஜூலை 2003 dheemtharikida @hotmail.com

***

திண்ணைக் குழு குறிப்பு:

(தீம தரிகிட – இதழின் சந்தா விவரம் :

10 இதழ் சந்தா : ரூ 100

வெளி நாடு சந்தா : ரூ 1000 (அ) அமெரிக்க டாலர் 20.

இந்தக் கட்டுரை இல்லாமல் இந்த இதழில் வளவ துரையன், உமா மகேஸ்வரி, மு சத்யாவின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தலித்துகளுக்கு நிலம் பற்றி ஒரு முக்கியமான கட்டுரையை கெளதம சக்திவேல் எழுதியுள்ளார். தொடர்களாய் ச தமிழ்ச்செல்வன் (அறிவொளி இயக்க அனுபவங்கள் பற்றி) பாஸ்கர் சக்தி, ஆனந்தி ஆகியோர் எழுதியுள்ளனர். பெருமாள் முருகன், பாலு சத்யாவின் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. பால் பாட் = கெமெர் ரூஜ் கோர ஆட்சி பற்றிய புத்தகம் ஒன்றும் விரிவாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. வெளி நாட்டு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் . நீங்கள் நேரடியாக உங்கள் இதழை தீம் தரிகிட அலுவலகத்திற்கு சந்தா செலுத்தி வரவழைத்துப் பெறுவது, பொருளாதார ரீதியாக தீம் தரிகிட இதழுக்கு உதவி சேர்க்கும்.

முகவரி : ஞான பானு பதிப்பகம், 22 பத்திரிகையாளர் குடியிருப்பு,

திருவான்மியூர், சென்னை 600 041)

***

Series Navigation

ஞாநி

ஞாநி